புத்தாண்டு : ஆஹா !!! உஷ்…..

sania.jpg

20-20 உலகக் கோப்பை
சிவாஜி, பில்லா, போக்கிரி
சச்சின் பேட்
சானியா மிர்சாவின் மூக்குத்தி
ஆஹா…
இனிதே முடிந்தது 2007 !

தமிழ்ச்செல்வன்
பெனாசிர் பூட்டோ,
தெகல்கா அறிக்கை
பாப் உல்மர்
ஆலய எரிப்பு
உஷ்……..
வாயை மூடுடா தமிழா.

உடல் எடையும், தாய்மை நிலையும்

mother.jpg

உடல் எடை அதிகரிக்க அதிகரிக்க பெண்கள் கருத்தரிக்கும் வாய்ப்பை இழக்கத் துவங்குகிறார்கள் என்னும் புதிய ஆராய்ச்சி முடிவு ஒன்று டச் அறிவியலார்களால் வெளியிடப்பட்டுள்ளது.

மாறி வரும் உணவுப் பழக்கங்களாலும், பரம்பரை குணாதிசயங்களினாலும் உடல் எடை அதிகரித்து வருவது இன்று ஒரு சர்வதேசப் பிரச்சனையாக இருக்கிறது. வெளிநாடுகளில் மட்டுமே இருந்து வந்த இந்த சிக்கல் தாராளமயமாக்கலில் தயவாலும், பீட்சா, கோக் போன்ற உணவுப் பழக்கங்களினாலும் இன்று இந்தியாவிலும் வேர்விட ஆரம்பித்திருக்கிறது,

இந்த உடல் எடை அதிகரிப்பு பல விதங்களில் இன்னல்களை உண்டாக்கி வருகிறது. ஆரோக்கியமற்ற வாழ்க்கைச் சூழலைப் பரிசளிக்கும் இந்த இன்னல் இப்போது தாய்மைக்கே வேட்டு வைப்பதாக தெரிய வந்திருப்பது பெரும் அதிர்ச்சியான செய்தி என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

ஏற்கனவே உடல் எடை அதிகமாய் உள்ள தாய்மார்களுக்கு பிரசவ காலத்தில் பல சிக்கல்கள் வரும் வாய்ப்பு உண்டு எனவும், தாய்மார்களின் உடல் எடைக்கும் குழந்தைக்கு பல்வேறு நோய்கள் வருவதற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு எனவும் சில ஆராய்ச்சிகள் தங்கள் முடிவுகளை வெளியிட்டிருந்தன.

இப்போது கருத்தரிப்பதிலேயே சிக்கல் என்னும் புதிய ஆராய்ச்சி உண்மையிலேயே பெண்களை, அதிலும் குறிப்பாக அதிக எடை நோயினால் அவதிப்படும் பெண்களை பெருமளவில் உளவியல் ரீதியான பாதிப்புக்கு உட்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

அதிக எடை சிக்கலினால் அவதிப்படுபவர்கள் மீண்டும் உடல் எடையைக் குறைத்தால் அவர்களால் மீண்டும் தாய்மை அடையும் வாய்ப்பு அதிகரிக்கும் எனும் தகவல் சற்று ஆறுதலாய் இருக்கிறது.

அதிக எடை எனும் சிக்கல் உருவாக்கும் இன்னல்களைக் குறித்து தினமும் வரும் தகவல்கள் நம்மை விழிப்புடன் இருக்கச் செய்வதுடன், அடுத்த தலைமுறையை சரியான பாதையில் அழைத்துச் செல்ல நமக்கு பொறுப்பு இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டவும் செய்கிறது என்பதை கவனத்தில் கொண்டு செயல்படவேண்டும்.

ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கடைபிடித்தால் இத்தகைய சிக்கல்கள் நம்மை அணுகுவதில்லை என்பதை உணர்ந்து செயல்பட்டால் வாழ்க்கை நலமாகும்.

சிசேரியன் : விரும்புதலும் விளைவுகளும்

mom.jpg

இன்றைய உலகம் இயற்கையை விட்டு வெகுதூரம் சென்று விட்டது. இன்று சிசேரியன் பிரசவங்கள் சர்வ சாதாரணமாகி விட்டன. தாய்மை நிலையை அடைந்தபின் பிரசவ காலத்தில் இயற்கையான பிரசவம் நிகழும் வாய்ப்பு குறையும் போது இந்த சிசேரியன் எனும் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை வெளியே எடுக்கப்பட்டு வந்தது தான் பழைய செய்தி.

ஆனால் இப்போதெல்லாம் பெண்கள் பிரசவ வலியை தவிர்ப்பதற்காக அறுவை சிகிச்சையைத் தேர்ந்தெடுப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இன்னும் ஒரு படி மேலே போய் சாஸ்திர சம்பிரதாயம் எனும் மூடக் கட்டுக்குள் மூழ்கிக் கிடப்பவர்கள் எந்த நாள் எந்த நேரத்தில் குழந்தை எடுக்கப்படவேண்டும் என்பதை சோதிடம் மூலம் முடிவு செய்து மருத்துவரிடம் விண்ணப்பிக்கின்றனராம்.

அப்போது தான் குறிப்பிட்ட நட்சத்திரத்தில், யோகத்தில் குழந்தை பிறக்கும் என்று சிரிக்காமல் அவர்கள் சொல்வதைப் பார்க்கும் போது சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை.

