ஒரு ஆண் தாயாகிறார்

hshe.jpg

அதிசயம் ஆனால் உண்மை !! என்று சத்தியம் செய்து சொல்கின்றன பிரபல பத்திரிகைகளான ABC News Advocate மற்றும் பல பிரபல பத்திரிகைகள்.

ஒரு ஆண் கர்ப்பமடைந்திருக்கிறாராம். இருபத்து இரண்டு வார கர்ப்பமாம். ஜூலை மாதத்தில் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுக்கப் போகிறார்களாம்.

பிறக்கப் போகும் பெண்குழந்தை “என்னோட மம்மி ஒரு ஆண்” என்று சொல்லப்போகும் நாளை தாயுமானவர் பார்த்து ரசிக்கக் காத்திருக்கிறாராம்.

பெண்ணாய் இருந்து ஆணாய் மாறிய தாமஸ் பெட்டி தான் இந்த பரபரப்புச் செய்தியில் வரும் கர்ப்பவதி (கர்ப்பவதன் ? ) இவர் செயற்கைக் கருத்தரிப்பு மூலம் கருவுற்றிருக்கும் இவர் ஒரு பெண் குழந்தையை உலகிற்கு அறிமுகம் செய்து வைத்து இதோ நானே உலகின் முதல் தாயான தந்தை என பிரகடனம் செய்யப் போகிறாராம்.

பல ஆண்டுகளுக்கு முன்பு இதே போல ஒரு பரபரப்புச் செய்தியை MalePregnancy.com
எனும் வலைத்தளம் வெளியிட்டிருந்தது. அதில் லீ என்பவர் குழந்தை பெற்றுக் கொள்ளப் போகிறார் என கிராபிக்ஸ் சித்து விளையாட்டுகள் விளையாடி இருந்தனர்.

அந்த லீ பல ஆண்டுகள் கடந்த பின்னும் இன்னும் கர்ப்பமாக அந்த வலைத்தளத்தில் உலவி வருகிறார். டாக்குமெண்டரி, மெடிக்கல் ரிப்போர்ட் அது இது என பல அலட்டல் வேலைகளைக் காண்பித்த அந்த வலைத்தளம் போலியானது என்றும் அதை நிறுவியவர்
விர்ஜில் வாங் என்பதும் தெரியவந்தது.

அதே போல இந்த தகவலும் போலியாய் இருக்கவே வாய்ப்புகள் மிக மிக அதிகம். ஏனென்றால் நாளைய தினம் தாமஸ் பெட்டி ஒரு கான்ஃபரன்ஸ் ஏற்பாடு செய்திருக்கிறாராம்.

நாளை ஏப்பிரல் 1 – என்பது நமக்குத் தெரியாதா என்ன ?

கடைசியாய் கிடைத்த தகவல்

நம்ம கணிப்பெல்லாம் தப்பாயிடும் போலிருக்கு !!! விஷயம் உண்மையாம் !!!

பக்கத்து வீட்டாரோடு பழகாவிடில்…

sad.jpg

அடுத்த வீடுகளில் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ளாமலேயே வாழும் சூழல் நம்மைச் சுற்றிக்கொண்டிருக்கிறது.

கிராமங்களின் இன்னும் கூட ஊரோடு உறவாடும் பழக்கம் இருக்கிறது. ஊரில் யாராவது வெளியூர் சென்றால் பக்கத்து வீடுகளில் இருப்பவர்களிடம் சொல்லி விட்டுச் செல்கிறார்கள்.

“வீட்டைப் பாத்துக்கோங்க..”

நகரங்களில் நிலமை தலைகீழ், “யாரிடமும் சொல்லாமல் கிளம்பு. பக்கத்து வீடு, கடை எங்கேயும் மூச்சு விடாதே” என்று கிசுகிசுத்துக் கொண்டே புறப்படும் நிலமையே நிலவுகிறது.

எங்கே போய் முடியும் இத்தகைய தனிமைத் தீவு வாழ்க்கை ?

ரஷ்யாவில் நடந்த ஒரு நிகழ்வு மனதை உலுக்குகிறது. பிரோஸ்கோவியா என்னும் மூதாட்டி தனது அறுபத்து ஏழாவது வயதில் சோபாவில் படுத்திருக்கிறார் சற்று இளைப்பாற.

