பல் துலக்காதீங்க !!!

( ஹைய்யா… ஜாலி )

ஒவ்வொரு முறையும் ஏதேனும் சாப்பிட்டபின் பல் துலக்கவேண்டும் என குழந்தைகளுக்குப் போதிக்கிறீர்களா ? ஒரு நிமிடம் நில்லுங்கள். இந்த மருத்துவத் தகவலைப் படியுங்கள்.

ஒவ்வொரு முறை உணவு அருந்தியபின்னும் பல் துலக்குவது பல்லுக்கு ஆபத்து என்கிறது இந்த புதிய மருத்துவ ஆய்வு.

நாம் உண்ணும் உணவிலோ, குடிக்கும் பானத்திலோ உள்ள அமிலத் தன்மை பல்லிலுள்ள எனாமலை இளகும் நிலைக்கு ஆளாக்கும் என்றும், அந்த நேரத்தில் பல் துலக்கினால் அந்த எனாமல் கரைந்து விடும் வாய்ப்பு உண்டு எனவும். அது பல்லை பலவீனப்படுத்திவிடும் எனவும் படிப்படியாக விளக்குகிறது இந்த ஆய்வு.

பல்லைப் பாதுகாக்க அமிலத்தன்மை மிகுந்த உணவுகளை (உதாரணம் : குளிர்பானங்கள் ) உண்பதைத் தவிர்க்க வேண்டும், கூடவே அடிக்கடி பல் துலக்குவதையும் விட்டு விட வேண்டும் என்கிறது அந்த ஆய்வு.

இந்த ஆய்வுக்கு பள்ளிக்கூட குழந்தைகளை உட்படுத்தினார்கள். அவர்களில் 53 விழுக்காடு பேருடைய பல் வலிவிழந்தே காணப்பட்டதாம். அதற்குக் காரணம் உணவு உண்டவுடன் பல் துலக்குவது தான் என்கின்றனர் மருத்துவர்.

எனவே, பல் துலக்குவதை வகைப்படுத்துங்கள். உணவு உண்டபின் உடனே பல் துலக்குவதை விட்டு விடுங்கள். அதிகாலையில் பல் துலக்கலாம். இரவு உணவு உண்டு கொஞ்ச நேரத்துக்குப் பின் பல் துலக்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.