பாட்டி கேட்டா சிரிப்பாங்க …

நெதர்லாந்து ஆராய்ச்சியாளர்கள் ஒரு புதிய ஆராய்ச்சி முடிவை வெளியிட்டுள்ளனர். அதாவது நமது வாயிலுள்ள உமிழ் நீருக்குக் காயங்களை ஆற்றும் சக்தி இருக்கிறது என்பதே அது.

இதைத் தெரிந்து கொள்ள நெதர்லாந்து ஆராய்ச்சியாளர்கள் வரை போகவேண்டிய அவசியம் இல்லை என்பது உங்களுக்கும் எனக்கும் தெரியும். காரணம் இயல்பிலேயே மருத்துவத்தில் மகத்துவம் வாய்ந்த நமது பாட்டிகள், தாத்தாக்கள். காயம் பட்ட இடத்தில் சட்டென உமிழ் நீர் தொட்டு வைக்கும் மருத்துவர்கள் அல்லவா அவர்கள்.

சரி, பாட்டி தாத்தத இல்லேன்னா பரவாயில்லை. உங்க வீட்டு நாய்க்குட்டிக்கு ஒரு சின்ன காயம் பட்டா என்ன செய்யும். அது உமிழ்நீரால் அந்தக் காயத்தை நக்கி ஈரப்படுத்திக் கொண்டே இருக்கும் தானே. அதற்குத் தெரிந்த மருத்துவம் இப்போது தான் நெதர்லாந்து வாசிகளுக்குத் தெரிந்திருக்கிறது.

வாயில் ஏற்படும் புண் விரைவில் ஆறுவதற்கான காரணத்தை நாங்கள் விளக்கியுள்ளோம் என பீற்றிக் கொள்கின்றனர் நமது வைத்திய தேசத்தின் வலிமை அறியாதவர்கள்.

இனி என்ன, உமிழ்நீரில் இருக்கக் கூடிய ஹிஸ்டெயின் எனும் பொருளைப் பிரித்தெடுத்து அதன் தன்மையில் மருந்து தயாரிப்பார்களாம், நாமும் மறக்காமல் வெளிநாட்டிலிருந்து அதை இறக்குமதி செய்து பயன்படுத்துவோம். பேடெண்ட் நெதர்லாந்துக்கு போட்டுக் கொண்டு.

இன்னொன்று நினைவுக்கு வருகிறது, கல்லில் கால் இடித்து காயம் ஏற்பட்டால் அந்தக் காயத்தின் மீது சிறுநீர் கழிக்கும் வழக்கம் இன்னும் கிராமங்களில் உண்டு. அதை எந்த நாட்டுக்காரன் ஆராய்ந்து ஒரு புதிய கண்டுபிடிப்பாக வெளியிடப் போகிறானோ தெரியலையே

பின் குறிப்பு : படத்தைப் பார்த்து ரொம்ப ஜொள்ளு விடாதீங்க, அது மருந்து ! அருமருந்து.

அலசல் : எனது புதிய நூல்

எண்ணிக்கைக் கணக்கில் இது எனது பதினோராவது புத்தகம் எனினும், இதுவே எனது முதல் கட்டுரைத் தொகுப்பு என்பதில் மனதில் சிறப்பிடம் பெறுகிறது.

வாய்ப்பு இருந்தால் வாசித்துப் பாருங்கள்.
வாசித்தால் விமர்சனம் தாருங்கள்

அன்புடன்
சேவியர்

அருவி வெளியீடு
9444302967
பக்கங்கள் 128
விலை  : 70/-
  

 

சுந்தரபுத்தன் அவர்கள் இந்த நூலுக்காக அளித்த பின்னுரை

சேவியரின் வார்த்தைகளுக்குச் சிறகுகள் முளைத்து விடுகின்றன. சில நேரங்களில் அந்தச் சிறகுகள் நம்மை பறவைகளாக்கி விடுகின்றன.

ஏற்கனவே கவிஞராய் அறியப்பட்ட சேவியர், ஒரு தேர்ந்த கட்டுரையாளராய் வெற்றி கண்டிருக்கிறார். தற்கால தமிழ் உரைநடை எழுத்தில் நட்சத்திரமென மின்னுகிறார் அவர்.

போதை, குழந்தைகள், மீடியா, மன அழுத்தம், கணினி என ஒன்றுக்கொன்று தொடர்பற்ற விஷயங்களை அதன் ஆழம் கண்டு எழுதியிருக்கிறார்.

ஒற்றை முத்தெடுக்க முக்கடலிலும் மூழ்க சம்மதம் கொண்ட சேவியரின் இந்நூல் ஒரு கட்டுரைத் தொகுப்பு தான். ஆனால், அதனுள்ளே உண்மையின் சல்லி வேர்கள் ஊடாடிக் கிடக்கின்றன.

இவை கற்பனையின் விளைச்சல்கள் அல்ல. கருத்துருக்கள். எதுகுறித்தும் மெய்ப்பொருள் காண விழையும் இவர் ஒரு மென்பொருள் பொறியாளர். எளிமையான இவரது எழுத்து உங்கள் சிந்தனைத் தளத்தை ஒரு படி உயரே வைக்கும்.

அருவியின் பெருமை மிகு வெளியீடுகளில் இதுவும் ஒன்று. இங்கே அவர் உழவுக்கு வைத்திருந்த விதை நெல்லை உண்ணக் கொடுத்திருக்கிறார்.

– சுந்தரபுத்தன்.

இந்த நூலுக்கு நான் எழுதிய முன்னுரை

வேர்களைத் தேடி
 

‘உன் தாத்தாவின் தாத்தா பெயர் தெரியுமா ? ‘ என்னும் வினாவோடு ஒருமுறை என்னை அணுகினார் நண்பர் ஒருவர். தாத்தாவின் தந்தை பெயரைத் தாண்டி எனக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை என்பதே அப்போது தான் எனக்கு உறைத்தது   . நன்றாகத் தெரியும் என்று நாம் நினைக்கும் பல விஷயங்களில் போதிய அறிவு நமக்கு இருப்பதில்லை என்பதை உணர்த்துவதாக இருந்தது அது.

நாம் பணிசெய்யும் துறை சார்ந்த விஷயங்களோ, நாம் வசிக்கும் இடம் சார்ந்த விஷயங்களோ, நாம் பயன்படுத்தும் பொருள் சார்ந்த விஷயங்களோ அல்லது நாம் கலந்து கொள்ளும் விழா சார்ந்த விஷயங்களோ எதை எடுத்துக் கொண்டாலும் நமக்குத் தெரியாத வரலாற்று வேர்கள் அவற்றுக்குள் மறைந்து கிடக்கின்றன.

