திரைப்படங்களில் புகை பிடிக்கும் காட்சிகளில் நடிக்காதீர்கள் என்று ஷாரூக்கான், அமிதாப் போன்றவர்களிடம் அன்புமணி வைத்த கோரிக்கைக்கு ஷாருக்கான் அளித்திருக்கும் பதில் அவருடைய சமூக அக்கறையை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது.
திரைப்படங்களில் புகை பிடிக்கும் காட்சிகள் வைப்பது படைப்புச் சுதந்திரம் என தத்துவம் உதிர்த்து, அவருடைய படைப்புச் சுதந்திரத்திற்கு கோடரி வைத்ததாய் கலங்கியிருக்கிறார் ஷாருக்.
திரைப்படம் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தைக் குறித்து புதிதாகப் பேசுவதற்கு எதுவுமில்லை. தற்போது வீட்டுக்கு ஒரு தொலைக்காட்சி என்பது கூட மாறி அறைக்கு ஒரு தொலைக்காட்சி எனுமளவுக்கு தொலைக்காட்சிகள் ஆக்கிரமித்திருக்கின்றன.
போதாக்குறைக்கு கைப்பேசிகளிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வருகின்றன. சந்தைகளில் கிடைக்கும் நான்காயிரம் ரூபாய் கொரியன் கைபேசிகளிலேயே தொலைக்காட்சி பார்க்கும் வசதி இருக்கிறது. எங்கே தான் இருந்தாலும், என்ன தான் செய்து கொண்டிருந்தாலும் அந்த இடத்துக்கே வந்து தாக்கத்தைத் தருவேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறது சினிமா.
இந்த சூழலில் திரைப்படங்களில் வரும் தவறான முன்னுதாரணங்கள் சமூகத்தை பலவீனப்படுத்தும் என்னும் நியாயமான கருத்தும் வலுப்பெற்று வருகிறது. திரைப்படங்களில் புகை பிடிக்கும் காட்சிகள் வேண்டாம் என்று வலியுறுத்தும் அரசியல்வாதிகள் இருப்பதே ஒருவகையில் மனதுக்கு ஆறுதல் தருகிறது.
ரஜினிகாந்த், விஜய், சிம்பு என தென்னக பிரபலங்கள் அனைவருமே புகை பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதில்லை என்று முடிவெடுத்திருக்கின்றனர். புகை பிடிக்கவில்லை என்பதற்காக யாரும் “சிவாஜி” படத்தைப் புறக்கணித்ததாகச் செய்திகளும் இல்லை.
ஆனால் வட நடிகர்களுக்கு அன்புமணியின் கோரிக்கை அவர்களுடைய ஈகோவை இடித்திருக்க வேண்டும். இதே கோரிக்கையை பால்தாக்கரே வோ, அல்லது அத்வானியோ வைத்திருந்தால் சலாம் போட்டு ஒத்துக் கொண்டிருப்பார் ஷாருக். ஆனால் கேட்டது தமிழராச்சே. எப்படி ஒத்துக் கொள்வது ?
சினிமாத் துறையினரின் படைப்புச் சுதந்திரமாம் அது. அந்த ‘பிடிப்புச்’ சுதந்திரத்தினால் எத்தனை அடிமைகளை உருவாக்குவதாய் உத்தேசமோ ஷாருக்கிற்கு ?
அன்புமணி ஒன்றும் ஷாருக் புகை பிடிக்கக் கூடாது என்று சொல்லவில்லை. திரைப்படங்களில் பிடிக்க வேண்டாம் என்று தான் சொல்லியிருக்கிறார்.
“மால்பரோ” சிகரெட் நிறுவனம் தன்னுடைய பொருட்களை திரைப்படங்களில் காட்ட வேண்டாம் என கடந்த 2006ல் அறிவித்திருந்தது. வர்த்தக நிறுவனமே இந்த அறிவிப்பை வெளியிட்டது அப்போது பரபரப்புச் செய்தியாய் அலசப்பட்டு வந்தது.
பிரிட்டிஷ் மெடிக்கல் பத்திரிகையில் வெளியான ஆராய்ச்சி முடிவு ஒன்று திரைப்படங்களில் வரும் புகை பிடித்தல் பதின் வயதினரை புகைபிடிக்கும் பழக்கத்திற்குள் இட்டுச் செல்வதாக தெரிவித்திருந்தது.
நியூ ஹாம்ஷயரிலுள்ள டார்க்மெளத் மருத்துவ கல்லூரி இயக்குனர் “புகை பிடித்துப் பார்ப்போம் எனும் உந்துதல் திரைப்படங்களிலிருந்தே அதிகம் பெறப்படுகின்றன” என்கிறார்.
கலிஃபோர்னியா பல்கலைக்கழக விரிவுரையாளர் “ஸ்டாண்டன் கிளேன்ட்ஸ்” திரைப்படங்களில் புகை பிடிக்கும் காட்சிகள் வருவதற்கும், பதின் வயதினரின் புகைக்கும் மோகத்துக்கும் மிக மிக நெருங்கிய, நிரூபிக்கப்பட்ட தொடர்பு இருக்கிறது என்று குறிப்பிடுகிறார்.
அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் பல ஆராய்ச்சிகள் இதே முடிவை சொல்லியிருக்கின்றன என்பது குறிப்பிடத் தக்கது.
புகை பிடிக்கும் விளம்பரங்களை ஊடகங்களில் தடை செய்தது போல திரைப்படங்களிலும் தடை செய்வதே சரியாக இருக்கும் என்பது பலருடைய கருத்தாய் இருக்கிறது.
உலகளாவிய ஆராய்ச்சிகள் திரைப்படங்களில் புகை பிடிக்கும் காட்சிகள் வருவதற்கும், மக்களின் புகை பிடிக்கும் பழக்கத்திற்கும் மிக நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்று நிரூபித்திருக்கின்றன. பதின் வயதினரையும், சிறு வயதினரையும் இந்த பழக்கத்துக்குள் இட்டுச் செல்லும் வலிமை திரைப்படத்திற்கு இருக்கிறது என்று சர்வதேச ஆராய்ச்சியாளர்களும் ஒத்துக் கொண்டிருக்கிறார்கள்.
எனவே, இத்தகைய தேவையற்ற முன்னுதாரணங்களை திரைப்படங்களிலிருந்து ஒழிக்க நடிகர்களைக் கெஞ்சிக் கொண்டிருக்காமல் அரசே ஒரு சட்டம் இயற்றுவது காலத்தின் கட்டாயமாகும்.
ஃ