குசேலன் : பாடல்கள் எப்படி ? விரிவான அலசல்.

1. பேரின்பப் பேச்சுக்காரா

“சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா” ஒரு காலத்தின் பட்டி தொட்டியெல்லாம் பட்டையைக் கிளப்பிய பாடல். அதே போல எழுத முயன்ற யுகபாரதியின் பாடல் இது.

பேரின்பப் பேச்சுக்காரன் – எனும் வார்த்தைப் பிரயோகம் வசீகரித்த அளவுக்கு பாடல் வசீகரிக்கவில்லை. துதி பாடும் வளையத்துக்குள் விழுந்து விட்ட நண்பர் யுகபாரதியைக் கேட்டால் காலத்தின் கட்டாயம் என சொல்லக் கூடும். ஆங்காங்கே “ஆண்களின் அரசாங்கம்” என்றெல்லாம் சற்றே வசீகரிக்க முயன்று ஒரு பாடலாசிரியராகத் தோற்றிருக்கிறார் யுகபாரதி. ஒருவேளை ரசிகர் மன்ற கூட்டங்களுக்குப் பயன்படக் கூடும் இந்தப் பாடல்.

எனினும் “பேருந்தில் நீ எனக்குச் சன்னலோரம்” என வசீகரித்த யுகபாரதியின் எந்த ஒரு சுவடும் இல்லாமல் தலை கவிழ்கிறது இந்தப் பாடல்.
2. சினிமா சினிமா

வாலி எழுதியிருக்கிறாராம். ரஜினி மேலே ஏதோ கோபம் போல. கொருக்குப்ப்பேட்டை ரஜினி குமாரிடம் கொடுத்தால் இதை விடப் பிரமாதமாக ஒரு “போஸ்டர்” கவிதை எழுதுவார்.

என்னாச்சோ தெரியவில்லை. ரஜினிக்கு பாடல் எழுதும்போது மட்டும் அனுபவக் கவிஞர்கள் கூட அகல பாதாளத்தில் விழுந்து விடுகிறார்கள்.

கவித்துவமும், கவனிப்புகளும் இல்லாமல் வெறுமனே தினத்தந்தியில் ரஜினிக்கு எழுதப்பட்ட  வாழ்த்துச் செய்தியை வாசிப்பது போல இருக்கிறது பாடலும் இசையும்.

பாட்டாளிகளின் பனியனை கவனி
பள்ளிப் பிள்ளைகள் பையிலே கவனி

3. ஓம் சாரரா…

இதுவும் வாலியில் கற்பனைக் குழந்தையே. இதுவும் குறைப் பிரசவ கேஸ் தான். இந்தப் பாடலுக்கு வரிகள் ரஜினிகாந்த் என்று சொல்லலாம். அப்புறம் என்ன எல்லா ரஜினி படத்தையும் வரிசைப்படுத்திய பணி மட்டுமே வாலியுடையது. செங்கல் அடுக்கியபின் ஆங்காங்கே சாந்து பூசும் வேலை போல.

சில காதல் வரிகள் எழுதியிருக்கிறார். லோ – பட்ஜெட் என்றால் பாடலின் தரமும் லோ – வாக இருக்க வேண்டும் என நினைத்தாரோ என்னவோ. போகிற போக்கில் அவசர கோலத்தில் ஏதோ வரைந்து விட்டு போயிருக்கிறார்.

என்னவோ மாயம் செய்து என்னைக் கவிழ்த்தாயே” என்பன போன்ற வரிகளைத் தானா ரஜினிக்காய் வைத்திருக்கிறீர் !!! வாலி நியாயமா ?
4. சாரல்..

நயந்தாரா ஆடிப்பாடும் பாடல் என நினைக்கிறேன். “சின்ன சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்போமா ?” என அசத்திக் காட்டிய வைரமுத்துவும், “செல்ல மழையே …” என மழையில் ரசிக்க வைத்த நா.முத்து வும் போல தானும் ஒரு அழியாத பாடல் எழுதவேண்டும் என ஆசைப்பட்ட கவிஞர் கிரித்தயாவின் கனவு இந்தப் பாடல்.

வெள்ளி மழை, கிள்ளி விட்டது – என்றெல்லாம் பாடல் எழுதினால் அந்தப் பட்டியலில் சேர முடியாது என்பதை கவிஞர் உணர்ந்து கொள்தல் நலம். மழையைப் பற்றி எழுதும் போது காகிதக் கப்பல், நனைதல், சாரல், தூறல், மயில், தவளை இவற்றைத் தவிர வேறு எதையும் கற்பனை செய்ய முடியாத பாடல் எப்படி நிலைக்க முடியும் ?

இசையிலும் பாடல் வரிகளிலும் எதிலுமே நிறைவு தராத பாடல். ஒருவேளை காட்சிப் படுத்தல் நன்றாக இருக்கலாம்.

5 சொல்லம்மா

பா.விக்கும் ஒரு வாய்ப்பு இந்த படத்தில் பாடல் எழுத. இசையையும் பாடல் வரிகளையும் பொறுத்தவரையும் கொஞ்சமேனும் நிறைவு தரும் பாடல் இது ஒன்றே. “இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சக்கரை” என்றோ “மூக்கில்லா ராஜ்யத்து முறி மூக்கன் ராஜாவு” என்றோ உங்களுக்குப் பிரியமான மொழியில் இதை புரிந்து கொள்ளலாம்.

பல மாடி வீட்டில் வெகுமதி இருக்கும்
ஏழை வீட்டில் நிம்மதி இருக்குமடி

இசை

ரஜினியின் திரைப்படத்துக்குச் சற்றும் தகுதியில்லாத இசை. இரைச்சலையும், தெளிவின்மையையும், முரட்டுக்காளை காலத்து ராகங்களையும் வைத்துக் கொண்டு தேவையற்ற பில்டப்களைக் கொடுத்த இசையமைப்பாளரை ரசிகர்கள் “கவனித்துக்” கொள்ளட்டும்.

மொத்தத்தில்

சன் தொலைக்காட்சியில் சொல்வது போல ஒரு வரியில் இசை விமர்சனம் சொல்ல வேண்டுமெனில்

குசேலன் – உண்மையிலேயே பரம ஏழை.