அந்த தூக்கமே அவருக்கு நிரந்தரத் தூக்கமாகி விட்டது. வீட்டில் வேறு யாரும் இல்லை !

அடுத்த வீட்டு வாசிகளுக்கு விஷயம் தெரியவில்லை. மூதாட்டி மருத்துவமனைக்கோ, வெளியூருக்கோ போயிருக்கக் கூடும் என நினைத்துக் கொண்டனர். வழக்கம் போல அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டனர்.

மூதாட்டியின் வீட்டு சன்னல் திறந்தே இருந்ததால் உடல் அழுகும் நாற்றமும் கொஞ்சம் கொஞ்சமாக காற்றில் கரைந்திருக்கிறது. யாரும் கவனிக்கவில்லை.

பக்கத்து வீட்டு நபர்களுக்கூம் மூதாட்டியின் வீட்டுக் கதவைத் தட்டிப் பார்ப்போம் என்றோ, நீண்ட நாட்களாகக் காணவில்லையே போலீசில் சொல்வோம் என்றோ நினைக்கவில்லை.

நாட்கள் மாதங்கள் வருடங்கள் கடந்தன !!!

சுமார் பதிமூன்று வருடங்கள் மூதாட்டி சோபாவில் பிணமாய் கிடந்தார் !

அரசு பராமரிப்புக் குழுவினர் வழக்கமான பரிசோதனையின் போது மூதாட்டியின் வீடு மோசமான நிலையில் இருப்பதைக் கண்டு பழுது நீக்க வேண்டுமா என விசாரிக்கச் சென்றிருக்கின்றனர்.

பலமுறை சென்றும் யாரும் பதில் சொல்லாததால் விஷயத்தை காவல்துறைக்குக் கொண்டி சென்றிருக்கின்றனர். அப்போது தான் இந்த அவலம் வெளியே வந்திருக்கிறது.

கடந்த ஆண்டு இதே போல ஒரு இளைஞன் சமையலறையில் உட்கார்ந்த நிலையிலேயே இறந்து போன விஷயம் ஆறு ஆண்டுகளுக்குப் பின் வெளிச்சத்துக்கு வந்தது. குளிர் காலங்களில் இறந்து போனால் அதிக நாற்றம் எழாமல் உறைந்து போகும் நிலை உருவாகும் என காவல்துறையினர் விளக்கினர்.

அவன் குடியிருந்தது பல வீடுகள் இருக்கும் குடியிருப்பு என்பதும், அடுத்த சுவருக்கு அப்பால் இன்னோர் குடும்பம் வசிக்கிறது என்பதும் சோகமான உண்மை.

மனித வாழ்வின் உறவு விரிசல்கள் வாழ்வின் அர்த்தத்தையே மிகப்பெரிய கேள்விக்குறியாக்குகின்றன. நாம் இருப்பதும் இறப்பதும் அடுத்த வீட்டுக் கதவுக்கு அவசியமில்லாத ஒரு விஷயமாகிப் போனது உண்மையிலேயே நவீன உலகின் பலவீனத்தின் உச்சம் எனலாம்.

என்ன மிச்சம் இருக்கிறது வாழ்வி ? உண்மையான நேசத்தை பகிரும் மனம் இல்லாத போது !!!

மாயமாகும் மனிதர்கள் : திகில் தீவு !

disappear.jpg

நம்முடன் பேசிக்கொண்டிருக்கும் ஒருவர் திடீரென பேசிக்கொண்டிருக்கும் போதே மாயமாய் மறைந்து விட்டால் எப்படி இருக்கும் ? பயமும், வியப்பும், திகிலும், பிரம்மையும் கலந்த அந்த நிகழ்வை எப்படி விளக்க முடியும்.

அப்படி மனிதர்களை மாயமாய் மறையச் செய்யும் ஒரு தீவே இருந்தால் ? திடுக்கிட வைக்கிறது இந்த கேள்வி. கூடவே ஒரு நல்ல ஹாலிவுட் திகில் படத்தைப் பார்க்கும் பரபரப்பையும் தருகிறது.

கென்ய ருடால்ஃப் ஏரியில் இருக்கிறது ஒரு குட்டி தீவு. என்வையிட்டினெட் தீவு என அழைக்கப்படும் அந்த தீவின் பொருள் “திரும்ப முடியாது” என்பது தான் என்கின்றனர் உள்ளூர் வாசிகள்.

