இட்லி, தோசை சுட இயந்திரம் !

அரிசியும் உளுந்தையும் ஊற வைத்து, ஆட்டுரலில் அரைத்து காலையில் தோசையோ, இட்டிலியோ சுடுவது ரொம்ப கடினமாய் இருக்கிறதே என நினைப்பவர்களுக்காகத் தோன்றியவை தான் தெருவோர மாவு விற்பனை நிலையங்கள்.

காலையில் போனோமா, ஒரு கவர் மாவு வாங்கினோமா தோசை சுட்டோமா தின்றோமா சென்றோமா என உருமாறி விட்டது வாழ்க்கை.

இந்தத் தோசையைக் கூட ஒரு இயந்திரம் சுட்டுத் தந்தால் நன்றாக இருக்குமே என நினைக்கிறீர்களா ? அதற்கும் இயந்திரங்கள் இருக்கின்றன ! உண்மை தான் விளையாட்டு இல்லை !

மாவைப் போட்டால் இட்டிலி சுடலாம், தோசை சுடலாம், சப்பாத்தி சுடலாம், சமோசா செய்யலாம் அப்படி பல்வேறு இயந்திரங்கள் உள்ளன. அதுவும் நமது இந்தியத் திரு நாட்டில்.
CFRTI எனப்படும் நடுவண் உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தின் கண்டுபிடிப்புகள் இவையெல்லாம் . எல்லாவற்றுக்கும் உஷாராய் காப்புரிமையும் வாங்கி வைத்தாயிற்று.

ஒரு மணி நேரத்துக்கு எண்ணூறு இட்டிலி, எண்ணூறு சப்பாத்தி என இந்த இயந்திரங்கள் நல்ல சுவையாக உணவுகளை தயாரித்துத் தள்ளுகின்றன.

இப்படி இயந்திரங்கள் எல்லாம் எதுக்கு ? பேசாம கொஞ்சம் கொஞ்சமாய் சுட்டு தேவைக்கேற்ப பரிமாற வேண்டியது தானே எனும் உங்களுடைய எண்ணம் தவறில்லை. ஆனால் இப்படி ஒரு சூழல் நினைத்துப் பாருங்கள்.

ஒரு மாவட்டத்தில் ஒரு நிலநடுக்கம், அல்லது வெள்ள அபாயம் நேர்ந்து விடுகிறது ஆயிரக்கணக்கான மக்கள் தனியே பள்ளிக்கூடங்களில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர். அனைவருக்கும் உணவு வழங்க வேண்டும். எத்தனை பேர் எத்தனை மணி நேரம் தயாரிப்பது ? இந்த இயந்திரம் இருந்தால் போதும் சட்டென அனைவருக்கும் தேவையான உணவு கிடைத்து விடும்.

இந்த இயந்திரங்களை அடிக்கடி பரிசீலனை செய்து நவீனப்படுத்தவும் செய்கின்றனர். இப்போது தோசையுடன் கூடவே சட்னியும் தயாராக்குகின்றன இயந்திரங்கள்.
காலப்போக்கில் சின்ன இயந்திரங்கள் வரக் கூடும், அவை நமது சமையலறைகளில் இடம் பிடிக்கக் கூடும்.

சிறுவர்கள் + கைப்பேசி = 5 x புற்று நோய் வாய்ப்பு

இன்றைக்கு சிறுவர்களின் கைகளில் சாவாகாசமாய் அமர்ந்திருக்கின்றன விதவிதமான கைப்பேசிகள். பெரியவர்களுக்கு அழைப்பு வரும்போது கைப்பேசியை குழந்தைகளின் கையில் கொடுப்பதும் அவர்கள் அதை காதில் வைத்து வெகு நேரம் பேசுவதும் அன்றாட வாடிக்கையாகி விட்டது.

கைப்பேசி பயன்படுத்துவது ஆபத்து என பல்வேறு ஆய்வுகள் தெரிவித்திருந்தாலும் அதை மக்கள் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை என்பதையே இத்தகைய நிகழ்வுகள் நிரூபிக்கின்றன.

அத்தகைய மக்களை மீண்டும் ஒருமுறை எச்சரிக்கை செய்ய வந்திருக்கிறது சுவீடன் நாட்டு புதிய ஆராய்ச்சி முடிவு ஒன்று.

