சிகப்புத் திராட்சை சாப்பிடுங்கள், பழச்சாறை ஒதுக்குங்கள்

சிவப்புத் திராட்சைக்கு இப்போதெல்லாம் சந்தையில் மதிப்பு மிகவும் குறைந்து விட்டது. விதையில்லாத பச்சை திராட்சை, அல்லது அவசர கோலத்தில் வாங்கப்படும் பழச்சாறுகள் இவையே வீடுகளை நிறைக்கின்றன. அதுவும் ரிலையன்ஸ் பிரஷ் போன்ற மக்களை முட்டாளாக்கும் கடைகளில் வித விதமாய் பழச்சாறு பாட்டில்கள் புதிது புதிதாய் நாள்தோறும் வந்து கொண்டே இருக்கின்றன. இத்தகைய பழச்சாறுகளில் இருப்பது பெரும்பாலும் சருக்கரையும், தண்ணீரும் என்பது பலருக்குத் தெரிவதில்லை.

அது ஒருபுறம் இருக்கட்டும். சிவப்புத் திராட்சை உண்பது உயர் குருதி அழுத்தம், கொழுப்புப் பாதிப்புகள், இதய நோய் போன்றவற்றிலிருந்து பாதுகாக்கும் என்னும் இனிப்பான ஒரு ஆராய்ச்சி முடிவை வெளியிட்டுள்ளனர் யூ.கே ஆராய்ச்சியாளர்கள்.

சிவப்புத் திராட்சையில் அதிக நார்சத்து மற்றும் விஷத்தன்மையை எதிர்க்கும் பொருட்கள் அதிகம் இருப்பதாகவும் இது உடலை பளபளப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது எனவும் இந்த ஆராய்ச்சி விளக்குகிறது.

உடலில் சேரும் தேவையற்ற கொழுப்பைக் குறிப்பதன் மூலமாக இரத்த ஓட்டத்தை சீர்படுத்தி இதய நோய்களிலிருந்து நம்மைக் காப்பாற்றும் வலிமை இந்த சிவப்புத் திராட்சைக்கு இருக்கிறதாம்.

பழச்சாறுகளின் கதை வேறு. அதைக் குடிப்பதனால் பல்வேறு நோய்கள் தான் வருகின்றன. சமீபத்தில் பழச்சாறுகள் தொடர்பாக வெளியான ஒரு ஆராய்ச்சி அதிர்ச்சியூட்டுகிறது.

அதாவது பழச்சாறுகள் நாம் அருந்தும் மருந்தின் வீரியத்தைக் குறைத்து நோயிலிருந்து சுகம் பெறுவதில் சிக்கலை உருவாக்குமாம். குறிப்பாக இதய நோய், குருதி அழுத்தம் போன்ற நோய்களுக்காக உட்கொள்ளும் மருந்தின் வீரியத்தை இந்த பழச்சாறுகள் தடுக்கின்றனவாம்.

மருந்து மாத்திரைகள் உட்கொள்ளும்போது வெறும் தண்ணீரைப் பயன்படுத்த வேண்டும் எனவும், பழச்சாறுகள் பயன்படுத்தக் கூடாது எனவும் ஏற்கனவே ஆய்வுகள் தெரிவித்திருக்கின்றன. இப்போது பழச்சாறு அருந்துவது மருந்தையே செயலற்றதாக்கிவிடும் எனும் செய்தி கூடுதல் கலவரமூட்டுகிறது.

இது மட்டுமன்றி அமெரிக்காவிலுள்ள ஹார்வர்ட் மருத்துவக் கல்லூரியில் நிகழ்த்திய ஆய்வு ஒன்று, தினமும் ஒரு கோப்பை திராட்சைப் பழச்சாறு (கடைகளில் கிடைப்பது) அருந்தினால் உடல் எடை அதிகரிப்பதுடன், சருக்கரை வரும் வாய்ப்பையும் அதிகரிக்கும் என எச்சரித்திருக்கிறது.  கூடவே பழச்சாறுகள் பல்லையும் சேதப்படுத்துமாம்.

சிவப்புத் திராட்சை சாப்பிடுங்கள் உடலுக்கு மிகவும் நல்லது. பழச்சாறுகளை ஒதுக்குங்கள் அவை உடலுக்கு ஊறி விளைவிக்கின்றன. என்பதே இந்த இரண்டு ஆய்வுகளிலிருந்தும் நமக்குக் கிடைக்கும் சாராம்சமாகும்.

கனியிருப்பச் சாறு கவர்ந்தற்று எனச் சொல்லத் தோன்றுகிறதல்லவா ?