அறிவியல் புனைக் கதை : உண்மையா அது என்ன ?


இன்று

தனக்கு முன்னால் கூடியிருந்த பதினேழு விஞ்ஞானிகளின் முன்னிலையில் தனது கண்டுபிடிப்பைப் பற்றி விளக்கத் துவங்கினார் வர்மா.

இந்தக் கருவி ஆராய்ச்சியாளர்களுக்காகவே கண்டுபிடிக்கப் பட்ட கருவி. வரலாறுகளைத் துருவித் திரிபவர்களுக்கு இந்தக் கருவி ஒரு கடவுள் என்று கூட சொல்லலாம். உதாரணமாக அகழ்வாராய்ச்சி போன்றவற்றில் கிடைக்கும் ஏதேனும் ஒரு பொருளைக் கொண்டு அந்தக் காலகட்டத்தை துல்லியமாகவும் விரிவாகவும் இந்தக் கருவி மூலம் கண்டுபிடிக்கலாம்.

வெறும் ஊகங்கள் எனும் அடிப்படையில் எடுக்கப்பட்ட பல வரலாற்று முடிவுகளை இந்தக் கருவி மாற்றி எழுதும். அதாவது ஒவ்வொரு காலகட்டத்திலும் புழங்கும் பொருட்களில் அந்தந்த காலகட்டத்தின் இயல்புகள் பதிவாகியிருக்கும் என்பதே எனது ஆராய்ச்சியின் மையம். உதாரணமாக ஒரு மண் குவளையை அகழ்வாராய்ச்சி கண்டுபிடித்தால் அதைக் கொண்டு அந்த காலகட்டத்தை முழுமையாக இந்தக் கருவி சொல்லிவிடும்.

அதுவும் காட்சியாக. உபயோகிக்கும் கருவியின் தன்மை, பழக்கம், சமூகத் தொடர்பு இவற்றைக் கொண்டு இந்தக் காட்சிப் படத்தின் தன்மை அமையும். தேவையான அளவு மூலக்கூறுகள் இல்லாத பட்சத்தில் இது வெறும் ஒரு புகைப்படமாய் கிடைக்கும்.

ஒரு எழுத்தாளனின் எழுத்தாணி உங்களுக்குக் கிடைத்தால் இந்த கருவியிடம் கொடுங்கள். அவருடைய படத்தையும், அவரது சூழலையும், வீட்டையும் வாழ்க்கையையும் கொஞ்சம் நேரடியாகவே கண்டுகொள்ளலாம். இது தான் இந்தக் கருவியின் சுருக்கமான அறிமுகம்.

இந்தக் கருவி தனது அடுத்த கட்டமாக, அந்தக் காலத்தின் ஒலியை மறு ஒலிபரப்பு செய்யும் சாத்தியக் கூறுகளை ஆராய்கிறது. அதாவது நமது ஒலி அலைகள் காற்றில் அலைந்து திரியும் எனவும், அது அழிவுறாது எனவும் கூறிய அறிவியலின் அடிப்படையில் இந்தக் கருவி தனது அடுத்த அடியை எடுத்து வைக்கிறது.

‘இந்தக் கண்டு பிடிப்பினால் நிகழக்கூடிய பயன்களை நினைத்தால் சிலிர்ப்பாக இருக்கிறது ஆனால் இதன் நம்பகத் தன்மை என்ன?’  கேள்வி எழுந்தது

ஒரு சில குறிப்பிட்ட சோதனைகளை மேற்கொண்டிருக்கிறோம். அதன் முடிவுகள் அனைத்தையும் இப்போது வெளியிட தலைமைக் குழு அனுமதிக்கவில்லை.

“எத்தனை ஆண்டுகள் வரை இந்த ஆராய்ச்சி பின்னோக்கிச் செல்லும் ?” அடுத்த கேள்வி எழுந்தது

சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தகவல்கள் வரை இதிலிருந்து கிடைக்கிறது. சில பொருட்கள் காலங்களைத் தாண்டியும் பழக்கத்தில் இருக்கும் போது அதன் உண்மையான சூழல் சரிவர பதிவாகாமல் போகவும் வாய்ப்பு உண்டு. ஆனால் இந்தக் கண்டு பிடிப்பில் குறிப்பிட வேண்டிய மிக சுவாரஸ்யமான தகவல் ஒன்று உண்டு.