பதினாறு வயதுக்கு உட்பட்டவர்கள் கைப்பேசியை அதிக நேரம் பயன்படுத்தினால் அவர்களுக்கு மூளைப் புற்று நோய் வரும் வாய்ப்பு மற்றவர்களை விட ஐந்து மடங்கு அதிகமாகும் என்பதே அந்த அதிர்ச்சியளிக்கு ஆராய்ச்சி முடிவு. லண்டனில் நடைபெற்ற ஆராய்ச்சி உயர்குழு கூட்டத்தில் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

கிளையோமா எனும் ஒருவகை மூளைப் புற்று நோய் இந்த அதீத கைப்பேசிப் பயன்பாட்டின் விளைவாக உருவாகும் என்றும், பதினாறு வயதுக்கு உட்பட்டவர்களுக்கு இந்தப் பாதிப்பு அதிகம் இருக்கும் எனவும் இந்த ஆராய்ச்சியை நடத்திய சுவீடன் பல்கலைக்கழத்தைச் சேர்ந்த பேராசிரியர் லெனார்ட் ஹார்டெல்.

இருபது வயதுக்கு உட்பட்ட அனைவருமே கைப்பேசியின் பயன்பாட்டை அறவே விட்டு விடவேண்டும் எனவும், மிக மிக அவசியமான நேரங்களில் மட்டுமே கைப்பேசியைப் பயன்படுத்த வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்துகிறார்.

சிறுவயதினருக்கு மண்டை ஓடு உறுதியற்று இருப்பதாலும், கதிர்களைக் கடத்தும் தன்மை அதிகம் இருப்பதாலும் கைப்பேசி அலைகளால் மூளை நேரடியான தாக்குதலுக்கு உள்ளாகும் என்பதே இவர்களுடைய முடிவு.

லண்டனின் வெளியிடப்பட்ட இந்த அறிக்கை பிரிட்டன் முழுவதும் ஒருவித அச்ச உணர்வை ஏற்படுத்தியிருக்கிறது. காரணம் அங்கு பதினாறு வயதுக்கு உட்பட்ட சிறுவயதினரில் 90 விழுக்காடு பேர் கைப்பேசி வைத்திருக்கிறார்கள். ஆரம்பப் பள்ளி செல்லும் பச்சிளம் குழந்தைகளில் 40 விழுக்காடு பேர் கைப்பேசி வைத்திருக்கிறார்கள்!

கைப்பேசியை அதிகம் பயன்படுத்துவதால் அதனால் ஏற்படும் விளைவுகளைக் குறித்து மிக மிக விரிவாக ஆராய்ச்சி நடத்த பிரிட்டன் திட்டமிட்டுள்ளது. இந்த ஆய்வுக்கு தொலைதொடர்பும் ஆரோக்கியமும் என பெயரிடப்பட்டுள்ளது. இதில் 90000 பேர் ஈடுபடுத்தப்படுவார்கள் இதன் முடிவு வெளியாகும் போது குழந்தைகளின் கையில் இருப்பது தொடர்பு சாதனமா ? இல்லை புற்று நோய் பரிசளிக்கும் சாதனமா என்பது இன்னும் தெளிவாகும்.

இந்த ஆராய்ச்சி ஒரு எச்சரிக்கை மணி. குழந்தைகளையும், பதின்வயதினரையும் தீய பழக்கங்களிலிருந்து பாதுகாப்பது போல கைப்பேசிப் பயன்பாட்டிலிருந்தும் பாதுகாக்க வேண்டும் என முத்தாய்ப்பு வைக்கிறார் பேராசிரியர் ஹார்டெல்.

குண்டானவர்கள் இனிமேல் நிச்சயம் இளைக்கலாம் !

“எல்லா பாடும் இந்த அரை சாண் வயித்துக்காகத் தானே “ என்றும் “பசி வந்தால் பத்தும் பறந்து போகும்” என்றும் நமது பாட்டிகள் பல பழ மொழிகளைச் சொல்வதைக் கேட்டிருப்போம். இப்போதெல்லாம் “ பழமொழியா ? அப்படின்னா என்னப்பா ? எனக் கேட்கும் தலை முறையே உருவாகி வருகிறது என்பது வேறு விஷயம். அது ஒருபுறம் இருக்கட்டும்.

பசி மனுக்குலத்தைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது என்பதை மறுக்க முடியாது. பசி பட்டினியாக உருமாறுவதும், வறுமையினால் உயிர்கள் மடிவதும் என உலகின் ஒரு முகம் முனகிக் கிடக்கிறது.

