“புகை” ப்படங்கள் : இதைப் பார்த்த பின்புமா….

புகை பிடிப்பவர்களை அதிர வைக்க வெளியாகி இருக்கின்றன சில புகை எதிர்ப்புப் புகைப்படங்கள். அடுத்த முறை விரல்களிடையே புகை முளைக்கும் போது இந்தப் படங்களும் உங்கள் கண்களுக்கு முன் விரிவதாக…

அடடா !!! அழகான முகம் புகையினால்
இப்படி ஆயிடுமா ??

எப்படி இருந்த நான்
இப்படி ஆயிட்டேன் !

ஐயோ !!!
சந்ததிக்கே சமாதியா !


 
இன்னும் பல புகைப்படங்கள் அன்பு மணியே அருவருக்கும் வகையில் இருந்ததால் அதை இங்கே பதிவு செய்யவில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன் மஹா ஜனங்களே !

 

ஏலியன்ஸ் – கிட்டே டி.வி.டி பிளேயர் இருக்குமா ?

 
செவ்வாயில் இறங்கிய பீனிக்ஸ் – புகைப்படங்களை அனுப்பி அசர வைத்துக் கொண்டிருக்கும் அதே வேளையில், அங்கே ஒரு டி.வி.டியையும் இறக்கி வைத்திருக்கிறதாம்.

ஏலியன்ஸ் யாராவது வந்து பார்த்தால்… அடடே.. ஒரு நல்ல டி.வி.டி இருக்கே இதுல என்ன படம் ஓடுதுன்னு அவங்களோட ரீஜியன் ப்ஃரீ டி.வி.டி  போட்டுப் பார்த்து தெரிஞ்சுக்கலாமாம்.
ரொம்ப முக்கியமான தகவல்களும், கூடவே மகா அறுவை படங்களான “Mars Attack”, War of teh Worlds  எல்லாமே அந்த டி.வி.டி. ல இருக்கிறதாம்.

ஏலியன்ஸ் க்கு மிகவும் பரிச்சயமான 🙂 ஆங்கில மொழியில் எல்லா தகவல்களும் சொல்லப்பட்டிருக்கிறதாம்

செவ்வாய் குறித்த நமக்குத் தெரிந்த விஷயங்கள் எல்லாம் இதில் இருக்கிறதாம்.

உலகம் அழியப்போகிறது என்று சொன்ன செவ்வாய் சிறுவனின் பேட்டி இருக்கிறதா தெரியவில்லை !

இந்த டி.வி.டி பல நூறு ஆண்டுகள் ஆனாலும் அழியாமல் இருக்கக் கூடிய வகையில் சிறப்பாய் தயாரிக்கப் பட்டிருக்கிறதாம்.

எலியன்ஸ் சார்… டி.வி.டி பிளேயர் இல்லேன்னா ஒரு பறக்கும் தட்டு பிடிச்சு வால்மார்ட் வாங்க, சேல் போயிட்டிருக்கு !

 

திருடனைப் பிடிக்காதீங்கப்பா… ஜெயில்ல இடமில்லை !

 

ஜெயில்ல இடமில்லைய்யா… இனிமே யாரையும் புடிக்காதீங்க ! இப்படி ஒரு நிலமை உண்மையிலேயே வந்திருக்கிறதாம் இப்போது யூ.கே யில்.

இருந்த 83,000 அறைகளும் நிரம்பி வழிய, திருடர்களையும், சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்களையும் பிடித்து என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்கின்றனர் காவல் துறையினர் !

ஓசிக் காசு வாங்கிட்டு லேசில் விடற பழக்கம் அங்கே இல்லையோ ??

சென்னை சூப்பர் கிங்ஸ்டன் ஒரு சனிக்கிழமை.

கடந்த சனிக்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் ரா.ரா அணிக்குமிடையே நடந்த போட்டியை சென்னையில் கண்டுகளிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

வாழ்நாளிலேயே மைதானத்துக்குச் சென்று இதுவரை ஒரு விளையாட்டையும் பார்த்ததில்லை என்பது ஒரு காரணம் என்றால், சுமார் அறுபது நண்பர்கள் ஒன்றாகச் சென்றது தான் சுவாரஸ்யமாய் செல்ல வைத்த முதன்மைக் காரணம்.

கிரிக்கெட் விளையாட்டின் மீது அதீத வெறி ஏதும் இல்லை என்பதால் வெற்றியோ தோல்வியோ எதுவும் என்னைப் பாதிக்கவில்லை.

ஆனால் மைதானத்தில் அமர்ந்திருந்த அந்த மூன்று – நான்கு மணி நேரமும் ஒரு நடன அரங்கத்துக்குள் இருந்தது போல அற்புதமான அனுபவமாய் இருந்தது.

கிரிக்கெட் போட்டிகளைக் காலங் காலமாய் பார்த்துக் கொண்டிருக்கும் நண்பர்கள் கூட இது போல ஒரு அனுபவத்தை இதுவரை கண்டதில்லை எனுமளவுக்கு ஐ.பி.எல் இருந்தது.

ரசிக்க வைத்தது பாடல்களும், இசையும் தான்.

ஷேன் வார்னேயும், மார்கெல்லும், நிட்டினியும் ஓடிக்கொண்டிருந்த அரங்கத்தில் “பொதுவாக எம் மனசு தங்கம், எங்கிட்ட மோதாதே, மை நேம் ஈஸ் பில்லா” என்றெல்லாம் தமிழ் பாடல்கள் பட்டையைக் கிளப்பியது பரம சந்தோஷம்.

பார்த்திவ் பட்டேல் பவுண்டரி விரட்டியபோது “பார்க்கத் தான் சின்னப் பையன் நானப்பா..” என்பது போன்ற டைமிங் பாடல்கள் வேறு.

நடனமும், இசையும், கூச்சலும், நண்பர்களின் கலாட்டாவும் நிறைந்த ஒரு மாலைப் பொழுதை வெகுநாட்களுக்குப் பின் சந்தித்த திருப்தி திரும்பி வரும்போது நிறைந்திருந்தது.

