இந்த படம் பார்க்காதவன் ஜென்ம பாவத்தையும், கர்ம பாவத்தையும் மூட்டை மூட்டையாய்க் கொண்டவன் என்று பத்திரிகைகள் விமர்சன மழை பொழிந்ததாலும்,
என்னுடைய கதையை கொஞ்சம் சுட்டு தான் நிறைய பேர் தவமாய் தவமிருந்து படங்களை எடுக்கிறார்கள் என்று தங்கர் பச்சானே மறைமுகத் தாக்குதல்கள் நடத்தியதாலும்,
ஒன்பது ரூபாய் நோட்டு பார்க்க வேண்டும் என்னும ஆர்வம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. இந்த வார இறுதி அந்த குறையைத் தீர்த்து வைத்தது.
இயல்பான மனிதர்களின் இயல்பான வாழ்க்கை இயல்பாய் படமாக்கப்பட்டிருக்கிறது ஒன்பது ரூபாய் நோட்டு படத்தில். இதற்காக தங்கர் பச்சானுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.
ஒட்டுமொத்த திரைப்படத்தை சொல்ல அவர் எடுத்துக் கொண்ட உத்தி நல்ல உத்தி. பேருந்தில் பயணிக்கும் போது கதையும் கூடவே பயணித்து முடிவது நன்றாகத் தான் இருக்கிறது.
ஆனால் திரைக்கதையிலும், காட்சி அமைப்பிலும் தங்கர் பச்சான் ரொம்பவே கோட்டை விட்டு விட்டார் என்று தான் எனக்குத் தோன்றுகிறது. படம் பார்த்து முக்கால் வாசி ஆன பிறகு கூட மாதவருக்கு யாராரு சொந்தம், யாரு பையன், யாரு பொண்ணு, யாரு பேரன் என்பது போன்ற குழப்பங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
எனக்கு தான் இப்படி போல என்று அருகில் இருந்தவரின் தோள் தொட்டுக் கேட்ட போது ‘அவரு மருமகன்’ பா என்று சொன்னார். உடனே அவருக்கு அருகில் இருந்தவர். இல்லை இல்லை அது தான் மூத்த பையன் என்று அவரைத் திருத்தினார். சரி எதுக்கும் படம் முடிஞ்சதுக்கு அப்புறம் அப்பரேட்டர் கிட்டே கேட்டு தெரிஞ்சுக்கலாம்ன்னு விட்டுட்டேன். (அவர் தானே படத்தை அத்தனை தரம் பாக்கறார் )
நல்லவனாய் இருப்பவன் அநியாயத்துக்கு நல்லவனாய் இருக்கிறான் என்னும் வரை முறையை மீறாமல் தங்கர் படம் எடுத்திருக்கிறார். எந்த விவசாயியும் தனக்கு ஒரு சாகுபடியில் கிடைக்கும் பணம் மொத்தத்தையும் யாரிடமும் அப்படியே இனாமாகக் கொடுப்பதில்லை. கதாநாயகர்கள் விதிவிலக்கு.
ஒரு வார்த்தை சொல்லி விட்டதற்காய் ஊரை விட்டே ஓடுவதும், “மனைவி தான் கடவுள்” என்று பாடல் பாடிவிட்டு, அந்த மனைவியைக் கலந்தாலோசிக்காமல் தானாகவே எல்லா முடிவுகளையும் எடுப்பதும். மனைவியின் விருப்பத்துக்கு, ஒரு தாயின் உயிர் துடிக்கும் ஏக்கத்துக்கு, அழலில் விழுந்த புழுவான அவளுடைய மன வேதனைக்கு சற்றும் மதிப்புக் கொடுக்காமல் இருப்பதும், என்று தான் தங்கரின் மாதவம் செய்த மாதவர் வாழ்கிறார்.
மகன் கஷ்டப்படுகிறான், அடி படுகிறான், பிச்சை எடுப்பது போன்ற பிழைப்பை நடத்துகிறான் என்பதை கண்ணால் காணும் போதும் கூட ஓடிச் சென்று “மகனே” என்று அழைத்து அரவணைத்து கண்ணீர் சிந்தாமல், வறட்டுப் பிடிவாதத்தில் உழலும் ஒரு மனிதனாய் தான் வாழ்கிறார் மாதவர். எந்தப் பெற்றோரும் மகன் தங்களை வெறுத்தாலும், அடித்தாலும் பிள்ளைகளின் துயரத்தைக் காண்கையில் அனைத்தையும் மறந்து தாவி ஓடுவார்கள் ஆறுதல் தர. ஆனால் தங்கரின் மாதவர் அப்படி இல்லை.
மனைவியின் துயரம், மகனின் துயரம் எல்லாம் புரிந்தும் புரியாதவராக, கிடைக்கும் பணத்தை நாசருக்குத் தவறாமல் ஒப்புவிப்பதில் மட்டும் மாதவர் சிறந்திருந்தால் போதுமா ?
தன்னுடைய மகன் ஒரு சலவைக்காரரின் மகளை விரும்புகிறார் என்று மாதவருக்குத் தெரிய வரும் போது அவர் முன்னின்று திருமணத்தை நடத்தி வைத்து மலையளவு உயர்வார் என நினைத்தால்.. ம்ஹூம்… மாதவர் சாதாரணர். கடைசி காட்சியில் கூட மகனை, அவனுடைய இழி நிலையை துயரத்துடன் பார்த்து கடந்து போவதுடன் சரி.
மகனை எழுப்பி வாழ்க்கை என்பது உணர்வுகளில் தான் என அவனை அரவணைத்து அவனுடைய வாழ்க்கையில் சற்று ஆனந்தத்தையாவது அளிக்கவில்லை மாதவர்.
இவையெல்லாம் இல்லாமல் வெறுமனே பலா மரத்தையும், கிராமத்தின் இயல்பான சூழலையும் மட்டுமே காட்டிச் செல்லும் ஒரு திரைப்படமாகத் தான் இருக்கிறது ஒன்பது ரூபாய் நோட்டு.
வெறும் மாதவரின் நடிப்பை வைத்து படத்தை அற்புதம் என்று சொல்லிச் செல்ல முடியவில்லை. இந்தப் படத்துடன் ஒப்பிடுகையில் எனக்கு தவமாய் தவமிருந்து படம் பல மடங்கு உயர்வாய் தெரிகிறது.
தங்கர் பச்சான் ! நீங்கள் மண்ணிலிருந்து முளைத்திருக்கிறீர்கள். மண்ணின் மணத்தை கலாச்சாரத்தை விட்டுக் கொடுக்காமல் படம் எடுக்க விரும்புகிறீர்கள். வாழ்த்துக்கள்.
ஆனால் அந்த திரையாக்கம் சுமந்து வரும் செய்தி என்ன என்பதிலும் சற்று கவனம் செலுத்தலாமே ?
மாதவர் படையாட்சி சொல்லும் சேதி என்னவோ ? மனைவியின் உயிர் மூச்சான விருப்பங்களுக்காய் உன்னுடைய வறட்டுப் பிடிவாதத்தை விட்டுக் கொடுக்காதே என்பதா ? பிள்ளைகள் ஒரு வார்த்தை சொல்லி விட்டார்கள் என்பதற்காக ஒரேயடியாய் தலை முழுகி ஓடி விடு என்பதா ?
கடைசியாய் ஒரே ஒரு விண்ணப்பம். அடுத்த படத்திலாவது பள்ளிக் குழந்தைகளை விட்டு விடுங்கள் பிளீஸ்.
ஃ