அளவுக்கு மிஞ்சிய உடல் எடையுடன், உணவை தீவிரமாய்க் கட்டுப்படுத்தி உடலின் கொழுப்பைக் கரைக்கும் முயற்சியில் உலகின் இன்னொரு முகம் மும்முரமாய் கிடக்கிறது.

இந்தப் பசி மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் அதிக எடையுடன் கூடிய மக்களுக்கு மெலிவது எளிதாகியிருக்கும், பட்டினியுடன் கிடப்பவர்களுக்கு கொஞ்சம் உயிர்கிள்ளும் வலியாவது குறைவாய் இருந்திருக்கும் என நம்மைப் போலவே விஞ்ஞானிகளும் பல ஆண்டுகாலமாக யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த சிந்தனையின் முதல் கட்ட வெற்றியாக பசியைக் கட்டுப் படுத்தும் வழியை அவர்கள் கண்டறிந்துள்ளார்கள்.

பசியைத் தூண்டும் கிரெலின் என்றொரு ஹார்மோன் நமது உடலில் இருக்கிறது. அது தான் நமக்கு எப்போது பசிக்க வேண்டும், எப்போது நாம் சாப்பிடவேண்டும் என உள்ளுக்குள் அமர்ந்து ஒரு சர்வாதிகாரியாய் சட்டங்களை இயற்றிக் கொண்டிருக்கிறது.

இந்த ஹார்மோனின் 90 விழுக்காடும் வயிற்றின் மேல்பகுதியாகிய பண்டஸ் எனுமிடத்திலிருந்தே உருவாகிறதாம். இந்த ஹார்மோன் உருவாக வேண்டுமெனில் நல்ல இரத்த ஓட்டம் அந்தப் பகுதிக்கு அவசியம். அதனால் தான் உடற்பயிற்சி செய்யும் போது இரத்த ஓட்டம் அதிகமாகி, ஹார்மோன் அதிகமாய் சுரந்து பசியெடுக்கிறது.

இந்த ஹார்மோன் உற்பத்தி குறைந்தால் பசியெடுப்பது குறையும். பசியெடுப்பது குறைந்தால் குறைவாய் உண்டால் போதும், குறைவாக உண்பதால் உடல் குண்டாவது தடுக்கப்படும். இப்படியெல்லாம் விஞ்ஞானம் விளக்குகிறது. இந்த ஹார்மோன் உற்பத்தியைக் குறைக்க அந்தப் பகுதிக்குச் செல்லும் இரத்த ஓட்டத்தைக் குறைப்பதே இப்போதைக்குத் தெரிந்த ஒரே வழியாம்.

நல்ல ஆரோக்கியமான பன்றிகளை வைத்து இப்போதைக்கு இந்த சோதனையை வெற்றிகரமாக நடத்தியிருக்கிறார்கள். பன்றிகளுக்கும் மனிதர்களுக்கும் உடல் உறுப்புகளின் அமைப்பு ஒத்திருப்பதால் மனிதர்களிடமும் இது நிச்சயம் வெற்றிபெறும் என்கிறார் இந்த ஆராய்ச்சியை நடத்திய விஞ்ஞானி ஜாண் ஹாப்கின்ஸ்.

இதன் பக்க விளைவுகள் என்ன ? இதனால் உடலுக்குத் தேவையான சத்துகள் தேவையான நேரத்தில் கிடைக்குமா ? இந்த ஹார்மோன் குறைவாய் சுரந்தால் வேறு ஏதேனும் இன்னல் நிகழுமா என பல்வேறு வகைகளின் இதன் ஆய்வுகள் தொடர்கின்றன.

எப்படியும் கூடிய விரைவில் பசியில்லா மனிதர்களைப் படைத்து விடுவார்கள் விஞ்ஞானிகள் என்றே தோன்றுகிறது !

குண்டாயிருக்கீங்களா ? நீங்க அறிவாளிதான் போல !!!

உங்க உடம்பு ரொம்ப குண்டா இருக்கா ?, நீங்க ரொம்ப அதிகமா யோசிக்கிறீங்கன்னு நினைக்கிறேன் !! என்கிறது கனடா நாட்டு ஆராய்ச்சி ஒன்று. மூளையைக் கசக்கி வேலை செய்பவர்களுக்கு உடல் பருமனாக வாய்ப்பு இருக்கிறது என்பதே அந்த ஆராய்ச்சியின் மையம்.

