தாயாகப் போகிறீர்களா ?

நீங்கள் தாயாகப் போகிறீர்களா ? உங்கள் வீட்டு வாசல் கதவை நாளொரு ஆராய்ச்சியும் பொழுதொரு அறிவுரையும் வந்து தட்டுகிறதே என கவலைப்படுகிறீர்களா ? இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

தாய்மை நிலையிலிருக்கும் பெண்கள் மன அழுத்தம் இல்லாமல் இருக்க வேண்டியதன் தேவையை விளக்குவது போல அமைந்திருக்கிறது புதிய ஆராய்ச்சி ஒன்று.

தாய்மை நிலையிலிருக்கும் பெண்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் கருவிலிருக்கும் குழந்தையைப் பாதித்து அந்த குழந்தைக்கு பிற்காலத்தில் ஒவ்வாமை, ஆஸ்த்மா போன்ற நோய்கள் வர வழி செய்யும் என்பதே அந்த ஆராய்ச்சி முடிவு.

தூசு, சுற்றுப்புறம் போன்றவற்றினால் தாய்க்கு ஏற்படும் பாதிப்புகள் குழந்தைக்கு ஒவ்வாமை, ஆஸ்த்மா போன்ற நோய்களை ஏற்படுத்தும் என்பது பழைய ஆராய்ச்சி. இப்போது அத்துடன் மன ரீதியான தாயின் அழுத்தங்களும் குழந்தையின் ஆரோக்கியத்தை சிதைப்பது தெரிய வந்துள்ளது.

அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் நிகழ்த்திய இந்த ஆராய்ச்சி தொப்புள் கொடியில் உள்ள இம்முனோகுளோபுலின் இ – யின் அளவை அடிப்படையாகக் கொண்டது. இது அலர்ஜி, ஆஸ்த்மா போன்ற நோய்களை உருவாக்கும் காரணியாகும்.

மன அழுத்தம் அதிகமாய் உள்ள சூல் கொண்ட பெண்களுக்கு இந்த அளவு தொப்புள் கொடியில் அதிகமாய் காணப்படுகிறதாம்.

தாய்மை நிலையிலிருக்கும் பெண்கள் வீட்டிலும், சமூகத்திலும், பணியிடங்களிலும் தங்கள் மனதை இலகுவாய் வைத்துக் கொள்ள வேண்டியதன் தேவையை இந்த ஆராய்ச்சி தெளிவுபடுத்துகிறது.

அதே வேளையில் தாய்மை நிலையிலிருக்கும் பெண்கள் மன அழுத்தத்துக்குச் செல்லாமல் இருக்கும் வாழ்க்கைச் சூழலை அமைத்துத் தரும் தார்மீகக் கடமையை குடும்பத்தினருக்கு உணர்த்தியும் இருக்கிறது இந்த ஆராய்ச்சி.