ஒரு காலகட்டத்தில் நன்றாக, இயல்பாக இருந்த கிராமம் தான் அது. அங்கே இருந்த மக்கள் மீன் பிடித்தல், வேட்டையாடுதல் என பல தொழில்களை செய்து வந்தனர்.

அவர்கள் அடிக்கடி தீவை விட்டு வெளியே வந்து நண்பர்கள், உறவினர்களைச் சந்தித்து அவர்களுக்கும் மீன், விலங்குகள் போன்றவற்றை அளிப்பதும் வழக்கமாக இருந்தது.

திடீரென சில நாட்களாக தீவிலிருந்து யாரும் வெளியே வரவில்லை. நாட்கள் செல்லச் செல்ல அந்த இடைவெளி அதிகரித்துக் கொண்டே இருந்தது. இதில் ஏதோ விஷயம் இருக்க வேண்டும் என நினைத்த மக்கள் அந்தத் தீவுக்குச் சென்று தகவல் அறிந்து வர விரும்பினார்கள்.

தீவுக்குள் சென்ற மக்கள் அதிர்ந்தனர். அங்கே குடிசைகள் எல்லாம் காலியாய் கிடந்தன. வேட்டையாடப்பட்ட விலங்குகளும், பிடிக்கப்பட்ட மீன்களும் அழுகிப் போய் கிடந்தன. ஆனால் மக்களின் சுவடுகள் கூட மிச்சமில்லை.

என்னவானார்கள் இவர்கள் ? எங்கே போனார்கள் ? எதுவும் தகவல் இல்லை ! பயந்து போன மக்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடினர் தங்கள் இருப்பிடம் நோக்கி. அதன் பின் பறவைகளைத் தவிர யாரும் அந்த தீவில் தங்கள் நிழல்கள் விழ அனுமதிக்கவில்லை.

இப்போது அந்த இடம் சாபத்துக்குள்ளான, மர்மத் தீவாக இருக்கிறது.

அந்த தீவில் யாருமே தங்குவதில்லை, அங்கே தங்குபவர்கள் மாயமாகி விடுவார்கள் எனும் நம்பிக்கை தான் அதன் காரணம். சில கிலோமீட்டர் அகலமே உள்ள அந்த தீவு சபிக்கப்பட்ட தீவாக மக்களிடையே பீதியைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது.

அங்கே அப்படி என்ன மர்மம் தான் இருக்கிறது என யாராலும் கண்டு பிடிக்க முடியவில்லை.

1935 களில் மார்டின் ஷெஃப்லிஸ் மற்றும் பில் டேசன் இருவரும் விவியன் என்பவருடைய தலைமையில் ஆராய்ச்சிகள் மேற்கொண்டிருந்தனர்.

அந்த தீவில் இருக்கும் ரகசியம் என்ன என்று பார்த்து விடுவோமே என்று கங்கணம் கட்டிக் கொண்டு அந்தத் தீவில் இருவரும் சென்றனர்.

நாட்கள் நகர்ந்தன. போனவர்கள் திரும்பவில்லை. பதினைந்து நாட்கள் பொறுமையுடன் காத்திருந்தவர்களை பயம் பிடித்துக் கொண்டது. உடனே விவியன் பாதுகாவலர் குழுவை அந்தத் தீவுக்கு அனுப்பினார்.

பாதுகாவலர் படை காணாமல் போன இருவரையும் தேடி தீவுக்குள் நுழைந்தது. அக்கு வேறு ஆணி வேறாக தீவை சல்லடை போட்டுத் தேடியும் இருவரும் அகப்படவேயில்லை !

ஆளே இல்லாத ஒரு அமானுஷ்யக் கிராமமாக அது அமைதிக்குள் உறைந்து கிடந்தது.

திடுக்கிட்ட விவியன் அரசு உதவியுடனும், வாகனங்களுடனும் தீவை மீண்டும் ஒருமுறை தலைகீழாய் புரட்டித் தேடினார். ஊஹூம். ஒன்றும் கிடைக்கவில்லை.

தேடப் போனவர்கள் திரும்பி வந்ததே பெரிய விஷயம் என்று பேசிக் கொண்டனர் உள்ளூர் மக்கள்.

