அவசரமாய் அலுவலகம் ஓடுபவர்கள் காலையில் அரக்கப் பரக்க, இரண்டு மூன்று பிரட் துண்டுகளை உண்பதோ, அல்லது சீரியல்ஸ் உண்பதோ சர்வ சாதாரணம்.
அத்தகையோரை திகைப்புக்குள்ளாக்க வந்திருக்கிறது புதிய ஆராய்ச்சி ஒன்று. அதாவது வெள்ளை பிரட் மற்றும் இனிப்பு கலந்த சீரியல்களை உண்பதால் நீரிழிவு, இதயநோய், புற்று நோய் உட்பட பல நோய்கள் வந்து சேர்கின்றன என்பதே அந்த ஆராய்ச்சி முடிவு.
இத்தகைய உணவுகளிலுள்ள கிளைசமிக் இண்டெக்ஸ் உடலிலுள்ள குருதி குளுகோஸ் அளவை அதிகரிப்பதால் இத்தகைய விளைவுகள் நேரிடுகிறதாம்.
உலக அளவில் மிக அதிகம் பேர் உண்ணும் உணவு வகைகள் இவை என்பதால் ஆராய்ச்சி கூட மிகவும் விரிவான அளவிலேயே நடத்தப்பட்டிருக்கிறது.
சுமார் 20 இலட்சம் பேர் இந்த ஆராய்ச்சியில் பங்கு வகித்திருக்கின்றனர் என்பதே இந்த ஆராய்ச்சியின் நம்பகத் தன்மையை அதிகரித்திருக்கிறது.
கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நிகழ்த்தப்பட்ட ஆராய்ச்சி ஒன்று இனிப்பு கலந்த சீரியல்கள் உண்பதால் பதின் வயதினருக்கு அதிக நினைவாற்றல் கிடைக்கிறது என்று கூறியிருந்தது. அதை நம்பி அத்தகைய உணவுகளை நாடியவர்கள் இப்போது இந்த புதிய ஆராய்ச்சி முடிவு கண்டு கலங்கியிருக்கின்றனர்.
ஆஸ்திரேலியாவிலுள்ள சிட்னி பல்கலைக்கழகம் நிகழ்த்திய இந்த ஆராய்ச்சி முடிவு வராமல் இருந்திருந்தால் நிம்மதியாக பிரட்டாவது சாப்பிட்டு அலுவலகம் ஓடியிருக்க முடியும். இப்போது என்ன செய்வது என தெரியாமல் கையைப் பிசைகின்றனர் செய்தி கேள்விப்பட்டோர்.