வந்து விட்டார் அடுத்த ஜே.கே.ரௌலிங்

இவர் தான் அடுத்த ஜே.கே.ரௌலிங்கர் என்கிறார்கள் பத்தொன்பதே வயதான கேத்தரின் பேனர் பற்றி. அவருடைய முதல் புத்தகமான “த ஐஸ் ஆஃப் எ கிங்” இப்போது வெளி வந்து வாசகர்களை வசீகரிக்க ஆரம்பித்திருக்கிறது.

நிஜ உலகிற்கும், கற்பனை உலகுக்கும் இடையே நடக்கும் வழக்கமான ஆங்கில கதை தான் இதுவும் எனினும் இதில் ஆசிரியரின் கற்பனை சிறுவர்களையும், பதின்வயதினரையில் சட்டென வசீகரிக்கும் விதத்தின் அமைந்திருக்கிறதாம்.

பதினான்கு வயதில் இந்த நாவலை எழுத ஆரம்பித்ததாகச் சொல்லும் கேத்தரின், பள்ளி நாட்களில் புத்தகங்களின் பின்னால் சில வரிகள், கற்பனைகளை எழுதி வைத்ததையும், மாலை நேரங்கள், வார இறுதிகள் என கதைகள் எழுதி அவற்றை புத்தகம் போல கட்டி மகிழ்ந்ததையும் நினைவு கூருகிறார்.

பெரிய பதிப்பகத்துடன் தொழில் ஒப்பந்தம் போட்டுள்ள இவர் தன்னுடைய நூல் வெளி வரும் என்பதை கனவில் கூட நினைத்துப் பார்க்கவில்லை என சொல்லிச் சொல்லி வியக்கிறார்.

இந்த எழுத்தாளரை நாம் சாதாரணமாக எடை போடக் கூடாது, இவருடைய எழுத்துக்கள் இவர் தான் அடுத்த ரௌலிங்கர் என்பதை அப்பட்டமாய் விளக்குகின்றன என ரசிக்கின்றனர், பதிப்பகத்தார்.

பக்கத்துக்கு பக்கம் விறுவிறுப்பாய் நகரும் இந்த நாவல் வெளியாகும் இந்த நேரத்தில் இன்னொரு நூலையும் எழுதி முடித்திருக்கிறாராம். முதல் நாவல் வெளியான உடனேயே பெஸ்ட் செல்லர் வரிசையிலும் இடம் பிடித்திருக்கிறதாம்.

இந்த நாவல் விரைவில் திரைப்படமாகவும் தயாராகப் போகிறது என்பது கூடுதல் செய்தி.

இன்னும் சில ஆண்டுகளில் பல மில்லியன்களுக்குச் சொந்தமாகப் போகும் இந்த இளம் பெண்ணின் விழிகளில் மிதக்கின்றன கற்பனை உலகங்களும், மாய மனிதர்களும்.

பொறுப்பற்ற பெட்ரோல் பங்க்கள்.

 

நேற்று இரவு அலுவலகப் பணியை முடித்துவிட்டு ஒருவழியாக இரவு பத்து மணிக்கு காரில் கிளம்பினேன். கொஞ்ச நேரத்திலேயே காரின் உள்ளே மஞ்சள் விளக்கு பல்லிளித்தது. அடக்கடவுளே பெட்ரோல் தீர்ந்து விட்டது.

பரவாயில்லை. குரோம்பேட்டையிலிருந்து வேளச்சேரி செல்வதற்குள் குறைந்தபட்சம் பத்து பெட்ரோல் பங்க் கள் இருக்கின்றன எங்காவது ஒரு இடத்தில் பெட்ரோலை நிரப்பிக் கொள்ளலாம் என நினைத்துக் கொண்டே காரை ஓட்டினேன்.

குரோம்பேட்டை பக்கத்திலுள்ள பெட்ரோல் பங்க் வாசலில் ஒரு பெரிய ட்ரம் கயிறுகளுடன் கட்டப்பட்டிருந்தது. “ஸ்டாக் தீந்து போச்சு சார்” பதில் வந்தது.

அடுத்த இடத்தில் விளக்கையும் அணைத்து விட்டிருந்தார்கள்.

இதே நிலை தான் வேளச்சேரி வரை. எல்லா பெட்ரோல் பங்க்களும் இரவு பத்து மணிக்கே மூடப்பட்டு, வழி அடைக்கப்பட்டு இருட்டுக்குள் கிடந்தன.

