வரும் வழியில் – 2

காட்சி 1 :

வேளச்சேரி திரௌபதி அம்மன் கோயில் தெரு வழியாக காரை படகு போல ஆடி ஆடி ஓட்டிக்கொண்டு வரும்போதெல்லாம் காண முடியும் அரசு பள்ளி ஒன்றின் முன்னால் குவிந்து கிடக்கும் சீருடை மாணாக்கரை.

சாலையை முழுவதுமாக அடைத்துக் கொண்டும், முதுகில் மூட்டையைச் சுமந்து கொண்டும் நெடுநேரம் மாணாக்கர்கள் காத்திருந்தாலும் ஏதோ தியேட்டர் போல சரியா ஒன்பது மணி தாண்டிய பிறகு தான் கேட்டையே திறக்கிறார்கள்.

போக்குவரத்து சிக்கல் எழுகிறது, பிள்ளைகள் வெயிலில் நிற்கிறார்கள், முதுகில் காக்காய் தலை பனம்பழம் போல மூட்டை, கொஞ்சம் மனது வைத்து வெளியே காத்திருக்கும் பிள்ளைகளை உள்ளே அமரச் செய்யலாமே எனும் கேள்வி எப்போதும் என் மனதில் எழும்.

கேட் அருகே இரண்டு வாட்ச்மேன்களுடன், ஆயாக்கள் காத்திருக்க, அரைமணி நேரம் முன்னதாகச் சென்றால் கூட அழைத்துச் சென்று வகுப்பில் அமர வைக்கும் தனியார் பள்ளிகளுடன் அரசுப் பள்ளிகளையும் ஒப்பிடத் தோன்றுகிறது.

மேலை நாட்டைப் போல ஏன் அரசுப் பள்ளிகள் இங்கே முதன்மைப் பெறவில்லை என்பதற்கு இப்படிப் பட்ட சிறு சிறு அலட்சியங்களின் தொகுப்பே கூட காரணமாய் இருக்கலாம்.

காட்சி 2 :

கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் கவனித்தேன். முன்னே சென்று கொண்டிருந்த ஆட்டோவில் எழுதியிருந்தார்கள் “பெண்ணின் திருமண வயது 21”.

அடப்பாவிகளா … இப்போதெல்லாம் பெண்கள் இருபத்து ஏழு தாண்டினா தானே கல்யாணப் பேச்சையே எடுக்கிறாங்க ? ஒருவேளை இது பெண்கள் ரொம்பத் தாமதமா கல்யாணம் பண்ணக் கூடாதுன்னு எச்சரிக்கிறதுக்காக வெச்சிருக்காங்களா தெரியலையே ?

இன்னும் செல்போன் சிக்னல் கிடைக்காத ஒதுக்குப் புறமான கிராமங்களில் ஒருவேளை பெண்கள் இருபத்து ஒன்றாவது வயதில் திருமணம் செய்யலாம். ஆனால் நகரப் பகுதிகளிலும், தலையில் டிஷ் சுமக்கும் நாகரீகக் கிராமங்களிலும் 21 வயது திருமணத்துக்குப் பக்குவம் வராத வயதாகவே கருதப்படுகிறது.

ஆட்டோக்கள் தங்கள் வாசகங்களை

முப்பது நெருங்கும் முன் மணம் முடிப்பீர் “ என மாற்றி எழுதுதல் நலம்

காட்சி 3 :

வரும் வழியில் பெட்ரோல் நிலையங்கள் வெறிச்சோடிக் கிடந்தன. சிறிது நாட்களுக்கு முன் தொலைந்து போயிருந்த மரியாதையை பணியாளர்கள் மீண்டும் எடுத்து உடுத்தியிருந்தார்கள்.

கடந்த வாரம் தட்டுப்பாடு நிலவியபோது அட்டகாசம் காட்டியவர்களா இவர்கள் ? அட.. நம்பவே முடியலையே !

தடுப்பு வேலிகளும், கைகளில் கொம்பும், வாயில் வசவுமாக கொருக்குப் பேட்டை குமாரு போல இவர்களெல்லாம் சுற்றிக் கொண்டிருந்த பழைய நினைவுகள் மனதுக்குள் ஓடிக்கொண்டிருந்தபோது கேட்டார்.

“ஸ்பீடா” சார் ?