இதன் மர்மம் புரியாத உலகம் தலையைப் பிய்த்துக் கொள்கிறது. வேற்றுக் கிரகவாசிகள் கடத்திச் செல்கின்றனர் என்றும், தெரியாத காலச் சக்கரம் ஒன்று சுழல்கிறது என்றும், மக்கள் காற்றில் கரைகின்றனர் என்றும் கதைகள் பல சிறகுகளுடன் டிராகுலா வாக விஸ்வரூபமெடுத்துப் பறக்கிறது.

விரிந்து பரந்து கிடக்கும் உலகில் ஏராளமான மலைகளும், தீவுகளும், கடல் பகுதிகளும் மர்மத்தின் கூடாரமாகக் கிடக்கிறது. இன்னும் விஞ்ஞானமோ, பெரும் அறிவியலார்களோ, தத்துவ ஞானிகளோ விளக்க முடியாத வியப்புகளின் கூட்டுத் தொகையாக இருக்கிறது நமது பூமி எனும் அதிசயம்.

இளம் காதலர்களுக்கு !

காதலியுடன் கைகோர்த்து நடக்கும் போது மழை பொழியவேண்டும், அந்த மழை குடைகளில் வழியும் அழகை ரசிக்க வேண்டும். தோள் சேர்த்து கரையும் மழையில் நிறையும் காதல். இருந்தாலும் தொப்பலாய் நனைந்து விட்டால் பட்டியலிட்டிருக்கும் காதல் பயணங்கள் ரத்தாகும் வாய்ப்பு இருக்கிறதே ! கவலையில்லை இப்போது, இதோ ஸ்பெஷல் குடை.

umbrella.jpg

காதலர்கள் தனிமை விரும்பிகள். சில்மிஷங்களானாலும், சொல்மிஷங்களானாலும் தனிமையின் தாழ்வாரங்களில் காதலின் விளைச்சல் அமோகம். அத்தகைய தனிமையின் அற்புதத் தருணங்களில் சேர்ந்து புகைப்படம் எடுப்பது எப்படி ? யாரையாவது அழைத்து தனிமையின் பூங்காவில் சேதம் விளைவிக்காமல் இருக்க இதோ ஒரு வழி.

camera.jpg

மெலிதாய் தன்னைத் தாலாட்டும் படுக்கை இருந்தால் (திருமணமான) காதலர்களுக்கு இனிதான பொழுதுகள் அமையுமே.

bed.jpg

பிரான்ஸ் அரசியலும், தமிழர்களும்

tamil.jpg

தமிழர்களின் வரலாற்றுச் சுவடுகள் பிரான்ஸ் நாட்டில் ஆழமாய் வேரூன்றியிருக்கின்றன என்பதை சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தல் வெளிப்படுத்தியிருக்கிறது.

தமிழுக்கும் பிரஞ்சுக்கும் இடையேயான பந்தத்திற்கு நீண்ட நெடிய வரலாறு உண்டு. 1664ல் மேற்கு இந்தியக் கம்பெனியை பிரான்ஸ் நிறுவதிலிருந்தே இந்த தொடர்பு இழையோடுகிறது.

தனது காலனி ஆதிக்கத்தை நிலைநிறுத்த விரும்பிய ஐரோப்பியர்களுக்கும் பிரஞ்சும், தரங்கப்பாடியும் அதிகார மையங்களாக இருந்ததை வரலாறு பதிவு செய்திருக்கிறது.

பிரான்ஸ் நாட்டுடன் ஏற்பட்ட இத்தகைய தொடர்பு தமிழர்களை பிரான்ஸ் ஆதிக்கம் செலுத்திய இடங்களுக்கெல்லாம் அழைத்துச் சென்றது எனலாம். பாண்டிச்சேரியிலிருந்து ஏராளமான தமிழர்கள் சுதந்திர காலத்தில் பிரான்ஸ் நாட்டிற்கு புலம்பெயர்ந்ததும் நிகழ்ந்தது.

இப்படி தங்கள் வாழ்க்கையை பிரான்ஸ் நாட்டிற்கு மாற்றிக் கொண்ட தமிழர்கள் தங்களுடைய கலாச்சாரத்தின் அடையாளங்களை இன்னும் தங்களுக்குள் தக்க வைத்திருக்கின்றனர் என்பது வியக்க வைக்கிறது.