அகழ்வாராய்ச்சியில் கிடைக்கும் தகவல்களின் சிலிர்ப்பு போல பல பொருட்களின் பூர்வீகம் சிலிர்க்க வைக்கிறது. எல்லைகள் வகுத்துக் கொள்ளாமல் ஒரு சர்வதேசக் கண்ணோட்டத்தில் அணுகுகையில் இந்த சிலிர்ப்பு இன்னும் விரிவடைகிறது.

அந்த சிலிர்ப்பின் அனுபவத்தைக் கொண்டு அறிவின் வெளிச்சத்தை விரிவுபடுத்தும் கட்டுரைகளை இந்த நூலில் நீங்கள் காண முடியும் என்னும் நம்பிக்கை எனக்கு உணடு.

தெரிந்த பொருட்கள் தெரியாத தகவல்கள் என்னும் கண்ணோட்டத்தில் அணுகி எழுதப்பட்ட கட்டுரைகளே இதில் பெரும்பாலானவை. தமிழ் ஓசை நாளிதழின் ஞாயிறு இணைப்பான  களஞ்சியம் இதழில் தொடர்ந்து வெளியான கட்டுரைகள் சிலவற்றின் தொகுப்பே இந்த நூல்.

கவிதை, கதை எனும் இலக்கிய வடிவங்களைத் தாண்டி கட்டுரைகள் எனும் வடிவத்தில் வெளியாகும் என்னுடைய முதல் நூல் இது என்பது நெஞ்சுக்கு சற்றே நெருக்கமாய் இடம் பிடித்துக் கொள்கிறது.

பாசாங்கில்லாத புன்னகையுடனும் தணியாத சமூக வேட்கையுடனும் பத்திரிகைத் துறையில் இயங்கி வரும் நண்பர் யாணன் அவர்கள் தமிழோசை களஞ்சியம் இதழுக்காக கணினி துறை சார்ந்த கட்டுரைகள் சில வேண்டும் என்று கேட்டார். அந்த கட்டுரைகளுக்குக் கிடைத்த வாசகர் கடிதங்களே தொடர்ந்து பல விஷயங்களைக் குறித்து வாரம் தோறும் எழுத வைத்தது. அதற்காக தமிழோசைக்கும், நண்பர் யாணன் அவர்களுக்கும் என்னுடைய முதல் நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

உற்சாகமாய் சிறகடித்துப் பறக்கும் சிட்டுக் குருவியின் பரபரப்புடன் பதிப்பகத் துறையில் இயங்கி வரும் நண்பர் பூபதி அவர்களுக்கும், இந்த கட்டுரைகளை நூல் வடிவில் கொண்டு வர வேண்டும் எனும் அவருடைய வேட்கைக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னுடைய எழுத்துப் பயணத்தின் கூடவே நடந்து  தொடர் உற்சாகம் வழங்கி வரும் நண்பர் என்.சொக்கன் அவர்களுக்கும்,  தோழர் சுந்தரபுத்தன், எழுத்தாளர் இந்திரன் அவர்களுக்கும் நன்றிகள் பல.

கட்டுரைகளின் நேர்த்திக்கான தகவல் சேமிப்புகளில் பெருமளவுக்கு உதவி செய்த எனது துணைவியார் ஸ்டெல்லா அவர்களுக்கும், நண்பர் பென்கிருபா , மற்றும் அனைத்து நண்பர்களுக்கும்  எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

.

புகைத்தல் என்பது வலிப்பை அழைத்தல்

 புகைத்தலின் தீமை பற்றி இனிமேல் சொல்லித் தான் தெரியவேண்டுமென்பதில்லை. ஆனாலும் இந்த புதிய ஆராய்ச்சி முடிவு புகைத்தல் சார்ந்த ஒரு புதிய கோணத்தைக் காட்டுகிறது.

வாழ்நாளில் புகையே பிடிக்காத ஒரு நபர் புகைப் பழக்கமுடைய ஒரு நபரைத் திருமணம் செய்து கொண்டால் அவருக்கு வலிப்பு நோய் வரும் வாய்ப்பு அதிகரிக்கிறது. புகை பிடிக்காத ஒரு நபர் புகை பிடிக்காத ஒருவரைத் திருமணம் செய்வதை விட 42 விழுக்காடு இந்த  வாய்ப்பு அதிகரிக்கிறது என்பது கவனிக்கத் தக்கது.

புகை பிடிக்காதவர்களும் காற்றில் பரவும் நிகோட்டினால் பாதிக்கப்படுவதை பல ஆராய்ச்சிகள் ஏற்கனவே எடுத்துக் காட்டியுள்ளன. இப்போது தான் முதன் முறையாக புகைப் பழக்கமுடைய வாழ்க்கைத் துணையினால் வலிப்பு நோய் வரும் வாய்ப்பும் அதிகரிக்கிறது எனும் புதிய ஆராய்ச்சி முடிவு கிடைத்திருக்கிறது.

அமெரிக்காவில் நடத்தப்பட்ட இந்த விரிவான ஆராய்ச்சியில் 16225 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது. இந்த ஆராய்ச்சியை முன்னின்று நடத்திய கொலம்பியா பல்கலைக்கழகத்தின் மரியா கிளைமோர், புகையினால் புகைப் பழக்கம் இல்லாதவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் அனேகம் அவற்றில் இதுவும் ஒன்று என குறிப்பிட்டார்.

குறிப்பாக பழைய ஆராய்ச்சிகள் கூட இருப்பவர்களின் புகைப்பழக்கம் புகைக்காதவர்களுக்கும் ஆஸ்த்மா, கான்சர், இதய நோய் உட்பட பல நோய்களைத் தரும் வாய்ப்பு உண்டு என நிரூபித்திருந்தன. காற்றில் பரவும் விஷத்தன்மையே இதன் காரணம். இதனால் அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைகள் என்பது அதிர்ச்சியூட்டும் தகவலாகும்.

இந்த புதிய ஆராய்ச்சியின் பயனாக ஆரோக்கியமான உடலுக்கு புகைப் பழக்கத்தை அறவே ஒழிக்கவேண்டும் என்பதுடன், குடும்பத்திலுள்ளவர்களின் உடல்நலத்தைப் பாதுகாக்கவும் புகையை ஒழிப்பது இன்றியமையாயது எனும் கருத்தும் வலுப்பெற்றிருக்கிறது.

