ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பார்கள். அப்படியானால் கூத்தாடிகள் இரண்டு பட்டால் ஊருக்குத் தானே கொண்டாட்டம் ?
செட்டாப் பாக்ஸ், கேபிள் கூத்துகளைப் பார்த்தால் அப்படித் தான் தெரிகிறது.
ஒரு நாள் சன் மியூசிக் சானலில் “அற்புதமான வாய்ப்பு, எஸ்.சி.வி செட்டாப் பாக்ஸ் விலை 499 மட்டுமே “ என்று முழங்கினார்கள்.
அடடா.. ( சென்னையின் தலை விதியான)நாலாயிரம் ரூபாய் செட்டாப் பாக்ஸ் 499 ரூபாய்க்கே கொடுக்கிறார்களே பரவாயில்லையே என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.
அடுத்த நாள் கலைஞர் தொலைக்காட்சியில் “ஹாத் வே செட்டாப் பாக்ஸ் – முற்றிலும் இலவசம் “ என்று அதிரடித்தது.
இதென்னடா ? என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே சன் சானலில் “எஸ்.சி.வி” இலவசம். வாங்குங்கள் வாங்குங்கள் என்று கூவிக் கொண்டிருந்தது.
ஓஹோ இப்படிப் போகுதா விஷயம் ? என்று நான் யோசித்துக் கொண்டிருந்த போது தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருந்தது “நீயா, நானா யார் தான் இங்கே ரொம்பப் பெரியவன் “ எனும் பாடல்.
சென்னை மக்களை சுதந்திரமாக சானல்களைப் பார்க்க விடாமல் சுற்றி வளைத்து செட்டாப் பாக்ஸ் சங்கிலியில் சுற்றி டி.டி யில் போட்டால் மட்டுமே கிரிக்கெட் கூட பார்க்க முடியும் எனும் சூழலை உருவாக்கி விட்டார்கள், பணம் சம்பாதிக்க விரும்பியவர்கள்.
குழந்தைகளை ஒரு கார்ட்டூன் சானல் கூட பார்க்க விடாமல் செய்த இந்தியாவிலேயே “தனித்துவம்” மிக்க நகரம் என்னும் பெயரையும் பெற்றது சென்னை !!!
கடுப்பில் இருந்த மக்களை டிஷ், டாட்டா ஸ்கை என இழுக்க அதைப் பொறுக்க முடியாமல் சன் டி.டி.ஹைச் வந்தது. மாறன் தான் மாறியாச்சே அவ்ளோ ஈசியா வந்துடுமா என்ன ?
கேபிள் நறுக்கப்படுகிறது, டிஷ் நசுக்கப்படுகிறது, பணியாளர்கள் வெறுக்கப்படுகின்றனர் என கூச்சல் குழப்பங்கள் எங்கும்.
சந்தடி சாக்கில் ரிலையன்ஸ் டிஷ் கூட வரப்போகிறது என்றார்கள்.
இந்தக் களேபரச் சூழலில் நேற்று எங்கள் ஏரியா கேபிள் டிவி ஆபரேட்டரைப் பார்த்தேன்
“என்னப்பா எல்லா செட்டாப் பாக்ஸ்சும் இலவசம் ன்னு சொல்றாங்களே, ஒரு நாலஞ்சு நம்ம வீட்டுல கொண்டு வெச்சுட வேண்டியது தானே ” என்றேன் ஒரு சின்ன சிரிப்புடன்.
“அட. அது கூட வேணாம் சார். இந்த செட்டாப் பாக்ஸ் எல்லாமே எடுத்துடப் போறாங்களாம். இன்னும் பத்து நாள்ல பாருங்க, பழைய படி கேபிள்லயே எல்லா சானலும் வரும்” என்றார்.
அடடா… சென்னைக்குக் கூட விடிவு காலம் வந்துடும் போலிருக்கே !