கிரிக்கெட் நல்லதோ, கெட்டதோ. ஐ.பி.எல் தேவையோ, தேவையில்லையோ. அவ்வப்போது நண்பர் புடைசூழ கவலைகளை வெளியே கொட்டி விட்டு கொட்டமடிப்பது தேவையாய் படுகிறது மனதுக்கு.

 

புகைப்பதை நிறுத்தினால்….


“அப்பா, புகைப்பதை விட்டு விடுங்களேன்…”

ஐந்து வயது மகள் தந்தையைப் பார்த்துச் சொன்னாள்.

“ஏன் நான் விட்டு விட வேண்டும் ?” தந்தை கேட்டார்.

“நான் வளர்ந்த பின்னும் நீங்கள் என்னோடு இருக்க வேண்டும் என விரும்புகிறேன்” மகள் சொன்னாள்.

அந்த வினாடியில் புகைப்பதை நிறுத்தினார் ரிச்சர்ட் டிக்கி டீன் எனும் அந்த அமெரிக்கத் தந்தை.

புகைத்தல், அதன் தீமைகள் குறித்த ஆராய்ச்சி முடிவுகள் வந்து கொண்டே இருந்தாலும் அதை விடாமல் தொடரும் மக்கள் இருந்து கொண்டே தான் இருக்கிறார்கள்.

புகை பிடிக்கும் நண்பர்களில் ஒருவர் நிறுத்தினால் மற்றவரும் நிறுத்தும் வாய்ப்பு 36 விழுக்காடு அதிகரிக்கும் எனும் உற்சாகமான புதிய ஆராய்ச்சி முடிவு ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் இப்போது வெளியிட்டுள்ளனர்.

புகைக்கும் தம்பதியர்களில் ஒருவர் புகைப்பதை நிறுத்தினால் அடுத்தவரும் நிறுத்தும் வாய்ப்பு 67 விழுக்காடு அதிகரிக்கிறதாம்.

குடும்பத்திலுள்ளவர்கள் புகைத்தலை நிறுத்தும் போது, மற்ற குடும்ப உறுப்பினர்கள் புகைத்தலை நிறுத்தும் வாய்ப்பு 25 விழுக்காடு அதிகரிக்கிறதாம்.

சில சமூக அமைப்புகளில் ஒருவர் புகைப்பதை நிறுத்தினாலே, ஒட்டுமொத்த அமைப்பு உறுப்பினர்களுமே அந்த பழக்கத்தை விட்டு விடும் வாய்ப்பும் இருக்கிறதாம்.

இங்கிலாந்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வு சுமார் முப்பது ஆண்டுகளாக 12,000 நபர்களை உள்ளடக்கிய மிகப்பெரிய ஆய்வு என்பது குறிப்பிடத் தக்கது.

இந்த ஆய்வு புகைக்கும் பழக்கத்தை மக்களிடமிருந்து விலக்க ஒரு புதிய கோணத்தைக் கண்டறிந்திருக்கிறது எனலாம்.

புகைத்தல் எனும் பழக்கம் கூட இருக்கும் சகவயது நண்பர்களின் வசீகர விளம்பரத்தாலும், கண்டிப்பினாலும், நட்பென போதிக்கப்படும் உரிமை வற்புறுத்தல்களாலுமே ஆரம்பமாகின்றன. பின்னர் அவை கிளை விட்டு வேர்விட்டு விலக்க முடியா முள் மரமாக உள்ளத்தில் ஊன்றிப் படற்கிறது.

அந்த பழக்கத்தை விட்டு ஒருவர் விலகுவது ஒரு சமூக நன்மையைத் தருகிறது என்பது இதில் கவனிக்கத் தக்க அம்சமாகும்.
 புகை பிடிப்பதை நான் நிறுத்தினால் என்ன ?  நிறுத்தாவிட்டால் என்ன ? – என்று இனிமேல் யாரும் கேட்க முடியாது. ஏனெனில் , நீங்கள் நிறுத்தினால் உங்களால் இன்னொருவர் அதை விட்டு விடும் வாய்ப்பு இருக்கிறது. அவரால் இன்னொரு நபர் விடுதலை அடைய வாய்ப்பு இருக்கிறது.. இப்படியே இந்த சங்கிலித் தொடர் நீண்டு, ஒருவர் இந்த பழக்கத்தை நிறுத்துவது ஒரு பெரிய மாற்றத்துக்கான விதையாகவே விழுகிறது.

ஒரு சமூக மாற்றத்துக்கான விதையைப் போட புகைப்போர் முன்வருவார்களாக !

 

தாயாகப் போகிறீர்களா ?

நீங்கள் தாயாகப் போகிறீர்களா ? உங்கள் வீட்டு வாசல் கதவை நாளொரு ஆராய்ச்சியும் பொழுதொரு அறிவுரையும் வந்து தட்டுகிறதே என கவலைப்படுகிறீர்களா ? இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

தாய்மை நிலையிலிருக்கும் பெண்கள் மன அழுத்தம் இல்லாமல் இருக்க வேண்டியதன் தேவையை விளக்குவது போல அமைந்திருக்கிறது புதிய ஆராய்ச்சி ஒன்று.

தாய்மை நிலையிலிருக்கும் பெண்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் கருவிலிருக்கும் குழந்தையைப் பாதித்து அந்த குழந்தைக்கு பிற்காலத்தில் ஒவ்வாமை, ஆஸ்த்மா போன்ற நோய்கள் வர வழி செய்யும் என்பதே அந்த ஆராய்ச்சி முடிவு.

தூசு, சுற்றுப்புறம் போன்றவற்றினால் தாய்க்கு ஏற்படும் பாதிப்புகள் குழந்தைக்கு ஒவ்வாமை, ஆஸ்த்மா போன்ற நோய்களை ஏற்படுத்தும் என்பது பழைய ஆராய்ச்சி. இப்போது அத்துடன் மன ரீதியான தாயின் அழுத்தங்களும் குழந்தையின் ஆரோக்கியத்தை சிதைப்பது தெரிய வந்துள்ளது.

அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் நிகழ்த்திய இந்த ஆராய்ச்சி தொப்புள் கொடியில் உள்ள இம்முனோகுளோபுலின் இ – யின் அளவை அடிப்படையாகக் கொண்டது. இது அலர்ஜி, ஆஸ்த்மா போன்ற நோய்களை உருவாக்கும் காரணியாகும்.

