தசாவதாரம் : பர்தாப் பெண்ணின் வெட்கம் !

உலக வரலாற்றில் பத்து வேடங்களில் முதன் முறையாக நமது கமலஹாசன் நடித்திருக்கும் தசாவதாரம் திரைப்படம் கமலின் கலை உழைப்புக்குக் கிடைத்திருக்கும் வரம் என்றே கொள்ள வேண்டும்.

கிறிஸ்தவமும், இஸ்லாமும் இந்தியாவுக்குள்ளும் அதன் அரசியலுக்குள்ளும் நுழையாத பன்னிரண்டாம் நூற்றாண்டில் எனும் கணீர் குரலுடன் ஆரம்பிக்கிறது திரைப்படம். எனினும், முதலாம் நூற்றாண்டிலேயே கிறிஸ்தவம் புனித தோமையார் மூலம் இந்தியாவுக்குள் நுழைந்தது என்பதே கிறிஸ்தவ வரலாறுகள் கூறும் உண்மை. எப்படியோ… அதற்கும் தசாவதாரத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

படம் ஆரம்பிக்கும் சில நிமிடங்களிலேயே கதாபாத்திரங்களைக் காட்டி சட்டென பன்னிரண்டாம் நூற்றாண்டுக்குள் தாவி, அங்கிருந்து அமெரிக்கா, தமிழகம் என கதை பயணிக்கும்  போது குழப்பாமல் சம்பவங்களின் அழுத்தம் கெடாமல், வீரியம் கெடாமல், தனது தியரிகளைக் கலைக்காமல், புதுப் புதுக் கதாபாத்திரங்களைக் கதையில் நுழைத்துக் கொண்டே வரும் கமலில் திரைக்கதை வியக்க வைக்கிறது.

தசாவதாரம் குறித்து எல்லோருமே எழுதி சலித்து விட்டாலும் என் பங்குக்கு நானும் என்னைக் கவர்ந்த அம்சங்களைச் சொல்லிவிடுகிறேன்.

முதலாவது, கமலின் சிரத்தை. எப்போதுமே தனது அசைவுகளின் மூலம் முக்கால் வாசி பேசிவிட்டு, வார்த்தைகளின் மூலம் கால்வாசி பேசுவதே கமலில் வழக்கம். அதையே இதிலும் செய்திருக்கிறார். குறிப்பாக அமெரிக்கக் கமலின் ஆங்கில உச்சரிப்பும், ஹாலிவுட் நடிகர்களின் அலட்சியப் பார்வையும், அவர்கள் பயன்படுத்தும் வாக்கியங்களும் ஒருபுறம் மிகுந்த கவனத்துடன் அடுக்கப்பட்டிருக்க,

இன்னொரு புறம் வின்செண்ட் பூவராகன் நடை, உடை, நிறம், உச்சரிப்பு என வியக்க வைக்கிறார். சற்றே மிகைப்படுத்தப்பட்ட “மக்களே” வசன உச்சரிப்பே அவருடையது எனினும் “தீட்டத்தில் நெழியும் புழுக்கள்” என்பன போன்ற வசனங்கள் பூவராகனின் உழைப்பில் தினமும் ஒலிக்கும் குரல். எந்தத் திரைப்படமும் பதிவு செய்யாத, செய்ய விரும்பாத வசனங்கள்.

அமெரிக்க ஜார்ஜ் புஷ் கதாபாத்திரத்தை அவருடைய குணாதிசயங்களோடே எடுத்திருப்பது நகைச்சுவையோடு சேர்ந்து கமலில் பார்வையை தெளிவாக்கியிருக்கிறது. குறிப்பாக மேடையில் நடக்கும் புஷ் ( சமீபத்தில் வீரர் ஒருவருடன் நெஞ்சோடு நெஞ்சு குதித்து மோதி வேடிக்கை காட்டிய நிகழ்ச்சியை நினைவூட்டுகிறார் ) , என்ன அது என்.ஏ.சி.எல், அது மேல அணுகுண்டு போடலாமா போன்ற நிகழ்ச்சிகள்.

பாட்டியின் கதாபாத்திரத்தில் மனநிலை பாதித்தும், பாதிக்காமலும் இருக்கும் கமலின் நடிப்பு அவருக்கு மட்டுமே உரித்தானது.

