முட்டை உண்டால் மரணம் நெருங்கும்.

முட்டை மீது அலாதி விருப்பம் கொண்டிருக்கிறீர்களா ? தினமும் முட்டை சாப்பிடவேண்டும் போலிருக்கிறதா ? உங்களுக்கு ஒரு அதிர்ச்சி வைத்தியம் தருவதற்காகவே வந்திருக்கிறது அமெரிக்க ஆய்வு ஒன்று.

வாரம் ஏழு முட்டைகள் அல்லது அதற்கு மேல் உண்பவர்களுக்கு மரணம் விரைவிலேயே வரும் வாய்ப்பு 23 விழுக்காடு அதிகரிக்கும் என்பதே அந்த ஆய்வு!

அதிலும் குறிப்பாக நடுத்தர வயதுடையவர்கள் இந்த எல்லையைத் தாண்டி முட்டையை உட்கொண்டால் ஆபத்து அதிகமாம்.

நீரிழிவு நோயாளிகள் எனில் முட்டையின் பக்கம் பார்வையைக் கூட திருப்பக் கூடாதாம். அவர்கள் ஒரு முட்டை சாப்பிட்டாலும் அது அவர்களுக்கு இன்னலை உண்டாக்கி விடக் கூடும். விரைவில் மரணமடையும் வாய்ப்பு 50 விழுக்காடு அதிகரிக்கும். இப்படி அடுக்கடுக்காய் சொல்லி முட்டை பிரியர்களின் விருப்பத்துக்கு முட்டுக் கட்டை போட்டிருக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

இதய நோய், வலிப்பு போன்ற பல நோய்களை இந்த “அதிக முட்டை உண்ணும் பழக்கம்” இழுத்துக் கொண்டு வந்து நமது உடலுக்குள் புகுத்தி விடுகிறது. முட்டையில் காணப்படும் அதிகப்படியான கொழுப்புச் சத்து இதன் காரணமாய் இருக்கலாம் எனத் தெரிகிறது.

இந்த ஆய்வை நிகழ்த்திய ஹார்வேர்ட் குழுவினர் சுமார் இருபத்து ஏழு ஆண்டுகளாக, இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களை ஆய்வு செய்து இந்த முடிவை எட்டியிருக்கின்றனர்.

இதய நோய்க்கும் முட்டைக்கும் இடையே நிரூபிக்கப்பட்ட தொடர்பு ஏதும் இல்லையென்றாலும் இருபது ஆண்டு இடைவெளியில் அதிக முட்டை சாப்பிட்டவர்களில் 23 விழுக்காட்டினர் மரணமடைந்திருக்கிறார்கள் என்பது முட்டை உணவின் பாதுகாப்பற்ற தன்மையை விளக்குகிறது..

எனினும் அதிகபட்சமாக ஆறு முட்டைகள் வரை உண்பது கெடுதலை ஏற்படுத்துவதில்லையாம். முட்டையும் எல்லா உணவு வகைகளையும் போன்றதே ! மிக நன்று எனவோ, மிகவும் கெடுதல் எனவோ தெளிவான நிர்ணயம் செய்ய முடியாது எனவும் அவர்கள் தங்கள் ஆய்வில் தெரிவித்திருக்கின்றனர்.

முட்டை மீதான இந்த ஆராய்ச்சி “அளவோடு உண்டு வளமோடு வாழ” நம்மை எச்சரிக்கிறது.

study published in the American Journal of Clinical Nutrition.

பென்ஹர், மோசே : சார்ல்டன் ஹெஸ்டன் ஒரு நினைவலை.

சார்ல்டன் ஹெஸ்டன் ஹாலிவுட் திரையுலகில் மறக்கப்பட முடியாதவர்.

மோசஸ் திரைப்படத்தில் அவர் கோலை கைகளில் ஏந்தியபடி பேசும் வசனங்கள் மிகப்பிரபலம். அலட்சியமான பார்வையும், வித்தியாசமான வசன உச்சரிப்பும் “டென் கமாண்ட்மெண்ட்ஸ்” என்னும் திரைப்படத்தை உலகமெங்கும் கொண்டு சென்றது.

1956 களில் வெளிவந்த அந்தத் திரைப்படத்தில் சிறு வயது மோசேயாக நதிநீரில் ஒரு பேழையில் மிதந்து மிதந்து வந்தது அவருடைய மூன்று மாதக் குழந்தை ஃப்ராஸ்டர்.

1959ல் வெளிவந்த பென்ஹர் அவருக்கு ஆஸ்கர் விருதையும் பெற்றுத் தந்தது. எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத படங்களில் பட்டியலில் பென்ஹர் திரைப்படம் நிச்சயம் இடம் பெறும்.

அதில் வரும் குதிரை வண்டிப் பந்தயம் இப்போதும் பிரமிப்பை ஏற்படுத்துகிறது.

நடிப்பில் கலக்கியது போல குடும்ப வாழ்க்கையிலும் தனது மரணம் வரை, சுமார் 64 ஆண்டுகாலம் ஒரே மனைவியுடன் வாழ்ந்து குடும்ப வாழ்க்கையின் மகத்துவத்தை அறிந்தவராக வாழ்ந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

தனது ஐந்தாவது வயதிலேயே மேடை நாடகங்களில் தோன்ற ஆரம்பித்த ஹெட்சன் ஒரு படத்தை இந்தியா சுதந்திரம் அடைந்த அதே ஆண்டில் இயக்கினார். அந்தத் திரைப்படம் ஆன்றனி அண்ட் கிளியோபாட்ரா ! அது தான் அவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தைக் கொடுத்த படம் எனலாம்.

“தி கிரேட்டஸ்ட் ஸ்டோரி எவர் டோல்ட்” எனும் இயேசுவின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் திரைப்படத்தில் திருமுழுக்கு யோவானாக வந்ததும் நினைவில் இருக்கிறது. அது தான் அவர் நடித்த கடைசிப் படமாம்.

கடைசி வருடங்களில் அல்சீமர் நோயால் பாதிக்கப்பட்டு துன்பப்பட்டிருக்கிறார். த டென் கமாண்ட்மெண்ட்ஸ், பென்கர், பிளானட் ஆஃப் தி ஏப்ஸ், எர்த்க்வேக் என பல படங்களை அவருடைய அழியாச் சுவடுகளாகத் தந்த ஹெஸ்டன் கடந்த ஐந்தாம் தியதி அவர் இறந்த போது அவருக்கு வயது எண்பத்து நான்கு.

பாதங்கள் ஓய்வடைந்தன
சுவடுகள் ஓடிக் கொண்டிருக்கின்றன !