
வானம் பொய்த்துப் போவதால் விவசாயிகளில் வாழ்க்கை பொய்த்துப் போகும் அவல நிலைக்கு விரைவில் முடிவு ஏற்படலாம் எனும் ஆனந்த செய்தியை அளிக்கின்றனர் பின்லாந்து மற்றும் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள்.
பயிர்களின் வளர்ச்சியானது சரியான ஈரப்பதம், வெயில், காற்று இவற்றைச் சார்ந்தே இருக்கிறது. இதனால் தான் மழை பொழியாத காலங்களில் நிலம் ஈரத்தன்மையை இழந்து வறண்டு போய் பயிர்கள் காய்ந்து போகின்றன.
வெயில் காலத்திலும் காய்ந்து போகாமல் தனக்குள்ளேயே ஈரப்பதத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் தாவரங்கள் கிடைத்தால் நன்றாக இருக்குமே என விவசாயிகள் விரும்புவது போலவே பின்லாந்து ஆராய்ச்சியாளர்களும் விரும்பினர்.
அவர்கள் தாவர மூலக்கூறுகளையும், ஈரப்பதத்தை தாவரம் வெளியிடும் வழிகளையும், கரியமில வாயுவை உள்ளிழுத்துக் கொள்ளும் விதத்தையும் குறித்து பல ஆண்டுகளாக ஆராய்ந்து வருகின்றனர்.
இந்த ஆராய்ச்சியின் மிக முக்கியமான கட்டமாக தற்போது வெப்பத்தை தாவரம் எப்படி வெளி விடுகிறது, எதன் மூலம் வெளிவிடுகிறது, அதை நிர்ணயிக்கும் மூலக்கூறு என்ன என்பன
போன்ற செய்திகளை எல்லாம் பின்லாந்து மற்றும் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கூட்டாகக் கண்டறிந்திருக்கின்றனர்.
இதன் மூலம் வெயில் காலத்தில் ஈரப்பதத்தை தனக்குள்ளேயே தக்கவைத்துக் கொள்ளும் தாவரங்களை உருவாக்க முடியும் என நம்பிக்கை தெரிவிக்கின்றார் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள ஜாக்கோ கங்காசார்வி என்பவர்.
அப்படி உருவாகும் பட்சத்தில், காலநிலை மாற்றங்களைக் கடந்து பயிர் தன்னைத் தானே காத்துக் கொண்டு வளரும் நிலை உருவாகும். இது விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும். நிச்சயமற்ற நிலையில் இருக்கும் விவசாய வாழ்க்கைக்கு புத்துயிர் ஊட்டும்.
அப்படிப்பட்ட விதைகளும், பயிர்களும் விரைவில் வரவேண்டும் என்பதும், அது மனித வாழ்வில் ஒரு மாபெரும் மாற்றத்தைத் தரவேண்டும் என்பதும் விவசாயத்திலும், விவசாய நலனிலும் அக்கறை கொள்ளும் அனைவரின் விருப்பமாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
Like this:
Like Loading...