மன அழுத்தம் அதிகமாய் உள்ள சூல் கொண்ட பெண்களுக்கு இந்த அளவு தொப்புள் கொடியில் அதிகமாய் காணப்படுகிறதாம்.

தாய்மை நிலையிலிருக்கும் பெண்கள் வீட்டிலும், சமூகத்திலும், பணியிடங்களிலும் தங்கள் மனதை இலகுவாய் வைத்துக் கொள்ள வேண்டியதன் தேவையை இந்த ஆராய்ச்சி தெளிவுபடுத்துகிறது.

அதே வேளையில் தாய்மை நிலையிலிருக்கும் பெண்கள் மன அழுத்தத்துக்குச் செல்லாமல் இருக்கும் வாழ்க்கைச் சூழலை அமைத்துத் தரும் தார்மீகக் கடமையை குடும்பத்தினருக்கு உணர்த்தியும் இருக்கிறது இந்த ஆராய்ச்சி.

சந்தோஷ் சுப்ரமணியம் – எனது பார்வையில்.

தாமதமாய்ப் பார்த்தாலும் திருப்தியைத் தந்த படம் என சொல்ல வைத்தது சந்தோஷ் சுப்பிரமணியன்.

கலகலப்பான நிகழ்வுகளோடு நம்மையும் இணைத்துக் கொள்ளும் கதை தான் படத்தின் மிகப்பெரிய பலம். ஆங்கிலத் திரைப்படங்களைப் போல இழையோடும் மெல்லிய நகைச்சுவையுடன் நகர்கிறது படம்.

தந்தையின் விருப்பத்தைத் தட்டாத மகனுக்கும், பிள்ளைகள் மற்றும் மனைவியின் வாழ்க்கை சிறப்பானதாக இருக்கவேண்டும் எனும் ஒரே எதிர்பார்ப்போடு வாழும் தந்தைக்கும் இடையேயான பாசப் பிணைப்பை ஒரு பக்கமும்,

மழலையா, லூசா, வெகுளியா என பிரித்தறிய முடியாத ஒரு கலவைக் காதலின் சுவாரஸ்யத்தை மறுபக்கமும் கொண்ட தண்டவாளமாய் நகர்கிறது கதை. ஒரு அடர் மலைப்பிரதேசத்தின் இயற்கை எழிலை கண்டு ரசித்துக் கொண்டே செல்லும் பயணிகளாக பார்வையாளர்கள்.

அதே ஆதிகால காதல், சிரிப்பு, நண்பர்கள், காதலியின் தந்தையிடம் கெட்ட பெயர், பாடல்,  இத்தியாதி இத்தியாதி என எங்கும் எதிலும் புதுமை இல்லை. ஆனாலும் சுவாரஸ்யமாய் இருக்கிறது படம். ஒரு மழலையின் விளையாட்டைப் போல.

குறிப்பாக ஏழு நாட்கள் நாயகன் வீட்டில் நாயகி தங்கியிருக்கும் போது நடக்கும் களேபரங்கள் கலகலப்பானவை.

ஏழு நாட்களுக்குப் பின் நாயகனைப் பிடிக்கவில்லை என நாயகி சொல்லிச் செல்லும் காட்சி ஓர் அழுத்தமான கண்ணீர் சிறுகதை.

சிறு சிறு காட்சிகளின் மூலமாக திரைப்படத்தை அழகுறக் கொண்டு சென்றிருக்கிறார் தம்பிக்கேற்ற அண்ணன். குறிப்பாக தன் மனைவி பாடும் போது “என் மனைவிக்குப் பாடத் தெரியுமா ? அதைக் கூட அறிந்து கொள்ளாமல் இருந்தேனா ?” என பார்வையாலேயே பேசும் பிரகாஷ் ராஜ் பிரமாதராஜ்!

கடைசிக் காட்சியில் தந்தை இத்தனை நாளும் தன்னை தன்னுடைய விருப்பத்துக்கு வாழவே விடவில்லை என கதாநாயகன் கூறுவது பஞ்ச் அல்ல நஞ்சு.

நீங்கள் விரும்பும் ஆடையை நான் அணிய வேண்டும், கேரம் போர்ட் விளையாடும் போது கூட எந்த காயினை எப்படி அடிக்க வெண்டுமென நீங்கள் சொல்வதையே நான் செய்ய வேண்டும், இப்படித்தானே வாழ்ந்தேன். என்னை நீங்கள் வாழவே விடவில்லையே, என் வாழ்க்கையை நீங்கள் வாழ்ந்தீர்கள் என கதாநாயகன் ஆதங்கத்தைக் கொட்டித் தீர்க்கும் போது ஒரு தந்தையின் மனம் படும் பாட்டை பிரகாஷ் ராஜ் வெளிப்படுத்தியிருக்கும் விதம் அருமை.

எனினும், தன்னை கால் நூற்றாண்டு காலம் தன்னை வளர்த்த, குடும்பத்தை நேசித்த தந்தையின் நெஞ்சில் மகன் சொருகிய அந்த கத்தியை அதன் பின் அவன் சொல்லும் எந்த சமரச வார்த்தைகளும் சமன் செய்து விடவே முடியாது. தனது வாழ்நாள் பணிகள், கனவுகள், விருப்பங்கள், தியாகங்கள் எல்லாம் மறுதலிக்கப்பட்டு நிராயுதபாணியாய் விழிகள் நிறையும் ஓர் தந்தையின் சோகம் அளவிட முடியாதது.

எனவே தான், அதன் பின் படத்தோடு ஒட்ட முடியவில்லை.

எனினும் ஆபாசமோ, வன்முறையோ, வெறுப்படிக்கும் வசனங்களோ இல்லாமல் ஒரு அழகான கவிதையை வாசித்தது போன்ற நிறைவை நீண்ட நாட்களுக்குப் பிறகு தந்த படம் எனுமளவில் நெஞ்சில் நிற்கிறது ச.சு.

உயர் இரத்த அழுத்தம் : குறைப்பது மிக எளிது !

உயர் இரத்த அழுத்தமுடையவர்களுக்கு ஆனந்தம் அளிப்பதற்காகவே வந்திருக்கிறது மூச்சைச் சீராக்குவதன் மூலம் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் கருவி ஒன்று.

