சுப்ரமணியபுரம் எனும் சைக்கோப் படம் !

 

அளவுக்கு அதிகமாக விமர்சகர்கள் தலையில் தூக்கிக் கொண்டாடிய சுப்பிரமணிய புரம் என்னும் படத்தைப் பார்த்தேன்.

1980 களை கண்முன்னால் கொண்டு நிறுத்திய ஒரே காரணத்துக்காகப் படத்தைப் பார்க்க வேண்டுமெனில் நான் பேசாமல் ஒரு தலை ராகத்தையோ, இரயில் பயணங்களையோ இன்னொரு முறை பார்த்து விட்டு பேசாமல் போய் விட்டிருப்பேன்.

அமீர், பாலா இவர்களைப் பின் தொடர்ந்து தமிழுக்குக் கிடைத்திருக்கும் இன்னோர் இயக்குனர் என்பது அவர்களுடைய சாயலில் வந்திருக்கும் படத்திலேயே தெரிகிறது.

கண்கள் இரண்டால் – என வசீகரிக்கும் ஜேம்ஸ் வசந்தனின் இசையில் மிளிர்ந்த பாடலையும், கதா நாயகனின் வசீகரச் சிரிப்பையும், கதாநாயகியின் வெட்கக் கண்ணசைவையும் தவிர்த்துப் பார்த்தால் படம் அசோக் நகர் சைக்கோக் கொலையாளியைப் போல எரிச்சல் படுத்துகிறது.

எடிட்டிங்கிலும், பழைய சூழலைக் கொண்டுவந்ததிலும் பிரமிக்க வைக்கின்றனர். ஆனால் பருத்தி வீரனைப் போல கொடூரமான ஒரு இறுதிக் காட்சி. சமுத்திரக்கனியை ஆட்டோவில் காலால் மிதித்து நர நரவென அறுத்து அதை பையில் போட்டுத் திரிவதும், கதாநாயகனை சரமாரியாக வெட்டிக் கொல்வதும் என காட்சிகளில் வீசும் குருதி நாற்றம் அருவருக்க வைக்கிறது.

இப்படிப் பட்ட திரைப்படங்களின் வெற்றி மீண்டும் சைக்கோ இயக்குனர்களை தமிழுக்கு இறக்கு மதி செய்துவிடுமோ எனும் பயம் மிளிர்கிறது. நேற்று தான் சென்னையில் புதிய ஒரு திரைப்பட போஸ்டரைப் பார்த்தேன் படத்தின் பெயர் : போர்க்களம்  துணை வாசகம் :  KILL or Get Killed  !!!. தமிழக அரசு சலுகை அறிவிக்காமல் இருந்திருந்தால் படத்தின் தலைப்பே KILL or Get Killed ஆக இருந்திருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

பருத்தி வீரனின் கொடுமையான இறுதிக் காட்சி எரிச்சலடைய வைத்தது. அந்தப் படத்தை தமிழ் சனங்கள் நானூறு நாள் ஓட வைத்தனர். இந்தப் படத்தில் குருவின் அடியொற்றி இன்னும் சிலரைக் கொன்றிருக்கிறார் சசி குமார்.. மக்கள் ஒரு வெள்ளி விழாவையேனும் கொடுப்பார்கள்.

காட்சிகளை இயல்பாய் காட்டினால் அதுவே அற்புதமான படம் என சில அறிவு ஜீவிகள் நினைக்கின்றனர். அந்தப் படங்கள் நல்லாயில்லை என்று சொன்னால் ஏதோ அவர்களுடைய ரசனையின் மதிப்பு மக்கள் மத்தியில் பலவீனப்படுவதாக நினைக்கிறார்கள். நான் அறிவு ஜீவி இல்லை, எனவே இப்படிப்பட்ட கோரமான படங்களை என்னால் ரசிக்க முடியவில்லை. இந்தப் படத்தைப் பார்ப்பதற்குப் பதிலாக குசேலனைக் கோயில் கட்டிக் கும்பிடலாம்.

