புகைப்பதை நிறுத்தினால்….


“அப்பா, புகைப்பதை விட்டு விடுங்களேன்…”

ஐந்து வயது மகள் தந்தையைப் பார்த்துச் சொன்னாள்.

“ஏன் நான் விட்டு விட வேண்டும் ?” தந்தை கேட்டார்.

“நான் வளர்ந்த பின்னும் நீங்கள் என்னோடு இருக்க வேண்டும் என விரும்புகிறேன்” மகள் சொன்னாள்.

அந்த வினாடியில் புகைப்பதை நிறுத்தினார் ரிச்சர்ட் டிக்கி டீன் எனும் அந்த அமெரிக்கத் தந்தை.

புகைத்தல், அதன் தீமைகள் குறித்த ஆராய்ச்சி முடிவுகள் வந்து கொண்டே இருந்தாலும் அதை விடாமல் தொடரும் மக்கள் இருந்து கொண்டே தான் இருக்கிறார்கள்.

புகை பிடிக்கும் நண்பர்களில் ஒருவர் நிறுத்தினால் மற்றவரும் நிறுத்தும் வாய்ப்பு 36 விழுக்காடு அதிகரிக்கும் எனும் உற்சாகமான புதிய ஆராய்ச்சி முடிவு ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் இப்போது வெளியிட்டுள்ளனர்.

புகைக்கும் தம்பதியர்களில் ஒருவர் புகைப்பதை நிறுத்தினால் அடுத்தவரும் நிறுத்தும் வாய்ப்பு 67 விழுக்காடு அதிகரிக்கிறதாம்.

குடும்பத்திலுள்ளவர்கள் புகைத்தலை நிறுத்தும் போது, மற்ற குடும்ப உறுப்பினர்கள் புகைத்தலை நிறுத்தும் வாய்ப்பு 25 விழுக்காடு அதிகரிக்கிறதாம்.

சில சமூக அமைப்புகளில் ஒருவர் புகைப்பதை நிறுத்தினாலே, ஒட்டுமொத்த அமைப்பு உறுப்பினர்களுமே அந்த பழக்கத்தை விட்டு விடும் வாய்ப்பும் இருக்கிறதாம்.

இங்கிலாந்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வு சுமார் முப்பது ஆண்டுகளாக 12,000 நபர்களை உள்ளடக்கிய மிகப்பெரிய ஆய்வு என்பது குறிப்பிடத் தக்கது.

இந்த ஆய்வு புகைக்கும் பழக்கத்தை மக்களிடமிருந்து விலக்க ஒரு புதிய கோணத்தைக் கண்டறிந்திருக்கிறது எனலாம்.

புகைத்தல் எனும் பழக்கம் கூட இருக்கும் சகவயது நண்பர்களின் வசீகர விளம்பரத்தாலும், கண்டிப்பினாலும், நட்பென போதிக்கப்படும் உரிமை வற்புறுத்தல்களாலுமே ஆரம்பமாகின்றன. பின்னர் அவை கிளை விட்டு வேர்விட்டு விலக்க முடியா முள் மரமாக உள்ளத்தில் ஊன்றிப் படற்கிறது.

அந்த பழக்கத்தை விட்டு ஒருவர் விலகுவது ஒரு சமூக நன்மையைத் தருகிறது என்பது இதில் கவனிக்கத் தக்க அம்சமாகும்.
 புகை பிடிப்பதை நான் நிறுத்தினால் என்ன ?  நிறுத்தாவிட்டால் என்ன ? – என்று இனிமேல் யாரும் கேட்க முடியாது. ஏனெனில் , நீங்கள் நிறுத்தினால் உங்களால் இன்னொருவர் அதை விட்டு விடும் வாய்ப்பு இருக்கிறது. அவரால் இன்னொரு நபர் விடுதலை அடைய வாய்ப்பு இருக்கிறது.. இப்படியே இந்த சங்கிலித் தொடர் நீண்டு, ஒருவர் இந்த பழக்கத்தை நிறுத்துவது ஒரு பெரிய மாற்றத்துக்கான விதையாகவே விழுகிறது.

ஒரு சமூக மாற்றத்துக்கான விதையைப் போட புகைப்போர் முன்வருவார்களாக !