உயர் இரத்த அழுத்தமுடையவர்கள் தங்கள் மூச்சை மெதுவாக, நன்றாக இழுத்து விடுவதன் மூலம் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் கொண்டு வந்து விடலாம் என்றும் மூச்சுப் பயிற்சி, தியானம் போன்றவை உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் எனவும் முன்பே ஆராய்ச்சிகள் தெரிவித்திருந்தன.

ஆனால் எந்த அளவுக்குக் கட்டுப்படுத்த வேண்டும், எல்லோரும் ஒரே அளவாகக் கட்டுப்படுத்த வேண்டுமா ? என்பது போன்ற ஏகப்பட்ட நடைமுறைச் சந்தேகங்கள் இருந்தன.

சராசரியாக ஒரு மனிதன் நிமிடத்திற்கு 18 முறை மூச்சு விடுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்த அளவு பத்துக்குக் கீழே இருக்குமாறு சுமார் 15 நிமிடங்கள் பயிற்சி எடுத்தாலே உயர் இரத்த அழுத்தத்தை குறிப்பிட்ட நாட்களுக்குள் கட்டுக்குள் கொண்டு வந்து விடலாம் என்கின்றனர் மருத்துவர்.

இப்போது வடிவமைக்கப்பட்டுள்ள இந்த புதிய கருவி மூச்சை வகைப்படுத்துகிறது. ஒரு இசைக்கருவி போல இருக்கும் இதை நெஞ்சில் கட்டிக் கொண்டால் நமது மூச்சின் வேகம், நமது உடலில் தசை நார்களின் இறுக்கம் போன்றவற்றை அளவிட்டு நாம் நிமிடத்திற்கு எத்தனை முறை மூச்சு விடுவது நல்லது என்பதை கருவி முதலில் தீர்மானம் செய்து கொள்கிறது.

அதன் பின் இதில் இணைக்கப்பட்டுள்ள ஹெட்போனில் மெல்லிய தாளலயத்துடன் இசை எழுகிறது. ஒரு தாளத்துக்கு மூச்சை உள்ளே இழுத்து அடுத்த தாளத்தில் வெளியே விடவேண்டும்.

இந்த உள்ளே – வெளியே மூச்சு விடுதல் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கும். தேவையான அளவு இடைவெளி வந்தபின் சீராகும். இப்படி தொடர்ந்து சில நாட்கள் செய்து வந்தாலே உயர் இரத்த அழுத்தம் இருந்த இடம் தெரியாமல் ஓடி விடும் என்கின்றனர் மருத்துவர்கள்.

இந்த கருவியை பலருக்கு சோதனை அடிப்படையில் பயன்படுத்தியதில் முடிவு மிகவும் சாதகமானதாய் இருக்கிறதாம்.

உயர் இரத்த அழுத்தத்துக்கு மாத்திரைகள் உட்கொண்டு அதன் மூலம் பக்க விளைவுகளையும் ஏற்படுத்தி, காலம் முழுவதும் மருந்தின் அடிமையாய் நகர்வதிலிருந்து இந்த கருவி விடுதலை அளித்திருக்கிறது.

நமக்குத் தெரிந்த மூச்சுப் பயிற்சியை ஒரு கருவியின் மூலம் நவீனப் படுத்தி காப்புரிமம் வாங்கி வெளியிட்டிருக்கின்றனர் புத்திசாலிகள் என்றும் கூட இதைச் சொல்லலாம்.

அறை எண் 305 ல் பிரகாஷ்ராஜ் !!!

ரொம்ப தாமதமாகப் பார்க்க நேர்ந்தது அறை எண் 305 ல் கடவுள் திரைப்படத்தை. தாமதமாய் பார்த்ததால் எதுவும் நஷ்டமில்லை என்பதை சிம்பு தேவன் திரைப்படம் மூலம் விளக்கியிருந்தார்.

கதாநாயகி என்ன தொழில் செய்கிறார் என்பதைச் சொல்லும் இடம் தமிழ் சினிமாவின் மரபுகளை மீறியதாய் வலியும், அழகும் கலந்து சொல்லப்பட்டிருக்கிறது.

ஆபாசம் வன்முறை மீறிய திரைப்படம் எனுமளவில் சிம்பு தேவனின் திரைப்படத்தை மனதாரப் பாராட்டலாம். எனினும் சிம்பு –“தேவனாக” மாறி போதனைகள் செய்வது தான் நெளிய வைக்கிறது.

காரணம் போதனைகளில் எதிர்பார்த்த வலு இல்லை. அட ! போட வைக்கும் வசனங்களோ, அசர வைக்கும் சிறு சிறு அறிவுரைகளோ இல்லை. எங்கேயோ, கேட்ட, படித்த, பார்த்தவற்றின் தொகுப்பாகவே இருக்கிறது.

“யாருமே ஏறிப் போகாத மலையில ஏறிப் போயிருக்கீங்களா ?”  அப்புறம் எப்படி நீங்க நல்லா வாழ்ந்ததா அர்த்தம் என கடவுள் கேட்பதிலுள்ள லாஜிக் புரியவில்லை.

கடவுள் எதிர்பார்ப்பது மலையில் ஏறிப் போவதும், ஆற்றுக்குள் படகு ஓட்டுவதும் என தனி மனித ரசனைகளையா அல்லது சக மனிதன் மீதான மனித நேயத்தையா என்பதிலேயே குழப்பம் இயக்குனருக்கு.

கடவுள் என்பவர் வெகு சாதாரண மனிதர் போலவும் ஆத்தா மகமாயி திரைப்பட மந்திர தாயத்து கணக்காக கேலக்ஸி சமாச்சாரம் கையிலிருந்தால் மட்டுமே கடவுளுக்குப் பவர் என்று சொல்வதெல்லாம் ஆத்திகர்களை கிச்சு கிச்சு மூட்டப் பார்க்கும் சிம்பு தேவனின் சித்து விளையாட்டு எனலாம்.

சென்னையில் வசிக்கும் இரண்டு வருட முன்னனுபவமுள்ள ஜாவா டெவலப்பர் 85கே – டேக் ஹோம் என்கிறார் 🙂 அது ஒன்று தான் இந்த படத்தில் நன்றாகச் சிரிக்க வைத்த சமாச்சாரம்.