“நான் ரொம்ப ஸ்பீடா ஓட்டறதில்லை… ரெகுலரே போடுங்க

காட்சி 4 

ஒரு சந்திப்பில் மனநிலை சரியில்லாத, உடல் நிலையும் சரியில்லாத ஒருவர் கை ஏந்தினார். பர்சைத் துழாவி காசை எடுப்பதற்குள் அவர் அந்தப் பக்கமாகச் சென்று விட்டார்.

கண்ணாடியைத் திறந்து அந்த மனிதரைக் கூப்பிட்டேன். அவர் திரும்பி வந்து கொண்டிருந்தபோது அருகில் நின்றிருந்த பைக் காரர், தனது ஹெல்மெட்டின் கண்ணாடியை மெனக்கெட்டு திறந்து சொன்னார்.

“இவன் எப்பவுமே இங்கே தான் சும்மா சுத்திகினு கிடப்பான்…சார்… ”

“ஓ.. அப்படியா ? எப்பவாச்சும் ஏதாச்சும் கொடுத்திருக்கீங்களா … “ என்றேன்.

இதுக்குப் போயி மெனக்கெட்டு ஹெல்மெட் டோரை ஒப்பன் பண்ணிட்டேனே. ரொம்ப நக்கல் பிடிச்சவன் போலிருக்கு என்று மனதுக்குள் திட்டிக் கொண்டே அவர் ஹெல்மெட்டின் கதவையும், காதின் சன்னலையும் சாத்திவிட்டு திரும்பிக் கொண்டார்.

15 comments on “வரும் வழியில் – 2

  1. //ஓ.. அப்படியா ? எப்பவாச்சும் ஏதாச்சும் கொடுத்திருக்கீங்களா … “ என்றேன்.//

    நானும் பிச்சைக்காரர்களுக்கு காசு கொடுக்க மாட்டேன். சாப்பாடு வாங்கி கொடுத்துவிடுவேன். நான் சாப்பிடும் போது சிலர் மேசை அருகே வந்து கை ஏந்துவார்கள். அமர்து சாப்பிட சொல்வேன். மகிழ்ச்சியோடு சாப்பிட்டுவிட்டு போனவர்களும் உண்டு. கஞ்சன் காசை காட்ட மாட்டேன் என்கிறான் என முறைத்துவிட்டு போபவர்களும் உண்டு.

    Like

  2. //தலையில் டிஷ் சுமக்கும் நாகரீகக் கிராமங்களிலும் 21 வயது திருமணத்துக்குப் பக்குவம் வராத வயதாகவே கருதப்படுகிறது.//

    புதுகையில் உள்ள எங்கள் ஊர்களில் 17-21க்குள் பெண்ணுக்கு மணம் முடிப்பது வெகு இயல்பு. 21 வரைக்கும் வைத்திருந்தால் வயிற்றில் நெருப்பைக் கட்டிய மாதிரி ஆகிவிடுகிறார்கள்.

    பி.கு – இந்த ஊர்களில் பேருந்து வருகிறது, தொலைபேசி, தனியார்த் தொலைக்காட்சி, தண்ணீர்த் தொட்டி, மேல்நிலைப் பள்ளி இருக்கிறது – இது நாகரிக ஊரா தெரியவில்லை 🙂

    Like

  3. இன்னும் இருபது வயதுக்குள் திருமணம் முடிக்கும் பழக்கம் இருக்கிறது, சில இடங்களில். பெரும்பாலும் பொருளாதார ரீதியில் பின் தங்கியவர்கள் இப்படிச் செய்கின்றனர். எதிர்காலம் குறித்த பயம், சுமையை இறக்குதல், குடும்ப சூழல் போன்ற பல‌ காரணங்கள்…..

    Like

  4. //நானும் பிச்சைக்காரர்களுக்கு காசு கொடுக்க மாட்டேன். சாப்பாடு வாங்கி கொடுத்துவிடுவேன்.//

    நல்ல பையன்… 🙂

    Like

  5. //புதுகையில் உள்ள எங்கள் ஊர்களில் 17-21க்குள் பெண்ணுக்கு மணம் முடிப்பது வெகு இயல்பு. 21 வரைக்கும் வைத்திருந்தால் வயிற்றில் நெருப்பைக் கட்டிய மாதிரி ஆகிவிடுகிறார்கள்.

