நிம்மதியா தூங்க விடுவீங்களா ? மாட்டீங்களா ?

sleep.jpg

சிலர் எந்நேரமும் படுக்கையில் புரண்டு கொண்டே இருப்பார்கள். விடிந்தாலும் இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்கும் இவர்கள் சோம்பேறிகளின் சொந்தக்காரர்கள்.

சிலர் ராக்கோழிகள் போல கொட்டக் கொட்ட விழித்திருந்து விட்டு இரவின் ஏதோ ஒரு ஜாமத்தில் படுக்கையில் விழுந்து அரைகுறையாய் தூங்கி அவசரமாய் அலுவலகம் ஓடும் மக்கள் அவசரத்தின் பிரதிநிதிகள்.

இந்த இரண்டு வகையினரும் அதிக குண்டாகும் வாய்ப்பு இருப்பதாகக் கூறி எச்சரிக்கை செய்கிறது ஆராய்ச்சி ஒன்று.

ஏழு மணி நேரம் முதல் எட்டு மணி நேரம் வரை தூங்குவதே மிகச் சரியான தூக்கம் எனவும், அதிக தூக்கமோ, குறைந்த தூக்கமோ உடலை பாதிப்புக்கு உள்ளாக்குகிறது எனவும் இந்த ஆராய்ச்சி தெரிவிக்கிறது.

தூக்கத்துக்கும் உடலில் பசி, பசியின்மை இவற்றை உணர்த்தும் ஹார்மோன்களுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதே இந்த விளைவின் காரணம் என கருதப்படுகிறது.

சரியான அளவு நிம்மதியான தூக்கம் உடலுக்கு பல்வேறு விதமான நன்மைகளைத் தருவதை பல்வேறு ஆராய்ச்சிகள் ஏற்கனவே விளக்கியிருக்கின்றன. இப்போது உடல் எடையை சீராக வைத்திருக்கவும் இந்த அளவான தூக்கம் உதவுகிறது எனும் ஆராய்ச்சியும் அதில் இணைகிறது.

குடும்பத்தாரோடும், அயலாரோடும் நேசமாய் பழகி மனதை உற்சாகமாய் வைத்திருப்பவர்களுக்கு தூக்கம் தொலைவில் இல்லை. சோம்பலையும், அவசரத்தையும் விடுத்து சரியான தூக்கத்துக்கு நேரம் ஒதுக்கினால் தேவையற்ற சிக்கல்களைத் துரத்தலாம்.