கூட்டுக் குடும்பம் எனும் சுவர்க்கம்

 

குடும்ப உறவுகள் நாளுக்கு நாள் சிதைந்து வரும் சூழல் இது. கூட்டுக் குடும்பம் என்றால் என்ன என கேட்கக் கூடிய நிலைக்குத் தள்ளி விட்டது இன்றைய வாழ்க்கை முறை. இத்தகைய சூழலில் வியக்க வைக்கும் விதமாக ஒரே குடும்பத்திலுள்ள 80 பேர் ஒன்றாகக் கூடி இன்பமாகப் பொழுதைச் செலவிட்ட உன்னதமான அனுபவம் இங்கிலாந்தில் நடந்திருக்கிறது.

இங்கிலாந்திலுள்ள டிவான் என்னுமிடத்தில் இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் என பல இடங்களிலும் வசிக்கும் குடும்ப உறுப்பினர்கள் ஒன்றுகூடியிருக்கின்றனர். நான்கு தலைமுறை உறுப்பினர்களைக் கொண்ட இந்த குடும்பத்தில் அதிக வயதான எழுபத்து ஏழு வயதான டோனி கிக் முதல், மூன்று மாதக் குழந்தையான மெற்றில்டா எனும் பேரக் குழந்தை வரை அடக்கம்.

இந்த மொத்தக் குடும்பமுமே பீட்டர் கிரீன் பீல்ட் மற்றும் அவரது மனைவி ஃபெயித் இவர்களுடையது. இந்தக் குடும்பத்திலுள்ள எழுபத்து ஏழு வயதான டாக்டர் கிரீன்பீல்ட் என்பவருக்கு பத்து குழந்தைகள் இருபத்தாறு பேரப் பிள்ளைகள்.

1969ம் ஆண்டிலிருந்து வருடம் தோறும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஓரிடத்தின் ஒன்று கூடுவது வழக்கம் என்று தெரியவரும் போது வியப்பில் புருவங்கள் விரிகின்றன. கடந்த 2005ம் ஆண்டு அதிக பட்சமாக இந்தக் குடும்பத்திலுள்ளவர்கள் 112 பேர் ஒன்றுகூடியிருக்கின்றனர். அது கிரீன் பீல்ட் அவர்களின் மனைவியின் தந்தை ஜார்ஜ் தனது நூற்று இரண்டாவது வயதில் எல்லோருடனும் பொழுதைச் செலவிட வேண்டும் என விரும்பியதால் நிகழ்ந்தது என நினைவு கூர்கிறார் கிரீன் பீல்ட். ஆனந்தமான குடும்ப சந்திப்பு நடந்த மன நிறைவில் ஜார்ஜ் தனது 103 வது வயதில் கடந்த 2006 ல் மரணமடைந்திருக்கிறார்.

ஒரே இடத்தில் ஆனந்தமாக சிரித்து, பலவிதமான விளையாட்டுகளை விளையாடி பொழுதைப் போக்குவதைப் போல ஆனந்தமான அனுபவம் வேறு இல்லை என ஆனந்தம் மிளிர பேசுகிறார் கிரீன் பீல்ட். கடற்கரையில் ஒன்று கூடி மணல் வீடு கட்டி விளையாடுவது இவர்களின் முக்கியமான பொழுது போக்குகளின் ஒன்றாம் !

ஒரு வீட்டுக்குள்ளே இரு சுவர்கள் கட்டி தனித்தனி குடும்பம் நடத்தும் இன்றைய பலவீனமான உறவுகளிடையே கிரீன் பீல்ட் குடும்பம் வியக்க வைக்கிறது. கூட்டுக் குடும்பத்தின் தேவையை உலகுக்கு உரக்கச் சொல்லும் உதாரணக் குடும்பமாகவும் மிளிர்கிறது.