உங்கள் காதலிக்குப் பரிசளிக்க…

காலையில இருந்தே கடைகளில் ஏறி இறங்கித் தேடினேன் ஒண்ணுமே கிடைக்கல. உன்னை விட சிறப்பா எதுவும் என் கண்ணுக்குப் படாததனால எதுவுமே வாங்கல. உன்னோட ஒப்பிடும்போ பிரபஞ்சம் கூட அழகுப் பஞ்சமடி. இப்படியெல்லாம் கதை விட்டுட்டு உங்க விரல்ல ஒண்ணே கால் கிராம்ல ஒரு மோதிரம் போடறாரா உங்க காதலர் ?

அவர் கிட்டே போய் “உங்களுக்கு இனிமே அந்த கஷ்டம் எல்லாம் இல்லை. இதோ இந்த மிக்கி மவுஸ் பொம்மையை மட்டும் வாங்கிக் கொடு போதும்ன்னு” சொல்லுங்க.

முழுவதும் பவுனினால் செய்யப்பட்ட இதன் எடை ஒரு கிலோ. செய்தவர் ஜப்பானின் கின்ஸா டனக்கா.

எந்தக் குழந்தை வேண்டும் ? தாய்மார்களே முடிவு செய்யலாம் !!!

எந்தக் குழந்தை பிறக்கப் போகிறது என்பதை நிர்ணயம் செய்வதில் தாய்மார்களின் உணவுப் பழக்கமும் இடம்பெற்றிருக்கிறது என்னும் வியப்பூட்டும் ஆராய்ச்சி ஒன்றை வெளியிட்டுள்ளனர் பிரிட்டிஷ் ஆய்வாளர்கள்.

அதிக கலோரி கொண்ட உணவை உட்கொள்ளும் பெண்களுக்கு ஆண் குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பு அதிகரிப்பதாகவும், குறைந்த கலோரி கொண்ட உணவுப் பொருட்களை உண்ணும் பெண்களுக்கு பெண் குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பு அதிகரிப்பதாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

குறிப்பாக காலை உணவை உண்ணாமல் விட்டு விடும் தாய்மார்களுக்கு பெண் குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பு அதிகரிக்கிறதாம்.

ஆக்ஸ்போஃட் மற்றும் எக்சீடர் பல்கலைக்கழகங்கள் கூட்டாக நடத்திய ஆய்வில் இத்தகைய சுவாரஸ்யங்கள் தெரிய வந்துள்ளன.

குழந்தையின் பாலியலை நிர்ணயிக்கும் நிரூபிக்கப்பட்ட காரணியாக விந்தணுக்களே இருக்கின்றன. எனினும் இரத்தத்திலுள்ள குளுகோஸ் அளவுக்கும் இந்த பாலியல் நிர்ணயத்துக்கும் கூட தெளிவிக்கப்படாத நெருங்கிய பந்தம் உண்டு என்கின்றனர் மருத்துவர்கள்.

இதனால் தான் குறைந்த கலோரி உணவை வழக்கமாகக் கொண்டிருக்கும் மேலை நாடுகளில் ஆண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைவாய் இருக்கிறது என்று நம்புகிறார் எக்சீடர் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஃபியோனா மாத்யூஸ்.

தாயாகப் போகும் பெண்கள் இதை சோதித்துப் பார்க்கலாம் மருத்துவரின் உணவுப் பட்டியலை மீறாமல் 🙂

19 வயதில் அலியாவும், நாமும் !

பத்தொன்பது வயதில் நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்று சட்டென்று யாரேனும் கேட்டால் தலையைச் சொறிந்து கொண்டோ, வானத்தைப் பார்த்துக் கொண்டோ, விரல்களால் காற்றில் வளையம் வரைந்து கொண்டோ யோசிக்கும் நிலமை தான் நம்மில் பெரும்பாலானோருக்கு.

காரணம் சொல்லிக் கொள்ளும்படியாக அந்த வயதில் ஏதும் செய்து கொண்டிருக்க வாய்ப்பு மிகவும் குறைவே. பள்ளிப்படிப்பை முடித்தேன் என்றோ, கல்லூரியில் நுழைந்தேன் என்றோ நாம் வருடங்களைக் கணக்கிட்டு சொல்லிக் கொள்வோம்.

நியூயார்க்கைச் சேர்ந்த அலியா சபூர் என்னும் சிறுமி சற்று வித்தியாசமானவள். அவள் 19வது வயதில் ஒரு கல்லூரியில் முழு நேர கல்லூரிப் பேராசிரியராகி கின்னஸ் சாதனையாளர் நூலில் இடம்பிடித்துள்ளார்.

சிறுவயதிலிருந்தே கல்வியிலும், இசையிலும், அதீத ஆர்வமும், அறிவும் கொண்டிருந்த அலியா தனது 11 வது வயதில் சிம்பொனி இசைக்குழுவில் இணைந்து இசைக்கருவி வாசித்திருக்கிறாள்.

கல்லூரிப் படிப்பை முடித்து பட்டம் வாங்கியபோது அலியாவின் வயது பதினான்கு !

தற்போது நியூ ஆர்லாண்ட்ஸ் பல்கலைக்கழகம் ஒன்றில் கணிதவியல், மற்று இயற்பியல் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கும் இவர் கொரியாவில் கோன்குக் பல்கலைக்கழகத்தில் முழுநேர பேராசிரியராக இணைந்திருக்கிறார்.

கணிதமொழியும், இசை மொழியும் என் பிரியத்துக்குரிய மொழிகள். ஆனால் கொரிய மொழி எனக்குத் தெரியாது. அது தான் தற்போதைய பிரச்சனை என்று சொல்லி விழிகளை விரிக்கிறார் இந்த குட்டிப் பேராசிரியர்.

மீன் குஞ்சுக்கு நீந்தக் கத்துத் தரணுமா என்ன ?