    //

    தகவலுக்கு நன்றி ரவிஷங்கர் 🙂

    //
    பி.கு – இந்த ஊர்களில் பேருந்து வருகிறது, தொலைபேசி, தனியார்த் தொலைக்காட்சி, தண்ணீர்த் தொட்டி, மேல்நிலைப் பள்ளி இருக்கிறது – இது நாகரிக ஊரா தெரியவில்லை
    //

    நிச்சயமா அநாகரீக ஊர் இல்லை 😉

    Like

  6. /இன்னும் இருபது வயதுக்குள் திருமணம் முடிக்கும் பழக்கம் இருக்கிறது, சில இடங்களில். பெரும்பாலும் பொருளாதார ரீதியில் பின் தங்கியவர்கள் இப்படிச் செய்கின்றனர். எதிர்காலம் குறித்த பயம், சுமையை இறக்குதல், குடும்ப சூழல் போன்ற பல‌ காரணங்கள்…..

    //

    கருத்துக்களுக்கு நன்றி கடுகு. 🙂

    Like

  7. //மேலை நாட்டைப் போல ஏன் அரசுப் பள்ளிகள் இங்கே முதன்மைப் பெறவில்லை என்பதற்கு இப்படிப் பட்ட சிறு சிறு அலட்சியங்களின் தொகுப்பே கூட காரணமாய் இருக்கலாம்.//

    100% அதுவேதாங்க காரணம்…
    அன்புடன் அருணா

    Like

  8. //இப்போதெல்லாம் பெண்கள் இருபத்து ஏழு தாண்டினா தானே கல்யாணப் பேச்சையே எடுக்கிறாங்க ? //

    அட நீங்க வேற , படிச்சி முடிப்பதற்கே குறைந்தது 22 வயாதாகிவிடுகிறது. அப்புறம் வலை விரித்து வரன் தேடி , விசாரித்து , மிச்ச சொச்ச பணம் புரட்டி .. எவ்வளவு வேலை இருக்குது. எல்லாம் முடியும் போது வயது மாத்திரம் நின்னுக்கிட்டு இருக்குமா என்ன?

    காட்சி 1, காட்சி 2- யும் மனதை கனக்க செய்தது.

    Like

  9. //அட நீங்க வேற , படிச்சி முடிப்பதற்கே குறைந்தது 22 வயாதாகிவிடுகிறது. அப்புறம் வலை விரித்து வரன் தேடி , விசாரித்து , மிச்ச சொச்ச பணம் புரட்டி .. எவ்வளவு வேலை இருக்குது. எல்லாம் முடியும் போது வயது மாத்திரம் நின்னுக்கிட்டு இருக்குமா என்ன?//

    அசத்திட்டீங்க போங்க. ஒரு பெண்ணோட பார்வையில் திருமண வயதை நியாயப்படுத்தியமைக்கு நன்றி 🙂

    //காட்சி 1, காட்சி 4- யும் மனதை கனக்க செய்தது//

    உண்மை 😦

    Like

  10. பெண்கள் 27 வயதுக்குத் திருமணம் செய்வது சரிதான். ஆனாப்பருங்க ரொம்ப எதிர் பார்ப்பு அதிகமாப் போயிடுது.திருமணம் என்ற செயலுக்கு ஆதாரமான குடும்பம் என்பதற்கு முக்கியத்துவம் குறைகிறதோ? மற்றவை முக்கியத்துவம் பெற்று விடுகிறதோ? இது பெண்களுக்கு மட்டுமில்லை ஆண்களுக்கும்தான்.
    அன்புடன்
    கமலா

    Like

  11. //ஆட்டோவில் எழுதியிருந்தார்கள் “பெண்ணின் திருமண வயது 21”.//
    எழுத்து பிழை இல்லாத வரை சரி தான் 😉

    Like

  12. //பெண்கள் 27 வயதுக்குத் திருமணம் செய்வது சரிதான். ஆனாப்பருங்க ரொம்ப எதிர் பார்ப்பு அதிகமாப் போயிடுது.திருமணம் என்ற செயலுக்கு ஆதாரமான குடும்பம் என்பதற்கு முக்கியத்துவம் குறைகிறதோ? மற்றவை முக்கியத்துவம் பெற்று விடுகிறதோ? இது பெண்களுக்கு மட்டுமில்லை ஆண்களுக்கும்தான்.
    //

    ரொம்ப தாமதமாக குழந்தை பெற்றுக் கொண்டால் அவங்க கல்யாணத்துக்க நாம கைத்தடியோட தான் நிக்க முடியும் 🙂

    Like

Leave a comment