அதாவது நல்ல அறிவு சார்ந்த வேலைகளைச் செய்யும் போது உடலுக்கு நிறைய கலோரி சக்தி தேவைப்படுகிறதாம். எனவே அந்தத் தேவையை நிவர்த்தி செய்ய அதிகம் சாப்பிட வேண்டிய சூழல் உருவாகுமாம். அதிகம் சாப்பிட்டால் குண்டாவோம் என்பதைத் தனியே சொல்லவும் வேண்டுமா ?

இவர்கள் தங்களுடைய ஆராய்ச்சியில் பல்வேறு தேர்வுகளை வைத்து ஒவ்வொரு தேர்வுக்கும் எவ்வளவு கலோரி உடலுக்குத் தேவைப்படுகிறது என்பதைக் கணக்கெடுத்திருக்கிறார்கள். குறைவாக மூளையைப் பயன்படுத்த வேண்டிய வேலை செய்தவர்களுக்கு மிகவும் குறைவாகவே சக்தி தேவைப்பட்டிருக்கிறது.

தேவைப்படும் கலோரி, செய்யும் வேலையைப் பொறுத்து மூன்று கலோரியோ முன்னூறு கலோரியோ என ஒழுங்கில்லாமல் அதிகரிக்குமாம். இப்படி அதிகரிக்கும் போது உடலுக்கு ஏதாவது சாப்பிட வேண்டி வருகிறது, அது உடலில் சேர்கிறது.

இவர்களுக்கு குருதிச் சோதனையும் நிகழ்த்தப்பட்டது. தேர்வுக்கு முன் குருதி சோதனை செய்து பார்த்திருக்கிறார்கள். பிறகு தேர்வின்போதும் சோதனை செய்திருக்கிறார்கள். முதலில் அமைதியாய் இருந்த குளுகோஸ் அளவும் இன்சுலின் அளவும் மூளையைப் பயன்படுத்திச் செய்ய வேண்டிய அறிவு சார் வேலை வந்தபோது எக்குத் தப்பாக எகிறியிருக்கிறது.

இது உடலுக்கு அதிக உணவு வேண்டுமெனக் கேட்கும். உட்கார்ந்து மூளையைக் கசக்கி வேலை செய்பவர்கள் பொதுவாகவே உடற்பயிற்சி செய்யாமல் சோம்பேறிகளாகவே இருப்பார்கள். எனவே இவர்கள் அதிகம் உண்டு, குறைவாய் உடற்பயிற்சி செய்து அதிக எடையுடன் கூடியவர்களாக மாறி விடுகின்றனர்.

இப்படி ஒரு ஆராய்ச்சி முடிவைச் சொல்லியிருக்கிறது கனடாவின் கியூபக் நகரில் அமைந்துள்ள லாவல் பல்கலைக்கழகம்.

இனிமேல் யாராவது, “என்னப்பா ரொம்ப குண்டாயிட்டே, தொப்பை வேற யானைக் குட்டியாயிடுச்சு” என்று கிண்டலடித்தால்,

“என்னப்பா… உன்னை மாதிரியா, எனக்கு மூளையைக் கசக்கி வேலை செய்ய வேண்டியிருக்கு இல்லையா” என சிரித்துக் கொண்டே சொல்லி விடுங்கள்.

கருவைப் பாதிக்கும் தாயின் அழகுசாதனப் பொருட்கள் !!!

இன்றைய வணிக உலகம் எல்லோரையும் அமிலக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறதோ என்று தோன்றுகிறது. புற்றீசல் போலக் கிளம்பும் அழகுசாதனப் பொருட்கள் கருவிலிருக்கும் குழந்தையையே பாதிப்படைய வைக்கிறது எனும் அதிர்ச்சிகரமான ஆராய்ச்சி முடிவு ஒன்றை வெளியிட்டுள்ளனர் ஸ்காட்லாந்திலுள்ள எடின்பரா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.

எல்லோரையும் போலவே தாய்மை நிலையிலிருக்கும் பெண்களும் கிரீம்களும், ஃபெர்பியூம்களும் பயன்படுத்துவது நாம் அறிந்ததே. ஊடகங்களும் தேவையற்ற பல பொருட்களை “தாயின் அத்தியாவசியத் தேவை “ எனக் கூவிக் கூவி விற்றுக் கொண்டிருக்கின்றன. ஆனால் அது தாய் தன்னை அறியாமலேயே தன் குழந்தைக்கு வழங்கும் நோய் என்பதை இந்த ஆய்வு வருத்தத்துடன் சொல்கிறது.