ஈழத்தமிழர்களும் பிரான்ஸ் நாட்டிற்குக் குடிபெயர ஆரம்பித்த பின் இத்தகைய தமிழ் உணர்வு பிரான்ஸ் நாட்டில் இன்னும் வலுவடைந்தது. அதன் ஒரு உதாரணமாக கடந்த சனவரி மாதம் பிரான்சிலுள்ள ஆறு தமிழ் அமைப்புகள் ஒன்றிணைந்து “தமிழர் திருநாள் 2008” எனும் நிகழ்ச்சியை நடத்தினர்.

தமிழகத்தில் தமிழன் மறந்து போய் தொலைக்காட்சியின் சீரழிவு நிகழ்ச்சிகளுக்குள் ஆமையாய் அடங்கிக் கிடக்க பிரான்ஸ் நாட்டில் தமிழர்கள் எழுச்சி பெற்றிருக்கின்றனர்.

விழா மேடையில் பொய்க்கால் குதிரை, திராவிடக் கலாச்சார களரி, கூத்து, நாடகம், கவிதை என தமிழின் அடையாளங்கள் கம்பீரத்துடன் முகம் காட்டின. பாரதியின் “வாழ்க நிரந்தரம்” பாடலை ஈழ இசைவடிவில் பாடி தமிழக ஈழ உணர்வு இன்னும் தங்கள் குருதிகளில் கலந்திருக்கிறது என நிரூபித்தனர்.

பிரான்ஸ் நாட்டில் மொத்தம் ஒரு இலட்சத்து இருபத்தையாயிரம் தமிழர்கள் உள்ளனர். இவர்களில் ஐம்பதாயிரம் பேர் நமது ஈழத் தோழர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

பாரீசில் தமிழர்கள் தங்கள் புத்தகக் கடைகள் நான்கைத் திறந்து தமிழின் பரவலுக்கு வழிகோலியிருக்கின்றனர்.

இத்தகைய சூழலில் சமீபத்தில் நடந்த பாரீஸ் நகரும் அதைச் சார்ந்த பகுதிகளிலும் நடந்த பிரான்ஸ் உள்ளாட்சித் தேர்தலில் பன்னிரண்டு தமிழர்கள் வெற்றி பெற்று தங்களுடைய இருப்பை அரசியல் அரங்கிலும் உறுதி செய்திருக்கின்றனர் என்பது ஆனந்தமாய் ஒலிக்கிறது.

நகுலேஸ்வரி அரியரத்னம், சர்மிளா சபாரத்தினம், சோபியா சூசைபிள்ளை, பிரீத்தி நவனீதராஜு, சம்ததயாளினி, அருளாசந்தம் புவனேஸ்வரராஜா, கலையரசி ரவீந்திரநாதன், சந்திரசேகரன், சம்பா நிலவண்ணன், மரிய டார்வெஸ், லீலா ராஜேந்திரம் எனும் இவர்களில் முதல் ஏழுபேர் ஈழத்தைச் சேர்ந்தவர்கள்.

இதில் சுவையான இன்னொரு செய்தி என்னவெனில் அனைத்து ஈழ பிரதிநிதிகளுமே இடது சாரியைச் சேர்ந்தவர்கள் என்பது தான்.

இது தவிர வடக்கு ஐரோப்ப நாடான நார்வேயில் கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் எட்டு ஈழத் தமிழர்கள் வெற்றி பெற்றனர். இவர்களில் ஐந்து பேர் பெண்கள் என்பதும், அவர்களில் ஒருவருக்கு 19 வயதே என்பதும், எழுபது விழுக்காடு பெண்கள் இந்த வாக்கெடுப்பில் கலந்து கொண்டனர் என்பதும் ஆனந்தமளிக்கும் செய்தியாகும்.

தங்கள் சொந்த ஊரில் மேனாட்டுக் கலாச்சாரத்தின் கரையான்களால் அரிக்கப்பட்டு அடையாளங்களை இழந்து கொண்டிருக்கும் தமிழர்களின் இனம் வெளிநாடுகளில் தங்கள் இருப்பை தொன்மையான கலாச்சாரங்களின் துணையோடு வெளிப்படுத்தி வருகிறது.

இது உலகத் தமிழர்களுக்கு ஆனந்தமாக இருக்கும் அதே வேளையில், தமிழகத் தமிழர்களின் போலிக் கலாச்சார மோகத்தின் மீதோர் சாட்டையாகவும் இறங்குகிறது என்பதை மறுப்பதற்கில்லை.

