உலகின் மிகச் சிறிய பாம்பு !

யூ.எஸ் குவார்டர் நாணயத்தின் மேல் ஒய்யாரமாகப் போஸ்கொடுத்துக் கொண்டிருப்பது உலகின் மிகச் சிறிய பாம்பு. பாம்பு என்றால் படையும் நடுங்கும் எனும் பழமொழி இதனிடம் பலிக்காது போல.

கரீபியன் தீவு பார்படாசில் இந்த பாம்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரு சிறு மண் புழுவைப் போல கிடந்த இந்த உயிரினம் பாம்பு என கண்டறியப்பட்டதே ஒரு வியப்புக்குரிய செய்தி என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இதன் மொத்த நீளமே 10 செண்டீ மீட்டர்கள் தானாம். இது வளர்ந்த ஒரு பாம்பின் நீளம். சின்ன குட்டிப் பாம்புகள் இதில் பாதியளவு தானாம்

லெப்டோடைப்ளோஸ் கார்லே என பெயரிடப்பட்டுள்ள இந்த பாம்பைப் பார்ப்பதற்கு ஒரு நூடுல்ஸ் இழை போலிருக்கிறது என்கிறார் இதைக் கண்டு பிடித்த பிளேர் ஹெட்ஜஸ். இவர் அமெரிக்க உயிரியல் நிபுணர் என்பது குறிப்பிடத் தக்கது.

இத்தனை சின்னதா இருக்கே ! விஷம் இல்லாம இருந்தா சரி, அப்படித் தானே நினைக்கிறீங்க ?

நீங்க சுறுசுறுப்பான பார்ட்டியா ?

 

சுறுசுறுப்பாய் இருப்பவர்களுக்கும், சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்பவர்களுக்கும் புற்று நோய் வரும் வாய்ப்பு மிகவும் குறைவு என ஜப்பானில் நிகழ்த்தப்பட்ட மிகவும் விரிவான ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

இந்த ஆய்வில் ஆண்களும், பெண்களுமாக சுமார் 80,000 பேர் ஈடுபடுத்தப்பட்டனர். பொதுவாக உடற்பயிற்சிக்கும் ஆரோக்கியத்துக்கும் இடையேயான தொடர்பையே  ஆய்வுகள் முன்னிலைப்படுத்தும். இந்த ஆராய்ச்சி வெறும் உடற்பயிற்சியை மட்டும் கவனத்தில் கொள்ளாமல் ஆய்வு செய்யப்பட்ட நபரின் முழு வாழ்க்கை முறையையும் பரிசீலித்தது.

தினசரி வாழ்க்கையில் எப்படிப்பட்ட நிலையில் இயங்குகிறார் என்பதும், தினமும் உடலுக்கு எப்படிப்பட்ட வேலை தரப்படுகிறது என்பதும் கவனத்தில் இந்த ஆய்வு கவனத்தில் கொண்டது.

ஜப்பான் நாட்டில் நடத்தப்பட்ட இந்த ஆய்வு மக்களின் ஓய்வு, தூக்கம், உடற்பயிற்சி, உடல் உழைப்பு, தினசரி அலுவலின் தன்மை அனைத்தையும் கணக்கில் கொண்டு விரிவாக நடத்தப்பட்டது. இதன் முடிவில் தான் சுறுசுறுப்பான வாழ்க்கை எனில் புற்று நோய் பயத்தைக் குறைக்கலாம் எனும் முடிவு எட்டப்பட்டுள்ளது.

பொதுவாக இன்றைய நவீன உலகத்தில் உடலுழைப்புக்கு அதிகம் தேவையற்ற சூழலில் இந்த ஆராய்ச்சி முடிவு நம்மை சற்றே ஓடியாடி உழைக்க உற்சாகப் படுத்துகிறது எனலாம்.

உடலுக்குக் கொடுப்போம் தேவையான இயக்கம் – அதைக்
கொடுப்பதில் மனமே உனக்கென்ன தயக்கம் ?