மறைந்தவர்கள் இனிமேல் கூடவே இருப்பார்கள் !

இறந்தவர்களின் நினைவாக என்ன செய்வார்கள் ? பழங்காலமெனில் நடுகற்கள், தற்போது நினைவகங்கள். எதிர்காலத்தில் ?

இந்த கேள்விக்கு விடையாய் வந்திருக்கிறது சுவிட்சர்லாந்திலுள்ள அல்கோர்டான்ஸா எனும் நிறுவனம். இவர்கள் இறந்தவர்களின் அருகாமை எப்போதும் பிரியமானவர்களுடன் இருக்கக் கூடிய ஒரு ஏற்பாட்டைச் செய்துள்ளனர்.

அதாவது இறந்தவர்களின் எலும்புகளை எரித்து, அதிலிருந்து கிடைக்கும் சாம்பலில் இருந்து வைரம் தயாரிக்கின்றனர் !  

இந்த வைரங்களை இறந்தவர்களின் நினைவாக வைத்திருந்தால் மறைந்து போனவர்களின் நினைவும், அருகாமையும் எப்போதும் கூடவே இருக்கும் என்பதால் இப்படிப்பட்ட வைரங்களைத் தயாரிக்க மக்களிடையே ஆர்வம் எழுந்துள்ளது.

பலர், இது இறந்தவர்களை அவமதிக்கும் செயல் என எதிர்க்கிறார்கள். கிறிஸ்தவ அமைப்புகள் உடலை எரியூட்டுவதை எதிர்ப்பதால் ஆன்மீக அமைப்புகளிடமிருந்தும் இதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. ஆனால் பொதுமக்களிடையே இத்தகைய வைரம் தயாரித்தலுக்கு பரவலான கிடைத்துள்ளது.

இது ஒரு நல்ல செயல். சிலர் கல்லறைத் தோட்டங்களில் சென்று கசிந்துருகி கண்ணீர் விட்டு வருவார்கள். நாங்கள் கைகளிலேயே இறந்தவர்களை எப்போதும் இருக்க வைக்கிறோம் என்கிறார் இந்த நிறுவன இயக்குனர் வெய்ட் பிரீமர்.

சரி… இப்படி ஒரு வைரம் தயாரிக்க ஆகும் செலவு எவ்வளவு என தேடினால், சுமார் மூன்றே கால் இலட்சம் ரூபாய்கள் என்கிறது தகவல்.