நன்றி : தமிழ் ஓசை – களஞ்சியம் & appaal-tamil.com

பொன்னியின் செல்வன் தொடர் : இயக்குனரின் நேரடி பதில்.

ponniyin_selvan.jpg

அன்பின் சேவியர்,

தங்களின் பதிவு கண்டு சற்று கோபம் வந்தது உண்மைதான். இரண்டாம் முறை படித்த போது, பாலசுப்பிரமணியம் சொன்ன இடங்களில் எனக்கும் சிரிப்புதான் வந்தது.

‘ஒருவனின்’ பின்னூட்டம் மட்டும் யாரந்த ‘ஒருவன்’ என்ற கேள்வியை எழுப்புகிறது. சினிமாத்துறையை சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்று ஊகிக்கிறேன். (ஏனென்றால்….கம்ப்யூட்டர், சாஃப்ட்வேர் மற்றும் காமிரா வாங்கியது எல்லாம் சினிமா வட்டாரத்தில் மட்டும் பரபரப்பாக பேசப்பட்ட விஷயங்கள்..)

சரி, பொன்னியின் செல்வனின் உண்மையான நிலை…

இது வரை ஷூட்டிங் நடந்த நாட்கள்…..38.
எடுத்து முடிக்கப்பட்ட நீளம்….9.5 எபிசோடுகள்.
செலவு செய்யப்பட்ட பணம்….60 லட்சம்
போடப்பட்ட பட்ஜெட்………….ஒரு எபிசோடுக்கு……5 லட்சம்
.

.(‘கணக்கு இடிக்கிறதே’ ? என்று கேட்பவர்களுக்கு…இது 400 எபிசோடுகள் எடுத்து முடிந்த நிலையில் கணிக்கப்பட்டு வரும் தொகை. எந்த கதையிலும் செட், காஸ்ட்யூம், ப்ராபர்ட்டிஸ் என்று முதலில் அதிகம் செலவாகும் என்று அனுபவப்பட்டவர்களுக்குத் தெரியும். பின்னர் தொடரின் முடிவில் amortise ஆகிவிடும்)

.சினிமாத்துறையில் ஒரு லொகேஷனில் நடக்கும் அனைத்து காட்சிகளையும் எடுத்து முடித்து விட்டு வேறு லொகேஷனுக்கு மாறுவதுதான் செலவைக் கட்டுப்படுத்த கடைபிடிக்கும் புரொடக்ஷன் யுத்தி.

அதன்படி காரைக்குடியில் உட்புறப் படப்பிடிப்பையும், கொல்லங்குடியில் செட்டின் வெளிப்புறப் படப்பிடிப்பையும் (25 எபிஸோடுகளுக்கு) முடித்து…. பதினைந்து நாட்கள் இடைவெளியில் வீராணம் மற்றும் கொள்ளிடக்கரை காட்சி்களை எடுக்கலாம் என்று போட்ட திட்டம் சில காரணங்களால் தள்ளிப்போக………….., ஆறு ஏரிகளில் நீர் வடிந்து சிறுவர்கள் கிரிக்கெட் விளையாட வந்து விட்டனர். பயிர்களும் பசுமை இழந்து அறுவடைக்கு வந்து விட்டன………… கதை படித்தவர்களுக்கு அந்த பசுமையும் வெள்ளமும் எவ்வளவு முக்கியம் என்பது தெரியும். (அதற்குப்பின் சொல்லாமல் கொள்ளாமல் இரண்டு முறை off-season வெள்ளம் வந்து அறுவடைக்கு நின்ற பயிர்களை அழித்து விட்டுப்போனது காவிரியின் கொடுமை).