சந்தானம் லொள்ளு சபாவுக்கே திரும்பிப் போகலாம், விட்ட இடத்தைப் பிடிக்க அவருக்குக் கிடைத்த கடைசி எச்சரிக்கை மணி அறை எண் 305.

கடவுளாய் அழுத்தமான ஷேவ் , பளீர் வெள்ளை சட்டை, முழு நேர சிரிப்பு என வந்தாலும் கடவுளாகப் பார்க்க ஒத்துக் கொள்ளாத முகம் பிரகாஷ் ராஜுக்கு.  அதனால் தானோ என்னவோ கடவுளோடு இருக்கும் சந்தானம், க.க இருவரும் கூட ஒத்துக் கொண்டது போல தெரியவில்லை படத்தில், பல இடங்களில் !

8 என்பது ஷங்கருக்கு ராசி என்பதை மாற்றி எழுதியிருக்கிறது இந்த 305.

இந்த படம் பார்த்தபின் மீண்டும் ஒரு முறை “புரூஸ் ஆல்மைட்டி” பட டிவிடியை பார்த்தேன். நாம போக வேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கு !

வெயில் : தவிப்பும், தவிர்ப்பும்

மழையின் ஆட்சி முடிவுக்கு வந்து சூரியன் அரியணை ஏறியிருக்கும் தருணம் இது. தினசரி வாழ்வை வியர்வைகளுக்கும், வெப்பத்துக்குமிடையே நடத்திச் செல்லும் நாம் வெயிலைப் பற்றிய ஒரு வித எரிச்சலுடனேயே வெயில் காலத்தை ஆரம்பிக்கிறோம்.

மேலை நாடுகளில் வெயில் காலம் என்பது வரப்பிரசாதம் போல. பனிப் போர்வைக்குள் கிடக்கும் பூமியை வெயில் வந்து துடைத்துச் செல்லும் அற்புத நிகழ்வாக அவர்கள் அதைப் பார்க்கிறார்கள். வெயில் வந்து விட்டாலே உடலை முழுவதும் போர்த்தி நடக்கும் குளிர் ஆடைகளை உற்சாகமாய்க் கழற்றிவிட்டு நவீன ஆடைகளுக்குத் தாவி விடுகிறார்கள், கடற்கரை விளையாட்டுகள், கடல் குளியல், சுற்றுலாக்கள், விற்பனை வீதிகள் என களை கட்டி விடும்.

நம்மைப் பொறுத்த வரை வெயில் காலம் என்பது வெறுப்புடனே பார்க்கப்படுகிறது. காரணம் அதிகப்படியான வெப்பம். அதை சமன் செய்யுமளவுக்கு இல்லாமல் போன வசந்த, குளிர் காலங்கள். வெயில் காலம் அளவுக்கு அதிகமான வெப்பத்துடனேயே வருகிறது.

வெயில் நாட்களில் உடம்பின் வெப்பம் அதிகரிக்கும்போது அது அதிகப்படியான வெப்பத்தை தோலுக்கு அனுப்புகிறது, தோல் சுற்றுப் புறத்திலுள்ள குளிர்காற்றைக் கொண்டு வெப்பத்தைக் குறைக்கிறது. அல்லது வியர்வை மூலமாக வெப்பத்தை வெளியேற்றுகிறது. ஒரு துளி வியர்வை உடம்பிலுள்ள ஒரு லிட்டர் இரத்தத்தைக் குளிர்விக்கிறது என்பது வியப்பூட்டும் செய்தி.

ஆனால் வியர்க்காத வெயில் வீசும் பிரதேசங்களில் உடல் வெப்பத்தை வெளியேற்ற முடியாமல் உள்ளுக்குள்ளேயே தேங்கிவிடுகிறது. இது ஹீட் ஸ்ட்ரோக் எனப்படும் வெப்பத் தாக்குதலுக்கு உடலைத் தள்ளி உயிருக்கே ஆபத்தான நிலைக்கு மனிதனைக் கொண்டு செல்கிறது. வெளியே உள்ள காற்று வியர்வையையும், உடல் வெப்பத்தையும் உறுஞ்சும் தன்மையற்றிருப்பதே இதன் காரணமாகும்.

சிலருக்கு வியர்க்காத உடல் இயல்பிலேயே அமைந்திருக்கும், அல்லது பிற நோய்களின் தாக்கத்தால் வியர்க்காத தன்மையை உடல் பெற்றிருக்கும். அப்படிப்பட்டவர்கள் தினமும் சிறிது நேரம் குளிர் அறைக்குள் இருக்க முடிந்தால் மிகவும் பயனளிக்கும். குறிப்பாக சர்க்கரை நோய், இதய நோய், குறைந்த இரத்த அழுத்தம் உடையோர் போன்றவர்களின் உடல் வெப்பத்தினால் எளிதில் தாக்குதலுக்கு உள்ளாகும்.

சில மருந்து வகைகள் கூட உடலில் வியர்வைத் தன்மையைக் குறைக்கும் என்று மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள். தொடர் மருத்துவக் கண்காணிப்பில் இருப்பவர்கள் தங்கள் மருத்துவரைக் கலந்தாலோசித்து தங்கள் மருந்தின் தன்மையைக் கண்டுணர்தல் நல்லது. பார்கின்ஸன், உயர் இரத்த அழுத்தம், சில ஒவ்வாமை நோய்கள் போன்றவை அவற்றில் சில.

குறிப்பாக நகர்ப்புறங்களில் கிராமப் புறங்களை விட வெப்பம் மிகவும் அதிகமாக இருக்கும். நகர்ப்புறங்களில் வெப்பம் அதிகமாய் இருப்பதற்கு அங்குள்ள மக்கள் தொகையும், தொழிற்கூடங்களும், போக்குவரத்தும் சில முக்கிய காரணங்களாகும். குளிர்சாதனப் பெட்டி வெளிவிடும் வெப்பமும் நகர்ப்புற சுற்றுச் சூழலை வெப்பப்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

நகர்ப்புறங்களில் வெப்பத்தை எதிரொளிக்கும் தன்மையுடைய பொருட்கள் மிகவும் குறைவாகவே இருக்கின்றன. சாலைகள் போன்றவை வெப்பத்தைப் பெருமளவில் கிரகித்துக் கொள்ளும் தன்மை படைத்தவையாக இருப்பதனால் நகருக்கு வெளியே இருக்கும் வெப்பத்தை விட ஐந்து முதல் எட்டு ஃபாரன்கீட் வரை நகருக்குள் வெப்பம் அதிகமாக இருக்கிறது.

