பொன்னியின் செல்வன் தொடர் : இயக்குனரின் நேரடி பதில்.

ponniyin_selvan.jpg

அன்பின் சேவியர்,

தங்களின் பதிவு கண்டு சற்று கோபம் வந்தது உண்மைதான். இரண்டாம் முறை படித்த போது, பாலசுப்பிரமணியம் சொன்ன இடங்களில் எனக்கும் சிரிப்புதான் வந்தது.

‘ஒருவனின்’ பின்னூட்டம் மட்டும் யாரந்த ‘ஒருவன்’ என்ற கேள்வியை எழுப்புகிறது. சினிமாத்துறையை சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்று ஊகிக்கிறேன். (ஏனென்றால்….கம்ப்யூட்டர், சாஃப்ட்வேர் மற்றும் காமிரா வாங்கியது எல்லாம் சினிமா வட்டாரத்தில் மட்டும் பரபரப்பாக பேசப்பட்ட விஷயங்கள்..)

சரி, பொன்னியின் செல்வனின் உண்மையான நிலை…

இது வரை ஷூட்டிங் நடந்த நாட்கள்…..38.
எடுத்து முடிக்கப்பட்ட நீளம்….9.5 எபிசோடுகள்.
செலவு செய்யப்பட்ட பணம்….60 லட்சம்
போடப்பட்ட பட்ஜெட்………….ஒரு எபிசோடுக்கு……5 லட்சம்
.

.(‘கணக்கு இடிக்கிறதே’ ? என்று கேட்பவர்களுக்கு…இது 400 எபிசோடுகள் எடுத்து முடிந்த நிலையில் கணிக்கப்பட்டு வரும் தொகை. எந்த கதையிலும் செட், காஸ்ட்யூம், ப்ராபர்ட்டிஸ் என்று முதலில் அதிகம் செலவாகும் என்று அனுபவப்பட்டவர்களுக்குத் தெரியும். பின்னர் தொடரின் முடிவில் amortise ஆகிவிடும்)

.சினிமாத்துறையில் ஒரு லொகேஷனில் நடக்கும் அனைத்து காட்சிகளையும் எடுத்து முடித்து விட்டு வேறு லொகேஷனுக்கு மாறுவதுதான் செலவைக் கட்டுப்படுத்த கடைபிடிக்கும் புரொடக்ஷன் யுத்தி.

அதன்படி காரைக்குடியில் உட்புறப் படப்பிடிப்பையும், கொல்லங்குடியில் செட்டின் வெளிப்புறப் படப்பிடிப்பையும் (25 எபிஸோடுகளுக்கு) முடித்து…. பதினைந்து நாட்கள் இடைவெளியில் வீராணம் மற்றும் கொள்ளிடக்கரை காட்சி்களை எடுக்கலாம் என்று போட்ட திட்டம் சில காரணங்களால் தள்ளிப்போக………….., ஆறு ஏரிகளில் நீர் வடிந்து சிறுவர்கள் கிரிக்கெட் விளையாட வந்து விட்டனர். பயிர்களும் பசுமை இழந்து அறுவடைக்கு வந்து விட்டன………… கதை படித்தவர்களுக்கு அந்த பசுமையும் வெள்ளமும் எவ்வளவு முக்கியம் என்பது தெரியும். (அதற்குப்பின் சொல்லாமல் கொள்ளாமல் இரண்டு முறை off-season வெள்ளம் வந்து அறுவடைக்கு நின்ற பயிர்களை அழித்து விட்டுப்போனது காவிரியின் கொடுமை).

இனி அடுத்து, கல்கி எழுதி இருக்கும் ஆடிப்பெருக்கிற்காக காத்திருக்கிறோம். (ஏனெனில், அது மட்டுமே உத்தரவாதமான வெள்ளக்காலம்)

இதுவரை எடுத்த காட்சிகளை, கிராஃபிக்ஸ் செய்யப்பட்ட நிலையில் பார்த்து விட்டு திரு.ஷரத்குமார் (CEO, கலைஞர் டிவி) கேட்டது, ‘இந்த அளவு கிராஃபிக்ஸுடன் இதே தரத்துடன் கடைசி வரை தர முடியுமா?’ (செய்யப்பட்டிருக்கும் கிராஃபிக்ஸ் எப்படியிருக்கும் என்று அறிய விரும்புபவர்கள் ‘ஜோதா-அக்பர்’ பார்க்கவும்)

மேலும் ஏதேனும் அறிய விரும்பினால் எனது மின்னஞ்சல் விலாசத்திற்கு யார் வேண்டுமானாலும் எழுதலாம்.
naga001@gmail.com

நன்றி

நாகா

பி.கு. இந்த பதில் மடல் நிக் ஆர்ட்ஸ் உரிமையாளர் திரு.சக்கரவர்த்தி அவர்களின் கலந்தாலோசித்து, அவர் ஒப்புதலுடன் வழங்கப்படுகிறது.

அன்பின் இயக்குனருக்கு :
______________________

விரிவான உங்கள் பதிலுக்கு மனமார்ந்த நன்றிகள். உங்கள் மீதான மதிப்பு பெருமளவுக்கு கூடுகிறது. உங்களிடம் கலந்தாலோசிக்காமல் வெளியிட்ட செய்திக்காய் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.