அப்பாடா ! பா.ம.க விரும்பியது நடந்தது !

பா.ம.க விரும்பியபடியே நடந்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். தி.மு.க கூட்டணியிலிருந்து தற்போது விலக்கப்பட்டிருக்கிறது.

எப்படியாவது எப்பாடுபட்டாவது வெளியே வந்தே ஆகவேண்டும் எனும் எண்ணம் ஏன் மருத்துவருக்கு உதித்தது என்பது அவருக்கே வெளிச்சம், அதுவும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னே !!

2011 ல் நான் தான் முதல்வர் என்று சின்ன பிள்ளைகள் விஜயகாந்த், சரத் மாதிரி ஆசை ஆசையா அப்பளம் சுட்டு கலைஞருக்கே அனுப்பி வைத்ததில் ஆரம்பித்தது இந்த விலகல் புராணம்.

முரசொலி மாறனுடன் இணைந்து கொண்டு, மதிமுக மற்றும் இன்னபிற நக்கா பிச்சா கட்சிகளை ஒருங்கிணைத்து ஒரு புதிய கட்சிக்கு அடிகோலுகிறார் என்று தகவல்கள் கசிந்து திமுகவை மேலும் எரிச்சலுக்குள் இழுத்தது. காதுக்குள் ரீங்காரமிடும் கொசுபோல அவஸ்தை கலைஞருக்கு.

எல்லா விஷயங்களையும் கண்மூடித் தனமாக எதிர்ப்பதன் மூலம் தான் கூடவே இருந்தாலும் கூட்டணியை துச்சமென மதிக்கும் மக்கள் தலைவன் என தன்னைக் காட்டிக் கொள்ள முயன்று கொண்டிருந்தது சமீபகாலமாக உச்சத்துக்கே சென்றுவிட்டது.

ஆந்திராவில் தயாரான விஷ சாராய புராணத்தை முழுதும் தமிழகத்திலேயே தயாரானது போலவும், கலைஞரின் மதுவிலக்குக் கொள்கை படுதோல்வி என்றும் தமிழோசையில் முதல் செய்தியாக வெளியிட்டு உரசலை ஊர்ஜிதப்படுத்திக் கொண்டது பாமக தான்.

இத்தனை ஆண்டு இல்லாத பிரச்சனை, அது இது, புள்ளி விவரம், விலைவாசி, எங்கே தமிழ் இருக்கிறது என்றெல்லாம் தமிழோசையை திமுக எதிர்ப்பு அறிக்கைகளை வெளியிடவே பயன்படுத்தி வந்தார்களோ எனுமளவுக்கு ஒரே அரசியல் அம்புகள்.

இப்போது காடுவெட்டி குரு ! இது பழைய சமாச்சாரம், இதை ஏன் கலைஞர் இப்போது கையில் எடுக்க வேண்டும் என மருத்துவர் நேற்றும் இன்றும் தமிழோசையில் வீரமாக முழங்கிக் கொண்டிருக்கிறார். எனினும் கா.வெ.குரு சொன்னதற்காக தலைவர் என்னும் முறையில் வருத்தம் தெரிவிக்கவில்லை. மாறாக பா.ம.க செயற்குழுவில் தான் அப்படிப் பேசப்பட்டது என்றார். அப்படியெனில் செயற்குழுவில் அப்படிப் பேசுவது சகஜமப்பா என திமுகவை உசுப்புவது போல் இருக்கிறதல்லவா ?

கச்சா எண்ணையின் விலை 139 டாலர்களாம் இப்போது. இன்னும் பதினெட்டு மாதங்களில் அது 250 டாலர்களை எட்டிப் பிடிக்குமாம். எனில் விலைவாசியும், பெட்ரோல் விலையும் இன்னும் பல மடங்கு உயரும் எனும் அச்சம் உலக அளவில் நிலவுகிறது. இதைப்பற்றியெல்லாம் ஒன்றுமே தெரியாதவர் போல எல்லா நிகழ்வுகளுக்கும், அரசியல் மாற்றங்களுக்கும் சர்வரோக நிவாரணி போல தன்னைக் காட்டிக் கொள்ளவே முயன்று கொண்டிருக்கிறார் மருத்துவர்.

எதற்கேனும் மாற்றுக் கருத்து சொன்னாரா என்பது அவருக்கே வெளிச்சம். சும்மா எதிர்ப்பது வேடிக்கை பார்ப்பவன் வேலை, சரியான மாற்று வழிகளுடன் எதிர்ப்பதே ஆரோக்கியமான எதிர்கட்சியின் வேலையாக இருக்கவேண்டும்.

தன்னைத் தூய்மையாய் காட்டிக் கொள்ளும் பா.ம.க இன்னும் தனது ஊடகங்களில் சாதி சார்ந்த முன்னுரிமையையே வழங்கிக் கொண்டிருக்கிறது என்னும் உண்மை உலகம் அறியும்.

கலைஞர் எப்போதுமே அமைதியாய் இருந்து, யாரேனும் விலகினால் அந்தப் பழி தன் மேல் விழாதவாறு தந்திரமாய் நடந்து கொள்வதுண்டு.

இத்தனை அவமானமாய் பேசிய காடு வெட்டியை மருத்துவர் கண்டிக்கவில்லையே என உள்ளம் உருகி, கண்ணீர் வடித்து கூட்டணியைக் கலைத்ததன் மூலம் இப்போதும் அப்படியே செய்திருக்கிறார்.

தி.மு.க எதையும் இழக்குமென்று தோன்றவில்லை.
சம்பந்தி காங்கிரஸ் இருக்கும் வரை அன்புமணி பதவிக்கு ஆபத்து வருமென்றும் தோன்றவில்லை.
ஆனால், பா.ம.க இனிமேல் முன்வைக்கும் எதிர்ப்புகளெல்லாம் முன்பு போல் ஏற்றுக் கொள்ளப்படுமா என்பதே கேள்வி.

எல்லாம் அரசியல், உள்ளுக்குள்ளே என்னென்ன இருக்கோ ? யாருக்குத் தெரியும்.