அதிகரிக்கும் வெப்பத்தினால் காற்று சூடாகி மேலே எழும்புகையில் அந்த வெற்றிடத்தை நிரப்ப பாயும் காற்று அனல்க் காற்றாகி இம்சிக்கின்றது. அட்லாண்டா போன்ற இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு இத்தகைய வெப்பக் காற்றே காரணமாகி விடுகிறது.

நகர்ப்புறங்களில் வெப்பம் அதிகமாக இருப்பதற்கு நாம் கணிப்பது போலவே மரங்களின் குறைவும் ஒரு முக்கியமான காரணம். வெப்பத்தை உள்ளிழுத்து அதை ஆவியாகாமல் தடுக்கும் மரங்களும், நிலப்பரப்பும் குறைவாக இருப்பது வெப்ப அதிகரிப்புக்குக் காரணமாய் இருக்கிறது.

நகர்ப்புறங்களில் வெப்பத்தைக் குறைப்பதற்காக மரம் நடுவதைப் போல, வெப்பத்தை கிரகித்துக் கொள்ளாமல் எதிரொளிக்கும் பொருட்களைக் கொண்டு வீட்டுக் கூரைகள் அமைப்பதை மேல் நாட்டின் வெப்பமான நகரங்களில் பரிந்துரை செய்திருக்கிறார்கள். இதன் மூலம் நகரின் வெப்பம் குறையும் என்பது அவர்களின் கணிப்பு.

வெப்ப காலங்களில் ஃபுட் பாய்சனிங் எனப்படும் உணவு உட்கொள்வதனால் வரும் நோய்கள் மிகவும் அதிகரித்து விடுகின்றன. அதற்கு ஒரு காரணம் பாக்டீரியாக்கள் வெப்ப காலத்தில் வேகமாக வளர்வது. அதுவும் ஈரத்தன்மையுள்ள, வெப்ப நாட்கள் பாக்டீரியாவை மிகவும் வேகமாகப் பரப்புகின்றன. இதனால் உணவுப் பொருட்களில் தொற்றிக் கொள்ளும் பாக்டீரியாக்கள் வெப்பத்தால் சட்டென்று பல மடங்கு பரவி நமது உணவைக் கெடுத்து, அதை உண்ணும் நம்மையும் படுக்க வைத்து விடுகிறது.

பழைய உணவையும், புதிய உணவையும் சேர்த்து வைப்பதும் பாக்டீரியாப் பரவலுக்கு காரணமாகிவிடக் கூடும். சமையலுக்கு முன் சமையலுக்குப் பயன்படுத்தும் பாத்திரங்கள், கத்திகள், அனைத்தையும் மிகவும் சுத்தமாய் வைத்திருத்தல் அவசியம். மாமிச உணவுகளை உண்ணும் போது முழுமையாக சமைக்கப்பட்டிருக்கிறதா என்பதைக் கவனித்து உண்ண வேண்டும். சரியாக வேக வைக்கப்படாத உணவுப் பொருட்கள் பிரச்சனை தரும்.

வெயில் காலங்களில் ஏற்படும் நோய்களுக்கு இன்னொரு காரணம் இந்த காலங்களில் நமக்குத் தேவையான தண்ணீர் கிடைக்காமல் போவது. இதனால் சோர்வு, தலைவலி, எரிச்சல், மன உளைச்சல் போன்ற பல பிரச்சனைகள் நம்மை பிடிக்கின்றன.

வெப்பத்தின் தாக்கம் அதிகமாய் இருக்கும்போது தவிர்க்க முடியாமல் வாங்கிக் குடிக்கும் சுகாதாரமற்ற சாலையோர பானக் கடைகள் நோயையும் சேர்த்தே விற்கின்றன. அவசரமாக நமது உடலின் வெப்பத்தையும், சோர்வையும் நிறுத்துகையில் நிதானமாய் நோயை உள்ளே அனுமதிக்கிறோம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

வேனிற்காலத்தில் கைகளை மிகவும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். கைகளைக் கழுவாமல் எதையும் உண்ணக் கூடாது. எப்போதெல்லாம் முடியுமோ அப்போதெல்லாம் கைகளைச் சுத்தமான நீரில் கழுவிக் கொள்ள வேண்டும். வெளியே சுத்தமான தண்ணீர் கிடைக்காது என நினைத்தால் முன்னமே தண்ணீரை எடுத்துச் செல்வது அவசியம்.

உணவுகளை உண்ணும்போதும் சரியான வெப்ப நிலையிலேயே உண்பதும் நோயைத் தவிர்க்க உதவும். பதப்படுத்தப்படாத உணவுகளை வெகுநேரம் கழித்து உண்பதைத் தவிர்த்தல் பலனளிக்கும். மருத்துவ அறிக்கைகளின் படி வெயில்காலங்களில் மிச்சமாகும் உணவு இரண்டு மணி நேரம் குளிர்சாதனப் பெட்டிக்கு வெளியே இருந்தாலே அது கெட்டு விடும். எனவே பழைய உணவுகளை உண்கையில் கவனம் தேவை.

கொசுக்களால் பரவும் நோய்களும் வெயில் காலங்களில் சகஜம் எனவே அதற்குரிய பாதுகாப்புடன் இருத்தல் அவசியம்.

போலியோ நோய் வெயில்காலத்தில் பரவும் ஒரு கொடிய நோயாக இருந்தது. 1940 களிலெல்லாம் வெயில்காலங்கள் போலியோவின் பயத்துடனே கழிந்தன. தற்போது அரசுகள் முன்னின்று நடத்தும் போலியோ விழிப்புணர்வினால் அந்த ஆபத்து நீங்கிவிட்டது என்றே சொல்லலாம்.

