எது தமிழர் புத்தாண்டு ? : குழப்பத்தில் கலைஞர் டிவி.


சித்திரை தினத்தில் எல்லா தொலைக்காட்சி சானல்களும் போட்டி போட்டுக் கொண்டு சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருந்ததைப் பார்த்தபோது எது தமிழ்ப் புத்தாண்டு எனும் கேள்வி தலையை சுக்குநூறாய் வெடிக்கச் செய்வேன் என்று சவால் விட்டுக் கொண்டு வேதாளமாகி முருங்கை மரம் ஏறிவிட்டது.

தமிழக அரசின் அறிவிப்பான தை முதல் நாளே தமிழ் வருடப் பிறப்பு எனும் அறிவிப்பை எதிரே அமர்ந்திருக்கும் எதிர்கட்சி முதல், கனடாவின் பிரதம மந்திரி வரை யாருமே கண்டு கொண்டதாகத் தெரியவில்லை என்பதை அவர்கள் போட்டி போட்டுக் கொண்டு “தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி” அறிவித்துக் கொண்டதில் தெரிந்தது.

போதாக்குறைக்கு அடி மடியிலேயே கை வைக்கும் நிலையாக கலைஞர் தொலைக்காட்சியில் வந்த விளம்பரங்களே “தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்” என பல்லிளித்து நிலமையை இன்னும் கேடாக்கி விட்டன.

எது தமிழ்ப் புத்தாண்டு என்பதை அறிவித்த தமிழக அரசு அதன் தொடர்ச்சியாக அதை நிலை நிறுத்துவதற்கான முயற்சிகளை எடுக்கவில்லை என்பதையே இந்த நிகழ்ச்சிகள் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கின்றன.

தமிழகத்தில் பறந்து திரிந்த எஸ்.எம்.எஸ் களுக்குக் அளவில்லை! நிறைய பேரிடம் பேசியதில் பலரும் சொன்ன பதில் “அப்படியா ? அப்போ அது இப்போ இல்லையா ?” என்பது தான் !

சட்டசபையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றி விட்டால் உடனே தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் அந்தச் செய்தி பரவி உடனே மக்கள் அதை பின்பற்றத் துவங்கிவிடுவார்கள் என கருதிக் கொள்வதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களை இந்த நிகழ்வு மிகத் தெளிவாகவே எடுத்துக் காட்டியிருக்கிறது.

குளித்து புத்தாடை உடுத்தி கோயில்களில் அதிகாலையில் குவிந்த அனைத்து பக்தர்களுமே தமிழ் புத்தாண்டு வளங்களைத் தரட்டும் என்றே பிரார்த்தித்துக் கொண்டார்கள்.

1921ம் ஆண்டு மறை மலை அடிகளார் தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவிக்க வேண்டும் என தமிழறிஞர் குழுவுடன் தீர்மானம் நிறைவேற்றினார். அதன் பின் எண்பத்து ஏழு ஆண்டுகளுக்குப் பின்பு இப்போது தான் சட்ட வடிவம் பெற்றுள்ளது. சட்ட வடிவம் பெற்று விட்ட உடனே அது செயல் வடிவம் பெற்று விடும் என்று வெறுமனே இருந்தால் “திருவள்ளுவர் ஆண்டு” க்கு ஏற்பட்ட நிலமையே தமிழ் புத்தாண்டிற்கும் ஏற்படும்.

1921ல் இதே போல் விடுக்கப்பட்ட இன்னோர் வேண்டுகோள் திருவள்ளுவர் ஆண்டு தமிழகத்தில் நடைமுறைப் படுத்தப்பட வேண்டும் என்பது ( திருவள்ளுவர் ஆண்டு கி.பி 31ல் துவங்குகிறது). 50 ஆண்டுகள் விடாமல் தட்டியபின் 1971 – 1972 களில் அரசிதழில் திருவள்ளுவர் ஆண்டு செயல்படுத்தப்படும் என தீர்மானம் இயற்றப்பட்டது.

ஆனால் இன்றைய நிலை என்ன ? திருவள்ளுவர் ஆண்டு என்றால் என்ன என்பது எத்தனை பேருக்குத் தெரியும் ?

அதே நிலமை தமிழர் புத்தாண்டுக்கும் ஏற்படாமல் தடுக்க வேண்டும் என்பதே தமிழ் ஆர்வலர்களின் விருப்பம்.

தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டால் அதை சட்டமாக்கி மீறுவோர் சட்டத்தை மீறியவர்களாகக் கருதப்பட வேண்டும். நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

குறிப்பாக “அதே விலை அதிக பக்கங்கள் : தமிழ் புத்தாண்டு சிறப்பிதழ்” என்று வணிக இதழ்கள் கொப்பளிக்கும் விஷம் தடுக்கப்பட வேண்டும்.

ஊடகங்கள் வரையறை, சட்டம், அரசின் விதிகள் இவற்றை மீறிச் செயல்படாமல் அரசு கவனித்துக் கொள்ளல் அவசியம்.

முக்கியமாக எதிர்கட்சிகள் தமிழ் விரோதிகள் போலச் செயல்படாமல் இருக்க வேண்டும்.

சட்டம் இயற்றப் பட்டு விட்டால் யாரெல்லாம் வாழ்த்துச் செய்தி சொல்வார்களோ, கனடா பிரதமர் உட்பட, அனைவருக்கும் அந்த புது சட்டம் தெரியப்படுத்தப்பட வேண்டும்.