அதிலும் குறிப்பாக கருவில் இருக்கும் குழந்தை ஆணாய் இருந்தால் அந்தக் குழந்தைக்கு பிற்காலத்தில் ஆண்மைக் குறைவு, குறைந்த உயிரணுக்கள் எண்ணிக்கை போன்ற சிக்கல்கள் வருவதற்கு வாய்ப்பு அதிகமாம்.

எட்டு வாரம் முதல் பன்னிரண்டு வாரம் வரையிலான தாய்மைக் காலத்தில் கருவிலிருக்கும் குழந்தைகளின் இனப்பெருக்க உறுப்புகள் உருவாகின்றன. சில ஹார்மோன்கள் இந்த கால கட்டத்தில் தூண்டப்பட்டு ஆண் குழந்தைகளின் இனப்பெருக்க உறுப்புகளுக்கான அடித்தளத்தை அமைக்கின்றன. இந்தக் காலகட்டத்தில் தாய் பயன்படுத்தும் அழகுப் பொருட்கள் குழந்தையின் ஹார்மோன் தூண்டுதலைத் தடை செய்கின்றன.

டெஸ்டோஸ்ரோன் எனும் ஒரு குறிப்பிட்ட ஹார்மோன் ஆண்களின் இனப்பெருக்க வளர்ச்சிக்கு பெரிதும் தேவையானது. அதன் மீது இந்த அழகு சாதனப் பொருட்கள் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இப்படியெல்லாம் பட்டியலிட்டு தாய்மை நிலையில் இருக்கும் பெண்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்துகின்றார் இந்த ஆராய்ச்சியை முன்னின்று நடத்திய பேராசிரியர் ரிச்சர்ட் ஷார்ப் என்பவர்.

இந்த அமிலங்களால் புற்று நோய் வரும் வாய்ப்பு கூட இருப்பதாக அவர் அச்சம் தெரிவிக்கின்றார். எனவே தாய்மை நிலையில் இருக்கும் பெண்கள் அழகு சாதனப் பொருட்களை அறவே தவிர்ப்பதே நல்லது என அவர் வலியுறுத்துகின்றார்.

புத்தகப் பிரியர்களுக்கு மட்டும் !!!

 

வெளியூருக்குச் செல்லும்போதெல்லாம் வாசிப்பதற்கென்று நான்கைந்து புத்தகங்கள் எடுத்துச் செல்ல விரும்புவோம். ஆனால் எடை பயமுறுத்தும். கடைசியில் வீட்டில் இருக்கும் புத்தகங்களில் எடை குறைவான நூல்களின் ஓரிரு நூல்களை எடுத்துக் கொண்டு  திருப்தியடைந்து விடுவோம்.

சில புத்தகங்கள் வாசிக்க வேண்டுமென ஆர்வம் கொப்பளிக்கும், ஆனால் தெளிவற்ற எழுத்துக்களும், பழைய சிதைந்த எழுத்துக்களும் வாசிக்க விடாமல் தொல்லை படுத்தும்.

கொஞ்சம் வயதானவர்கள் என்றால் கேட்கவே வேண்டாம், பொடிப் பொடியாய் எழுதப்பட்டிருக்கும் எழுத்துக்களை உற்று உற்றுப் பார்த்து வாசிப்பதிலேயே மிச்சமிருக்கும் வயதும் ஓடிப் போய்விடும்.

இத்தனை பிரச்சனைகளும் ஒரே நொடியில் தீர்ந்து விட்டது என்றால் நம்புவீர்களா ?
இனிமேல் நீங்கள் பயணம் போகும் போது ஐநூறு புத்தகங்களை உங்கள் சட்டைப் பையில் சொருகிக் கொள்ளலாம் என்றோ, நூலின் எழுத்துருவை உங்களுக்குப் பிடித்த அளவுக்கு பெரிதாக்கி வாசிக்கலாம் என்றோ சொன்னால் நம்புவீர்களா ?

நீங்கள் நம்பித் தான் ஆகவேண்டும். சோனி ரீடர் என்றொரு புதிய கருவி வந்திருக்கிறது உங்களை நம்பவைக்க. ஒரு சிறு புத்தகத்தின் அளவே உள்ள இது ஒரு மின்னணுப் புத்தகம்.

