பாலியல் கல்வி : எனது பார்வையில்.

kid.jpg

கேள்வி : “பாலியல் கல்வி தேவையா?”
பதில் : “சொல்லித் தெரிவதில்லை மன்மதக் கலை”

இப்படி ஒரு கேள்வி பதிலை சமீபத்தில் மிக மிகப் பிரபலமான வார இதழ் ஒன்று பிரசுரித்திருந்தது.

பாலியல் கல்வியின் தேவையும், பாலியல் கல்வி என்பது என்ன என்பதையும் முதலில் அவருக்குக் கற்றுக் கொடுக்க வேண்டியது அவசியம் எனப்படுகிறது.

பாலியல் கல்வி என்பது வாத்சாயனாரின் காமசாஸ்திரத்தை விலாவரியாகக் கற்றுக் கொடுக்கும் விஷயம் போலிருக்கிறது என்றே தான் பெரும்பாலானவர்கள் கருதிக் கொள்கின்றனர்.

இதற்குக் காரணம் பாலியல் என்பதே உடலுறவு என்பது மட்டும் தான் என்னும் சிந்தனை நமக்குள் நுழைக்கப்பட்டது தான்.

பாலியல் கல்வியை பள்ளிக்கூடங்களில் பயிற்றுவிப்பதை விட தொலைக்காட்சி வழியாகக் கற்றுக் கொடுக்கலாம். அப்போது தான் பெற்றோரும் கூடவே இருந்து குழந்தை சரியாக கற்றுக் கொள்கிறதா, தேவையானவை மட்டும் தான் கற்றுக் கொடுக்கப்படுகிறதா என்பதை கவனிக்க முடியும்.

மேற்குறிப்பிட்ட தத்துவத்தை உதிர்த்தது நானல்ல, ஒரு பிரபல வார இதழின் “தலையங்கம்” ! பள்ளிக்கூடத்தில் குழந்தை பாடமாகக் கற்பதை விட வீட்டில் அமர்ந்து படிப்பதே சிறந்ததாம்.

அப்படியெனில் ஒவ்வொரு குழந்தையின் வயது வாரியாக, வகுப்பு வாரியாக பாடங்கள் எடுப்பது எப்படி என்பதும், கற்றுக் கொள்ளவேண்டிய மாணவர்களை விட்டு விட்டு குழந்தைகளும் கற்றுக் கொள்ள வேண்டும் போலிருக்கிறது.

மட்டுமன்றி “தேவையானது” என்பதை ஒவ்வொரு பெற்றோரும் எப்படி நிர்ணயிக்கிறார்கள் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

ஆசிரியர்களிடம் சங்கோஜப்படும் குழந்தைகள், பெற்றோர் முன்னிலையில் சகஜமாக கற்றுக் கொள்ளும் என்பதையும் ஏற்றுக் கொள்வதற்கில்லை.

இந்தியாவில் நிகழும் பாலியல் கொடுமைகளை தினம் தோறும் பத்திரிகைகளில் வாசித்தும், எயிட்ஸ் நோயாளிகள் அதிகம் கொண்ட நாடு எனும் பட்டியலில் இடம்பெற்றும், 80 விழுக்காடு குழந்தைகள் குடும்ப உறவினர்களால் ஏதோ ஒருவகையான பாலியல் தொந்தரவுக்கு ஆளாகிறார்கள் என்னும் புள்ளி விவரங்களைத் தெரிந்திருந்தும் பாலியல் கல்வியை மக்கள் எதிர்ப்பது வியப்புக்குரியதாய் இருக்கிறது.

பாலியல் கல்வி என்ன என்பதையும் பாலியல் கல்வியில் இடம்பெறப்போகும் பாட திட்டங்கள் என்ன என்பதையும் முடிவு செய்து அரசு பெற்றோருக்குத் தெரியப்படுத்தலாம். இதன் மூலம் குழந்தைகள் என்ன கற்றுக் கொள்கிறார்கள் என்பதை பெற்றோர் புரிந்து கொள்ள முடியும்.

இரண்டாவதாக, மேலை நாட்டு பாலியல் கல்வி முறையிலிருந்து வேறுபட்டு நமது பாலியல் கல்வி முறை இருத்தல் நலம். மேலை நாடுகளில் சொல்லப்படும் “திருமணத்திற்கு முன்பான பாதுகாப்பான உடலுறவு” போன்றவற்றையும், கருவுறாமல் இருக்க செய்ய வேண்டியவை பற்றியும், உடலுறவு வகைகள் பற்றியும் சொல்லாமல் இருக்கலாம்.