இப்படியெல்லாம் அடுக்கடுக்கான விண்ணப்பங்களும், விருப்பங்களும் தமிழ் ஆர்வலர்களின் இதயங்களில் எதிரொலித்துக் கொண்டிருக்கின்றன.

இவையேதும் இல்லாமல் வெறுமனே சட்டம் இயற்றிவிட்டு கடமை முடிந்தது என கடந்து போனால், ஒற்றைத் தமிழ் அன்னை இரட்டை பிறந்த நாள் கொண்டாடி இருக்கும் கொஞ்ச நஞ்ச தமிழர் ஒற்றுமையையும் அழித்து ஒழிப்பாள் என்பதே மிச்சமிருக்கும் அச்சமாகும்.

7 comments on “எது தமிழர் புத்தாண்டு ? : குழப்பத்தில் கலைஞர் டிவி.

 1. இது இப்போதைய அரசின் அரசியல் விளையாட்டு என்பதையும் இவர்கள் தமிழக கலாசாரத்தை சிதைக்க இயற்றிய ஆவணமே இது என்பதையும் பலரும் உணர்ந்துள்ளர்கள். அதனாலேயே, ஈழப்புலித்தலைவர் முதல் கனடிய பிரதம மந்திரி வரை தமிழ்ப்புத்தாண்டை நேற்றே வாழ்த்தினார்கள். கரு.நா.நிதி அவர்களின் ஒரு சட்டத்தால் உலகெங்கிலும் வாழ் தமிழர்கள் இதை ஏற்றுக்கொள்வார்கள் என்று நீங்கள் சொல்வது விந்தை! தமிழகத்திலேயே எதிர்கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த அரசியல்சார்பான சட்டத்தை புறக்கணித்துவிட்டார்கள். அதனால், இந்த கொள்கை தமிழ் சமுதாயத்தால் ஏற்கப்படும் வாய்ப்பு சிறிதும் இல்லை. கரு.நா.நிதி அவர்களின் துக்ளக்-தனம் மட்டுமே இதில் வெளிவந்துள்ளது.

  நன்றி

  ஜயராமன்

  Like

 2. எல்லா பொது மக்களும் நிகழ்ச்சிகளைப் பார்த்தவண்ணமும்,வருடப்பிறப்பு பற்றிய சர்ச்சைகளை முணுத்த முணுத்த வண்ணமுமாக இருந்தார்கள்.
  அன்புடன்
  கமலா

  Like

 3. இவர் சொன்னா யாரய்யா கேட்க போகிறார்கள்..? ஒருவேளை மத்திய அரசு சொன்னால் இவர் கேட்டுக்கொள்ளலாம்.

  Like

 4. ஏற்கனவே இருக்கும் சட்டங்களை ஒழுங்காக நடைமுறைப்படுத்த வழியில்லை, இவர்கள் தமிழை வளர்க்கிறார்களாம்.

  பெயர்ப்பலகைகள் தமிழிலே இருக்க வேண்டும் என்ற சட்டம் காலாவதியாகி விட்டதா என்ன?. எத்தனை வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் இருக்கிறது... போனால் போகட்டும் என்று தப்பும் தவறுமாக தமிழில் ஒரு ஓரத்தில் பெயர் இடம்பெற்றிருக்கும். இதெல்லாம் தமிழை வளர்க்கும் இவர்களுக்கு தெரியாதா?

  புதிது புதிதாக சட்டங்கள் போட்டு மக்களைக் குழப்புவதிலும், அரசு பணத்தை வீணடிப்பதிலும் எந்த அரசியல் கட்சியும் சளைப்பதில்லை.

  Like

 5. திருவள்ளுவர் ஆண்டு என்பது மட்டுமல்ல திருவல்லுவரைக்கூட மறந்து போகலாம். நண்பர் சொன்னது போன்று போட்ட சட்டங்கள் நிறைவேற்றப்படாமல் இருக்கலாம். ஆனால் நாள் ஒன்று நிச்சயம் வரும். தூசி தட்டி சட்டங்களை நிறைவேற்றப்படும் அதற்குரிய கல்வெட்டு தான் இது.
  தமிழ் புத்தாண்டு எனபது ஒரு சாதரண விஷயம் அல்ல. இந்த அறிவிப்பு முற்றில்லும் தவறு என்று நிரூபிக்க முடியுமானால் இதை எதிர்க்கலாமே. இப்பவும் சித்திரை மாதத்தில் கொண்ண்டடுபவர்கள் கொண்ண்டடட்டும், தை மாதம் கொண்ண்டடுபவர்கள் கொண்ண்டடட்டும். இப்படியாவது தமிழ் தாய்க்கு மாண்பு சேரட்டுமே.
  என்னை பொறுத்தவரை தமிழ் புத்தாண்டு எனபது அனைவரும் கொண்டாட வேண்டிய ஒன்று. சட்டங்கள் போடத்தான் முடியும் தோழரே. தனிமனித ஒழுக்கம்தான் தேவையானது.

  Like

 6. // இப்பவும் சித்திரை மாதத்தில் கொண்ண்டடுபவர்கள் கொண்ண்டடட்டும், தை மாதம் கொண்ண்டடுபவர்கள் கொண்ண்டடட்டும்//

  என்னங்க இப்படி சொல்லிட்டீங்க 😦

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s