காபி குடிங்க.. ஆனா அதுக்கு முன்னாடி….

 

காலையிலே ஒரு கப் காஃபி குடிக்கலேன்னா என்னால வேலை எதுவுமே செய்ய முடியாது என்று சொல்லும் ஆசாமியா நீங்கள், உங்களுக்காகவே வந்திருக்கிறது புதிய ஆராய்ச்சி முடிவு ஒன்று.

 

அதாவது நீங்கள் குடிக்கும் காஃபியை விட அந்த காப்பியின் மணத்தில் தான் உங்கள் சோர்வை அகற்றும் வித்தையே இருக்கிறதாம்.

 

ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் காஃபியைக் குறித்து நிகழ்த்திய ஆராய்சியில் இந்த முடிவு எட்டப்பட்டிருக்கிறது. எலிகளை வைத்து அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட இந்த ஆய்வு காப்பியின் மணம் எலிகளின் மூளையில் ஏற்படுத்தும் மாற்றங்களைப் பதிவு செய்திருக்கிறது.

 

இந்த ஆராய்ச்சிக்குத் தலைமை வகித்த “யோஸினாரி மாசே  இந்த ஆராய்ச்சி குறித்து குறிப்பிடுகையில் இந்த ஆராய்ச்சி எதிர்காலத்தில் மாபெரும் விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என்றார்.

 

அதாவது காப்பியில் இருக்கும் காஃபைன் உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது, ஆனால் காஃபியின் மணம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வாய்ப்பு குறைவு. எனவே எதிர்காலத்தில் மக்கள் காப்பிக்குப் பதிலாக காலையில் காஃபியின் மணத்தை மட்டுமே நுகர்ந்து உற்சாகமடையலாம்.

 

அலுவலகங்களில் சோர்வை அகற்ற காஃபி குடிப்பதற்குப் பதிலாய் அவ்வப்போது காஃபியின் மணத்தை அலுவலகத்தில் மிதக்க விடலாம் என்றெல்லாம் தனது கற்பனைச் சிறகை விரித்தார்.

 

இனிமேல் காஃபி குடிக்கும் முன் சற்று நேரம் அதன் மணத்தை நிதானமாய் நுகர்ந்து விட்டு குடியுங்கள். ஏனெனில் எதிர்காலத்தில் காப்பியை நுகரவும் காசு வசூலிக்கப்படலாம் !