வரும் வழியில் : குசேலன் vs குஜாலன்

குசேலன்

வரும் வழியில் குசேலன் பத்தாவது நாள் எனும் போஸ்டர்கள் பல்வேறு வடிவங்களில் ஒட்டப்பட்டிருப்பதைக் கண்டபோது வியப்பாய் இருந்தது.

ரஜினி படத்துக்குக் கூட “பத்தாவது நாள்” போஸ்டர் ஒட்டவேண்டிய நிலமை வந்து விட்டது என்பதே குசேலனின் படு தோல்வியை ஒத்துக் கொள்வது போல் இருக்கிறது.

அடுத்த வாரம் பதினைந்தாவது நாள் போஸ்டர் ஒட்டப்படலாம். அதில் நயன் தாராவின் படம் முன்னிலைப்படுத்தப் படலாம். ரஜினிக்காக யாரும் வரலேன்னாலும் நயந்தாராவுக்காகவாவது சிலர் வரட்டுமே எனும் நல்ல நோக்கில்….

குசேலன் நவீன யுகத்திலும் பரம ஏழையாய் தான் இருக்கிறான் போல !
தரத்திலும், வசூலிலும்.

குஜாலன்

தாம்பரம் வரை வரும் வழியில் தினமும் பல்வேறு வயது வந்தோருக்கு மட்டுமான திரைப்பட போஸ்டர்களைக் காண முடிகிறது.

மாலினி – காமினி, படுக்கையறை , விருந்து என்றெல்லாம் பல போஸ்டர்கள். அந்தப் போஸ்டர்களைப் பார்த்தபோது மனதில் இரண்டு கேள்விகள் தோன்றின.

முதல் கேள்வி

தெருமுனை இண்டர்நெட் செண்டரில் பத்து ரூபாய்க்கு அரை மணி நேரம் இணைய பலான படம் பார்க்கும் சூழல் உருவாகியிருக்கும் சூழல் இது. சென்னையில் பலான சிடிக்கள் கடல் போல எங்கும் பிடிபடுவதாக பத்திரிகைகள் பறைசாற்றும் காலம் இது. இந்தக் காலகட்டத்தில், இன்னும் மக்கள் பாலியல் படங்களை விரும்பிப் பார்க்கிறார்களா ? அரையிருட்டில் இடைவேளையில் இரண்டு நிமிடம் ஓடும் மஞ்சள் துண்டுக்காக முகத்தில் துண்டு போட்டு திரையரங்கிற்குள் மக்கள் வந்து கொண்டு தான் இருக்கிறார்களா ?

இரண்டாவது கேள்வி.

தூயதமிழில் படுக்கையறை பத்மா என்றோ, காமம் கையளவு என்றோ தலைப்பு வைக்கும் இந்தப் படங்களுக்கு அரசின் வரிவிலக்கு உண்டா ?