கைபேசி: அதிரவைக்கும் இன்னோர் ஆராய்ச்சி !!!

கைப்பேசிகளைக் குறித்து நாள்தோறும் வரும் ஆராய்ச்சி முடிவுகள் எமனை எடுத்து இடுப்பில் சொருகி நடக்கிறோமோ எனும் பயத்தை தருவித்துக் கொண்டிருக்கின்றன என்று தான் சொல்ல வேண்டும்.

இப்போது தாய்மை நிலையிலிருக்கும் பெண்கள் கைப்பேசியை உபயோகிப்பது அவர்களுக்குப் பிறக்கப் போகும் குழந்தைகளுக்கு உணர்வு, மனநிலை ரீதியான பல இன்னல்களை உருவாக்கும் என கண்டறியப்பட்டுள்ளது.

சுமார் 13,000 பெண்களை உட்படுத்தி நடத்தப்பட்ட இந்த சோதனை, கைப்பேசியை தாய்மை நிலையிலிருக்கும் பெண்கள் உபயோகித்தால் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் நன்னடத்தை இல்லாமலும், மற்ற குழந்தைகளோடு உறவாடுவதிலும், நட்பு கொள்வதிலும், இணைந்து வாழ்வதிலும் பல உறவு மற்றும் உணர்வு வகையிலான சிக்கல்களுக்கு ஆளாகும் எனவும் அதிர்ச்சி முடிவுகளை அள்ளி வீசியிருக்கிறது.

தாய்மை நிலையில் இருக்கும் பெண்கள் அளவுக்கு அதிகமாக என்றல்ல அவ்வப்போது கைப்பேசியை உபயோகித்தாலே இத்தகைய இன்னல்களை சந்திக்க வேண்டியிருக்கும் என்கிறது இந்த ஆராய்ச்சி.

ஏழு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கைபேசிகளைத் தரவே கூடாது என அழுத்தம் திருத்தமாய் சொல்லி கைப்பேசிகள் குழந்தைகளிடம் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் என எச்சரித்திருக்கிறது.

ரஷ்யாவின் கதிரியக்க ஆராய்ச்சிக் குழுவினரின் அறிக்கை ஒன்று, குழந்தைகள் கையில் கைப்பேசியைக் கொடுப்பதும் மது புட்டியோ, சிகரெட்டோ கொடுப்பதும் ஒன்றே என கூறி அலற வைக்கிறது.

யூ.கே நலவாழ்வு பாதுகாப்புக் குழு தாய்மார்களின் கைப்பேசி பயன்பாடு குறித்த ஆராய்ச்சி முடிவு பல எச்சரிக்கை மணிகளை அடித்திருப்பதாகவும், கைப்பேசிப் பயன்பாட்டை மறு ஆய்வு செய்வதற்குரிய ஆராய்ச்சியாக உருவெடுத்திருப்பதாகவும் கருத்து தெரிவித்துள்ளது.

குழந்தைகள் கைப்பேசி பயன்படுத்தாதிருப்பது மிகவும் நல்லது என்றும், கைப்பேசியை அதிகம் பயன்படுத்துவது ஆபத்தானது என்றும் பல ஆராய்ச்சிகள் தங்கள் முடிவுகளை ஏற்கனவே வெளியிட்டிருப்பதையும் அது சுட்டிக் காட்டுகிறது.

ஏழு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் கைப்பேசி பயன்படுத்துவது அவர்களுடைய நடவடிக்கைகளில் பல்வேறு விரும்பத்தகாத மாற்றங்களைக் கொண்டு வரும் என்றும், அதற்குக் காரணம் கதிரியக்கமே என்றும் ஆராய்ச்சி தெரிவிக்கிறது.

கைப்பேசி உபயோகிப்பதனால் எந்த கெடுதலும் இல்லை என்று சொல்லி வந்த கலிஃபோர்னியா பல்கலைக்கழக பேராசிரியர் லீகா தற்போது அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டு கைப்பேசிகளுக்கும், உணர்வு ரீதியிலான சிக்கல்களுக்கும் நிச்சயம் தொடர்பு உண்டு என தெரிவிக்கிறார். அவரும் அவருடன் பணியாற்றிய இன்னும் மூன்று பேராசிரியர்களும் இந்த முடிவையே தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.

சில மருத்துவர்களும், உளவியலார்களும் இந்த ஆராய்ச்சி முடிவை வேறோர் கண்ணோட்டத்தில் அணுகுகின்றனர்.

