வெயிலுக்குப் பயப்படும் ஆண்களே உஷார் !

இன்றைய உலகம் அறைகளுக்குள்ளேயே அடைபடும் வாழ்க்கையைத் தான் பெரும்பாலானோருக்குத் தந்திருக்கிறது எனலாம். அலுவலகத்தில் சுவர்களுக்குள் நாள் முழுவதும் அடைபடுவதும், விடுமுறை நாட்களில் வீடுகளில் அடைபட்டு தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் மூழ்கிப் போவதுமாய் கழிகிறது சராசரி வாழ்க்கை.

இந்த வாழ்க்கை முறைக்கும் குழந்தையின்மைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என அதிர்ச்சி வைத்தியம் அளிக்கிறது ஆஸ்திரேலிய ஆராய்ச்சி ஒன்று.
மூன்றில் ஒரு பங்கு ஆண்களுக்கு விந்தணுக்கள் வலுவற்றிருப்பதே இன்றைக்கு குழந்தையின்மைப் பிரச்சனை எங்கும் தழைத்து வளர்வதன் முக்கிய காரணம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

விந்தணுக்கள் வலிமை இழக்க முக்கியமான ஒரு காரணம் உடலில் வைட்டமின் டி குறைவது என்பது இவர்களுடைய ஆராய்ச்சியின் முடிவாகும்.

தேவையான அளவு வைட்டமின் டி உடலில் இருக்கும் போது விந்தணுக்கள் வலிமையடைகின்றன. தம்பதியர் பெற்றோராகும் வாய்ப்பு பிரகாசமடைகிறது. அதற்கு அவர்கள் செய்யவேண்டியதெல்லாம் சட்டையைக் கழற்றி ஓரமாய் வைத்து விட்டு கொஞ்சநேரம் வெயிலில் காலார நடந்து வருவது தான் !

இந்த ஆய்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரண்டு மாதங்களில் விந்தணுக்களின் வலிமையும், எண்ணிக்கையும், உருவமும் பல மடங்கு மேம்பட்டதாகச் சொல்கிறார் இந்த ஆராய்ச்சியை நடத்திய மருத்துவர் கிளார்க்.

இந்த சோதனையில் மூலம் 35 விழுக்காடு பேர் குழந்தையின்மைச் சிக்கலையும் தீர்த்திருக்கின்றனர் என்பது வியப்பூட்டுகிறது.

அலுவலக அறைகளுக்குள்ளேயே அடைபட்டுக் கிடப்பவர்கள் அவ்வப்போது எழுந்து சாலையோர டீ கடைக்குச் சென்று சுடச்சுட டீயும், வைட்டமின் டீயும் பெற்றுக் கொள்வது ஆரோக்கிய வாழ்வுக்குச் சிறந்தது என்பதே இந்த ஆராய்ச்சியின் முடிவாகும்.

புகை, மது, காபி போன்றவற்றை உட்கொள்ளாமலும் அளவான உடற்பயிற்சி மேற்கொள்வதும் என உடலை ஆரோக்கியமாய் காத்துக் கொள்ளும் ஆண்கள் கொஞ்ச நேரம் வெயிலிலும் நடந்து வந்தால் வாழ்க்கை செழிக்கும்

தயக்கம், வெட்கம், கூச்சம், பயம் – இனிமேல் இல்லை !

நண்பர்களிடையே மணிக்கணக்காய் அரட்டையடிப்பவர்களில் பலர் நான்கு பேர்கூடியிருக்கும் இடத்தில் நான்கு வார்த்தை பேசச் சொன்னால் காணாமல் போய்விடுவார்கள். காரணம் கூச்சம்.

பள்ளிக்கூடங்களில் புதிதாய் நுழையும் மழலைகள் ஆசிரியர்களிடமும்,பள்ளியிலுள்ள சக மாணவர்களிடமும் பேசக் கூட பல வேளைகளில் பெரும் கூச்சப்படுவார்கள். அதுவும் மேடைகளில் ஏறி பேசவேண்டுமெனில் அவ்வளவு தான்! வார்த்தைகள் வராமல் வியர்த்துக் கொட்டுபவர்கள் தான் அனேகம்.