வர்மா சொல்ல பார்வையாளர்கள் கூர்மையானார்கள்.

அதாவது ஏதேனும் ஒரு மனிதனின் எலும்புத் துண்டு ஒன்று கிடைத்தால், அவன் யார் எப்படி இருந்தான், எங்கே இருந்தான் என்பதை மிகத் தெளிவாக இந்த கருவி காட்டிவிடும். வர்மா சொல்லச் சொல்ல பார்வையாளர்கள் பரவசமடைந்தனர்.

ஒரு உதாரணத்தை மட்டும் குழுவின் அனுமதியுடன் இப்போது சொல்கிறேன். நமக்குத் தரப்பட்ட ஒரு எலும்பை வைத்துப் பார்த்ததில் அது சுமார் ஐநூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு பிரபலமான பெண்மணியினுடையது என்பது தெரிய வந்திருக்கிறது.

தற்போதைய நூற்றாண்டு மறந்து போன அந்த பெண்மணியின் பெயர் இளவரசி டயானா. 1997ல் அவர் ஒரு விபத்தில் மரணமடைந்திருக்கிறார்.
 
என்று சொல்ல கூடியிருந்தவர்கள் சிலர் தங்கள் பெருவிரல் நகத்தைப் பார்த்தார்கள். அவர்களுடைய உடலில் இம்பிளாண்ட் செய்யப்பட்டிருந்த கருவி ஆண்டு 2470 என்றது.

அன்று

வருடம் 2008.

“மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே போனால் என்னதான் செய்வது ? ஏதேனும் செய்தாக வேண்டும். அதற்காக வேற்றுக் கிரகங்களுக்குச் செல்வதும் நாம் நினைப்பது போல சாத்தியமில்லை. ஆனால் ஒன்று மட்டும் சாத்தியம்“  விக்கி பேசிக்கொண்டிருந்தான்.

அந்த பல்கலைக் கழக செமினாரில், விக்கி தனது வயிட் பேப்பரை விளக்கிக் கொண்டிருந்தான். கூடியிருந்தவர்கள் கொட்டாவியுடன் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

“இது மிகவும் எளிதான யோசனை. ஆனால் இதை மிகவும் தீவிரமாய் ஆராய்ந்தால் எதிர்காலத்தில் இடப் பற்றாக்குறை என்பதே இருக்காது. நாமே கிரகங்களை உருவாக்கிக் கொள்ளலாம்”

விக்கி சொல்ல கூடியிருந்தவர்கள் சிரித்தனர்.

விக்கி தொடர்ந்தான். இது சிரிப்பிற்கான சமாச்சாரமல்ல. நடைமுறை சாத்தியமானதே. கிரகம் என்று சொன்னதால் ஏதோ என்னவோ என கற்பனை செய்ய வேண்டாம். பறக்கும் நவீன குமிழிகளை ஏற்படுத்துவதே அது.

அதாவது தற்போதைய சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் போல சில கிலோமீட்டர்கள் சதுர பரப்பளவுள்ள பறக்கும் நகரங்களை சுகாதார குமிழிகளுக்குள் அடைத்து அதை வானத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் விட்டு விட வேண்டும். பூமியில் இடப்பற்றாக்குறை இருக்காது, மிதக்கும் குமிழிகள் தன்னிறைவு கொண்டவையாக இருக்க வழிகள் செய்யப்பட வேண்டும்.

குறிப்பாக ஆக்சிஜன் தேவையை நிறைவேற்ற சில கருவிகள் கண்டுபிடிக்கப்படலாம், அல்லது பெட்ரோல் நிரப்புவதைப் போல ஆக்சிஜனை நிரப்பலாம். இந்தக் குமிழி வானில் மிதக்க அதன் அடிப்பாகத்தில் மிகப்பெரிய தளம் அமைத்து மிதக்கும் வாயு நிரப்பலாம்.