மீண்டும் ஒரு இரத்தக் களறியை நோக்கி நகர்கிறது தமிழ் சினிமா. பருத்தி வீரன் முன் மொழிய, சுப்ரமணிய புரம் வழிமொழிய வழியப்போகிறது திரைகளில் பிசுபிசுப்பாய் தமிழனின் ரசனையும், ரத்தமும்.

சீன நதியில் என் ஓடம்

அத்தி பூத்தார் போல கிடைத்த ஓய்வு வேளையில் வலைத்தளத்தை நோண்டிக்கொண்டிருந்தேன். சரி நம்ம தளத்தையெல்லாம் யாரெல்லாம் வந்து பாக்கறாங்க, எங்கெங்கே இணைப்பு கொடுத்திருக்கிறாங்க என பார்த்த போது நிறைய வியப்பு காத்திருந்தது.

முதல் வியப்பு  சீனத் தளத்தில்  , ஓவியம் போன்ற சீன எழுத்துக்களின் இடையே “கனியிலே கலை வண்ணம் கண்டார் “ எனும் நமது ஒரு பதிவின் சுட்டியும், பதிவின் சாராம்சமும். 

கவிப்பேரரசு பாணியில சொல்லணும்ன்னா சீன நதியிலும் என் ஓடம்

அதற்கும் நிறைய பேர் பின்னூட்டமிட்டிருந்தார்கள். என்னன்னு தான் புரியல. விவேக் கிட்டே கேட்டா, “ இங்கேயுமாடா ஜிலேபியைப் பிச்சுப் போட்டிருக்காங்க “ என்று கேட்டாலும் கேட்பார்.

சில ஸ்பானிஷ் தளங்களிலிருந்தெல்லாம் அலசல் வலைத்தளத்தின் சில பதிவுகளைப் போட்டிருந்தார்கள். பெரும்பாலும் படம் சார்ந்தவை. (அதை சொல்லணுமா என்ன ? )

Long Live China !

படத்துக்கான விளக்கம் : சீன தளத்தில் நம்ம படைப்பை பிரசுரித்ததற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், சீன ஒலிம்பிக் படம் ஒன்று J

நானும் வழங்குகிறேன் விருது !

எதெதுக்கோ விருது வழங்குகிறார்கள்  நாம் எதற்கு விருது வழங்கலாம் என உட்கார்ந்து யோசித்ததில் இந்த சிந்தனை முளைத்திருக்கக் கூடும். நன்றி நண்பரே !

நம்ம தளத்தைத் தொடர்ந்து படிக்கும் நண்பர்கள் நிறைய பேர் இருப்பதனால் யாருக்கு இந்த விருதை வழங்குவது எனும் குழப்பம் எழுந்தது. இதோ எனக்கு சட்டென நினைவுக்கு வந்த இவர்களுக்கு எனது விருதுகள். இன்னும் சிலர் நினைவுக்கு வந்தனர், ஆனால் அவர்கள் ஏற்கனவே விருது வாங்கி விட்டார்களாம் 🙂

வரிசை ஏதும் இல்லை…
1. குகன் – வலைத்தளங்கள் ஏதும் அமைத்துக் கொள்ளாமல், நல்ல எழுத்துக்களைத் தேடித் தேடிப் படிப்பவர். இலக்கியங்களை தினத்தந்தி போன்ற இதழ்களிலிருந்து கூட பொறுக்கி எடுக்கும் நுணுக்கமான வாசகர். இவருடைய பின்னூட்டங்களே ஒரு பதிவு அளவுக்கு அடர்த்தியாய் இருக்கும்.

ரயில் நிலையத்தில், கசகசப்பாய் ஒருநாள் பைகளைத் தூக்கிக் கொண்டு அவசரமாய் ஓடிக் கொண்டிருந்த ஒரு அசௌகரியமான சூழலில் பின்னால் இருந்து ஒரு குரல் கேட்டது

“நீங்க சேவியரா ?”