இப்போது சந்தையில் பிரபலமாகி வரும் மின் நூல்களை இந்த மின்னணுப் புத்தகத்தில் சேமித்து வைத்தால் போதும். எப்போது வேண்டுமெனிலும் வாசிக்கலாம்.  நூற்றுக் கணக்கான நாவல்களையும், கவிதை நூல்களையும், கட்டுரை நூல்களையும் இதனுள் சேமித்து வைத்துக் கொள்ளலாம்.

பிடித்தமான அளவுக்கு எழுத்துருவைப் பெரிதாக்கிக் கொள்ளலாம். எத்தனை பக்கம் படித்தேன் என ஒவ்வொரு முறையும் குழம்பவும் தேவையில்லை. ஒவ்வொரு முறை இதைத் திறக்கும் போதும் கடந்த முறை எத்தனைப் பக்கங்கள் படித்தீர்கள் என்பதை நினைவில் வைத்திருந்து சரியாய் அதே பக்கத்தில் உங்களைக் கொண்டு செல்லும்.

கணினியில் இந்த வசதிகள் எல்லாம் உண்டு. ஆனால் என்ன, கணினியை நீங்கள் குளியலறையில் கொண்டு சென்று வாசிக்க வசதிப்படாது. செல்லுமிடமெல்லாம் தூக்கிச் செல்லவும் முடியாது. ஆனால் இந்தக் கருவி அப்படியல்ல.

புத்தகம் கிழிந்து போகும் என்ற கவலையும் இந்தக் கருவியில் இல்லை. எப்போது வேண்டுமானாலும் புது நூல்களை நுழைக்கவும் செய்யலாம், பழைய நூல்கள் படித்தபின், அல்லது வேண்டாமென தோன்றும் கணத்தில் அழித்துவிடவும் செய்யலாம்.

இந்த புதிய மின்னணு நூல் பிரபலமாகும் என்றும், இது புத்தகப் பிரியர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றும் தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர். இனி வரும் காலங்களில் மின் நூல்கள் அதிகம் விற்பனையாகவும், காகித பயன்பாடு குறைந்து காடுகள் காப்பாற்றப்படவும் இத்தகைய கருவிகள் மிகவும் துணை செய்யும் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால் என்ன, வீட்டுக்கு நண்பர்கள் வரும்போது இது தான் என்னோட புத்தக அலமாரி என நீண்ட அலமாரியையும் அதில் நிரம்பி வழியும் நூல்களையும் காட்டிப் பெருமையடிக்க முடியாது. எங்கேப்பா உன் நூலகம் என யாராச்சும் கேட்டால் சட்டைப் பையிலிருந்து இதை எடுத்து நீட்ட வேண்டியது தான்.

இந்த இடம் எங்கே இருக்கு சொல்லுங்க பாக்கலாம் !!!

 

அழகான தெளிந்த நீர்…
தலையாட்டும் மரங்கள்….
இலக்கிய நூலில் வரது மாதிரி ரம்மியமா இருக்கே இந்த இடம் …
ஊட்டி பக்கமா ? இல்லை கொடைக்கானல் பக்கமா ?

ஊஹூம்… ஊஹூம்

 

பெரிய ஆறு மாதிரியும் இருக்கு,
ஒரு நதி மாதிரியும் இருக்கே….

ஒருவேளை காவிரி….  ???

ம்ஹூம்..

 

ஓ…
இது பெருசா தெரியுதே…
ஏதேனும் அணையா ?
பாபனாசம் ???

ம்ம்ம்ம்ஹூஊம்…

 

மேகமெல்லாம் சூப்பரா தான் இருக்கு
ஆனா,
அதை வெச்சு இடத்தையெல்லாம் கண்டுபிடிக்க முடியுமா என்ன ?

தெரியலையே !!…
.

.

.

 

 

அடப்பாவி…
இதை முதல்லயே காட்டித் தொலைச்சிருக்கலாமே
இது சென்னை, வேளச்சேரி ஏரியும், அதில் கலக்கும் கூவக் குப்பையும் தானே.

ஹி…ஹி… ஆமா… ஆமா !!!

தற்கொலை விரும்பிகளால் நிரம்பும் சீனா & சென்னை !