இன்னும் சொல்லப்போனால், ஏலியன்களின் பறக்கும் தட்டு போல அவை வானில் நிற்கலாம், அதிலிருந்து பூமிக்கு சிறப்பு வாகனங்கள் இயக்கலாம், 

விக்கி சொல்லிக் கொண்டே போக, கூடியிருந்தவர்கள் ஏதோ ஒரு நாவலைக் கேட்பது போல சுவாரஸ்யமாகவும், நகைச்சுவை உணர்வுடனும் கேட்டுக் கொண்டிருந்தார்கள். சிலர் அருகில் இருந்தவர்களிடம் விக்கியைப் பற்றி ஏகத்துக்கு கிண்டலடித்துக் கொண்டிருந்தனர்.

இன்று

வருடன் 2470. வர்மா தொடர்ந்தார்.

எப்போதுமே முதல் சுவடுக்குப் பிறகு தான் அடுத்த சுவடு தொடரமுடியும். அந்த வகையில் இன்றைக்கு நாம் மிதந்து கொண்டிருக்கும் இந்த குமிழி  கூட முன்பே பழைய மக்களால் முயன்று பார்த்திருக்கக் கூடியதாக இருக்கலாம் என்பது எனது கணிப்பு.

கடந்த வாரம் சுவாரஸ்யமான ஒரு தகவல் கிடைத்தது. முன்பொரு காலத்தில் அனுமர் என்னும் ஒரு கதாபாத்திரம் ஒரு மலையைத் தூக்கிச் சுமப்பதாக ஒரு கதை உண்டாம். பழைய காலத்தில் எல்லாவற்றையுமே தீவிரமாக ஆராய்ந்து அதை பூடகமாய் சொல்லி வைப்பார்கள்.

எனவே அவர்களுடைய மிதக்கும் மலை என்பது இன்றைய குமிழ் தான் என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை. அனுமர் என்பவர் பூமிக்கும் வானத்திலுள்ள குமிழிக்கும் இடையே ஒரு தொடர்பை ஏற்படுத்தும் குறியீடு. அதாவது நமது டி.எஸ்.376767 குமிழிக்கும் பூமிக்கும் இடையே தொடர்பை ஏற்படுத்தும் நமது ஒளி இயங்கி டிஸ்வா 376767 எனக் கொள்ளலாம்.

இப்படி பல சுவாரஸ்யமான விளக்கங்கள் நமக்குக் கிடைக்க இந்த கருவி நமக்கு மிகவும் பயன் படும்.

இன்றைக்கு நமது கண்களில் இம்ப்ளாண்ட் செய்யப்பட்டிருப்பதைப் போல முன்பு அக்ஸஸ் சிஸ்டம் இருந்திருக்கவில்லை. எனவே மனிதர்கள் இப்போது இருப்பதைப் போல ஒரு குளோபல் மானிட்டரிங் கீழ் வரவில்லை.

இப்போது இருப்பதைப் போல தப்பிக்க முடியாத சூழல் கூட அன்றைக்கு இல்லை. சிலர் சட்டத்தின் கண்களிலிருந்து தப்பி ஒளிந்து கூட வாழ்க்கை நடத்த முடிந்திருக்கிறது.

இன்றைக்கு இருப்பதைப் போல தண்டனை என்பது நமது உடலில் இம்ப்ளாண்ட் செய்யப்பட்டிருக்கும் கருவியை இயக்கி மரணமோ, ஊனமோ, வலியோ தருவதல்ல என்பதும் நாம் அறிய முடிகிறது.

அத்தகைய ஒரு அறிவியல் பலமற்ற வாழ்க்கையைத் தான் இரண்டாயிரத்தின் துவக்கங்களில் நமது முன்னோர்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.

