ஆடையா ? அப்படீன்னா என்ன ?

உலகெங்கும் காடுகளை நாகரீக மனிதன் அழித்து வருவதால் பல பழங்குடி இனமே அழியும் அபாயம் இருக்கிறது என கவலை தெரிவிக்கிறார் உலக பழங்குடியினர் பாதுகாப்புக் குழுவான Survival International குழுவின் இயக்குனர் ஸ்டீபன் கோரி.

 

இதுவரை வெளி உலகத்தோடு சற்றும் தொடர்பே இல்லாத சுமார் நூறு பழங்குடி இனமாவது உலகில் நிச்சயம் உண்டு என அடித்துச் சொல்கிறார் அவர். இவற்றில் பாதி இனம் பிரேசில் மற்றும் பெரு நாட்டை ஒட்டிய பகுதிகளில் இருப்பதாக கருதப்படுகிறது.

 

உலகின் அடர்ந்த காடான அமேசான் காட்டுப் பகுதியின் மேல் பறந்த ஒரு விமானத்திலிருந்து வியப்பூட்டும் ஒரு பழங்குடி இனத்தைப் புகைப்படம் எடுத்திருக்கிறார்கள். இந்தப் புகைப்படத்தில் காணப்படும் மக்கள் உடலெங்கும் சிவப்பு மற்றும் கருப்பு வண்ணம் பூசியபடி வானத்தைப் பார்த்தபடி நிற்கின்றனர்.

விலங்குகளை மட்டுமே வேட்டையாடிப் பழக்கப்பட்ட இவர்கள் வானத்தில் பறந்த விமானத்தைக் கண்டு மிகப்பெரிய பறவை என நினைத்திருக்களோ, அல்லது அழிக்க வந்த சாத்தான் என நினைத்தார்களோ தெரியாது ஆனால் தங்களிடமிருந்த அம்பையும் வில்லையும் எடுத்து விமானத்தின் மீது எய்யத் தயாராகிவிட்டனர்.

 

இந்தக் காட்சி ஒன்றே இந்த பழங்குடியினர் வேறு எந்த இடங்களோடும் எந்தத் தொடர்பும் இல்லாமல் இருக்கிறார்கள் என்பதன் ஆதாரமாகும். விலங்குகளைப் பிடிப்பதற்குரிய கவனத்துடன் குனிந்த நிலையில் அதீத எச்சரிக்கை உணர்வுடன் சிலர் வானத்தைப் பார்ப்பதும் இந்த புகைப்படங்களில் பதிவாகியுள்ளது.

 

Survival International  குழுவின் ஜோஸ் கார்லோஸ் எனும் உறுப்பினர் இதுகுறித்து, நாகரீகம் எனும் பெயரில் நாம் செய்து வரும் தன்னலமான செயல்களினால் இத்தகைய ஒரு பூர்வீக இனமே பாதிப்புக்கு உள்ளாவது வருத்தத்துக்குரியது, என குறிப்பிடுகிறார். இத்தகைய பழங்குடியினருக்கு இருக்கும் வாழும் உரிமையை நாம் அவர்களுடைய வாழ்க்கைச் சூழலை சேதப்படுத்தாமலும், வாழும் சூழலை அழிக்காமலும் இருப்பதன் மூலம் நிலைநாட்டவேண்டும் வேண்டும் எனவும் இந்த குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.