வேலை விஷயங்களில் இந்தக் கூச்சம் பலரை வெறுங்கையுடன் வீட்டுக்கு அனுப்பி வைக்கவும் செய்கிறது. வேலைக்கான நேர்முகத் தேர்வுகள், கலந்துரையாடல்கள் போன்றவற்றில் இந்த கூச்சத்தின் பிள்ளைகள் தொடர் தோல்விகளையே சந்திக்கின்றனர்.

இந்த கூச்சம் மட்டுமில்லாமல் இருந்திருந்தால் வாழ்க்கையில் பல உன்னதமான இடங்களுக்குச் சென்றிருப்பேனே என புலம்பும் இத்தகைய மக்களை வியக்க வைக்க வந்திருக்கிறது புதிய ஆராய்ச்சி ஒன்று.

அதாவது கூச்சமடையாமல் தைரியத்துடன் செயல்பட வேண்டிய ஊக்கத்தைத் தரும் மருந்தை அறிவியலார் கண்டறிந்துள்ளனர். இந்த மருந்தை ஸ்பிரே போல தயாரித்து நேர்முகத் தேர்வு போன்ற இடங்களுக்குச் செல்லும் முன் முகர்ந்து கொண்டால் மனதுக்கு ஊக்கம் கிடைக்குமாம். அல்லது மாத்திரை வடிவில் இதைத் தயாரித்து உட்கொள்ளச் செய்தால் தயக்கமெல்லாம் தயங்காமல் ஓடி விடுமாம்.

இனிமேல் காதலைச் சொல்ல வருடக் கணக்காய் தயங்கித் தயங்கித் திரிய வேண்டிய தேவையில்லையென வேறு வேலையே இல்லாத இளைஞர்கள் கொஞ்சம் நிம்மதிப் பெருமூச்சு விட்டுக் கொள்ளலாம்.

ஆக்ஸைடோசின் எனப்படும் ஒரு ஹார்மோன் தான் இந்த தயக்கம், வெட்கம், கூச்சம் போன்றவற்றையெல்லாம் விரட்டும் அதிசய மருந்தாக உருவெடுக்கிறது.

ஆக்ஸைடோசின் என்பது உடலுறவின்போதும், குழந்தைப் பிறப்பின் போதும் உடலில் சுரக்கும் ஒரு ஹார்மோன். இது தான் தாய்க்கும் சேய்க்குமான உறவு இறுக்கத்துக்கும் காரணியாக இருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது.

அமெரிக்கா, யூ.கே, ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் ஒட்டு மொத்தமாக அங்கீகரித்துள்ள இந்த ஆக்ஸைடோசின் ஆராய்ச்சியின் அடுத்த கட்டமாக இதன் வணிக வழிகள் ஆலோசிக்கப் பட்டு வருகின்றன. அதாவது இந்த ஹார்மோனைக் கொண்டு ஸ்பிரே, மருந்து, பானம் போன்றவற்றைத் தயாரிக்கும் வழிகளைக் குறித்து மும்முரமான ஆய்வுகள் நடக்கின்றன.

இந்த ஹார்மோன் இயற்கையின் வரப்பிரசாதம் எனலாம். அறுவை சிகிச்சை இல்லாமல் சுகப் பிரசவம் நடந்தால் குழந்தைக்கும் தாய்க்கும் இடையேயான உறவு பலமாக இருக்கும் என்பது ஒரு ஆராய்ச்சி முடிவு. காரணம் பிறப்பின் போது சுரக்கும் இந்த ஹார்மோன் !

இந்த ஹார்மோன் இருந்தால் மன அழுத்தம் இல்லாமல் மகிழ்ச்சியான மனநிலை உருவாகுமாம்.

இப்படி இந்த ஹார்மோனைக் குறித்து அடுக்கடுக்காய் ஆச்சரியங்களை வரிசைப்படுத்திக் கொண்டே இருக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

இனிமேல் காலம் மாறலாம். நேர்முகத் தேர்வுக்குச் செல்லும் முன் ஒரு மாத்திரையைப் போட்டுக் கொள்ளும் காலம் விரைவில் வரலாம். அல்லது வீடுகளில் நிம்மதியான சூழல் நிகழ வீடுகளில் தெளிக்கும் வாசனைத் திரவியங்களாகவும் இவை வடிவமெடுக்கலாம் !