என்னோட பெயரைக் கூப்பிட்டு கேட்பது யார் என்று கொஞ்சம் வியப்புடன் திரும்பினால் ஒரு மெல்லிய இளைஞர்.

ஆமா… நீங்க ? என்றேன்…

குகன் – என்றார் புன்னகை கலையாத அமைதியுடன்.

இருட்டுக்கே கருப்படித்தது போல இருக்கும் எனது புகைப்படத்தை  எப்படி நினைவில் வைத்திருந்தார், எப்படி அடையாளம் கண்டு கொண்டார் என்பது இன்று வரைக்கும் எனக்குப் புரியாத புதிர்.

2. விக்கி   . விக்கியின் பின்னூட்டங்கள் அறிமுகமானபோது அவனுக்குள் இப்படி ஒரு எழுத்தாற்றல் இருக்கும் என நினைக்கவில்லை. ஆழமான வாசிப்பும், தகவல் சேமிப்பும் அவனுடைய கட்டுரைகளில் காணக் கிடைக்கின்றன. கூடவே அருமையான படங்களும்.

சமீபத்திய ஆச்சரியம், அவனது கவிதைகள் !

நடையில் பிசிறடிக்காத கவனமும், எழுத்துப் பிழைகளை விலக்கும் நுட்பமும் இருந்தால் தம்பிப் பயல் சென்று சேரும் இடம் மிக உயரிய இடம் என்பதில் ஐயமில்லை.

3. ஹேமா தாய் நாட்டை விட்டுத் தூரமாகிப் போன சூழல் எல்லோருக்கும் தமிழ் மீதும், இனத்தின் மீதும் அளப்பரிய நேசத்தை உருவாக்கி விடுகின்றது. இயல்பிலேயே ஆர்வம் இருப்பவர்களின் அந்த ஆர்வம் பலமடங்கு தூண்டப்பட்டு விடுகிறது.

ஹேமாவின் அறிமுகம் தூரத்துச் சகோதரியின் நேசம் போல தூய்மையாய், உற்சாகமாய் ஆனந்தமாய் விரிகிறது.

எளிமையாய், ஆனால் வலிமையான கவிதைகள் இவரது பக்கங்களில்.

4. குந்தவை  ஊர் ஊராக அலைந்து சோர்ந்து திரும்பும் ஒருவனை அன்னியோன்யமாய் அரவணைக்கும் குழந்தை போல மழலை நிகழ்வுகளில் மலர்ந்து கிடக்கிறது குந்தவையின் பக்கம்.

நல்ல எழுத்துக்களின் ரசனைக்காரி, அந்த ரசனையை மழலையின் வார்த்தைகளிலிருந்து பெற்றாரோ எனும் ஐயமும் உண்டெனக்கு

 5 பாஷா கவிதைகள் ரசனைக்குரியவை. சரளமான எழுத்து. மெல்லிய நகைச்சுவை என உரைநடை எழுதுபவர் கவிதைகளில் பல வேளைகளில் கலங்கடித்து விடுகிறார்.

கேரளக் கரையோரம் ஒதுங்கினாலும் இன்னும் தமிழ் வாசம் வீசும் எழுத்தாளர். நல்ல நண்பர்.

6. வி.கோ – கோபால்சாமி அபரிமிதமான நகைச்சுவை உணர்வை உள்ளுக்குள் வைத்திருப்பவர். எழுத்துக்களில் அவருடைய நகைச்சுவை இழையோடும். நகைச்சுவையை மீறி நல்ல சிந்தனை வைத்திருப்பவர் என்பதை பல சந்தர்ப்பங்களில் கண்டுணர முடிந்தது.
நல்ல நண்பர்.

நல்ல அரசியல், சினிமா சார்ந்த சூடான விஷயங்களை எடுத்து அவற்றை நகைச்சுவையாய் விமர்சிக்கத் துவங்கினால் இவர் வெகுஜன இதழ்களில் ஜொலிக்க வாய்ப்பு நிரம்பவே உண்டு.