காரணம் நள்ளிரவுக்கு மேல் விலையை ஐந்து ரூபாய் ஏற்றிக் கொள்ளலாம் எனும் அறிவிப்பு.

நண்பனுக்கு தொலைபேசினேன், மவுண்ட் ரோடு பக்கம் ஏதாவது பெட்ரோல் பங்க் திறந்திருந்ததா என அறிந்து கொள்ள. “எல்லாம் சாயங்காலமே மூட ஆரம்பிச்சுட்டாங்க” என்றான் அவன்.

எரிச்சலும், கோபமும், வழியில் வண்டி நின்று விடக் கூடாதே எனும் பயமுமாக வீடு வந்து சேர்வதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது.

நள்ளிரவு பன்னிரண்டு மணி முதல் – என்று ஏன் பெட்ரோல் விலை உயர்வு வருகிறது என்பது புரியவே இல்லை. அதனால் ஏற்படும் அவஸ்தைகளுக்கு அளவே இல்லை.

மிக அவசரமாக மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் வாகனம் நின்றிருந்தால் என்ன செய்திருக்க முடியும் என்று நினைத்துப் பார்க்க முடியவில்லை.

11.59 வரை ஸ்டாக் இல்லாத பெட்ரோல் பங்க் கள் 12.00 மணிக்கு எப்படி சட்டென திறந்து கொள்கின்றன ? ஸ்டாக் எங்கிருந்து வருகிறது என்பதெல்லாம் பூச்சாண்டிக் கதைகள் என்பதை மழலைகளே விளக்கும்.

விலையை உயர்த்தி சட்டமியற்றும் அரசு, நள்ளிரவு நேரம் வரை கடைகளை மூடக்கூடாது என்று சட்டம் இயற்ற முடியாதா ? அல்லது தேவையில்லாமல் இரண்டு மூன்று மணி நேரம் ஒட்டு மொத்தக் கடைகளையும் அடைத்து சமூகத் தேவையை மதிக்காத இந்த பங்க்களை என்ன செய்வது ?

இந்த சில மணி நேர லாபத்துக்கே இப்படிச் செய்பவர்களை நினைக்கும்போது ஒன்று சட்டென மனதில் தோன்றியது. தனியார் மயம் எத்தனை கொடுமையானது ? வெறும் லாபத்தை மட்டுமே கருத்தில் கொண்டு இயங்கும் இவர்களிடம் ஒரு உதாரணத்துக்காக போக்குவரத்தை ஒப்படைப்பதாய் வைத்துக் கொண்டால், நெரிசல் நேரங்களில் மட்டுமே பஸ் ஓடும். காலையில், இரவில், மதிய நேரங்களில் ஆட்கள் நடமாட்டம் குறைந்தால் பஸ் ஓடாது இல்லையா ?

செய்தித் தாளில் திருத்தப்பட்ட பெட்ரோல் விலை என்று ஒரு விலை போட்டிருந்தார்கள். காலையில் பெட்ரோல் நிரப்பியபோது வேறோர் விலையில் இருந்தது.

அதிலும் ஸ்பீட், பவர், சக்திமான் என்றெல்லாம் பெயரிட்டழைக்கும் பெட்ரோல் லிட்டர் 60 ரூபாயையும் தாண்டி !!! இதுக்கெல்லாம் என்ன நிர்ணயம் என்பது விளங்கவில்லை. 52 ரூபாய்க்கு விற்ற பவர் பெட்ரோல் 60 ரூபாய் எனில் 8 ரூபாய் விலையேற்றம். அது அனுமதிக்கப்பட்டது தானா ? அதுக்கு 5 ரூபாய் விலையேற்றம் பொருந்தாதா ? என்பதெல்லாம் ஒரு சாமான்யனின் விடை தெரியாத கேள்விகள்.

ஆண்களின் சிந்தனையும், பெண்களின் சிந்தனையும் !


“ அடக்கடவுளே !!! இந்த ஒரு சேலையை எடுக்கவா இத்தனை மணி நேரம்” என்று சலித்துக் கொள்ளும் கணவன்களின் குரல்களால் நிரம்பி வழியும் எல்லா துணிக்கடை வாசல்களும்.

“ஐயோ, உன் கூட துணி எடுக்க வந்தால் ஒரு நாள் போயே போச்சு…” என்று மனைவியிடம் புலம்பாத ஆண்கள் இருக்க முடியுமா என்ன ?.