அதற்குப் பதிலலக திருமணத்திற்கு முன்பான உடலுறவு தீமையானது என்பதையும், நமது கலாச்சாரம் குறித்தும், குடும்ப உறவுகளின் தேவை குறித்தும் விளக்கலாம்.

பால்வினை நோய்கள், அதுகுறித்த விழிப்புணர்வு மாணவர்களுக்கு இருத்தல் மிக மிக அவசியம். மேலும் வாழ்க்கை முறை பாலியல் வளர்ச்சியில் ஏற்படுத்தக் கூடிய மாற்றங்களை விளக்குதல் அவசியம். இதன் மூலம் புகை பிடித்தல், மது அருந்துதல் போன்ற தீய பழக்கங்களை மாணவர்கள் விலக்கும் வாய்ப்பு உண்டு.

மிக மிக முக்கியமாக பாலியல் கல்வி குறித்து ஆசிரியர்களுக்கு தெளிவான வரையறையும் பயிற்சியும் வழங்கப்பட வேண்டும்.

அமெரிக்காவிலேயே பாலியல் கல்வி பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் நிறைய பாடங்களை சொல்லாமல் விட்டு விடுவதாகவும், அதற்குக் காரணம் அவர்களுக்கு அதில் போதிய பயிற்சி இல்லாமல் இருப்பதும், சொல்வதற்கு தயங்குவதுமே காரணம் என நியூயார்க் ஆராய்ச்சி ஒன்று கடந்த வாரம் அறிக்கை சமர்ப்பித்திருந்தது.

பாலியல் கல்வி தேவையானது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் சரியான அணுகுமுறையுடனும், தெளிவான பார்வையுடனும், உறுதியான வரைமுறையுடனும் அதை அரசு செயலாக்கம் செய்ய வேண்டியது அவசியம்.

29 comments on “பாலியல் கல்வி : எனது பார்வையில்.

  1. பாலியல் பரச்சனை சிறுவர்களுக்கு மட்டுமா?
    பேருந்து நெரிசலில், திருவிழா கூட்டத்தில்
    வக்கிர மனம் படைத்தவர்களின் அருவருப்பூட்டும்
    செய்கைகளை பெரிய பெண்களாலே தடுக்கமுடியவில்லை
    மழலைகள் பாடு?
    எனக்கு தெரிந்த தோழிகள் சொன்ன முதன்மையான கருத்து:
    பெண் குழந்தையை யாரிடமும்(ஒன்று விட்ட அண்ணன், தம்பி) விட்டு செல்லாதே.

    இந்த நிலமை எந்த கல்வியால் மாறும்?

    Like

  2. //விழிப்புணர்வு நிச்சயம் கல்வியால் கிடைக்கும்//
    யாருக்குங்க?
    எல்லாருக்கும் தெரியும்.
    தீர்வு?
    யாரவது தெரிந்தால் சொல்லுங்க.

    என்னை பொருத்தவரையில் அந்தமாதிரி ஆட்கள் வாழவே
    தகுதியில்லாதவர்கள்.

    Like

  3. // என்னை பொருத்தவரையில் அந்தமாதிரி ஆட்கள் வாழவே
    தகுதியில்லாதவர்கள்.//

    மாற்றுக் கருத்து இல்லவே இல்லை.

    Like

  4. நல்ல பதிவு.

    //இரண்டாவதாக, மேலை நாட்டு பாலியல் கல்வி முறையிலிருந்து வேறுபட்டு நமது பாலியல் கல்வி முறை இருத்தல் நலம். மேலை நாடுகளில் சொல்லப்படும் “திருமணத்திற்கு முன்பான பாதுகாப்பான உடலுறவு” போன்றவற்றையும், கருவுறாமல் இருக்க செய்ய வேண்டியவை பற்றியும், உடலுறவு வகைகள் பற்றியும் சொல்லாமல் இருக்கலாம்.//

    மிகச் சரியாகச் சொல்லியுள்ளீர்கள்.

    மேலைநாடுகளில், பாலியல் கல்வியின் தேவைக்கான காரணங்கள் என்று சொல்லப்பட்டவை நம் இந்திய மக்களின் தேவைகளிலிருந்து பெருமளவிற்கு மாறுபடுகிறது.

    எச்.ஐ.வி/எயிட்ஸ் போன்ற கொடிய நோய்களுக்கு ஆளாகிவிடக்கூடாது என்றும், இளவயதில், திருமணத்திற்கு முன்னரே கர்ப்பமாகிவிடக் கூடாதென்றுமே அனைத்து இந்தியப் பெற்றோர்களும்தான் எண்ணுகிறார்கள். இதனாலேயே, பாலியல் கல்வி இந்தியாவைப் பொறுத்தவரை கிட்டத்தட்ட ஒரு எயிட்ஸ் எதிர்ப்பு இயக்கமாகவே இருக்கிறது.