வாழ்க்கையை விடப் பெரியதா வெண்புகை – அதை
விட்டொழித்தால் தவழுமே புன்னகை

வரும் வழியில் : தசாவதாரம் படும் பாடு !


போஸ்டர்

தசாவதாரத்தின் அலை சற்று ஓய்ந்தது போலிருக்கிறது. உபயம் குசேலன். மாயாஜாலிலும் தினசரி நாற்பத்தைந்து காட்சிகள் என கலக்கிக் கொண்டிருந்த தசாவதாரம் நான்கைந்து காட்சிகள் என இறங்கிவிட்டது. படம் வந்து ஏறக் குறைய ஐம்பது நாளாகிவிட்டது எனவே அலை ஓய்வது ஆச்சரியமில்லை, ஆனால் நான் சொல்ல வந்தது அதைப் பற்றியல்ல.

இன்று அலுவலகம் வரும் வழியில் ஒரு வித்தியாசமான போஸ்டரைப் பார்த்தேன். “தசாவதாரம் திரைப்படத்தில் நாடார் சமூகத்தை இழிவு படுத்துவது போல வசனம் பேசி நடித்த கமலஹாசனை வன்மையாகக் கண்டிக்கிறோம்” என்பது தான் அந்த போஸ்டர். ஏதோ நாடார் சமூக தலை, உப தலை, உப உப உப தலை என்றெல்லாம் சில பெயர்கள் அதில் தெரிந்தன. சில பெண்களின் பெயர்கள் கூட !! அடடா !!!!

ஆஹா.. இதென்ன புதுக் கரடி ? முதலில் சைவம், வைணவம் என்றார்கள். வழக்கு, இழுக்கு என இழுத்து பரபரப்பைக் கூட்டி விட்டு அப்புறம் நைசாப் பேசி அப்படியெல்லாம் இல்லீங்கன்னா.. நீங்க பேசாம படத்தைப் பாருங்க என வழக்குப் போட்டவர்களை வழிக்குக் கொண்டு வந்து விட்டார்கள்.

அதுக்கு அப்புறம், கமல் ஆத்திகராகியிருக்கிறார், மறைமுகமாக விஷ்ணுவின் பத்து அவதாரங்களையும் தனது கதாபாத்திரமாக்கி, கடலில் கிடந்த கடவுள் சிலையை  கரைக்கு இழுத்து வந்து ஆத்திகர் பக்கம் அடிபணிந்திருக்கிறார் என ஸ்லோகங்கள் சொன்னார்கள். விட்டால் கமலையே கமல சுவாமிகள் ஆக்கியிருப்பார்கள். கமலும் நான் சுவாமிஜிகள் இல்லேன்னா சொன்னேன், சுவாமிஜிகளா இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும்னு தான் சொன்னேன் என வசனம் பேசியிருப்பார்.

இப்போது நாடார் சமூகத்தினரை கமல் இழிவு படுத்தியிருப்பதாக குட்டையைக் குழப்புகிறார்கள். அதென்ன இழிவோ எழவோ எனக்குப் புரியல. யாராவது புரிந்தால் சொல்லுங்கள் புண்ணியமாப் போவும்.

படம் வெளியாகி ஐம்பது நாளுக்கு அப்புறம் தான் இப்படி ஒரு போஸ்டர் வந்திருக்கிறது. அப்படின்னா நாடார் சமூகம் இதுக்கு முன் படத்தைப் பாக்கலையா ? அல்லது ஒருவேளை
தசாவதாரத்தின் அலை சற்று ஓய்கிறதே என கமல் ரசிகர்களோ, தயாரிப்பாளரோ நாடார் சமூகம் என போஸ்டர் அடித்து ஒட்டுகிறார்களா என்பதும் புரியவில்லை.

எப்படியோ என்னதான் அப்படி சொல்லியிருக்கான்னு போய் பாக்கணும் மக்களே – ன்னு நாடார் சமூகம் தியேட்டர்களை முற்றுகையிடும் ஒரு சிறு வாய்ப்பு இதனால் உருவாகியிருக்கிறது.

அடுத்தது எந்தப் பேரவைப்பா ?

சிக்னல் சந்திப்பு

மீனம்பாக்கம் விமான நிலையம் அருகே இருக்கும் சிக்னலில் புதிதாக ஒரு டிஜிடல் போர்ட் வைத்திருக்கிறார்கள். நிறுத்தத்தில் நிற்பவர்களை சற்று யோசிக்கச் செய்கின்றன அந்த போட்டில் ஓடிக் கொண்டிருக்கும் வாசகங்கள்.

உதாரணமாக : எண்பது கிலோ மீட்டர் வேகத்தில் ஓட்டினால் முப்பத்து விழுக்காடு எரிபொருள் அதிகம் தேவைப்படும். உங்கள் வண்டியின் சக்கரங்களில் காற்று சரியான அளவில் இல்லையெனில் பத்து விழுக்காடு எரிபொருள் அதிகம் செலவாகும்… என வாசகங்கள் வலமிருந்து இடமாக ஓடிக் கொண்டிருக்கின்றன.

எப்படா சிகப்பு போயி பச்சை வரும் பாஞ்சுடலாம் என காத்திருந்த சில இருசக்கர வாகனவாசிகள் இரண்டொரு வினாடிகள் வாசகங்களைப் பார்த்து விட்டு, தங்கள் சக்கரங்களில் காற்று இருக்கிறதா என பார்த்ததையும் கவனிக்க முடிந்தது.

ஏதோ.. நல்லது நடந்தா சரி..

ஏதோ.. நல்லது நடந்தா சரி..

ஏதோ நல்லது நடந்தா சரி என சொல்லும்போ தான் ஞாபகத்துக்கு வருகிறது. வேளச்சேரி ஏரியை ஒட்டியிருக்கும் கால்வாய் குப்பைகளால் நிரம்பியிருக்கிறது, ஒரு கொசு கடலே அங்கே குடி இருக்கிறது என கடந்த வாரம் தினகரன் செய்தி ஒன்று வெளியிட்டிருந்தது. கூடவே அந்த அசிங்கத்தின் அரைப் பக்க கலர் படமும்.

அந்தப் பக்கம் வழியாகத் தான் நான் தினமும் அலுவலகம் வரவேண்டிய சூழல். அன்றைக்கு காலை ஒன்பது மணிக்கு நான் அந்தப் பக்கம் வழியாக வந்த போது சில வாகனங்களும், பல அரசு அதிகாரிகளும் அந்தப் பகுதியை முற்றுகையிட்டு உற்று உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது தெரிந்தது.