அதாவது, தாயின் கவனத்தையும், கண்காணிப்பையும் கருவிலிருக்கும் குழந்தை எதிர்பார்க்கிறது. அந்த கவனிப்பை கைப்பேசியை அதிகம் பயன்படுத்தும் தாய்மாரால் தர முடிவதில்லை. எனவே அத்தகைய சூழலில் வயிற்றில் வளரும் குழந்தை பிறந்த பின் நன்னடத்தை இல்லாமல் இருக்கும் என்கின்றனர்.

கைப்பேசி என்றல்ல வேறெந்த ஒரு செயலினால் தாயின் கவனம் கருவிலிருக்கும் குழந்தைக்குக் கிடைக்காமல் போனாலும் விளைவு இதுவே என்பதும், இது ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுள்ளது என்பதும் அவர்களின் வாதம்.

விளக்கங்கள் பல்வேறு சொல்லப்பட்டாலும் கைப்பேசியை பயன்படுத்துவதனால் என்ன நேருமோ எனும் அச்சம் இன்னும் கொஞ்சம் அதிகரித்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். கைப்பேசி கதிர்கள் ஒரு சில செண்டீமீட்டர்கள் தூரம் மட்டுமே உடலில் பாய்ந்து பாதிப்பை ஏற்படுத்தும் எனும் சிந்தனை பொய்யாக்கப்பட்டு கருவிலிருக்கும் குழந்தை கூட இதனால் பாதிப்படையும் என்பது ஒட்டு மொத்த மனுக்குலத்துக்கே கவலையளிக்கும் செய்தியாகும்.

நவீனம் என கருதப்பட்டு இன்றைய இன்றியமையாய தேவையாகிப் போன கைப்பேசியை தேவைக்கேற்ப பயன்படுத்துவதே சாலச் சிறந்தது என்பதை இந்த ஆராய்ச்சியும் இன்னோர் முறை அழுத்தம் திருத்தமாய் சொல்லிச் சென்றிருக்கிறது.

பா.ம.க வுக்கு அப்படி என்ன கோபம் தி.மு.க மீது ?

அப்படி என்னதான் ஒரு “மஞ்சள் காமாலை” பார்வையோ பா.ம.க விற்கு தி.மு.க வின் மீது. எதிர் கட்சி பத்திரிகைகளே கொஞ்சம் அடக்கி வாசித்திருக்கும் செய்தியைக் கூட தி.மு.க எதிர்ப்பு அலைக்காகப் பயன்படுத்துகிறது பா.ம.க

இன்று பெரும்பாலான பத்திரிகைகள் “கர்நாடக விஷ சாராயத்தைக் குடித்து மக்கள் சாவு:” என்று செய்தி வெளியிட்டிருக்க கூட்டணி கட்சியாக இருக்கும் பா.ம. க மட்டும் தன்னுடைய தமிழ் ஓசை நாளிதழில் முதல் பக்கத்தில் தி.மு.க வை கடுமையாக விமர்சித்திருக்கிறது

“தமிழக அரசின் மதுவிலக்குக் கொள்கை படுதோல்வி. கள்ளச்சாராயம் குடித்து பலர் பலி” என்பது தான் இன்றைய தமிழ் ஓசை நாளிதழின் முதன்மைச் செய்தி !

கூடவே சிற்சில புள்ளி விவரங்களை ஆங்காங்கே இணைத்து முழுக்க முழுக்க இது தமிழக அரசின் தோல்வி போன்ற தோற்றத்தை பா.ம.க வலிந்து கட்டி எழுதியிருப்பது நிச்சயம் எதிர் கட்சியினருக்கு ஆனந்தத்தை அளித்திருக்கலாம்.

இந்த கழுத்து வலியுடனும் நாளை கலைஞர் ஏதேனும் கருத்துச் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டிருக்கிறார் என்பது தான் உண்மை.

“நாங்கள் கூடவே இருந்து குழி பறிப்போம் – மரம் நடுவதற்காக” என பஞ்ச் டயலாக்கையும் வேறொரு செய்தியில் படிக்க நேர்ந்தது.