இன்றைக்கு ஆறு இலட்சம் குமிழிகளில் வாழும் அறுநூறு கோடி மக்கள் தான் அன்றைய உலக மொத்த மக்கள் தொகையே ! என்பது வியக்க வைக்கிறது. அத்தனை குறைவான மக்கள் தொகையை வைத்துக் கொண்டு உலகம் அப்போதே திணறியிருக்கிறது என்பது ஆச்சரியமான செய்தி. இவற்றையெல்லாம் அறிந்து கொள்ள இந்த கருவி மிகவும் பயன்படும்.

வர்மா சொல்லச் சொல்ல கூடியிருந்தவர்கள் விரல்களை வட்ட வடிவமாய் அசைத்து தாங்கள் அதை ஆமோதிப்பது போல தலையை ஆட்டினார்கள்.

அன்று 2008

“சார்… என்னோட வயிட் பேப்பர் பிரசண்டேஷன் எப்படி இருந்தது சார்” விக்கி பிரபசர் பாண்டுரங்கனின் காதருகே பவ்யமாய் கிசுகிசுத்தான்.

“என்னய்யா பிரசண்ட் பண்ணினே ? நீ என்ன பெரிய சுஜாதான்னு நினைப்பா ? ஓவரா கற்பனையை வளத்துக்காதேன்னு எத்தனையோ தடவை சொல்லியிருக்கேன். குமிழி, கிமிழின்னு சொல்லி கோல்டன் வாய்ப்பை கோட்டை விட்டுட்டியே ?”  பாண்டுரங்கன் கடுப்பானார்.

“சார்.. எதிர்கால உலகம்ங்கற தலைப்பில வித்தியாசமா ஏதாச்சும் சொல்லணும்ன்னு யோசிச்சிட்டே இருந்தேன் சார். இந்த ஐடியா எப்படியோ மனசுக்குள்ள சம்மணம் போட்டு அமர்ந்துச்சு. எழுத எழுத வித்தியாசமா கற்பனைகள் வந்துட்டே இருந்துது. அதனால தான் அதை எழுதினேன். எனக்கென்னவோ எதிர்காலத்துல இது சாத்தியமாகலாம்ன்னு தான் தோணிச்சுது. அதனால தான் அதையே பிரசண்ட் பண்ணினேன். ஆனா அதுக்கு இப்படி ஒரு பதிலை நீங்க சொல்லுவீங்கன்னு நான் நினைச்சுக் கூட பார்க்கலை” விக்கி சோகமானான்.

“இதப்பாரு, எகிப்து, துருக்கி, ஜோர்தான் – இப்படி பல நாடுகளை அலசி, அவற்றுக்கிடையே இருக்கக்கூடிய தண்ணீர் பகிர்வை ஆராய்ந்து ரம்யா ஒரு பிரசண்டேஷன் குடுத்தா பார்த்தியா ? இன்னும் ஐம்பது வருஷத்துல தண்ணிக்காக நாடுகளுக்கு இடையே சண்டை வருமாம். அவ்ளோ அற்புதமா அலசி சொல்லியிருக்கா ? நீ என்னடான்னா குமிழிங்கறே, மிதக்குங்கறே, கற்பனைங்கறே, விற்பனைங்கறே. சரி..சரி.. போ.. அடுத்த வருஷமாவது நல்லா பண்ணு.” பாண்டுரங்கன், காண்டுரங்கனாகி கிளம்பினார்.

இன்று

“வர்மா.. உன்னோட கண்டுபிடிப்புக்கு அதுக்குள்ள டி.எஸ்.373459 கிட்டேயிருந்து எதிர்ப்பு வந்துடுச்சி. இந்த கண்டுபிடிப்பை உடனே அழிக்கணுமாம். இல்லேன்னா நம்ம குமிழிக்கு பிரச்சனை தருவாங்களாம்” வர்மாவிடம் ஆராய்ச்சிக் குழு தலைவர் பேசினார்.

“என்னவாம்… என்ன பிரச்சனையாம் ?”

