பெண்ணை உற்றுப் பார்த்தால்….

ஒரு பெண்ணை உற்றுப் பார்த்தால் என்ன கிடைக்கும் ? இந்தக் கேள்விக்குப் பதில் சொல்வது சற்றுக் கடினமாக இருக்கிறதா ? பத்து நாள் ஜெயில் தண்டனையும் 2500 ரூபாய் அபராதமும் கிடைக்கும் என தீர்ப்பு மூலம் சொல்லியிருக்கிறது இத்தாலிய நீதிமன்றம் ஒன்று.

ரயிலில் இரண்டே இரண்டு முறை சந்தித்துக் கொண்ட பயணிகள் அவர்கள் இருவரும். முதல் நாள் ரயில் பயணத்தில் அவளுடைய அருகே சென்று அமர்ந்திருக்கிறான் அவன். சற்று நெருக்கமாகவே.

இந்த நெருக்கம் தனக்குப் பிடிக்கவில்லை தள்ளி உட்கார் என்று சொல்லியிருக்கிறாள் அந்தப் பெண்.

அடுத்த நாள் அவளுக்கு அருகே அமராமல் அந்த 30 வயது இளைஞன் எதிரே அமர்ந்து பயண தூரம் முழுவதும் அவளை உற்று உற்று முறைத்துப் பார்த்துக் கொண்டே வந்திருக்கிறான். இருவரும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

இவனுடைய பார்வையின் வீரியத்தால் அந்த பெண் எரிச்சலடைந்து நீதிமன்றத்தை அணுக, நீதி மன்றம் இப்படி ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கிறது.

அப்படி எரிச்சலடைந்த பெண்ணுக்கு வயது 55 என்பது தகவலுக்கு கூடுதல் சுவை சேர்க்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.

குழந்தைகள் எந்த வயதில் உடற்பயிற்சி ஆரம்பிக்கலாம் ?

குழந்தைகள் பிறந்த உடனேயே அவர்களை சமூகத்தில் மிகப்பெரிய இடத்தில் அமர வைக்க வேண்டுமென பெற்றோர் முடிவு செய்து விடுகிறார்கள். இதன் விளைவு தான் இரண்டரை வயதாகும் போதே குழந்தைகள் பால் மணம் வீசும் வாயுடன் “பிளே ஸ்கூல்” செல்வதும், மழலைக்கே உரித்தான மகத்துவங்கள் மறுதலிக்கப்படுவதும்.

இதன் தொடற்சியாக பல கூத்துகளும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. ஐந்து வயது சிறுவன் அதைச் செய்தான், ஆறு வயதுச் சிறுவன் இதைப் புரட்டினான் என்று சொல்வதைப் பெற்றோர் பெருமை என நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.

பிஞ்சைப் பழுக்க வைக்கும் பெற்றோரின் மனநிலையை மருத்துவர்களும், உளவியலார்களும் எப்போதும் எதிர்த்தே வந்துள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.

சமீபத்தில் அமெரிக்கன் குழந்தைகள் அகாடமி வெளியிட்டுள்ள அறிக்கையில் குழந்தைகள் மீதான சுமைகள் குறித்து பல்வேறு செய்திகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

குறிப்பாக குழந்தைகளை உடற்பயிற்சி நிலையங்களில் சேர்த்து அவர்களைப் பளு தூக்கும் பயிற்சிகளில் ஈடுபட வைப்பது மிகவும் ஆபத்தானது என எச்சரிக்கை செய்கிறார் இதன் இயக்குனர் மெக்காம்பிரிட்ஜ்.

உண்மையிலேயே குழந்தைகளுக்குத் தேவையானது ஓடியாடும் மகிழ்ச்சியான விளையாட்டுள் மட்டுமே. கடினமான உடற்பயிற்சிகள் அல்ல என்பதே அவருடைய வாதம். பளு தூக்குதல் போன்ற உடற்பயிற்சிகளில் குழந்தைகளை ஈடுபடுத்தியே ஆவேன் என பிடிவாதம் பிடிப்பவர்களும் குறைந்த பட்சம் குழந்தை ஏழு வயது ஆகும் வரையாவது பொறுத்திருத்தல் மிக மிக அவசியம் என்கிறார் இவர்.

ஏழு – எட்டு வயதாகும் வரை குழந்தைகளின் உடலமைப்பு ஒரு சமநிலைக்கு வருவதில்லை எனவும், அதற்கு முன்பே பளு தூக்கும் பயிற்சி போன்றவற்றில் ஈடுபட வைப்பது ஆபத்து என்பதையும் அவர் முதன்மைப் படுத்துகிறார்.

குழந்தைகள் இத்தகைய உடற்பயிற்சிகளில் ஈடுபடும் முன் கண்டிப்பாக முழு மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். பயிற்சிகள் யாவற்றையும் தேர்ந்த பயிற்சியாளரின் முன்னிலையில் தான் செய்ய வேண்டும், குறைந்த நேரம் மற்றும் வாரத்தில் ஓரிரு நாட்கள் மட்டுமே பயிற்சி என்பதைக் கடைபிடிக்க வேண்டும் என்றெல்லாம் பல அறிவுரைகளை அவர் வழங்குகிறார்.

இயற்கையோடு இணைந்து வாழாத வாழ்க்கையும், எதிர்த்து நின்று உடைக்க நினைக்கும் மனப்பான்மையும் குழந்தைகளின் இயல்பான வளர்ச்சியைப் பாதிக்கின்றன. இயல்பான வளர்ச்சியே நிலையானது என்பதை உணர வேண்டும். முளைக்கும் வரை காத்திருந்து விட்டு முளைத்த உடன் தலையில் பாறாங்கல் வைப்பதைத் தவிர்த்து மழலைச் செடிகளைக் காப்பதே பெற்றோரின் கடமையாகும்.