இனி அடுத்து, கல்கி எழுதி இருக்கும் ஆடிப்பெருக்கிற்காக காத்திருக்கிறோம். (ஏனெனில், அது மட்டுமே உத்தரவாதமான வெள்ளக்காலம்)

இதுவரை எடுத்த காட்சிகளை, கிராஃபிக்ஸ் செய்யப்பட்ட நிலையில் பார்த்து விட்டு திரு.ஷரத்குமார் (CEO, கலைஞர் டிவி) கேட்டது, ‘இந்த அளவு கிராஃபிக்ஸுடன் இதே தரத்துடன் கடைசி வரை தர முடியுமா?’ (செய்யப்பட்டிருக்கும் கிராஃபிக்ஸ் எப்படியிருக்கும் என்று அறிய விரும்புபவர்கள் ‘ஜோதா-அக்பர்’ பார்க்கவும்)

மேலும் ஏதேனும் அறிய விரும்பினால் எனது மின்னஞ்சல் விலாசத்திற்கு யார் வேண்டுமானாலும் எழுதலாம்.
naga001@gmail.com

நன்றி

நாகா

பி.கு. இந்த பதில் மடல் நிக் ஆர்ட்ஸ் உரிமையாளர் திரு.சக்கரவர்த்தி அவர்களின் கலந்தாலோசித்து, அவர் ஒப்புதலுடன் வழங்கப்படுகிறது.

அன்பின் இயக்குனருக்கு :
______________________

விரிவான உங்கள் பதிலுக்கு மனமார்ந்த நன்றிகள். உங்கள் மீதான மதிப்பு பெருமளவுக்கு கூடுகிறது. உங்களிடம் கலந்தாலோசிக்காமல் வெளியிட்ட செய்திக்காய் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

காலைல பிரட், கார்ன் ஃப்ளேக்ஸ் சாப்பிடற பார்ட்டியா நீங்க ?

bread.jpg

அவசரமாய் அலுவலகம் ஓடுபவர்கள் காலையில் அரக்கப் பரக்க, இரண்டு மூன்று பிரட் துண்டுகளை உண்பதோ, அல்லது சீரியல்ஸ் உண்பதோ சர்வ சாதாரணம்.

அத்தகையோரை திகைப்புக்குள்ளாக்க வந்திருக்கிறது புதிய ஆராய்ச்சி ஒன்று. அதாவது வெள்ளை பிரட் மற்றும் இனிப்பு கலந்த சீரியல்களை உண்பதால் நீரிழிவு, இதயநோய், புற்று நோய் உட்பட பல நோய்கள் வந்து சேர்கின்றன என்பதே அந்த ஆராய்ச்சி முடிவு.

இத்தகைய உணவுகளிலுள்ள கிளைசமிக் இண்டெக்ஸ் உடலிலுள்ள குருதி குளுகோஸ் அளவை அதிகரிப்பதால் இத்தகைய விளைவுகள் நேரிடுகிறதாம்.

உலக அளவில் மிக அதிகம் பேர் உண்ணும் உணவு வகைகள் இவை என்பதால் ஆராய்ச்சி கூட மிகவும் விரிவான அளவிலேயே நடத்தப்பட்டிருக்கிறது.

சுமார் 20 இலட்சம் பேர் இந்த ஆராய்ச்சியில் பங்கு வகித்திருக்கின்றனர் என்பதே இந்த ஆராய்ச்சியின் நம்பகத் தன்மையை அதிகரித்திருக்கிறது.

கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நிகழ்த்தப்பட்ட ஆராய்ச்சி ஒன்று இனிப்பு கலந்த சீரியல்கள் உண்பதால் பதின் வயதினருக்கு அதிக நினைவாற்றல் கிடைக்கிறது என்று கூறியிருந்தது. அதை நம்பி அத்தகைய உணவுகளை நாடியவர்கள் இப்போது இந்த புதிய ஆராய்ச்சி முடிவு கண்டு கலங்கியிருக்கின்றனர்.

ஆஸ்திரேலியாவிலுள்ள சிட்னி பல்கலைக்கழகம் நிகழ்த்திய இந்த ஆராய்ச்சி முடிவு வராமல் இருந்திருந்தால் நிம்மதியாக பிரட்டாவது சாப்பிட்டு அலுவலகம் ஓடியிருக்க முடியும். இப்போது என்ன செய்வது என தெரியாமல் கையைப் பிசைகின்றனர் செய்தி கேள்விப்பட்டோர்.