“இல்லை.. பல ஆயிரம் வருஷங்களா அவங்க நம்பிட்டிருக்கிற மத நம்பிக்கைகளை எல்லாம் இந்தக் கருவி அழிச்சுடுமாம். மதம், மதநூல்கள், மதத் தலைவர்கள், புராணங்கள் எல்லாவற்றோட உண்மை நிலையும் இந்தக் கருவியால வெளியே வந்துடும்ன்னு அவங்க பயப்படறாங்க”

“அது நல்லது தானே சார்… உண்மை எல்லாருக்கும் தெரியட்டுமே ?”

“அப்படியில்லை வர்மா. டி.எஸ்.376767 ங்கறது மிர்ஸா தெய்வத்தை வணங்கறவங்களோட குமிழி. அந்த தெய்வம் பொய்யின்னு ஒருவேளை நீ சொல்லிடுவியோன்னு பயப்படறாங்க. அப்படியே ஒவ்வோர் மதம் சார்ந்த குமிழிகளும் பயந்துட்டு நமக்கு எதிரா போராட ஆரம்பிச்சுடுவாங்களோன்னு எனக்கு கவலையா இருக்கு ?. அறிவியல் கண்டுபிடிப்பை விட மக்களுடைய மத உணர்வுகளுக்கு மதிப்பு குடுக்கணும்ன்னு சர்வதேச குமிழிக் குழு சொல்லிடுமோன்னு டென்ஷனா இருக்கு”

“அவங்க எது வேணும்னாலும் பண்ணட்டும் சார். எதுவேணா சொல்லட்டும். அதுக்காக இந்த உழைப்பை வீணடிக்கக் கூடாது சார். இந்த கண்டுபிடிப்பை நாம நல்லமுறையில பயன்படுத்தணும் சார்.” வர்மா ஆவேசமாய் பேச தலைவர் சாந்தமாய் பேசினார்.

“ இந்த உலகத்துல எதையும் நாம மறைவா செய்ய முடியாது வர்மா.. அது உனக்கே தெரியும். கொஞ்சம் பொறுமை காப்போம்”

“என்னசார்…. இப்போ என்ன பண்ண சொல்றீங்க. உண்மையைச் சொன்னா எவனுமே நம்ப மாட்டேங்கறான்… உண்மை என்ன அவ்வளவு மோசமா ?”

‘என்ன ஏதோ புதுசா சொல்றே ? என்ன உண்மை ?’

நேற்று, என்னோட சிந்தனையை ஐநூறு ஆண்டுக்கு முந்தைய ஒருத்தனுக்கு அனுப்பி வெச்சேன். அவன் அங்கே நிராகரிப்பை வாங்கிட்டு நிக்கறான். நான் இங்கே நிராகரிப்பை வாங்கிட்டு நிக்கறேன்.

அவன் எதிர்கால உண்மையைச் சொன்னான். நான் கடந்த கால உண்மையை சொல்ல நினைச்சேன்.

வர்மா சொல்ல தலைவர் நெற்றி சுருக்கினார்.

அந்த வேலையை நீ இன்னும் வுடலையா ? யாரந்த அப்பாவி ?

ஏதோ ஒரு விக்கி. 2008ல இருக்கான்.

23 comments on “அறிவியல் புனைக் கதை : உண்மையா அது என்ன ?

 1. நல்ல கரு, நல்ல நடையில் நன்றாக எழுதியிருக்கிறீர்கள்..

  எழுத்துப் பிழைகளை திருத்துங்கள். வாசிக்கும்போது அற்புதமான கதையின் வேகத்தை இடறுகின்றன.

  Like

 2. //நல்ல கரு, நல்ல நடையில் நன்றாக எழுதியிருக்கிறீர்கள்..

  எழுத்துப் பிழைகளை திருத்துங்கள். வாசிக்கும்போது அற்புதமான கதையின் வேகத்தை இடறுகின்றன
  //

  நன்றி வெண்பூ. பிழைகளை முடிந்த அளவு கவனமாய் விலக்குவேன். சில பிழைகள் தப்பிப்’பிழைத்திருந்தன’ 🙂 பிழை திருத்தி விட்டேன். இன்னும் இருக்கலாம், மன்னியுங்கள்.