வெயில்காலத்தில் வெளியில் அதிக நேரம் உலவும் போது நமது உடலின் வெப்பம் அதிகரிக்கிறது. உடல் வெப்பம் குறிப்பிட்ட அளவை விட அதிகரிக்கும்போது உடலின் குளிர்விக்கும் தன்மை வேலை நிறுத்தம் செய்து விடுகிறது. இப்போது நமது உடலுக்கு அவசரத் தேவை தண்ணீர், நிழல். அதை செய்யத் தவறும்போது அது மிகப் பெரிய நோய்களில் கொண்டு போய் நிறுத்தும் அபாயம் உண்டு.

சர்க்கரை நோய், இதய சம்பந்தமான நோய்கள், உயர் இரத்த அழுத்தம், சிறுநீரகக் கோளாறுகள் போன்ற பல நோய்கள் அதிக வெயிலில் அலைபவர்களுக்கு ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

வெயிலில் அதிக நேரம் அலைவதும், நேரடியாக சூரிய ஒளியில் நிற்பதும் பல கண்நோய்களுக்கும் காரணமாகி விடுகிறது. அமெரிக்காவில் ஆண்டுதோறும் இருபத்தைந்து இலட்சம் பேர் கண் நோயினால் பாதிக்கப்படுகிறார்கள். இந்த நோய் பெரும்பாலும் வெயில் காலத்தில் வருவது குறிப்பிடத் தக்கது. புற ஊதாக்கதிர்கள் கண்களைப் பாதித்து கண்ணுக்குள் நோயின் வேர்களைப் பதித்துவிட்டால் அது நீண்ட நாட்களுக்கு வெளியே தெரியாமல் இருந்து பிற்காலங்களில் பார்வையையே பறித்து விடும் என எச்சரிக்கிறார் நியூஆர்லாண்ட் கண் மருத்துவ நிபுணர் டாக்டர். மோனிகா.

கண்கள் சிகப்பாகி அரிக்கத் துவங்குவதும் வெயில் கால கண் நோய்களில் ஒன்று. பத்து முதல் பதினைந்து சதவீதம் வரையிலான மக்களுக்கு ஏதேனும் ஒரு நோய் வெயில் காலத்தில் வந்துவிடுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கண் ஒவ்வாமை நோய் உள்ளவர்கள் வெயிலில் அலைவதையும், புழுதியில் விளையாடுவதையும் தவிர்க்க வேண்டும். கண்களைக் குளிர்ச்சியாக வைத்திருக்க வேண்டும். வெள்ளெரிக்காயை சிறு சிறு மெல்லிய வட்ட வடிவமாக வெட்டி கண்களில் வைத்து கண்களைக் குளிரச் செய்வது நமக்குப் பழக்கமான வைத்தியம். வெளிநாடுகளில் ஐஸ்கட்டிகளை கண்களில் வைத்து கண்களைப் புத்துணர்ச்சியாக்குகிறார்கள்.
சீனாவில் வெயில் காலத்தில் இதய நோய்களாலும், வெப்ப நோய்களாலும் ஏராளமானோர் இறந்து விடுவதாகச் சொல்கிறது ஒரு கணக்கெடுப்பு.

அமெரிக்காவில் சில ஆண்டுகளுக்கு முன் நிகழ்த்தப்பட்ட ஒரு ஆய்வில் குழந்தைகளைக் காரில் உட்கார வைத்துவிட்டு பெற்றோர் வெளியே செல்வதால் சுமார் ஐம்பது குழந்தைகள் வெப்ப நோய் தாக்கி இறந்திருக்கிறார்கள் என தெரிய வந்தது. எனவே வெப்ப காலத்தில் நல்ல காற்றோட்டமான இடங்களில் இருப்பது மிகவும் அவசியம் என்பது வலியுறுத்தப் பட்டது. கொஞ்சம் நேரம் தானே என்று அசிரத்தையாய் செய்யும் செயல்கள் மிகப் பெரிய விளைவை ஏற்படுத்திவிடக் கூடும்.

வெயில் காலங்களில் அணியும் உடைகள் வெப்பத்தைக் கிரகித்துக் கொள்ளக் கூடியதாக இல்லாமல் இருப்பதே சிறந்தது. ஆடைகள் உடலை இறுக்கிப் பிடிக்காமல் அணிவதும் மிகவும் அவசியம். மெலிதான வண்ணங்களில் ஆடைகள் அணிவதும் நல்லது.

சிலருக்கு வெயில் காலத்தில் சில ஒவ்வாமை நோய்கள் வருவதுண்டு. அப்படிப்பட்டவர்கள் அதற்குரிய முன்னேற்பாடு நடவடிக்கைகளைச் செய்து கொள்வது அவசியம்.

வெயில் காலங்களில் புழுதியின் அகோரத் தாண்டவத்தைக் காணலாம், இத்தகைய சூழலில் இருக்கும் ஆஸ்த்மா போன்ற நோயாளிகள் மிகவும் கவனத்துடன் இருத்தல் அவசியம். பெரும்பாலும் புழுதி நிறைந்த இடங்களுக்கு தேவையில்லாமல் செல்வதைத் தவிர்த்தல் நலம் பயக்கும்.

காலணி பயன்படுத்தும் போது காட்டன் சாக்ஸ் பயன்படுத்துவது காலில் தேவையற்ற வியர்வை தேங்கி வரும் நோய்களுக்கும், அலர்ஜிகளுக்கும் நம்மை விலக்கிப் பாதுகாக்கும்.

பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின், பெல்ஜியம் போன்ற மேலை நாடுகளிலும் சில ஆண்டுகளுக்கு முன் வீசிய வெப்ப அலையினால் பலர் உயிரிழந்திருக்கிறார்கள் என்கிறது உலக நலவாழ்வு நிறுவன அறிக்கை.

வெப்பநோய் தாக்கி யாரேனும் பாதிக்கப்பட்டு மயக்க நிலையில் இருப்பதைக் கண்டால் அவர்களை உடனே நல்ல காற்றோட்டமான இடத்தில் படுக்க வைத்து, தண்ணீரையோ, ஈர துணியையோ கொண்டு முகம், கை கால்களை ஈரப்படுத்த வேண்டும்.