    குழந்தைகளின் எதிர்காலத்தில் கண்ணும் கருத்துமாக இருக்கும் பெற்றோர்கள், ‘பாலியல் கல்வி’ க்கு ஆதரவளித்தாலும், இளம் வயதிலேயே ‘செக்ஸ்’ பற்றிய போதனைகள் வேறுவிதமான (negative) தாக்கத்தை ஏற்படுத்திவிடக்கூடாதே என்றும் அஞ்சுகின்றனர்.

    தவிர, “‘செக்ஸ் என்பதே இயற்கையான விஷயம்தானே? திருமணத்திற்கு முன் செக்ஸ் என்பது தப்பில்லையே” என்றெல்லாம் மேலைநாட்டுப்பாணியில் வாதிடும் பாலியல் கல்வி ஆதரவாளர்களைக் கண்டு ‘பாலியல் கல்வி’க்கு தடாலடியாக எதிர்ப்பு காட்டவே முனைகின்றனர்.

    //அமெரிக்காவிலேயே பாலியல் கல்வி பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் நிறைய பாடங்களை சொல்லாமல் விட்டு விடுவதாகவும், அதற்குக் காரணம் அவர்களுக்கு அதில் போதிய பயிற்சி இல்லாமல் இருப்பதும், சொல்வதற்கு தயங்குவதுமே காரணம் என நியூயார்க் ஆராய்ச்சி ஒன்று கடந்த வாரம் அறிக்கை சமர்ப்பித்திருந்தது.//

    அமெரிக்காவிலும், சரி, இங்கிலாந்திலும் கூட பெற்றோர் அனுமதி பெற்றபின்புதான் பாலியல் கல்வியை சொல்லித்தரத் துவங்குகின்றனர். பாலியல் கல்விக்கு பள்ளியில் பயன்படுத்தும் சுவர்-சித்திரங்களையும், விவரணப் படங்களையும் பெற்றோர்களுக்கு முதலில் காட்டுகிறார்கள். நீங்கள் சொல்வதுபோல, இதுபோன்ற பாடங்களை பயிற்றுவிக்கத் தயக்கம் காட்டும் ஆசிரியர்களும் இருக்கிறார்கள்; அதேபோல, பாலியல் கல்விக்கு முதலில் ஆதரித்துவிட்டு, பிறகு இந்த விவரனப்படங்களையெல்லாம் பார்த்துவிட்டு, ஒப்புதல் தர மறுக்கும் பெற்றோர்களும் இருக்கிறார்கள்.

    Like

  5. மிக்க நன்றி பாரதீய நவீன இளவரசன். உங்கள் விரிவான தெளிவான கருத்துக்களுக்கு.

    Like

  6. AT THE TIME OF STUDYING 8TH STANDARD, THEY CAN START THE EDUCATION.
    IT SHOULD OVERCOME THE SHYNESS CHARACTER OF THE STUDENTS.

    THEY WILL GET KNOWLEDGE.

    IT IS ONE OF THE EASIEST WAY TO REACH THE SOCIETY ABOUT AWARNESS

    Like

  7. //AT THE TIME OF STUDYING 8TH STANDARD, THEY CAN START THE EDUCATION.//

    எப்போ ஆரம்பிப்பது என்பதில் தான் முதல் சிக்கலே இருக்கிறது 🙂

    Like

  8. திருமணத்திற்கு பின்னர் தான் பாலியல் உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் கல்வி, பொருளாதார, வரதட்சனைப் பிரச்சினைகள் காரணமாக 35 வயதுக்கு மேலாகியும் திருமணமாகதிருப்பவர்களின் மன உளைச்சல்கள், பாலியல் ரீதியான ஆசைகள் தீர வழிகள் என்ன?

    Like

  9. Very easy and simple,
    வரதட்சனை கேட்போரை மணம் செய்ய மாட்டோம் என்று அனைத்துப் பெண்களும் மறுக்க வேண்டும்.

    Like

  10. தமிழோசைக்கு அனுப்பி வையுங்க. நல்ல விஷயம் பல பேரைப் போய்ச் சேரனும்.

    Like

  11. இதைப் பற்றி எனக்கும் ஒரு பார்வை இருக்கு. ஆனா மத்தவங்க எப்படி எடுத்துக்குவாங்கன்னு தெரியலை. அதனால் இப்பின்னூட்டத்தை அட்டெண்டென்சாக மட்டும் கருதிக் கொள்ளவும்.