  Like

 3. //இன்னும் ஐம்பது வருஷத்துல தண்ணிக்காக நாடுகளுக்கு இடையே சண்டை வருமாம். அவ்ளோ அற்புதமா அலசி சொல்லியிருக்கா ?//

  தங்கத் தண்ணீர் என படித்ததாக ஞாபகம்… பொட்ரோலாக இருக்கலாம்…

  Like

 4. யார் கண்டார்கள் தங்கத் தண்ணீர் பிராண்டியாக கூட இருக்கலாம்… அதுக்குள்ள ஆசை தீர குடிச்சிக்கனும்… என்ன சொல்றிங்க…

  Like

 5. ////இன்னும் ஐம்பது வருஷத்துல தண்ணிக்காக நாடுகளுக்கு இடையே சண்டை வருமாம். அவ்ளோ அற்புதமா அலசி சொல்லியிருக்கா ?//

  தங்கத் தண்ணீர் என படித்ததாக ஞாபகம்… பொட்ரோலாக இருக்கலாம்…
  //

  குடிக்கிற தண்ணீப்பா.. குடிக்கிற தண்ணி 🙂 ஏற்கனவே நைல் நதியும், யூப்ரடிஸும் யோசிக்க ஆரம்பிச்சாச்சு !

  Like

 6. //யார் கண்டார்கள் தங்கத் தண்ணீர் பிராண்டியாக கூட இருக்கலாம்… அதுக்குள்ள ஆசை தீர குடிச்சிக்கனும்… என்ன சொல்றிங்க…

  //

  ஆசை தீர குடிச்சிடணுமா ? இல்ல பிராண்டி தீர குடிச்சிடணுமா ? இரண்டுமே தீரும்ன்னு தோணலையே 🙂

  Like

 7. /முதல் பின்னூட்டத்தில் என் படம் வராமல் போனதை கடுமையாக கண்டிக்கிறேன்..

  //

  சரி.. சரி.. அதுக்கு அப்புறம் மூணு போட்டோ வந்துடுச்சுல்ல … அழுவாதே கண்ணு..

  Like

 8. /கதை நல்லா இருக்குங்க. கடைசி லைன்ல லிங்க் குடுத்தீங்க பாருங்க.. அசத்தல்…!//

  நன்றி அறிவியல் புனை கதை மன்னரே 🙂

  Like

 9. அருமையான கதை….

  ரெம்ப நல்லாருக்கு…

  நன்றி 🙂

  Like

 10. /*அப்படியில்லை வர்மா. டி.எஸ்.376767 ங்கறது மிர்ஸா தெய்வத்தை வணங்கறவங்களோட குமிழி. அந்த தெய்வம் பொய்யின்னு ஒருவேளை நீ சொல்லிடுவியோன்னு பயப்படறாங்க. அப்படியே ஒவ்வோர் மதம் சார்ந்த குமிழிகளும் பயந்துட்டு நமக்கு எதிரா போராட ஆரம்பிச்சுடுவாங்களோன்னு எனக்கு கவலையா இருக்கு ?. அறிவியல் கண்டுபிடிப்பை விட மக்களுடைய மத உணர்வுகளுக்கு மதிப்பு குடுக்கணும்ன்னு சர்வதேச குமிழிக் குழு சொல்லிடுமோன்னு டென்ஷனா இருக்கு”
  */

  எவ்வளவு தான் அறிவியலில் முன்னேறினாலும் மத சண்டை மாத்திரம் கூடவே வருமா? ஐயையோ, என்ன கொடுமை அண்ணாச்சி இது.

  கதை நன்றாக இருந்தது.

  Like

 11. //அருமையான கதை….

  ரெம்ப நல்லாருக்கு
  //

  நன்றி சோமசுந்தர மூர்த்தி. படித்து கருத்து சொன்னமைக்கு !

  Like

 12. //எவ்வளவு தான் அறிவியலில் முன்னேறினாலும் மத சண்டை மாத்திரம் கூடவே வருமா? ஐயையோ, என்ன கொடுமை அண்ணாச்சி இது.