ஆஹா.. இவ்ளோ ஸ்பீடா இருக்காங்களே என்று ஒரு நிமிடம் அசந்து தான் போயிட்டேன்.

இன்னிக்கு செய்தித் தாளில் இன்னொரு செய்தி படித்தேன் “தினகரன் செய்தியைப் பார்த்து விட்டு காமராஜரின் பேத்தியின் குறைகளை அரசு நிவர்த்தி செய்தது”.

அரசு அதிகாரிகள் பேப்பர் எல்லாம் படிக்கிறாங்களே !!! இது நல்ல விஷயமாச்சே !!! அதனால இன்னொரு வாட்டி அதையே சொல்லிக்கறேன். ஏதோ நல்லது நடந்தா சரி.

அறிவியல் புனைக் கதை : உண்மையா அது என்ன ?


இன்று

தனக்கு முன்னால் கூடியிருந்த பதினேழு விஞ்ஞானிகளின் முன்னிலையில் தனது கண்டுபிடிப்பைப் பற்றி விளக்கத் துவங்கினார் வர்மா.

இந்தக் கருவி ஆராய்ச்சியாளர்களுக்காகவே கண்டுபிடிக்கப் பட்ட கருவி. வரலாறுகளைத் துருவித் திரிபவர்களுக்கு இந்தக் கருவி ஒரு கடவுள் என்று கூட சொல்லலாம். உதாரணமாக அகழ்வாராய்ச்சி போன்றவற்றில் கிடைக்கும் ஏதேனும் ஒரு பொருளைக் கொண்டு அந்தக் காலகட்டத்தை துல்லியமாகவும் விரிவாகவும் இந்தக் கருவி மூலம் கண்டுபிடிக்கலாம்.

வெறும் ஊகங்கள் எனும் அடிப்படையில் எடுக்கப்பட்ட பல வரலாற்று முடிவுகளை இந்தக் கருவி மாற்றி எழுதும். அதாவது ஒவ்வொரு காலகட்டத்திலும் புழங்கும் பொருட்களில் அந்தந்த காலகட்டத்தின் இயல்புகள் பதிவாகியிருக்கும் என்பதே எனது ஆராய்ச்சியின் மையம். உதாரணமாக ஒரு மண் குவளையை அகழ்வாராய்ச்சி கண்டுபிடித்தால் அதைக் கொண்டு அந்த காலகட்டத்தை முழுமையாக இந்தக் கருவி சொல்லிவிடும்.

அதுவும் காட்சியாக. உபயோகிக்கும் கருவியின் தன்மை, பழக்கம், சமூகத் தொடர்பு இவற்றைக் கொண்டு இந்தக் காட்சிப் படத்தின் தன்மை அமையும். தேவையான அளவு மூலக்கூறுகள் இல்லாத பட்சத்தில் இது வெறும் ஒரு புகைப்படமாய் கிடைக்கும்.

ஒரு எழுத்தாளனின் எழுத்தாணி உங்களுக்குக் கிடைத்தால் இந்த கருவியிடம் கொடுங்கள். அவருடைய படத்தையும், அவரது சூழலையும், வீட்டையும் வாழ்க்கையையும் கொஞ்சம் நேரடியாகவே கண்டுகொள்ளலாம். இது தான் இந்தக் கருவியின் சுருக்கமான அறிமுகம்.

இந்தக் கருவி தனது அடுத்த கட்டமாக, அந்தக் காலத்தின் ஒலியை மறு ஒலிபரப்பு செய்யும் சாத்தியக் கூறுகளை ஆராய்கிறது. அதாவது நமது ஒலி அலைகள் காற்றில் அலைந்து திரியும் எனவும், அது அழிவுறாது எனவும் கூறிய அறிவியலின் அடிப்படையில் இந்தக் கருவி தனது அடுத்த அடியை எடுத்து வைக்கிறது.

‘இந்தக் கண்டு பிடிப்பினால் நிகழக்கூடிய பயன்களை நினைத்தால் சிலிர்ப்பாக இருக்கிறது ஆனால் இதன் நம்பகத் தன்மை என்ன?’  கேள்வி எழுந்தது

ஒரு சில குறிப்பிட்ட சோதனைகளை மேற்கொண்டிருக்கிறோம். அதன் முடிவுகள் அனைத்தையும் இப்போது வெளியிட தலைமைக் குழு அனுமதிக்கவில்லை.

“எத்தனை ஆண்டுகள் வரை இந்த ஆராய்ச்சி பின்னோக்கிச் செல்லும் ?” அடுத்த கேள்வி எழுந்தது

சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தகவல்கள் வரை இதிலிருந்து கிடைக்கிறது. சில பொருட்கள் காலங்களைத் தாண்டியும் பழக்கத்தில் இருக்கும் போது அதன் உண்மையான சூழல் சரிவர பதிவாகாமல் போகவும் வாய்ப்பு உண்டு. ஆனால் இந்தக் கண்டு பிடிப்பில் குறிப்பிட வேண்டிய மிக சுவாரஸ்யமான தகவல் ஒன்று உண்டு.

வர்மா சொல்ல பார்வையாளர்கள் கூர்மையானார்கள்.

அதாவது ஏதேனும் ஒரு மனிதனின் எலும்புத் துண்டு ஒன்று கிடைத்தால், அவன் யார் எப்படி இருந்தான், எங்கே இருந்தான் என்பதை மிகத் தெளிவாக இந்த கருவி காட்டிவிடும். வர்மா சொல்லச் சொல்ல பார்வையாளர்கள் பரவசமடைந்தனர்.

ஒரு உதாரணத்தை மட்டும் குழுவின் அனுமதியுடன் இப்போது சொல்கிறேன். நமக்குத் தரப்பட்ட ஒரு எலும்பை வைத்துப் பார்த்ததில் அது சுமார் ஐநூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு பிரபலமான பெண்மணியினுடையது என்பது தெரிய வந்திருக்கிறது.

தற்போதைய நூற்றாண்டு மறந்து போன அந்த பெண்மணியின் பெயர் இளவரசி டயானா. 1997ல் அவர் ஒரு விபத்தில் மரணமடைந்திருக்கிறார்.
 
என்று சொல்ல கூடியிருந்தவர்கள் சிலர் தங்கள் பெருவிரல் நகத்தைப் பார்த்தார்கள். அவர்களுடைய உடலில் இம்பிளாண்ட் செய்யப்பட்டிருந்த கருவி ஆண்டு 2470 என்றது.

அன்று

வருடம் 2008.

“மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே போனால் என்னதான் செய்வது ? ஏதேனும் செய்தாக வேண்டும். அதற்காக வேற்றுக் கிரகங்களுக்குச் செல்வதும் நாம் நினைப்பது போல சாத்தியமில்லை. ஆனால் ஒன்று மட்டும் சாத்தியம்“  விக்கி பேசிக்கொண்டிருந்தான்.

அந்த பல்கலைக் கழக செமினாரில், விக்கி தனது வயிட் பேப்பரை விளக்கிக் கொண்டிருந்தான். கூடியிருந்தவர்கள் கொட்டாவியுடன் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

“இது மிகவும் எளிதான யோசனை. ஆனால் இதை மிகவும் தீவிரமாய் ஆராய்ந்தால் எதிர்காலத்தில் இடப் பற்றாக்குறை என்பதே இருக்காது. நாமே கிரகங்களை உருவாக்கிக் கொள்ளலாம்”

விக்கி சொல்ல கூடியிருந்தவர்கள் சிரித்தனர்.

விக்கி தொடர்ந்தான். இது சிரிப்பிற்கான சமாச்சாரமல்ல. நடைமுறை சாத்தியமானதே. கிரகம் என்று சொன்னதால் ஏதோ என்னவோ என கற்பனை செய்ய வேண்டாம். பறக்கும் நவீன குமிழிகளை ஏற்படுத்துவதே அது.

அதாவது தற்போதைய சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் போல சில கிலோமீட்டர்கள் சதுர பரப்பளவுள்ள பறக்கும் நகரங்களை சுகாதார குமிழிகளுக்குள் அடைத்து அதை வானத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் விட்டு விட வேண்டும். பூமியில் இடப்பற்றாக்குறை இருக்காது, மிதக்கும் குமிழிகள் தன்னிறைவு கொண்டவையாக இருக்க வழிகள் செய்யப்பட வேண்டும்.

குறிப்பாக ஆக்சிஜன் தேவையை நிறைவேற்ற சில கருவிகள் கண்டுபிடிக்கப்படலாம், அல்லது பெட்ரோல் நிரப்புவதைப் போல ஆக்சிஜனை நிரப்பலாம். இந்தக் குமிழி வானில் மிதக்க அதன் அடிப்பாகத்தில் மிகப்பெரிய தளம் அமைத்து மிதக்கும் வாயு நிரப்பலாம்.

இன்னும் சொல்லப்போனால், ஏலியன்களின் பறக்கும் தட்டு போல அவை வானில் நிற்கலாம், அதிலிருந்து பூமிக்கு சிறப்பு வாகனங்கள் இயக்கலாம், 

விக்கி சொல்லிக் கொண்டே போக, கூடியிருந்தவர்கள் ஏதோ ஒரு நாவலைக் கேட்பது போல சுவாரஸ்யமாகவும், நகைச்சுவை உணர்வுடனும் கேட்டுக் கொண்டிருந்தார்கள். சிலர் அருகில் இருந்தவர்களிடம் விக்கியைப் பற்றி ஏகத்துக்கு கிண்டலடித்துக் கொண்டிருந்தனர்.

இன்று

வருடன் 2470. வர்மா தொடர்ந்தார்.

எப்போதுமே முதல் சுவடுக்குப் பிறகு தான் அடுத்த சுவடு தொடரமுடியும். அந்த வகையில் இன்றைக்கு நாம் மிதந்து கொண்டிருக்கும் இந்த குமிழி  கூட முன்பே பழைய மக்களால் முயன்று பார்த்திருக்கக் கூடியதாக இருக்கலாம் என்பது எனது கணிப்பு.

கடந்த வாரம் சுவாரஸ்யமான ஒரு தகவல் கிடைத்தது. முன்பொரு காலத்தில் அனுமர் என்னும் ஒரு கதாபாத்திரம் ஒரு மலையைத் தூக்கிச் சுமப்பதாக ஒரு கதை உண்டாம். பழைய காலத்தில் எல்லாவற்றையுமே தீவிரமாக ஆராய்ந்து அதை பூடகமாய் சொல்லி வைப்பார்கள்.

எனவே அவர்களுடைய மிதக்கும் மலை என்பது இன்றைய குமிழ் தான் என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை. அனுமர் என்பவர் பூமிக்கும் வானத்திலுள்ள குமிழிக்கும் இடையே ஒரு தொடர்பை ஏற்படுத்தும் குறியீடு. அதாவது நமது டி.எஸ்.376767 குமிழிக்கும் பூமிக்கும் இடையே தொடர்பை ஏற்படுத்தும் நமது ஒளி இயங்கி டிஸ்வா 376767 எனக் கொள்ளலாம்.

இப்படி பல சுவாரஸ்யமான விளக்கங்கள் நமக்குக் கிடைக்க இந்த கருவி நமக்கு மிகவும் பயன் படும்.

இன்றைக்கு நமது கண்களில் இம்ப்ளாண்ட் செய்யப்பட்டிருப்பதைப் போல முன்பு அக்ஸஸ் சிஸ்டம் இருந்திருக்கவில்லை. எனவே மனிதர்கள் இப்போது இருப்பதைப் போல ஒரு குளோபல் மானிட்டரிங் கீழ் வரவில்லை.

இப்போது இருப்பதைப் போல தப்பிக்க முடியாத சூழல் கூட அன்றைக்கு இல்லை. சிலர் சட்டத்தின் கண்களிலிருந்து தப்பி ஒளிந்து கூட வாழ்க்கை நடத்த முடிந்திருக்கிறது.

இன்றைக்கு இருப்பதைப் போல தண்டனை என்பது நமது உடலில் இம்ப்ளாண்ட் செய்யப்பட்டிருக்கும் கருவியை இயக்கி மரணமோ, ஊனமோ, வலியோ தருவதல்ல என்பதும் நாம் அறிய முடிகிறது.

அத்தகைய ஒரு அறிவியல் பலமற்ற வாழ்க்கையைத் தான் இரண்டாயிரத்தின் துவக்கங்களில் நமது முன்னோர்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.

இன்றைக்கு ஆறு இலட்சம் குமிழிகளில் வாழும் அறுநூறு கோடி மக்கள் தான் அன்றைய உலக மொத்த மக்கள் தொகையே ! என்பது வியக்க வைக்கிறது. அத்தனை குறைவான மக்கள் தொகையை வைத்துக் கொண்டு உலகம் அப்போதே திணறியிருக்கிறது என்பது ஆச்சரியமான செய்தி. இவற்றையெல்லாம் அறிந்து கொள்ள இந்த கருவி மிகவும் பயன்படும்.