இப்படி அறுவை சிகிச்சை மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு நுரையீரல் சார்பான நோய்கள் வரும் வாய்ப்பு அதிகம் என்னும் புதிய ஆராய்ச்சி ஒன்று வெளியாகியிருக்கிறது. நுரையீரலில் இயல்பான வளர்ச்சியைக் கூட இது பாதிக்கும் எனவும் இந்த ஆராய்ச்சி அச்சுறுத்துகிறது.

அதிலும் குறிப்பாக குறைந்தபட்சம் 39 வாரங்களாவது தாய்மை நிலையில் இருக்காத பெண்கள் அறுவை சிகிச்சை செய்து கொண்டால் குழந்தைக்கு நுரையீரல் சார்பான நோய்கள் வரும் வாய்ப்பு மிகவும் அதிகம் என்கிறது இந்த ஆராய்ச்சி.

நுரையீரலில் இருக்கும் திரவம் முழுவதுமாக வெளியேற முடியாமல் போகும் வாய்ப்பு இருப்பதும் இந்த அறுவை சிகிச்சை முறையில் நிகழக்கூடிய சிக்கல்களில் ஒன்று என்கின்றனர் மருத்துவர்.

மூச்சு தொடர்பான பல சிக்கல்கலுக்கு இந்த அறுவை சிகிச்சை காரணமாகி விடக் கூடும் என்னும் அறிவு அனைவருக்கும் இருப்பது அவசியம் என்றும், தேவையற்ற சூழலில் அறுவை சிகிச்சையை முழுவதுமாக தவிர்க்க வேண்டுமென்றும் யூ.கே மருத்துவர் மேகி பிளோட் அறிவுறுத்துகிறார்.

நாள் நட்சத்திரம் சூரியன் சந்திரன் கோள்கள் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு தேவையற்ற அறுவை சிகிச்சை செய்வதை விட்டு விட்டு, இயற்கையோடு இயைந்த வாழ்க்கையை வரவேற்பதே தாய்க்கும் சேய்க்கும் நலன் பயப்பதாகும்.

தவிர்க்க முடியா சூழலுக்கென வந்த அறுவை சிகிச்சைகளை தவிர்க்க முடியாத சூழல்களில் மட்டும் பயன்படுத்துவதே சாலச் சிறந்தது.

நிம்மதியா தம் அடிக்க விடமாட்டாங்களே !!

smoke.jpg

புகை பிடிப்பவர்களைக் கதிகலங்க வைக்க நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக ஆராய்ச்சி முடிவுகள் வந்து கொண்டே இருக்கின்றன. தற்போதைய புதிய ஆராய்ச்சி ஒன்று புகை பிடிப்பவர்களுக்கு நீரிழிவு நோய் (சருக்கரை நோய்) வரும் வாய்ப்பு அதிகரிக்கிறது என்னும் புதிய செய்தியையும் சொல்லி நிலைகுலைய வைத்திருக்கிறது.

அதுவும் கொஞ்ச நஞ்சமல்ல புகை பிடிப்பவர்களுக்கு நீரிழிவு நோய் வரும் வாய்ப்பு புகை பிடிக்காதவர்களை விட 44 விழுக்காடு அதிகமாம்.

தினமும் விரல்களிடையே புகைந்து கருகும் சிகரெட்களின் எண்ணிக்கைக்கும் இந்த நோய் வரும் வாய்ப்பிற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. ஒரு நாளைக்கு இருபது சிகரெட் இழுத்துத் தள்ளுபவர்கள் இந்த நோயினால் பீடிக்கப்படுவது 61 விழுக்காடு சர்வ நிச்சயம் என்கிறது இந்த ஆராய்ச்சி.

அளவோடு என்று சொல்லி அவ்வப்போது புகை பிடிப்பவர்களுக்கும் இந்த நோய் வரும் வாய்ப்பு புகையே பிடிக்காதவர்களை விட 29 விழுக்காடு அதிகம் என்பது புகை பிடிப்பவர்கள் அனைவரையும் சற்று சிந்திக்க வைக்கும் தகவல் என்பதில் சந்தேகமில்லை.

புகை பிடிப்பதனால் புற்று நோய் வருகிறது, உயிரணுக்களின் எண்ணிக்கை குறைகிறது என்றெல்லாம் சொல்லி வந்த மருத்துவ ஆராய்ச்சி இப்போது புகைத்தலுக்கும் நீரழிவு நோய்க்கும் கூட நெருங்கிய பந்தம் இருக்கிறது என்று கொளுத்திப் போட்டிருக்கிறது.

ஏற்கனவே புகைக்கும் உடலில் சுரக்கும் இன்சுலின் அளவிற்கும் தொடர்பு இருப்பதாக கண்டு பிடித்த ஆராய்ச்சியின் நீட்சி இது எனவும் கொள்ளலாம்.

இந்த ஆராய்ச்சி மருத்துவ உலகில் இருப்பவர்களுக்கு புதிய தகவலாய் ஆனந்தத்தை அளிக்கும் அதே வேளையில் புகை பிடிப்பதை வழக்கமாக்கிக் கொண்டிருப்பவர்களின் வயிற்றில் புளியைக் கரைப்பதாய் அமைந்திருக்கிறது.

இனிமேலாவாது புகை நமக்குப் பகை என்பதை உணர்ந்து கொண்டால் சரி.