ஒரு ஆண் தாயாகிறார்

hshe.jpg

அதிசயம் ஆனால் உண்மை !! என்று சத்தியம் செய்து சொல்கின்றன பிரபல பத்திரிகைகளான ABC News Advocate மற்றும் பல பிரபல பத்திரிகைகள்.

ஒரு ஆண் கர்ப்பமடைந்திருக்கிறாராம். இருபத்து இரண்டு வார கர்ப்பமாம். ஜூலை மாதத்தில் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுக்கப் போகிறார்களாம்.

பிறக்கப் போகும் பெண்குழந்தை “என்னோட மம்மி ஒரு ஆண்” என்று சொல்லப்போகும் நாளை தாயுமானவர் பார்த்து ரசிக்கக் காத்திருக்கிறாராம்.

பெண்ணாய் இருந்து ஆணாய் மாறிய தாமஸ் பெட்டி தான் இந்த பரபரப்புச் செய்தியில் வரும் கர்ப்பவதி (கர்ப்பவதன் ? ) இவர் செயற்கைக் கருத்தரிப்பு மூலம் கருவுற்றிருக்கும் இவர் ஒரு பெண் குழந்தையை உலகிற்கு அறிமுகம் செய்து வைத்து இதோ நானே உலகின் முதல் தாயான தந்தை என பிரகடனம் செய்யப் போகிறாராம்.

பல ஆண்டுகளுக்கு முன்பு இதே போல ஒரு பரபரப்புச் செய்தியை MalePregnancy.com
எனும் வலைத்தளம் வெளியிட்டிருந்தது. அதில் லீ என்பவர் குழந்தை பெற்றுக் கொள்ளப் போகிறார் என கிராபிக்ஸ் சித்து விளையாட்டுகள் விளையாடி இருந்தனர்.

அந்த லீ பல ஆண்டுகள் கடந்த பின்னும் இன்னும் கர்ப்பமாக அந்த வலைத்தளத்தில் உலவி வருகிறார். டாக்குமெண்டரி, மெடிக்கல் ரிப்போர்ட் அது இது என பல அலட்டல் வேலைகளைக் காண்பித்த அந்த வலைத்தளம் போலியானது என்றும் அதை நிறுவியவர்
விர்ஜில் வாங் என்பதும் தெரியவந்தது.

அதே போல இந்த தகவலும் போலியாய் இருக்கவே வாய்ப்புகள் மிக மிக அதிகம். ஏனென்றால் நாளைய தினம் தாமஸ் பெட்டி ஒரு கான்ஃபரன்ஸ் ஏற்பாடு செய்திருக்கிறாராம்.

நாளை ஏப்பிரல் 1 – என்பது நமக்குத் தெரியாதா என்ன ?

கடைசியாய் கிடைத்த தகவல்

நம்ம கணிப்பெல்லாம் தப்பாயிடும் போலிருக்கு !!! விஷயம் உண்மையாம் !!!

பக்கத்து வீட்டாரோடு பழகாவிடில்…

sad.jpg

அடுத்த வீடுகளில் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ளாமலேயே வாழும் சூழல் நம்மைச் சுற்றிக்கொண்டிருக்கிறது.

கிராமங்களின் இன்னும் கூட ஊரோடு உறவாடும் பழக்கம் இருக்கிறது. ஊரில் யாராவது வெளியூர் சென்றால் பக்கத்து வீடுகளில் இருப்பவர்களிடம் சொல்லி விட்டுச் செல்கிறார்கள்.

“வீட்டைப் பாத்துக்கோங்க..”

நகரங்களில் நிலமை தலைகீழ், “யாரிடமும் சொல்லாமல் கிளம்பு. பக்கத்து வீடு, கடை எங்கேயும் மூச்சு விடாதே” என்று கிசுகிசுத்துக் கொண்டே புறப்படும் நிலமையே நிலவுகிறது.

எங்கே போய் முடியும் இத்தகைய தனிமைத் தீவு வாழ்க்கை ?

ரஷ்யாவில் நடந்த ஒரு நிகழ்வு மனதை உலுக்குகிறது. பிரோஸ்கோவியா என்னும் மூதாட்டி தனது அறுபத்து ஏழாவது வயதில் சோபாவில் படுத்திருக்கிறார் சற்று இளைப்பாற.

அந்த தூக்கமே அவருக்கு நிரந்தரத் தூக்கமாகி விட்டது. வீட்டில் வேறு யாரும் இல்லை !

அடுத்த வீட்டு வாசிகளுக்கு விஷயம் தெரியவில்லை. மூதாட்டி மருத்துவமனைக்கோ, வெளியூருக்கோ போயிருக்கக் கூடும் என நினைத்துக் கொண்டனர். வழக்கம் போல அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டனர்.

மூதாட்டியின் வீட்டு சன்னல் திறந்தே இருந்ததால் உடல் அழுகும் நாற்றமும் கொஞ்சம் கொஞ்சமாக காற்றில் கரைந்திருக்கிறது. யாரும் கவனிக்கவில்லை.

பக்கத்து வீட்டு நபர்களுக்கூம் மூதாட்டியின் வீட்டுக் கதவைத் தட்டிப் பார்ப்போம் என்றோ, நீண்ட நாட்களாகக் காணவில்லையே போலீசில் சொல்வோம் என்றோ நினைக்கவில்லை.

நாட்கள் மாதங்கள் வருடங்கள் கடந்தன !!!

சுமார் பதிமூன்று வருடங்கள் மூதாட்டி சோபாவில் பிணமாய் கிடந்தார் !

அரசு பராமரிப்புக் குழுவினர் வழக்கமான பரிசோதனையின் போது மூதாட்டியின் வீடு மோசமான நிலையில் இருப்பதைக் கண்டு பழுது நீக்க வேண்டுமா என விசாரிக்கச் சென்றிருக்கின்றனர்.

பலமுறை சென்றும் யாரும் பதில் சொல்லாததால் விஷயத்தை காவல்துறைக்குக் கொண்டி சென்றிருக்கின்றனர். அப்போது தான் இந்த அவலம் வெளியே வந்திருக்கிறது.

கடந்த ஆண்டு இதே போல ஒரு இளைஞன் சமையலறையில் உட்கார்ந்த நிலையிலேயே இறந்து போன விஷயம் ஆறு ஆண்டுகளுக்குப் பின் வெளிச்சத்துக்கு வந்தது. குளிர் காலங்களில் இறந்து போனால் அதிக நாற்றம் எழாமல் உறைந்து போகும் நிலை உருவாகும் என காவல்துறையினர் விளக்கினர்.

அவன் குடியிருந்தது பல வீடுகள் இருக்கும் குடியிருப்பு என்பதும், அடுத்த சுவருக்கு அப்பால் இன்னோர் குடும்பம் வசிக்கிறது என்பதும் சோகமான உண்மை.

மனித வாழ்வின் உறவு விரிசல்கள் வாழ்வின் அர்த்தத்தையே மிகப்பெரிய கேள்விக்குறியாக்குகின்றன. நாம் இருப்பதும் இறப்பதும் அடுத்த வீட்டுக் கதவுக்கு அவசியமில்லாத ஒரு விஷயமாகிப் போனது உண்மையிலேயே நவீன உலகின் பலவீனத்தின் உச்சம் எனலாம்.

என்ன மிச்சம் இருக்கிறது வாழ்வி ? உண்மையான நேசத்தை பகிரும் மனம் இல்லாத போது !!!