நினைவில் கொள்ளவேண்டிய முக்கியமான விஷயம், எல்லா பானங்களும் உடலின் வெப்பத்தைத் தணிக்காது. எனவே நல்ல சுத்தமான தண்ணீரை அருந்துதலே மிகவும் உயர்வானது. குறிப்பாக குழந்தைகள், மற்றும் வயதானவர்களுக்குப் போதுமான தண்ணீர் கிடைக்கிறதா என்பதை மற்றவர்கள் கவனிக்க வேண்டும்.

இந்திய ஆயுர்வேதிக் அறிவுரைகளைப் பார்த்தால் தினமும் இரண்டு முறை குளிப்பது, காலையில் நேரமே எழும்பி வேலைகளை ஆரம்பிப்பது மதியம் சற்று நேரம் தூங்கி ஓய்வெடுப்பது, இரவு உணவுக்குப் பின் ஒரு மணி நேரத்தில் தூங்கச் செல்வது, அதிக நேரம் கண் விழித்திருப்பதைத் தவிர்ப்பது என நீள்கிறது பட்டியல். ஆயுர்வேதம் இன்றைய அவசர உலகில் திணிக்கப்பட்டுள்ள மேல் நாட்டுப் பானங்களை ஒதுக்குகிறது. இளநீர், நன்னாரி சர்பத், மோர், தண்ணீர், எலுமிச்சை பானம், பார்லி தண்ணீர் போன்றவற்றையே பரிந்துரைக்கிறது. இவை உடலுக்கு நன்மை பயக்கும் என்பது பெரும்பாலானோரின் கருத்து என்பதை மறுப்பதற்கில்லை.

வெயில்காலங்களில் அடிக்கடி உடலுக்கு ஓய்வு கொடுப்பது அவசியம். அதிலும் வெயிலில் அலையும் வேலை செய்பவர்கள் இதை கண்டிப்பாகக் கடைபிடித்தல் வேண்டும். அடிக்கடி நிழலான இடங்களில் சற்று அமர்ந்து தண்ணீர் குடித்துவிட்டு வேலையைத் தொடர்வது நல்லது.

வெயிலினால் அதிகம் பாதிக்கப்படும் தோல் உங்களுக்கு என்று அறிந்தால் அதற்குரிய பூச்சுகளை நீங்கள் பயன்படுத்துவது பாதிப்பைக் குறைக்கும்.

தொப்பியோ, நல்ல குளிர் கண்ணாடியோ அணிவது வெப்பத்திலிருந்து தற்காலிகத் தப்பித்தலைத் தரும்.

குறிப்பாக வெயில் காலங்களில் அதிகம் காய்கறிகளையும், பழங்களையும், பானங்களையும் உணவாகக் கொள்ளவேண்டும். அதிக கொழுப்புள்ள உணவுகளையும், இனிப்பு வகைகளையும் வெயில் காலங்களில் தவிர்க்க வேண்டும். வெயில் காலங்களில் மது அருந்துபவர்கள் அதை நிறுத்துவதும் மிக  முக்கியம். காரணம் மது உடலிலுள்ள ஈரப்பதத்தை குறைத்து ஆபத்தான சூழலை உருவாக்கி விடும். போதைப் பொருட்களையும் அறவே நிறுத்த வேண்டும்.
இரண்டு வயதுக்கும் குறைவான குழந்தைகளை மிகவும் கவனமாகப் பாதுகாக்க வேண்டும். அவர்களுடைய உடல் வெகு வேகமாக வெப்பமடைந்து விடும். எனவே வெப்பமான பகுதிகளில் குழந்தைகளை அழைத்துச் செல்வதையோ, தனியே விளையாட விடுவதையோ தவிர்க்க வேண்டும்.

உடற்பயிற்சி செய்பவர்கள், குறிப்பாக வயதானவர்கள்,  அதிகாலையிலோ அல்லது சூடு குறைந்த இரவிலோ உடற்பயிற்சி செய்ய வேண்டுமென அறிவுறுத்துகின்றனர் மருத்துவர்கள்.

வெயிலில் உலவும் போது சிறிது சிறிதாக உலவுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக வெயிலுக்கு உடலைப் பழக்குவது வியர்வை போன்றவை சரியான அளவில் வெளியேற்றவும், வெப்பத் தாக்குதலிலிருந்து தப்புவதற்கும் உதவும். ஒரே நாளில் உடலை சட்டென்று வெயிலுக்கு விற்று விடாதீர்கள்.

வெயிலில் அலையும் போது தாகம் எடுக்கட்டும் தண்ணீர் குடிக்கலாம் என்று நினைக்காமல், அடிக்கடி தண்ணீரைக் குடித்துக் கொண்டே இருக்க வேண்டும். ஒரு மணி நேரத்திற்கு ஒரு லிட்டர் தண்ணீரைக் குடிக்கலாம். தண்ணீர் குடிக்கும் போது அதிக குளிரான தண்ணீரைக் குடிக்காமல் சாதாரண குளிர் நிலையிலுள்ள தண்ணீரைக் குடிப்பதே நல்லது.

கடினமான உடையை அணியவே அணியாதீர்கள். நல்ல கதராடையை அணிவது வெப்பத்திலிருந்து நம்மைப் பாதுகாக்கும்.

வெயில்க் காலங்களில் ஒரு நாளைக்கு என்னென்ன செய்யப் போகிறோம் என்பதை முன்கூட்டியே திட்டமிட்டு அதன்படி நடப்பது வெயிலில் தேவையின்றி அலைவதைக் குறைக்கும். காலையில் செய்ய முடிகின்ற வேலைகளை வெயிலுக்கு முன்பே செய்யவும் இந்த திட்டமிடல் உதவும்.

வெயில் காலம் என்பது தவிர்க்க முடியாதது. ஆனால் வெயிலினால் வரும் நோய்கள் நிச்சயம் தடுக்கக் கூடியவையே. வெயில் காலத்தில் கவனிக்க வேண்டிய சிறு சிறு விஷயங்களைக் கவனித்து நடந்தால், வெயில் காலம் என்பது அச்சுறுத்தலாக இல்லாமல் அமைதியாகக் கடந்து செல்லும்.

(தமிழ் ஓசை நாளிதழின் இணைப்பான களஞ்சியம் இதழில் வெளியான எனது பழைய கட்டுரை ஒன்று)