 மன அழுத்தமோ, வேலைப்பளுவோ, நிராகரிப்போ நிகழ்ந்து விட்டால் எதைப் பற்றியும் யோசிக்காமல் தற்கொலை செய்து கொள்வது என்பது பலவீனமான மனதின் வெளிப்பாடு.
இது இன்றைக்கு சீனாவின் மிகப்பெரிய தேசப் பிரச்சனையாக உருவாகி இருக்கிறது.

சீனாவில் ஆண்டுதோறும் தற்கொலை செய்து கொள்ளும் மக்களின் எண்ணிக்கை தெரியுமா ? 2,50,000 !!! இவர்கள் வயது 15 க்கும் 34 க்கும் இடையே ! இதை  இணைய தளங்கள் ஊக்குவிக்கின்றன என்பது கூடுதல் அதிர்ச்சி !

வாழவேண்டிய வயதில், வாழ்க்கையின் முதல் பக்கத்திலேயே இவர்களுடைய வாழ்க்கை இப்படி வீணாக விரையமாவது சீன அரசின் மிகப்பெரிய கவலையாக மாறியிருக்கிறது.

ஒவ்வொரு இரண்டு நிமிடமும் ஒரு தற்கொலையும், எட்டு தற்கொலை முயற்சிகளும் சீனாவின் மெயின்லாண்டில் பதிவாவதாக சீனாவின் மனநல அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தத் தற்கொலைகளின் காரணங்களை ஆராய்ந்தால் முதலிடத்தில் இருப்பது திருமண வாழ்வின் தோல்வி. சுமார் 30 விழுக்காடு தற்கொலைகள் திருமண வாழ்க்கையின் அமைதியின்மையினால் நிகழ்கின்றனவாம்.

இரண்டாவது இடத்தில் இருப்பது கடுமையான வேலையினால் உருவாகும் மன அழுத்தம். இது இருபது விழுக்காடு. மிச்சமுள்ள ஐம்பது விழுக்காடுகளை வறுமை, சரியான வேலைவாய்ப்பின்மை, சமூகத்தின் அங்கீகாரமின்மை உட்பட பல்வேறு காரணங்கள் நிரப்புகின்றன.

சீனாவிலும் நகர்ப்புறங்களை விட வசதிகள் குறைவான ஊர்ப்பகுதிகளில் இந்த தற்கொலைகள் அதிகம் நிகழ்வதாக அரசு தெரிவிக்கிறது. இந்தியாவைப் போலவே சீனாவிலும் இளைஞர்கள் எல்லாம் நகர்ப்புறங்களுக்கு இடம் பெயர்ந்ததால் கிராமங்கள் முதியோர் இல்லங்களாய் காட்சியளிக்கின்றனவாம்.

பள்ளிக்கூடத்தில் பயிலும் பல பதின் வயதினரும் தற்கொலை செய்து கொள்வது உண்மையிலேயே கலவரமூட்டுகிறது. இந்த விழுக்காடு 17 என அதிர்ச்சித் தகவல் தெரிவிக்கிறது. படிப்பின் பயமும், தனிமை உணர்வும் இவர்களை வாட்டுகிறதாம்.

தற்கொலை, வாழ்வின் மீதான நம்பிக்கையின்மையின்மையின் வெளிப்பாடு. சென்னையிலும் கடந்த ஆண்டு மட்டுமே 2500 பேர் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக தகவல்கள் திகிலூட்டுகின்றன.

பொறுமையும், சகிப்புத் தன்மையும், முக்கியமாக குடும்ப உறவுகளில் பிடிப்பின்மையும் இத்தகைய காலமாற்றத்தின் காரணம் எனலாம். வாழ்க்கை நாகரீகத்தின் அடித்தளத்தில் கட்டப்படாமல், உண்மை உறவுகளின் மேல் கட்டியெழுப்பப்படவேண்டும் என்பதையே இவை சுட்டிக் காட்டுகின்றன.

தாய்மையின் சிக்கல்கள்

பாதுகாப்பற்ற கருக்கலைப்பு முறைகளினால் ஆண்டுதோறும் சுமார் 68,000 பெண்கள் உயிரிழந்து கொண்டிருக்கிறார்கள் எனும் அதிர்ச்சியூட்டும் தகவலை உலக வங்கியின் சமீபத்திய அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

இது ஏன் நிகழ்கிறது என ஆராய்ந்தால் அதற்கும் காரணியாக சமூக ஏற்றத்தாழ்வும், பெண்களுக்கு மறுக்கப்படும் கல்வியும், தரப்படாத சமூக சமத்துவமுமே முன்னால் நிற்கிறது. வளர்ந்த உலக நாடுகளை விட வளரும் நாடுகளிலும், பின் தங்கிய நாடுகளிலுமே இத்தகைய அவலங்கள் அதிக அளவு நிகழ்கின்றன என்பது ஒன்றே போதும் இந்தக் கருத்தை வலுவூட்ட.