இதற்கெல்லாம் இனிமேல் பெண்களைக் குற்றம் சொல்லாதீங்க. ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையேயான ரசனை வேறுபாடுகள் அவர்களுக்கு இயற்கையிலேயே அமைந்த ஒன்று என்கிறார். பென்சில்வேனியாவைச் சேர்ந்த உளவியலார் ஒருவர்.

ஆண்கள் சட்டென ஒரு துணிக்கடையில் நுழைந்து தேவையானதை எடுத்துக் கொண்டு அரை மணி நேரத்தில் வெளியே வந்து சட்டென நடையைக் கட்டி விடுகிறார்கள். ஆனால் பெண்கள் அப்படியல்லவே. ஐந்தாவது மாடியில் தான் தேவையான பொருள் கிடைக்கிறது என்றால் அந்த மாடிக்கே கடைசியில் தான் போவார்கள்.

ஆண்கள் அரைமணி நேரத்தில் வாங்கிய பொருட்களுடன் திருப்தியடைந்து விடுகிறார்கள். ஆனால் பெண்களோ அத்தனை மணி நேரம் சுற்றி வாங்கி வந்த பொருளைக் கூட முழுமையாய் விரும்பாமல், இன்னும் கொஞ்சம் நல்லதாய் வாங்கியிருக்கலாம் என்றே நினைக்கிறார்கள்.

பல வேளைகளில் வாங்கச் சென்ற ஒரு பொருளை வாங்காமல் நான்கு பை நிறைய பொருட்களை அள்ளிக் கொண்டு வருவதும் நடந்து விடுகிறது.

காரணம் ஆண்களுடைய மனம் ஒரு செயலை உள்ளுக்குள் உறுதிப் படுத்திக் கொண்டு சட்டென சென்று முடித்துவிட்டு வரும் கொள்கை வகையைச் சார்ந்ததாம்.

ஆண்கள் மனம் முடிவை மையமாய் கொண்டு இயங்குவது போல, பெண்கள் மனம் பார்வை சார்ந்து இயங்குகின்றது. அவர்களுக்கு சுற்றுப்புறத்தை நன்றாகப் பார்த்து, கடையை அலசி, பல கடைகளில் அந்த பொருட்களைப் பார்த்த பின்பே முடிவு ஏற்படுகிறதாம். அவர்கள் அந்த முடிவை எடுப்பதற்கே நிறைய நேரம் பிடிப்பதால் தான் அதிக நேரத்தைக் கடைகளில் செலவிடுகின்றனராம்.

ஒரு செயலைச் செய்ய வேண்டுமெனில் ஆண்கள் சட்டென அதை செய்து விடுவதும், பெண்களோ தங்கள் பெற்றோர், நண்பர்கள், தெரிந்தவர்கள் என பலரிடம் விசாரித்து விட்டே செயல்களில் இறங்குவதும் இத்தகைய இயல்பு சார்ந்ததே.

ஆண்களும் பெண்களும் வாங்கும் புத்தகங்களில் கூட பல உளவியல் கூறுகள் இருக்கின்றன. குறிப்பாக ஆண்களை வசீகரிக்க ஒரு கவர்ச்சிப் படமே போதும். பெண்களுக்கோ நல்ல இலட்சியவாதிகளான, உயர்ந்த கொள்கைகளை உடைய, வாழ்வில் வெற்றி பெற்ற பெண்கள் வேண்டும்.

காரணம், ஆண்களுடைய சிந்தனை அட்டைப் படத்தில் அழகிய ஒரு பெண்ணைக் கண்டவுடன்

“எனக்கு அவள் வேண்டும்” என விரிகிறதாம்.

பெண்களுடைய சிந்தனையோ, “அவளைப் போல ஆக வேண்டும்”  என விரிகிறதாம்.

எனவே தான் ஆண்கள் பெரும்பாலும் பாலியல் பலவீனங்களுடனும், பெண்கள் உறுதியான தெளிவான கொள்கைகளுடனும் வாழ்கின்றனர். என்கின்றார் அந்த உளவியலார்.

சமீபகாலமாக கடைகளில் அளவுக்கு அதிகமாகவே சுற்றித் திரியும் ஆண்களைப் பற்றி உளவியலார்கள் என்ன சொல்லப் போகிறார்களோ ?