    Like

  12. //இதைப் பற்றி எனக்கும் ஒரு பார்வை இருக்கு. ஆனா மத்தவங்க எப்படி எடுத்துக்குவாங்கன்னு தெரியலை. அதனால் இப்பின்னூட்டத்தை அட்டெண்டென்சாக மட்டும் கருதிக் கொள்ளவும்.//

    பரவாயில்லை. தெகிரியமா சொல்லுங்கோ…. மத்தவங்க எடுத்துகிட்டா எடுத்துக்கட்டும் 🙂

    Like

  13. //தமிழோசைக்கு அனுப்பி வையுங்க. நல்ல விஷயம் பல பேரைப் போய்ச் சேரனும்.//

    சரி.. சரி… 🙂

    Like

  14. //Very easy and simple,
    வரதட்சனை கேட்போரை மணம் செய்ய மாட்டோம் என்று அனைத்துப் பெண்களும் மறுக்க வேண்டும்.//

    வாதத்துக்கு எளிது, நிஜத்தில் சாத்தியமா வாசுகி ?

    Like

  15. //திருமணத்திற்கு பின்னர் தான் பாலியல் உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் கல்வி, பொருளாதார, வரதட்சனைப் பிரச்சினைகள் காரணமாக 35 வயதுக்கு மேலாகியும் திருமணமாகதிருப்பவர்களின் மன உளைச்சல்கள், பாலியல் ரீதியான ஆசைகள் தீர வழிகள் என்ன?//

    அப்படிப்பட்டவர்களை விட அப்படியில்லாதவர்கள் தான் அப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்பதே அப்பட்டமான உண்மை !

    Like

  16. நீங்கள் அனுமதியளித்ததால் இங்கேயே சொல்லுகிறேன். நன்றி.

    பாலியற் கல்விக்கான சரியான வயதாக குழந்தை பேசவும் கேள்வி கேட்கவும் தொடங்குகிற வயதையே எடுத்துக்கொள்ளலாம். பாலியல் கல்வி என்ற உடனேயே ஆணுறுப்பு, பெண்ணுறுப்பு, உடலுறவு என்று சிந்திக்கத் தேவையில்லை. இரண்டரை அல்லது மூன்று வயதில் குழந்தைகளுக்கு அது தேவையும் இல்லை.

    ஒவ்வொரு குழந்தையும் ஆண் அல்லது பெண்ணினத்துக்கான பாலுறுப்புகளுடன்தான் பிறக்கிறது. வளர வளர அந்தந்த வயதுகளில் அந்த உறுப்புகளின் பயன்பாடுகள் என்ன என்பதைச் சரியாக சொல்லித் தருவதே பாலியல் கல்வி. வலது கையால் சோறுண்ண வேண்டும், இடது கையால் சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று சொல்லித் தருவதைப் போல.

    பாலியல் கல்வி இந்த அடிப்படையிலிருந்தால் சரியாக இருக்கும் என்பது என் நம்பிக்கை. இதனால் தேவையற்ற வயதில் பெண் குழந்தைக்கு ஆணுறுப்பைப் பற்றியும் ஆண் குழந்தைக்குப் பெண்ணுறுப்பைப் பற்றியும் சொல்லித் தருகிற இசைக்கேடு நிகழாது.

    சரியான பாலியற் கல்வி கைக்கொள்ளப்பட்டால் ஒரு பெண் பூப்பெய்தும் போதும், இரவில் முதன்முதலாக ஒரு பையனின் ஆடை நனையும் போது ஏற்படக் கூடிய தேவையற்ற அச்சங்கள் தொடராது. ஆணோ பெண்ணோ, அத்தனை பிறழ்வுகளும் இந்த இடத்தில் தான் தொடங்குகிறது. சரியான பாலியற் கல்வி சரியான வயதிலிருந்து சொல்லித்தரப்பட்டால் எந்த சிக்கலுக்கும் இடமில்லை.

    இதற்குத் திரைப்படம், தொலைக்காட்சி, பத்திரிகைகள் உள்ளிட்ட புறக்காரணிகளும் பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும். ஹும்…

    Like

  17. Pingback: பாலியல் கல்வி : எனது பார்வையில். « SEASONSNIDUR

  18. Pingback: பாலியல் கல்வி : எனது பார்வையில். « SEASONSNIDUR

  19. etanai patriya vilippunarvu muthalil petrorukku vendum,..
    pinpu ethai avarkal anumatiyudan schoolil ethanai oru padamaga vaikalam.
    *thankyou,.
    your web site*

    Like

Leave a comment