நாயுடு அசத்துகிறார். நாயுடு மட்டும் இல்லையென்றால் சாமான்ய கமல் ரசிகர்களுக்கு விருந்து இல்லாமலேயே போயிருக்கக் கூடும். தெலுங்கனைக் கண்டுவிட்டால் பார்வையில் நுழைக்கும் பரிவும், “அப்பாராவா “ எனக் கேட்கும் போது ஒலிக்கும் தெலுங்கு தனமும், “மடத்திலே தப்பு நடக்காதா” எனக் கேட்கும்போது அவருடைய உடலசைவும் என வியக்க வைக்கிறார் நாயுடு.

கடவுளுக்காக உறவுகளை துச்சமென தூக்கி எறிந்து இறந்து போகும் கமல் சிலிர்ப்பூட்டுகையில், உறவுகளுக்காக தனக்குக் கடவுள் போல இருக்கும் இசையை தூக்கி எறிய முன்வரும் சர்தார் கமல் விழியோரங்களைத் துளிர்க்க வைக்கிறார்.

இந்தத் திரைக்கதையை இன்னும் சிக்கலாக கடைசிப் புள்ளியில் இணைவது போல ( அதாவது பாபேல் எனும் ஆங்கிலப்படம் போல ) உருவாக்கியிருக்க முடியும். எனினும் இந்த அளவுக்கு நேர்கோட்டில் அவர் திரைக்கதையை உருவாக்கியிருப்பதற்கு கே.எஸ்.ரவிகுமார் ஒரு காரணகர்த்தாவாக இருக்கக் கூடும் எனும் எண்ணத்தைத் தவிர்க்க முடியவில்லை.

கமலுடன் இணைந்து வியக்க வைக்கும் நடிப்பு அசினுடையது. பிசின் போல சிலையுடனும், கமலுடனும் ஒட்டிக் கொண்டே இருக்கும் அசின் கமலுடன் இணைந்ததாலோ என்னவோ நடிப்பின் இன்னோர் அத்தியாயத்துக்குள் நுழைந்திருக்கிறார். இனிமேல் விஜயுடன் டூயட் பாடும்போது சற்றே உறுத்தக் கூடும் அவருக்கு, நடிக்காமல் காசு வாங்குகிறோமே என்று.

கடைசிக் காட்சிகளில் சுனாமி பீறிட்டெழும்போது கிராபிக்ஸும், இசையும், ஒளிப்பதிவும் போட்டி போட துயரங்களை மீண்டும் ஒருமுறை அள்ளிக்கொண்டு வந்து மனதுக்குள் கொட்டுகிறது திரைப்படம்.

தசாவதாரம் படத்தில் முதல் பத்து நிமிடங்கள் கமல் விரைவில் மருதநாயகம் எடுப்பார் எனும் நம்பிக்கையை வலுப்படுத்தியிருக்கிறது. அப்போதேனும் அவர் நெப்போலியனை தமிழ் பேச அழைக்காதிருப்பாராக.

கமலுக்கு ஒரு விசேஷ குணம் உண்டு. தன்னுடைய முகத்தின் ஒவ்வோர் அணுக்களையும் நடிக்க வைக்கும் திறமை அவருக்குக் கைவந்த கலை. ஆனால் இந்தத் திரைப்படத்தில் எல்லா கதாபாத்திரங்களுமே முகத்தில் முகமூடி போட்டுக் கொண்டு நடிப்பதால் முகத்தில் கண்கள் மட்டுமே நடிக்க முடியும் எனும் நிலை உருவாகியிருக்கிறது.

கண்களில் மட்டுமே மின்னி மறையும் பர்தாப் பெண்ணின் வெட்கம் போல, கமலில் நடிப்பையும் பல வேளைகளில் கண்களை மட்டுமே வைத்து கண்டு கொள்ள வேண்டியிருப்பதே குறையெனப் படுகிறது.

விறுவிறுப்பான படம் பார்க்க விரும்பும் ரசிகர்களுக்கு இது ஒரு வேகமான திரைப்படம். அறிவு ஜீவி ரசிகர்களுக்கு கேயாஸ் தியரி மற்றும் பட்டர்ஃபிளை தியரி.