என்ன ஒண்ணும் தெரியாத மாதிரி பேசறே தயாநிதி மாறன் ஆதரவாளர்கள், ம.தி.மு.க, வி.சிறுத்தை போன்ற கட்சிகள் எல்லாம் பா.ம.கவுடன் இணையப் போகுதில்லையா அதான் விஷயம் என என் காதில் நண்பர் கிசுகிசுத்தார். அப்படியா ? தயாநிதி மாறனுக்கும் மருத்துவருக்கும் ஆகவே ஆகாதே ? என்றால்.. அரசியல்ல இதெல்லாம் சகஜம் கிறது  கவுண்டமணிக்கே தெரியும், என்கிறார்.

எப்படியோ, ஒரு ஆரோக்கியமான கூட்டணி கட்சியாக தன்னை தைரியத்துடன் காட்டிக் கொள்ளும் வகையில் பா.ம.க தனித்துவம் பெறுகிறது. ஆனால் ஆரோக்கியமான கூட்டணிக் கட்சி என்றால் அரசை எதிர்த்துக் கொண்டே இருக்கவேண்டும் என புதிய விதிமுறையை அது எழுதி ஆளும் கட்சியினரை எரிச்சல் அடையச் செய்திருப்பதும் கவனிக்கத் தக்கதே.

என்ன சொல்ல,
வீடு இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்.

அகரம் இப்போ சிகரம் ஆச்சு ! : ஹீரோவா.. ஜீரோவா ?

 

கில்லி விளையாடிக்கொண்டிருக்கிறான் தெருவோரச் சிறுவன். கில்லி விஜய் வருகிறார். நீ படிச்சா ஹீரோ, படிக்கலேன்னா ஜீரோ என்கிறார்.

பாறை உடைக்கிறான் சிறுவன், சூர்யா வருகிறார். படிச்சா ஹீரோ, இல்லேன்னா ஜீரோ என்கிறார்.

பூ விற்றுக் கொண்டிருக்கிறாள் சிறுமி ஒருத்தி படித்தா ஹீரோ, படிக்கலேன்னா ஜீரோ என்கிறார் ஜோதிகா..

கல்வியறிவு குறித்த விழிப்புணர்வு எனும் நல்ல நோக்கத்தில் எடுக்கப்பட்டுள்ள இந்த குறும்படம் கனமான செய்திகளை பளிச் பளிச் என சொல்கிறது.

கல்வியறிவு குறித்த விழிப்புணர்வுக்காக பல்வேறு வகைகளில், அரசும் அமைப்பும் முயற்சி எடுத்துக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் இந்த குறும்படமும் தனது பங்களிப்பை வழங்க வந்திருக்கிறது.

சமூக ஆர்வமும், சமூகத்துக்கு ஏதேனும் நல்லது செய்ய வேண்டும் எனும் நோக்கமும் கொண்ட இந்த குழுவினரை எத்தனை பாராட்டினாலும் தகும்.

திரைப்படம் ஏற்படுத்தும் தாக்கத்தை வேறு எந்த ஊடகமும் ஏற்படுத்தாது எனும் சூழலில் விஜய், சூர்யா, மாதவன், ஜோதிகா, ஹாரிஸ் ஜெயராஜ், நா.முத்துகுமார், கே.வி ஆனந்த் என மக்களின் ரசனைக்குப் பிரியமான குழுவினர் இந்தப் படத்தை உருவாக்கியிருப்பது இதன் ஆத்மார்த்த தேவை குறித்த புரிதலை வெளிப்படுத்துகிறது. அகரம் இப்போ சிகரம் ஆச்சு !

படம் எடுத்தாயிற்று. இதை வெறுமனே பொதிகையில் மட்டும் அவ்வப்போது காட்டினால் எடுத்த நோக்கமே நிறைவேறாமல் போய் விடும்.

பிரபலமாக இருக்கின்ற தனியார் சானல்களில் இதைப் போன்ற சமூக விழிப்புணர்வு குறும்படங்கள் மற்றும் விளம்பரங்கள் ஒரு குறிப்பிட்ட அளவேனும் தினமும் ஒளிபரப்பப் பட வேண்டும் எனும் நிலையையும் உருவாக்க வேண்டும்.

நல்லெண்ணாம் ஈடேறட்டும், கல்வி வெளிச்சம் இயலாதார் கூரைகளுக்குள்ளும் இளைப்பாறட்டும்.

திரைத் தத்துவம் : ஏழைப் பிள்ளைகளின் கல்வியறிவு பற்றிய குறும்படத்தையும் அட்டகாச ஆடம்பர கன்னிமேராவில் தான் வெளியிட வேண்டியிருக்கிறது 🙂