இதுவல்லவோ கார் !

ஸ்பீட் லிமிட்  அல்லது அதிகபட்ச வேக அளவு என்பது மேலை நாடுகளைப் பொறுத்தவரையில் மிகவும் கண்டிப்பாகக் கடைபிடிக்கப்படும் சாலை விதி. இடைவெளி இருக்குமிடத்திலெல்லாம் வாகனத்தையும், தானிகளையும் நுழைத்துத் திருப்பும் நம்மூர் ஓட்டுனர்கள் பலருக்கும் இப்படி ஒரு விஷயம் இருப்பதே தெரியாது.

நம்ம கார், நம்ம ரோட், நம்ம விருப்பமான வேகத்துக்கு ஓட்டலாம் என ஓட்டினால் மேலை நாடுகளில் தண்டம் கட்டவேண்டியிருப்பது பல ஆயிரம் ரூபாய்கள். சில வேளைகளில் பத்தாயிரம் ரூபாய்க்கு மேலேயே !

எனவே வெளிநாடுகளில் வாகனங்களை குறிப்பிட்ட வேக அளவை விட அதிக வேகமாய் ஓட்டுகிறோமோ எனும் பதட்டம் வாகன ஓட்டிகளிடம் சாதாரணமாகவே காணப்படும். அதுவும் புதிதாய் ஒரு இடத்துக்குச் செல்கிறோம் எனில் சாலையோரங்களில் இருக்கும் வேக குறியீட்டு எண்ணைக் கவனிக்காமல் சென்று மாட்டிக் கொள்ளும் சிக்கலும் இருக்கிறது.

இதை எப்படி தவிர்ப்பது என யோசித்தவர்களின் சிந்தையில் உதித்திருக்கிறது இந்த புதிய கண்டுபிடிப்புக்கான விதை. அதைக்கொண்டு புதிய கார் ஒன்றைத் தயாரித்து வெள்ளோட்டம் விட்டிருக்கின்றனர் இங்கிலாந்தில்.

இந்த வாகனம் தானாகவே சாலையோரங்களில் இருக்கும் வேக அளவை கண்டுபிடித்து, அதை விட அதிக வேகத்தில் கார் சென்றால் வாகன ஓட்டுநரை எச்சரிக்கை செய்கிறது. 

வாகனத்தில் பொருத்தப்பட்டிருக்கும் ஒரு சின்ன கேமரா சாலையோரத்தில் இருக்கும் குறியீடுகளை வினாடிக்கு முப்பது எனுமளவில் புகைப்படம் எடுத்துத் தள்ளுகிறது. இவற்றிலிருந்து வேக எண் அடங்கிய குறியீடுகள் வாகனத்திலுள்ள ஒரு மென்பொருளினால் எண்ணாக மாற்றப்படுகிறது. அந்த வேகம் வாகனம் சென்றுகொண்டிருக்கும் வேகத்துடன் ஒப்பிடப்பட்டு அதிக வேகமெனில் எச்சரிக்கை ஒலி எழும்புகிறது, கூடவே செல்லவேண்டிய வேகமும் வாகனத்தில் தெரிகிறது.

பள்ளிக்கூடம், மருத்துவமனை போன்ற இடங்களில் சரியானவேகத்தில் செல்லவேண்டியது மிக மிக அவசியம் என்பதாலும், இல்லையேல் தண்டம் வழக்கத்தைவிட பலமடங்கு கட்ட   வேண்டியிருக்கும் என்பதாலும் இந்த கருவி ஓட்டுநர்களிடம் பெரும் வரவேற்பைப் பெறும் என கருதப்படுகிறது.

ஓட்டுநருக்கு சாலைகளின் அங்கீகரிக்கப்பட்ட அதிக பட்ச வேகம் என்ன என்பதை கவனிக்க வேண்டிய வேலை இதனால் மிச்சமாகிறது. வாகனமே வேடிக்கை பார்த்து விஷயத்தைச் சொல்லும் பணியை எடுத்துக் கொண்டிருக்கிறது. இப்போதைக்கு யூகேவிலுள்ள வேகக் குறியீடுகளை மட்டுமே இந்த மென்பொருள் உணர்ந்து கொள்கிறது. 

நம்ம ஊருக்கு இந்த வாகனம் சரிப்பட்டு வருமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. அப்படியே வந்தாலும் வாகனத்துக்கு சாலையோரத்தில் ஒட்டப்பட்டிருக்கும் அரசியல்வாதிகளின் போஸ்டர் தானே கண்ணில் படும்