நடிகர் பிளேட் “வெஸ்லிக்கு” 3 ஆண்டு சிறை ! இது தீர்ப்பு !!!

நாற்பத்து ஐந்து வயது நடிகரான, பிளேட் புகழ், வெஸ்லி வரி செலுத்தாததால் மூன்று ஆண்டுகால சிறைத்தண்டனை பெற்றிருக்கிறார்.

டாக்டர் ராஜசேகர் கேள்விப்பட்டால் இது தாண்டா தீர்ப்பு என ஒரு படம் எடுத்திருப்பார். அப்படி ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது பிரபல நடிகர் வெஸ்லி ஸ்னைப்ஸ் க்கு.

அமெரிக்காவின் ஃபுளோரிடா நீதிமன்ற நீதிபதி ஹோட்ஜஸ் இந்த தீர்ப்பை வழங்கினார்.

தன் தவறுக்கு வெஸ்லி மன்னிப்பைக் கோரியபோதும், வரியை அனைத்து விதமான தாமத, வட்டி, அபராதங்களுடன் ( சுமார் $17 மில்லியன் ) கட்டுவதாக உறுதியளித்த போதும் நீதிபதி அசரவில்லை.

வழக்கறிஞர், “பாவம் அப்பாவி அப்பா அவர், அவருக்கு ஐந்து பிள்ளைகள் வயது வெறும் 1 முதல் 19 வரை. மூன்று மனைவிகள், இரண்டு முறை விவாகரத்தானவர்” என்றெல்லாம் கெஞ்சியும் மசியவில்லை.

எனது “ஒரு வயது” மகள் நான் இல்லாமல் தூங்க மாட்டாள் தயவு செய்து மன்னியுங்கள் என வேம்பயர் வெஸ்லி பம்மியதும் பயனளிக்கவில்லை.

வேண்டுமென்றே சட்டத்தை ஏமாற்றுவதற்காக வரியைக் கட்டாமல் இருந்த குற்றத்துக்கான தண்டனையை அனுபவித்தே ஆகவேண்டும் என மனுநீதி சோழனாகியிருக்கிறார் நீதிபதி.

இந்த தீர்ப்பு தனி மனித விருப்பு வெறுப்புகளைக் கருத்தில் கொள்ளாமல் ஒட்டு மொத்த அமெரிக்க வாழ் மக்களுக்கும் வரி செலுத்தாவிடில் என்ன நேரும் என்பதை தெள்ளத் தெளிவாகச் சொல்வதற்காக வழங்கப்படுகிறது என அழுத்தம் திருத்தமாய் சொல்லிவிட்டார் நீதிபதி.

எதற்கெடுத்தாலும் மேலை நாடுகளைக் குற்றம் சொல்லிச் சொல்லியே மேடையில் உரையாற்றும் நம்மூர் பெரும் தொப்பைகள் (எத்தனை நாளைக்குத் தான் பெருந்தலைகள் என்றே சொல்வது ) இதையெல்லாம் கவனித்து, நம்மூர் நடிகர் நடிகைகளில் வரி செலுத்தாதவர்களை ஜெயிலில் அடைக்க வழி செய்தால் நலம்.

அப்படியே நீதிபதிகளும் நீதிமன்றங்களில் ரசிகர் மன்றங்கள் அமைக்காமல் நடிகர் மீதான வழக்குகளை நேர்மையாய் அணுகி, வெறும் பண விஷயம் தானே (அதை தனியே பெட்டியில் வாங்கிக் கொள்ளலாம்) என கருதாமல் இருத்தலும் அவசியம்.

அப்படிச் செய்தால் மாத சம்பளம் வாங்கும் (அப்பாவி) மக்கள் மட்டுமே ஒழுங்காய் வரி செலுத்தும் நிலை மாறி எல்லோரும் வரி செலுத்தும் நிலை உருவாகும்.

சீனாவின் ஜூராசிக் பார்க்

பதினைந்து ஆண்டுகளுக்கு முன் ஹாலிவுட் இயக்குனர் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் ஜூராசிக் பார்க் எனும் திரைப்படத்தை இயக்கியபின் டைனோசர் குறித்த அறிதல் உலகின் கடை கோடி வரைக்கும் சட்டென பரவியது.

எழுத்தாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், திரைப்பட இயக்குனர்கள், சிறுவர்கள், வணிக வியாபார நிறுவனங்கள் என பல்வேறு நிலையினரின் ஆர்வத்தை அந்தத் திரைப்படம் தூண்டி விட்டது என்றால் மிகையல்ல. தற்போது சீனாவின் மிகப்பெரிய டைனோசர் பார்க் பார்வையாளர்களுக்காய் திறக்கப்பட்டுள்ளது.

தற்போது சீனாவில் யுனான் பகுதியில் துவங்கப்பட்டுள்ள டைனோசர் பள்ளத்தாக்கு கிராபிக்ஸ் கலக்கல்களுக்கான தளம் அல்ல. உண்மையிலேயே டைனோசர்களின் உறை நிலை படிமங்கள் புதைந்து கிடக்கும் கல்லறைத் தோட்டம் அது.

இந்தப் பூங்காவில் 60 உண்மையான டைனோசர் எலும்புக் கூடுகள் உள்ளன என்பது வியப்பூட்டும் செய்தியாகும். இதில் நூறு மில்லியன் வருடங்களுக்கு முந்தைய எலும்புக் கூடும் உண்டு என சொல்லப்படுகிறது.

பலகோடி ரூபாய் செலவில், நான்கு சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இந்த பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பூங்காவின் உள்ளே ஆங்காங்கே சிறுவர்களைக் குஷிப்படுத்தும் விதமாக பல டைனோசர் சிலைகளும் நிறுவப்பட்டுள்ளன.

கடந்த வெள்ளிக்கிழமை துவங்கப்பட்ட இந்த பூங்காவுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளதாக சீன பத்திரிகைகள் தகவல் வெளியிட்டுள்ளன.