குண்டானவர்கள் இனிமேல் நிச்சயம் இளைக்கலாம் !

“எல்லா பாடும் இந்த அரை சாண் வயித்துக்காகத் தானே “ என்றும் “பசி வந்தால் பத்தும் பறந்து போகும்” என்றும் நமது பாட்டிகள் பல பழ மொழிகளைச் சொல்வதைக் கேட்டிருப்போம். இப்போதெல்லாம் “ பழமொழியா ? அப்படின்னா என்னப்பா ? எனக் கேட்கும் தலை முறையே உருவாகி வருகிறது என்பது வேறு விஷயம். அது ஒருபுறம் இருக்கட்டும்.

பசி மனுக்குலத்தைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது என்பதை மறுக்க முடியாது. பசி பட்டினியாக உருமாறுவதும், வறுமையினால் உயிர்கள் மடிவதும் என உலகின் ஒரு முகம் முனகிக் கிடக்கிறது.

அளவுக்கு மிஞ்சிய உடல் எடையுடன், உணவை தீவிரமாய்க் கட்டுப்படுத்தி உடலின் கொழுப்பைக் கரைக்கும் முயற்சியில் உலகின் இன்னொரு முகம் மும்முரமாய் கிடக்கிறது.

இந்தப் பசி மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் அதிக எடையுடன் கூடிய மக்களுக்கு மெலிவது எளிதாகியிருக்கும், பட்டினியுடன் கிடப்பவர்களுக்கு கொஞ்சம் உயிர்கிள்ளும் வலியாவது குறைவாய் இருந்திருக்கும் என நம்மைப் போலவே விஞ்ஞானிகளும் பல ஆண்டுகாலமாக யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த சிந்தனையின் முதல் கட்ட வெற்றியாக பசியைக் கட்டுப் படுத்தும் வழியை அவர்கள் கண்டறிந்துள்ளார்கள்.

பசியைத் தூண்டும் கிரெலின் என்றொரு ஹார்மோன் நமது உடலில் இருக்கிறது. அது தான் நமக்கு எப்போது பசிக்க வேண்டும், எப்போது நாம் சாப்பிடவேண்டும் என உள்ளுக்குள் அமர்ந்து ஒரு சர்வாதிகாரியாய் சட்டங்களை இயற்றிக் கொண்டிருக்கிறது.

இந்த ஹார்மோனின் 90 விழுக்காடும் வயிற்றின் மேல்பகுதியாகிய பண்டஸ் எனுமிடத்திலிருந்தே உருவாகிறதாம். இந்த ஹார்மோன் உருவாக வேண்டுமெனில் நல்ல இரத்த ஓட்டம் அந்தப் பகுதிக்கு அவசியம். அதனால் தான் உடற்பயிற்சி செய்யும் போது இரத்த ஓட்டம் அதிகமாகி, ஹார்மோன் அதிகமாய் சுரந்து பசியெடுக்கிறது.

இந்த ஹார்மோன் உற்பத்தி குறைந்தால் பசியெடுப்பது குறையும். பசியெடுப்பது குறைந்தால் குறைவாய் உண்டால் போதும், குறைவாக உண்பதால் உடல் குண்டாவது தடுக்கப்படும். இப்படியெல்லாம் விஞ்ஞானம் விளக்குகிறது. இந்த ஹார்மோன் உற்பத்தியைக் குறைக்க அந்தப் பகுதிக்குச் செல்லும் இரத்த ஓட்டத்தைக் குறைப்பதே இப்போதைக்குத் தெரிந்த ஒரே வழியாம்.

நல்ல ஆரோக்கியமான பன்றிகளை வைத்து இப்போதைக்கு இந்த சோதனையை வெற்றிகரமாக நடத்தியிருக்கிறார்கள். பன்றிகளுக்கும் மனிதர்களுக்கும் உடல் உறுப்புகளின் அமைப்பு ஒத்திருப்பதால் மனிதர்களிடமும் இது நிச்சயம் வெற்றிபெறும் என்கிறார் இந்த ஆராய்ச்சியை நடத்திய விஞ்ஞானி ஜாண் ஹாப்கின்ஸ்.

இதன் பக்க விளைவுகள் என்ன ? இதனால் உடலுக்குத் தேவையான சத்துகள் தேவையான நேரத்தில் கிடைக்குமா ? இந்த ஹார்மோன் குறைவாய் சுரந்தால் வேறு ஏதேனும் இன்னல் நிகழுமா என பல்வேறு வகைகளின் இதன் ஆய்வுகள் தொடர்கின்றன.

எப்படியும் கூடிய விரைவில் பசியில்லா மனிதர்களைப் படைத்து விடுவார்கள் விஞ்ஞானிகள் என்றே தோன்றுகிறது !