வர்மா சொல்லச் சொல்ல கூடியிருந்தவர்கள் விரல்களை வட்ட வடிவமாய் அசைத்து தாங்கள் அதை ஆமோதிப்பது போல தலையை ஆட்டினார்கள்.

அன்று 2008

“சார்… என்னோட வயிட் பேப்பர் பிரசண்டேஷன் எப்படி இருந்தது சார்” விக்கி பிரபசர் பாண்டுரங்கனின் காதருகே பவ்யமாய் கிசுகிசுத்தான்.

“என்னய்யா பிரசண்ட் பண்ணினே ? நீ என்ன பெரிய சுஜாதான்னு நினைப்பா ? ஓவரா கற்பனையை வளத்துக்காதேன்னு எத்தனையோ தடவை சொல்லியிருக்கேன். குமிழி, கிமிழின்னு சொல்லி கோல்டன் வாய்ப்பை கோட்டை விட்டுட்டியே ?”  பாண்டுரங்கன் கடுப்பானார்.

“சார்.. எதிர்கால உலகம்ங்கற தலைப்பில வித்தியாசமா ஏதாச்சும் சொல்லணும்ன்னு யோசிச்சிட்டே இருந்தேன் சார். இந்த ஐடியா எப்படியோ மனசுக்குள்ள சம்மணம் போட்டு அமர்ந்துச்சு. எழுத எழுத வித்தியாசமா கற்பனைகள் வந்துட்டே இருந்துது. அதனால தான் அதை எழுதினேன். எனக்கென்னவோ எதிர்காலத்துல இது சாத்தியமாகலாம்ன்னு தான் தோணிச்சுது. அதனால தான் அதையே பிரசண்ட் பண்ணினேன். ஆனா அதுக்கு இப்படி ஒரு பதிலை நீங்க சொல்லுவீங்கன்னு நான் நினைச்சுக் கூட பார்க்கலை” விக்கி சோகமானான்.

“இதப்பாரு, எகிப்து, துருக்கி, ஜோர்தான் – இப்படி பல நாடுகளை அலசி, அவற்றுக்கிடையே இருக்கக்கூடிய தண்ணீர் பகிர்வை ஆராய்ந்து ரம்யா ஒரு பிரசண்டேஷன் குடுத்தா பார்த்தியா ? இன்னும் ஐம்பது வருஷத்துல தண்ணிக்காக நாடுகளுக்கு இடையே சண்டை வருமாம். அவ்ளோ அற்புதமா அலசி சொல்லியிருக்கா ? நீ என்னடான்னா குமிழிங்கறே, மிதக்குங்கறே, கற்பனைங்கறே, விற்பனைங்கறே. சரி..சரி.. போ.. அடுத்த வருஷமாவது நல்லா பண்ணு.” பாண்டுரங்கன், காண்டுரங்கனாகி கிளம்பினார்.

இன்று

“வர்மா.. உன்னோட கண்டுபிடிப்புக்கு அதுக்குள்ள டி.எஸ்.373459 கிட்டேயிருந்து எதிர்ப்பு வந்துடுச்சி. இந்த கண்டுபிடிப்பை உடனே அழிக்கணுமாம். இல்லேன்னா நம்ம குமிழிக்கு பிரச்சனை தருவாங்களாம்” வர்மாவிடம் ஆராய்ச்சிக் குழு தலைவர் பேசினார்.

“என்னவாம்… என்ன பிரச்சனையாம் ?”

“இல்லை.. பல ஆயிரம் வருஷங்களா அவங்க நம்பிட்டிருக்கிற மத நம்பிக்கைகளை எல்லாம் இந்தக் கருவி அழிச்சுடுமாம். மதம், மதநூல்கள், மதத் தலைவர்கள், புராணங்கள் எல்லாவற்றோட உண்மை நிலையும் இந்தக் கருவியால வெளியே வந்துடும்ன்னு அவங்க பயப்படறாங்க”

“அது நல்லது தானே சார்… உண்மை எல்லாருக்கும் தெரியட்டுமே ?”

“அப்படியில்லை வர்மா. டி.எஸ்.376767 ங்கறது மிர்ஸா தெய்வத்தை வணங்கறவங்களோட குமிழி. அந்த தெய்வம் பொய்யின்னு ஒருவேளை நீ சொல்லிடுவியோன்னு பயப்படறாங்க. அப்படியே ஒவ்வோர் மதம் சார்ந்த குமிழிகளும் பயந்துட்டு நமக்கு எதிரா போராட ஆரம்பிச்சுடுவாங்களோன்னு எனக்கு கவலையா இருக்கு ?. அறிவியல் கண்டுபிடிப்பை விட மக்களுடைய மத உணர்வுகளுக்கு மதிப்பு குடுக்கணும்ன்னு சர்வதேச குமிழிக் குழு சொல்லிடுமோன்னு டென்ஷனா இருக்கு”

“அவங்க எது வேணும்னாலும் பண்ணட்டும் சார். எதுவேணா சொல்லட்டும். அதுக்காக இந்த உழைப்பை வீணடிக்கக் கூடாது சார். இந்த கண்டுபிடிப்பை நாம நல்லமுறையில பயன்படுத்தணும் சார்.” வர்மா ஆவேசமாய் பேச தலைவர் சாந்தமாய் பேசினார்.

“ இந்த உலகத்துல எதையும் நாம மறைவா செய்ய முடியாது வர்மா.. அது உனக்கே தெரியும். கொஞ்சம் பொறுமை காப்போம்”

“என்னசார்…. இப்போ என்ன பண்ண சொல்றீங்க. உண்மையைச் சொன்னா எவனுமே நம்ப மாட்டேங்கறான்… உண்மை என்ன அவ்வளவு மோசமா ?”

‘என்ன ஏதோ புதுசா சொல்றே ? என்ன உண்மை ?’

நேற்று, என்னோட சிந்தனையை ஐநூறு ஆண்டுக்கு முந்தைய ஒருத்தனுக்கு அனுப்பி வெச்சேன். அவன் அங்கே நிராகரிப்பை வாங்கிட்டு நிக்கறான். நான் இங்கே நிராகரிப்பை வாங்கிட்டு நிக்கறேன்.

அவன் எதிர்கால உண்மையைச் சொன்னான். நான் கடந்த கால உண்மையை சொல்ல நினைச்சேன்.

வர்மா சொல்ல தலைவர் நெற்றி சுருக்கினார்.

அந்த வேலையை நீ இன்னும் வுடலையா ? யாரந்த அப்பாவி ?

