கிரிக்கெட் வார்த்தைப் போர் : ஒரு அலசல்

cricket.jpg

கிரிக்கெட் விளையாட்டு ஒன்றும் தேசிய முக்கியத்துவம் கொடுத்து பேசப்படவேண்டிய விஷயம் இல்லை தான் எனினும் மக்களிடையே கிரிக்கெட் ஒரு போதையாகப் பரவியிருப்பதும், கோடிக்கணக்கான பணம் புரள்வதும், ஊடகங்களின் பிரதான செய்தியாக மாறியிருப்பதும் கவலை கலந்த கவனிப்புக்கு நம்மை இட்டுச் செல்கிறது.

விளையாட்டு எனும் எல்லையைத் தாண்டி கிரிக்கெட் இரண்டு நாட்டின் தன்மான பிரச்சனையாக உருவாகியிருப்பது இதன் மீதான கவனத்தை அதிகரித்திருக்கிறது.

கிரிக்கெட் விளையாட்டல்ல, அது அரசியலாகிவிட்டது இப்போது என்பதை நிகழ்வுகள் ஊர்ஜிதப்படுத்துகின்றன.

சில விஷயங்கள் புரியவேயில்லை !

கிரிக்கெட் விளையாட்டில் வார்த்தை விளையாட்டுகள் சகஜம் என்று சொல்லும் ஆஸ்திரேலிய அணியினரால் இந்தியர்களின் வார்த்தை விளையாட்டை ஏற்றுக் கொள்ள முடியவில்லை ஏன் ?

இதன் உண்மையான காரணம் அவர்களுடைய இரத்தத்தில் ஊறியிருக்கிறது. தங்களை உயர்வாகவே மதிக்கும், அல்லது ஆசியக் கண்டத்தைச் சேர்ந்தவர்களை இழிவாகவே மதிக்கும் போக்கு அவர்களை விட்டு வெளியேறுவதில்லை.

இதனால் தான் தங்களுடைய வெறுப்பை பல்வேறு விதமாக வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.

தங்களை விட வயது குறைவான பந்து வீச்சாளர்களிடம் தோல்வியடையும் போது அவர்களுக்குள்ளே இருக்கும் ஈகோ எனும் அரக்கன் அசுரத்தனமாக வெளிப்படுகிறது.

இது தான் வேறு விதமாக வார்த்தைகளில் வெளிப்படுகிறது. அவர்கள் நாட்டிற்கு விளையாடச் சென்ற அணியினர் என்னும் குறைந்தபட்ச மரியாதை கலந்த கவனிப்பு கூட அவர்களிடம் இல்லாதது அவர்களுடைய கலாச்சாரத்தின் மீது கேள்வியாய் எழுகிறது.

இந்தியர்களைத் திருப்திப்படுத்த வேண்டுமானால் ஒரு ஆசியக் கண்டத்தைச் சேர்ந்த அம்பயரை நியமிக்கலாம் என்று முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஒருவர் சொல்லியிருப்பதே அவர்களுடைய மன ஓட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறது.

ஆஸ்திரேலிய வீரர்களின் நடவடிக்கைகளைக் கண்டுகொள்ளாமல் இந்திய வீரர்களின் செயல்களைப் பெரிதுபடுத்தும் நடுவர்களே இருக்கிறார்கள் என்பதை ஒருவகையில் அவர்கள் ஒத்துக் கொண்டிருக்கின்றனர் என்பதையே இது பூடகமாய் படம் பிடிக்கிறது.

இன்னொரு விஷயம், எதிரணி வீரர்களை மன ரீதியான உளைச்சலுக்கு உள்ளாக்காமல் வெற்றி பெற ஆஸ்திரேலியர்களுக்குத் தெரியாதா என்பது தான்.

செஸ், டென்னிஸ் போன்ற விளையாட்டுகளில் கவன சிதறடிக்கும் நிகழ்வுகள் நடைபெறுவதில்லை. கிரிக்கெட்டில் இது மிக அதிக அளவில் நடைபெறுகிறது.

“என்னை ஆட்டமிழக்கச் செய்து பார்” என்றோ, “அடுத்த பந்தை பவுண்டரிக்கு விரட்டுவேன் பார் “ என்றோ சவால் விட்டால் பரவாயில்லை. ஆனால் அதை விடுத்து வீரர்களின் குடும்ப உறவினர்களை திட்டுவதும், பாலியல் ரீதியான அருவருக்கத் தக்க வசனங்களைப் பேசுவதும் தான் கிரிக்கெட் வார்த்தை விளையாட்டெனில், மன்னிக்கவும் இதை விடக் கேவலமான ஒரு அணுகுமுறை இருக்க முடியாது. அது எந்த அணியாக இருந்தாலும் சரி.

ஆஸ்திரேலியர்கள் இந்தியர்களை நோக்கி பேசுவதையெல்லாம் பாராட்டாக இந்தியர்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற தத்துவார்த்த சிந்தனையை உதிர்த்திருப்பவர்கள், அதே மன நிலையுடன் பிற அணி வீரர்களின் வார்த்தைகளை ஆஸ்திரேலிய அணியினரும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதையும் வலியுறுத்துதல் அவசியம்.

இஷந்த் ஷர்மாவிற்கு பத்தொன்பது வயது தான் ஆகிறது என்பதற்காக சீனியர் வீரர்களின் அவமதிப்புகளையெல்லாம் தலை வணங்கி பெற்றுக் கொள்ளவேண்டிய அவசியமும் இல்லை.
திருமண வயது 21 என்பது போல, திட்டுவதற்கும் திட்டை வாங்குவதற்குமான வயது வரம்பை அரசாங்கமும் நிர்ணயித்திருக்கவில்லை.

“தீய களை” என்பது போன்ற அர்த்தத்தில் ஹர்பஜனை ஹேடன் விமர்சித்திருப்பது அவருடைய சொந்தக் கருத்து என கருத முடியுமெனில், எதிர் விமர்சனங்களையும் அதே மனநிலையுடன் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் அவருக்கும், அந்த அணியினருக்கும் வேண்டும்.

இன வெறி வார்த்தைகளை இந்தியர்கள் பயன்படுத்தினார்கள் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கடந்த மாதம் இந்திய கிரிக்கெட் வாரியம் கூறியதை மனதில் வைத்துக் கொண்டு, இப்போது இனவெறி குற்றச்சாட்டு எழவில்லையே இந்தியா வாயை மூடிக்கொள்ளட்டும் என்று நக்கலாய் கூறியிருப்பது ஏதேனும் ஒரு வகையில் இந்திய அணியை இழிவுபடுத்தவேண்டும் என்பதையே காட்டுகிறது.

விளையாட்டை சீரியசாகப் பார்த்து, சீரியசான விஷயங்களை விளையாட்டுத் தனமாய் விட்டு விடும் இன்றைய வாழ்க்கைச் சூழலில் எழுந்துள்ள இந்த சர்ச்சை உண்மையில் வெறும் வார்த்தை சம்பந்தப்பட்டதல்ல.

காலம் காலமாக இழிவு நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் மானிட குலம் எழ முயலும்போது எரிச்சலைடையும் உயர் நிலையிலுள்ளவர்களின் மனநிலையின் வெளிப்பாடே !