  கதை நன்றாக இருந்தது
  //

  பழைய நூற்றாண்டுகளைப் புரட்டிப் பார்க்கும்போ அப்படித் தான் தோணுது 🙂

  Like

 13. சிறப்பான அறிவியல் புனைந்த கதை. உனக்கென்ன சுஜாதான்னு நினைப்பா ? – சிறந்த கற்பனையாளரை இட்டுக்காட்டியது அதைவிட சிறப்பு…
  நீங்கள் கூறி இருப்பதுபோல் “பிறரிடம் மறைத்து நாம் எந்த தப்பும் செய்ய முடியாது ” என்பது இப்பொழுதே பல நாடுகளில் சிலவிஷயங்களில் நடந்துகொண்டு இருக்கின்றன. இன்றும் ஒரு விபத்து என்றால் அவசர என்னை தொடர்புகொண்டாலும் அவ்வளவு எளிதில் உதவி கிடைப்பது இல்லை நம் நாட்டில். ஆனால் வெளிநாடுகளில் வாகனங்களில் பயன்படுத்தப்படும் ஒரு கருவியின் மூலம் ஏதேனும் அந்த வாகனத்துக்கு விபத்து நேர்ந்தால் அடுத்தநொடி விபத்துபகுதிக்கு அருகில் இருக்கும் கட்டுபாட்டறைக்கு தகவல் தெரிவிக்கப்படும். இன்னும் நமக்கு அந்த பயன்பாடு வந்துசேரவில்லை.
  இதுதான் பெரிய தப்பு.

  வாழ்த்துக்கள்.

  Like

 14. “என்னய்யா பிரசண்ட் பண்ணினே ? நீ என்ன பெரிய சுஜாதான்னு நினைப்பா ? ஓவரா கற்பனையை வளத்துக்காதேன்னு எத்தனையோ தடவை சொல்லியிருக்கேன்.

  Karpanai irunthadal than idu nalla kadhai nu ellorum sollaranga. Naanum sollaren. Neengalum next sujatha va varanum. idu mathiri science story’s neraya sollanum. Idha padikaravanga coming days la Unnmai aga think pannuvanga… Kanavu oru naal Nanavakum.. Vazhthukal…

  Like

 15. /Karpanai irunthadal than idu nalla kadhai nu ellorum sollaranga. Naanum sollaren. Neengalum next sujatha va varanum. idu mathiri science story’s neraya sollanum. Idha padikaravanga coming days la Unnmai aga think pannuvanga… Kanavu oru naal Nanavakum.. Vazhthukal…//

  நன்றி மாணிக்க வாசகம்..

  Like

 16. //சிறப்பான அறிவியல் புனைந்த கதை. உனக்கென்ன சுஜாதான்னு நினைப்பா ? – சிறந்த கற்பனையாளரை இட்டுக்காட்டியது அதைவிட சிறப்பு…
  நீங்கள் கூறி இருப்பதுபோல் “பிறரிடம் மறைத்து நாம் எந்த தப்பும் செய்ய முடியாது ” என்பது இப்பொழுதே பல நாடுகளில் சிலவிஷயங்களில் நடந்துகொண்டு இருக்கின்றன. இன்றும் ஒரு விபத்து என்றால் அவசர என்னை தொடர்புகொண்டாலும் அவ்வளவு எளிதில் உதவி கிடைப்பது இல்லை நம் நாட்டில். ஆனால் வெளிநாடுகளில் வாகனங்களில் பயன்படுத்தப்படும் ஒரு கருவியின் மூலம் ஏதேனும் அந்த வாகனத்துக்கு விபத்து நேர்ந்தால் அடுத்தநொடி விபத்துபகுதிக்கு அருகில் இருக்கும் கட்டுபாட்டறைக்கு தகவல் தெரிவிக்கப்படும். இன்னும் நமக்கு அந்த பயன்பாடு வந்துசேரவில்லை.
  இதுதான் பெரிய தப்பு. //

  மிக்க நன்றி பூவை சிவா…

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s