ஏதோ ஒரு விக்கி. 2008ல இருக்கான்.

வரும் வழியில் : சென்னையைக் கலக்கும் வை.கோ

இன்று வரும் வழியில் சுவாரஸ்யமான ஒரு போஸ்டரைப் பார்க்க நேர்ந்தது.

ஒபாமா சிரித்துக் கொண்டிருக்கும் போஸ்டர் தான் அது. இதென்னடா சென்னைக்கு வந்த சோதனை ? ஒபாமா தன்னுடைய கட்சி அலுவலகத்தை சென்னையில் துவங்கியிருக்கிறாரா ? இல்லை ஓட்டு கேட்க (கவனிக்க, ஒட்டுக் கேட்க அல்ல ) சென்னை வந்திருக்கிறாரா ? என்று குழம்பியபடியே உற்றுப் பார்த்தால் இன்னொரு ஆச்சரியம்.

அருகிலேயே கோட் சூட்டுடன் நமக்கு மிகவும் பரிச்சயமான ஒரு முகம். கூர்மையாய் பார்த்தேன் அட !!! நம்ம வை.கோ ? கையில் ஒரு புக், பேனா வைத்துக் கொண்டு ஆட்டோகிராப் வாங்குவதற்கு நிற்பவரைப் போல நிற்கிறாரே !

என்ன நடக்குது ? ஒருவேளை ம.தி.மு.க வுடன் ஒபாமா கூட்டு சேர்ந்துவிட்டாரா ? இல்லை
அவருக்கு இவர் தமிழ் கத்துக் கொடுக்கிறாரா ? இது உண்மையா இல்லை குரோம்பேட்டை கிராபிக்ஸ் வேலையா ?  என்று யோசித்துக் கொண்டே காரோட்டினேன்.

அடுத்த போஸ்டரில் தான் என்ன எழுதியிருந்தது என்பதை வாசிக்க முடிந்தது.
“ஒபாமாவைச் சந்தித்து வந்த மக்கள் தலைவன் வைகோவை வரவேற்கிறோம்”  !!
ஆஹா… ஆஹா… சுவாரஸ்யமாய் இருக்கிறதே என நினைத்துக் கொண்டே பார்த்தால்,

காஞ்சி புர மதிமுக இன்னும் ஒரு படி மேலே போய்
“அமெரிக்காவின் அதிசயம் ஒபாமாவைச் சந்தித்து வந்த
முதல் இந்தியன் வை.கோ
இந்தியாவின் அதிசயம் “ என்று ஒரு அட்டகாச போஸ்டர்.

மதிமுகவின் போஸ்டர்கள்… மன்னிக்கவும், வை.கோ ரசிகர் மன்றத்தின் போஸ்டர்கள் விஜய் ரசிகர்களின் குருவி போஸ்டரை விட விர்ரென்று பறக்கிறது. சென்னை முழுவதும்.

அதிலும், அமெரிக்காவின் ஜனாதிபதி ஒபாமா எனும் வாசகங்கள் வேறு :!!! ஒபாமாவைச் சந்தித்து வந்த நூறாவது நாள் – என்று கூட போஸ்டர் ஒட்டப்படலாம்.. சொல்ல முடியாது.

உங்களால புஷ்ஷை தான் பார்க்க முடியும், எங்கள் தலைவர் ஒபாமாவையே சந்திப்பார் என நாளை மதிமுக தெருமுனை கூட்டங்கள் புகழ் பாக்கள் பாடலாம்.

ஒபாமாவைச் சந்தித்த முதல் இந்தியப் பெண் என்னும் பெருமையை நீங்கள் பெறவேண்டும் என அதிமுகவின்  ஓ போடும் செல்வங்கள் அம்மாவை தூண்டி விடக் கூடும்.

கடல் கடந்து சென்றாயே, கள்ளத் தோணியிலா ? ஒபாமா என்ன புறநானூற்றுப் பாடல் கூறும் வீரத்திருமகனா ? திராவிடக் கருமகனா ? என எதிர் கட்சி அறிக்கை வெளியிடக் கூடும்.

எப்படியோ, காடுவெட்டி குருவை விடுவித்தால் மத்திய அரசுக்கு ஆதரவு என பா.ம.க பரபரப்பைக் கிளப்புகிறது. அரசு கவிழும் என பா.ஜ.க பட்டையைக் கிளப்புகிறது, பா.ஜ.கவின் எம்.பிக்களே எங்கள் பக்கம் என காங்கிரஸ் கலக்குகிறது. இந்தப் பரபரப்பில் காணாமல் போன வர்கள் இரண்டு பேர் ஒன்று அம்மா.. இன்னொன்று வை.கோ..

வை.கோ முந்திக் கொண்டு ஒபாமாவைப் பார்த்துவிட்டு வந்து விட்டார்.

மிச்சமிருக்கும் நபர் சார்பாக, அடுத்த போஸ்டர் விரைவில் ஒட்டப்படலாம்.

ஆண்களை அச்சுறுத்தும் ஆராய்ச்சி !

( பெண் குறிப்பு :  பசங்களா நீங்க சாக்லேட் சாப்பிட்டு குண்டாயிடாதீங்க )

அதிக எடையுடன் இருப்பது பல்வேறு சிக்கல்களைத் தரும் என்பது பல ஆராய்ச்சிகளின் மூலமாக ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுள்ளது. இப்போது அந்தப் பட்டியலில் சேர்ந்திருக்கிறது இன்னொன்று. அதிக எடையுள்ள ஆண்களின் விந்தணு பாதிப்புக்கு உள்ளாகும் என்பதே அது.

அதிக எடையுள்ள பெண்களுக்கு கருத்தரிக்கும் வாய்ப்பு குறையும் என்று மருத்துவர்கள் முன்னமே தெரிவித்திருந்தனர். இப்போது ஆண்கள் அதிக எடையுடனும், கொழுப்புச் சத்துடனும் இருப்பது அவர்களுடைய உயிரணுக்களைப் பாதிக்கும் எனும் ஆராய்ச்சியும் வெளியிடப்பட்டுள்ளது.

உடலின் உயரத்துக்கு ஏற்ற ஆரோக்கியமான எடை இல்லாமல் இருப்பது இதயம் தொடர்பான நோய்கள், உயர் குருதி அழுத்தம், தூக்கமின்மை, சோர்வு உட்பட பல்வேறு சிக்கல்களைத் தருகிறது. இப்போது விந்தணுக்களும் இதனால் பாதிக்கப்படுகிறது எனும் ஆய்வு உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை இன்னும் அழுத்தமாய் சொல்கிறது.