ஆப்பிரிக்கா போன்ற பின் தங்கிய நாடுகளில் இன்னும் பாலியல் கல்வியோ, கருத்தடையின் தேவைகள் குறித்த விழிப்புணர்வோ பரவவில்லை. வறுமையின் உச்சத்தில் இருந்தாலும் அங்கே தான் குழந்தை பிறப்பு விகிதம் அதிகமாக இருக்கிறது. ஆப்பிரிக்கப் பகுதி உட்பட 35 பின் தங்கிய நாடுகளில் குடும்பம் ஒன்றுக்கு ஐந்து குழந்தைகள் என்னும் விகிதம் இருப்பதாகவும் அந்த ஆய்வு அறிவிக்கிறது.

இந்தியா போன்ற வளரும் நாடுகளிலும் மேலைக் கலாச்சாரத்தை மேலாடையாய் கொண்டுள்ள நவீன நகர்ப்புறங்களைத் தவிர்த்தால் இன்னும் கலாச்சாரத்தின் ஆடைகளைத் தரித்துத் திரியும் கிராமத்து மூலைகளில் இத்தகைய விழிப்புணர்வு எழவில்லை என்பதே உண்மை.

உலகெங்கும் சுமார் ஐந்து கோடி பெண்கள் சரியான கருத்தடை சாதனங்கள் உபயோகிக்காததால் கருத்தரிக்கின்றனர் எனவும், கூடவே இரண்டரை கோடி  பெண்கள் கருத்தடை சாதனங்களின் தோல்வியால் கருத்தரிக்கின்றனர் எனவும் திகைப்பூட்டும் தகவல்களை அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.

கருக்கலைப்பு என்பது ஒரு குழந்தையைக் கொலை செய்வது என்பதுடன் தாயின் உடல் நலத்தையும் பெருமளவில் பாதிக்கிறது. பிற்காலத்தில் தாய்மையடையும் வாய்ப்பைக் கூட இது கணிசமாகக் குறைத்து விடுகிறது.

வலுவான அடித்தளமும், சமூகக் கல்வி, விழிப்புணர்வு, முழுமையான அரசு ஈடுபாடு இவை இல்லாவிட்டால் இத்தகைய அவலங்கள் உலகெங்கும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும் என்பது மட்டும் வலியூட்டும் உண்மையாகும்.

உப்பு, ரொம்பத் தப்பு

உப்பில்லாப் பண்டம் குப்பையிலே என்பார்கள். ஆனால் அதிக அளவில் உப்பைச் சாப்பிட்டால் உடலே குப்பையாகி விடும் என எச்சரிக்கிறது புதிய மருத்துவ அறிக்கை ஒன்று.

அதாவது, நாம் உட்கொள்ளும் உப்பின் அளவுக்கும் நமக்கு வரும் உயர் குருதி அழுத்தத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்பது இந்த ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நிகழ்த்தப்பட்ட இந்த ஆராய்ச்சியில் பதினோராயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் உட்படுத்தப்பட்டனர். இந்த ஆய்வு முடிவு  மருத்துவ உலகிற்கு மிக முக்கியமானது என்று கருத்து தெரிவிக்கின்றனர் உலகெங்குமுள்ள பல்வேறு மருத்துவர்கள்.

உயர் குருதி அழுத்தத்துக்கு நாம் உட்கொள்ளும் உப்பு காரணமாகிவிடக் கூடும் எனும் நம்பிக்கை ஏற்கனவே மருத்துவ உலகில் நிலவி வந்தாலும், இந்த விரிவான ஆய்வு மீண்டும் ஒருமுறை அந்த கருத்தை ஆதாரபூர்வமாக வலுப்படுத்தியிருக்கிறது.

உயர் குருதி அழுத்தமானது உடலில் மாரடைப்பு உட்பட பல்வேறு ஆபத்துகளைத் தரும் என்பது குறிப்பிடத் தக்கது.

உப்பில்லாப் பண்டம் குப்பையிலே என்பதை இனிமேல் மாற்றி எழுதுதல் நலம்.