துருக்கியில் ஒரு சீவலப்பேரி

யப்பா… எவன்பா அங்கே மீசை மீசைன்னு பேசிட்டு திரியறது ? சீவலப் பேரியா ?
இந்த மீசையை ஒருவாட்டி பாருப்பா, அப்புறம் முடிவு பண்ணு உனக்கு இருக்கிறதுக்குப் பேரு மீசையா ? அதையெல்லாம் வேற முறுக்கணுமான்னு.

meesai.jpg

இவரு பேரு முகமது ரஷித். துருக்கில இப்படித் தான் மீசையை முறுக்கிட்டு திரியறாராம். நீளம் 1.6 மீட்டர்கள் !
இது பக்கத்துல நின்னு போட்டோ எடுக்கணும்ன்னாலே 5 டாலர் கேக்கறாராம்.

பின் குறிப்பு : மீசையை வெச்சு தோசையா வாங்க முடியும் என இனிமேல் யாரும் கேட்காதிருக்கக் கடவது !

பொன்னியின் செல்வன் தொடர் : தற்போதைய நிலவரம் !

ponniyin_selvan.jpg

பரபரப்புப் புயலைக் கிளப்பி இதோ இது தான் சின்னத்திரையையே கலக்கப் போகிறது. கலைஞர் தொலைக்காட்சியா கொக்கா? ன்னு அடித்துக் கொண்டிருந்த பொன்னியின் செல்வன் சூறாவளி பின் வாசல் சன்னல் வழியே வெளியேறிவிட்டது.

இனிமேல் கலைஞர் தொலைக்காட்சியில் பொன்னியின் செல்வன் வருவதற்கான வாய்ப்பே இல்லை என்று (நமது பாழாய்ப்போன எதிர்பார்ப்பின் உச்சந்தலையில்) அடித்துச் சொல்கின்றனர் அந்த தொடரில் தொடர்புடையவர்கள்.

முக்கியமாக பணம். மிகப் பெரிய செலவு செய்தால் மட்டுமே பொன்னியின் செல்வனை கொஞ்சமேனும் கௌரவத்துடன் காட்ட முடியும். இதெல்லாம் மேடவாக்கத்துத் தெருவில் எடுக்கப்படவேண்டிய சமாச்சாரமல்ல. இதுக்கெல்லாம் செலவு செய்றதுக்குப் பதிலா வாயாட, பேயாட என்று இன்னொரு தொடரைப் போடலாம்.

இரண்டாவதாக, எடுத்தவரைக்கும் போட்டுப் பார்த்ததில் என்னய்யா பொன்னியின் செல்வனை அவமானப் படுத்தறதுக்காக இப்படிப் படுத்தி வைத்திருக்கிறீர்களா ? என்று எகிறுமளவுக்கு இருந்ததாம் காட்சிகள்.

அப்புறம் நாடகத்துக்கான ஆட்கள் தேர்வு நல்ல நகைச்சுவையாம் ! மஹாராஜாவைப் பார்த்தால் முனியாண்டி விலாஸ் கல்லாவில் உட்கார்ந்திருக்கும் குமாரசாமி போல் இருக்கிறாராம். அவர் கம்பீரமாய் பேசினால் அவரே பயந்து விடுகிறாராம். குதிரை சின்ன சைஸ் கழுதையாய் இருக்கிறதாம். 🙂 ( ஏரியை டம்பரில் காட்டியிருக்கிறார்களோ என்னவோ ? )

போங்கடா நீங்களும் உங்க பொன்னியும் ன்னு சொல்லி நிக் ஆர்ட்ஸ் பொட்டியை (வாலை)ச் சுருட்டிட்டு வேற படம் எடுக்கப் போயிட்டாங்க.

அப்போ பொன்னியின் செல்வன் ?

தலைக்கு வந்தது தலைப்பாகையோட போச்சுன்னு தயாரிப்பாளரும், கல்கியும் சந்தோசப் படறதோட சரி.

அப்போ கலைஞர் தொலைக்காட்சில அதுக்குப் பதிலா ஏதாச்சும் நல்ல தொடர் வருமோ என நினைக்கிறீர்களா ?

மற்ற தொலைக்காட்சிகல் வரும் நிகழ்ச்சிகளையே எழுத்து மாற்றி, வார்த்தை மாற்றி எல்லா தொலைக்காட்சிகளும் பின்பற்றும் இந்த சூழலில் ஒருவேளை வரலாம்

தள்ளு சபா” என்றொரு புத்தம் புதிய தொடர்.

பின் குறிப்பு : இந்த பதிவுக்கு தொடரின் இயக்குனர் ஒரு விரிவான பதிலை அளித்துள்ளார்.