எத்தனை அவசர வாழ்க்கையெனினும் உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்க வேண்டும் என்பதை இந்த ஆராய்ச்சி மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியிருக்கிறது.

ஆண்கள் கவனத்துக்கு !

முன்பெல்லாம் நீரிழிவு (சருக்கரை) நோய் வயதானவர்களுக்கு மட்டுமே வரும் எனும் நிலை இருந்தது. ஆனால் தற்போதைய வாழ்க்கை முறை இள வயதினரையும் இந்த நோய்க்குள் அமிழ்த்தியிருக்கிறது.

உலகெங்கும் இன்று பல கோடிக்கணக்கான இளைஞர்கள் நீரிழிவு நோயினால் பீடிக்கப்பட்டுள்ளனர். நீரிழிவு நோயாளிகளின் அவஸ்தைகளில் இப்போது குழந்தையின்மை அச்சமும் புகுந்து கொண்டிருக்கிறது.

நீரிழிவு நோயாளிகளின் உயிரணுக்கள் வீரியம் இழந்ததாக இருக்கின்றன எனவும் இதனால் இவர்கள் குழந்தையில்லா நிலைக்குத் தள்ளப்படும் ஆபத்தும் அதிகரித்திருக்கிறது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்த அதிர்ச்சியூட்டும் தகவலின் வீரியத்தை அதிகரிக்கும் விதமாக கருத்தரித்தாலும் மனைவியருக்கு கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்பு அதிகம் என அவர்கள் அச்சமூட்டுகின்றனர்.

வாழ்க்கைச் சூழல் இளைஞர்களை ஆரோக்கியமற்ற உணவுகளுக்கும், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறைக்கும் தள்ளி விட்டது. எனவே இளைஞர்கள் போதிய உடற்பயிற்சி இல்லாமலும், ஆரோக்கியமான பழக்கங்கள் இல்லாமலும் அதிக எடை உட்பட பல்வேறு உடல் பாதிப்புகளைச் சந்திக்கின்றனர். இவையெல்லாம் நீரிழிவு நோய் தாக்குதலுக்கு முக்கியமான காரணிகள் என்பது குறிப்பிடத் தக்கது.

குழந்தையின்மைக்குக் காரணம் பெண்கள் என்னும் தவறான சிந்தனைகளை இந்த ஆராய்ச்சி அழித்திருக்கிறது. ஆரோக்கியமான வாழ்க்கைக்குள் வர ஆண்களை எச்சரித்திருக்கிறது.

அதிர்ச்சி : அதிகம் தண்ணீர் குடித்தால் மரணம் நேரும் !!!


 
  
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள் அது தண்ணீர் குடிக்கும் விஷயத்தில் கூட உண்மையாகியிருக்கிறது. அதிர்ச்சியை அள்ளித்தரும் இந்த உண்மைச் சம்பவம் யூ.கே யில் நடந்திருக்கிறது.
 
நல்ல ஆரோக்கியமான, திடகாத்திரமான, மருந்து மாத்திரைகளை நாடாத நாற்பத்து நான்கு வயதான ஆண்ட்ரூ தன்னுடைய ஈறுகளில் இருந்த வலியை மட்டுப்படுத்த குளிர்ந்த நீரை குடித்துக் கொண்டே இருந்திருக்கிறார்.
 
கொஞ்சம் கொஞ்சமாக எட்டு மணி நேரத்தில் அவர் குடித்த தண்ணீரின் அளவு சுமார் பத்து லிட்டர். தொடர்ந்து மூன்றாவது நாளாக எட்டு மணி நேரத்திற்கு சுமார் பத்து லிட்டர் எனுமளவில் தண்ணீர் குடித்ததால் அவருடைய உடலிலிருந்த உப்புச் சத்துக்கள் கரைந்து, அடர்த்தியிழந்து மரணமடைந்திருக்கிறார்.
 
அதிகப்படியான தண்ணீர் உடலின் அனைத்து செல்களையும், உறுப்புகளையும் வீக்கமடையச் செய்திருக்கின்றன. அது மூளைக்கு அதிகப்படியான அழுத்தத்தையும், வீக்கத்தையும் கொடுத்திருக்கிறது. அதுவே அவரது உயிரையும் பறித்திருக்கிறது.
 
மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டபோது உடல் வலுவிழந்து அதிக போதையில் இருந்தவரைப் போல தள்ளாடியிருக்கிறார். முதலில் போதையில் இருக்கிறார் என மருத்துவர்கள் நினைத்திருக்கின்றனர், பின்னர் உண்மை உணர்ந்து சிகிச்சை அளிக்கத் துவங்கியிருக்கின்றனர். ஆனால் கூடவே மாரடைப்பும் வந்து அவரை மரணத்துக்குள் அமிழ்த்தியிருக்கிறது.
 
மனித உடலில் ஐம்பத்து ஐந்து முதல் எண்பது விழுக்காடு தண்ணீரால் ஆனது. மூளையின் எண்பத்து ஐந்து விழுக்காடும், குருதியின் எண்பது விழுக்காடும், தசைகளின் எழுபது விழுக்காடும் தண்ணீரால் ஆனதே. நாம் உண்ணும் உணவிலிருந்து உடல் சுமார் இருபது விழுக்காடு தண்ணீரைப் பெற்றுக் கொள்கிறது.
 
உடலுக்கு எவ்வளவு தேவையோ அதைத் தவிர அதிகமாய் தண்ணீர் உட்கொண்டால் தண்ணீர் கூட உயிருக்கு உலை வைக்கும் எனும் தகவல் மக்களிடையே அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருக்கிறது,
 
சரி, எவ்வளவு தண்ணீர் குடிப்பது நல்லது ? எனும் கேள்விக்கு ஆரோக்கியமான மனிதன் ஒருநாள் இரண்டரை லிட்டர் தண்ணீர் குடிப்பது உடலுக்கு மிகவும் நல்லது என்கின்றனர் மருத்துவர்.
 
அதிக வியர்வை சிந்தும் வேலை செய்பவர்கள் அதற்கேற்ப அதிக தண்ணீரைக் குடிக்கவேண்டும் என்பதும், விளையாட்டு வீரர்கள் வெறும் தண்ணீருக்குப் பதிலாக உப்பு, கார்போஹைட்ரேட் இவை கலந்த ஐசோடானிக் பானத்தை அருந்தலாம் என்பதும் மருத்துவர்களின் பரிந்துரையாகும்.