பொறுத்திருந்து பார்ப்போம், அறிவியலின் அடுத்த கட்ட வளர்ச்சியை !

வரும் வழியில் : அல்வா தயாரிப்பாளரின் “நிலாவில் மழை”

“அடடா… கேட்டைப் போட்டுட்டாங்களா “ என சலிப்புடன் ரயில்வே கேட்டின் முன்னால் காரை நிறுத்தியபோது வந்தது அந்த தொலைபேசி அழைப்பு.
“நீங்கள் சேவியரா ?”

ஏதோ ஓர் அறிமுகமல்லாத நடுத்தர வயது ஆண் குரல் தொலைபேசியின் மறு பக்கத்திலிருந்து எட்டிப் பார்த்தது.

“ஆமா சார்… நீங்க ?” எனது கேள்வியில் எதிர்பார்ப்பும், யோசனையும்.

“நீங்க நல்லா கவிதை எழுதறீங்க சார். ஒரு நண்பர் மூலமா தான் இந்த எண் கிடச்சுது” மறுமுனைக் குரல் சொல்ல கொஞ்சம் வியப்பு. இணையத்தில் எழுதும் கவிதையைப் படித்துவிட்டு அதைப் பாராட்ட சிரமப்பட்டு தொலைபேசி எண்ணைக் கண்டு பிடித்து பேசுகிறாரே என அவர் மீது மரியாதை கூடியது.

“நீங்க நிறைய புக்ஸ் எல்லாம் கூட போட்டிருக்கீங்க இல்லையா ?” குரல் விசாரித்தது.

“ஆமா சார் 11 புக் வெளிவந்திருக்கு….”

“சினிமாவுக்கு பாட்டு எழுதத் தெரியுமா சார் ?” மறுமுனைக் குரல் கேட்டது.

“எழுதத் தெரியும். வாய்ப்பு வந்தா எழுதுவேன்… “ என்றேன் நான்.

“சார் நான் ஒரு படம் தயாரிக்கிறேன். படத்தோட பெயர் நிலாவில் மழை …” என ஆரம்பித்தார் அவர்.

“நிலாவில் மழை ! ரொம்ப நல்ல கவித்துவமா இருக்கு சார் “ என்றேன்.

“என்னோட தம்பி சுகுமார் தான் இசையமைக்கிறார். சுஜாதாம்மா பாடறமாதிரி ஒரு பாட்டு இருக்கு சார். அதை நீங்க எழுத முடியுமா ?” அந்தக் குரல் கேட்டது.
இதென்னடா… இப்படியெல்லாம் அழைத்து பாட்டெழுத வாய்ப்புத் தரும் சூழலுக்கு தமிழ் சினிமா வந்து விட்டதா என யோசித்தபடியே “கண்டிப்பா எழுதலாம் சார்… சூழல் சொல்லுங்க” என்றேன்.

“சுஜாதாம்மா பாடறாங்க. ஜனாதிபதி முன்னால. அந்த பாட்டு முடிஞ்சதும் எல்லோரும் கை தட்டி இந்த பாட்டை இசையமைத்த சுகுமாருக்கும், பாடிய சுஜாதாவுக்கும் விருது குடுக்கிறாங்க… இது தான் சூழல். ஆனா கொஞ்சம் கஷ்டமான பாடல். ஒவ்வொரு பூக்களுமே … பாடல் மாதிரி எழுதணும்.. முடியுமா சார் ?” சவால் விடுவது போல கேட்டது அந்த தயாரிப்பாளரின் குரல்.

“கண்டிப்பா அதை விட நல்லாவே எழுதித் தரேன். அந்த பாடலுக்கான மெட்டை மட்டும் எனக்குக் குடுங்க..” என்றேன்.

“சரி சார். ரொம்ப சந்தோஷம். பாட்டு எழுதறதுக்காக உங்களுக்கு 1000 ரூபா தரேன்.. “

“எனக்கு பணமெல்லாம் வேண்டாம் சார். ஒரு வாய்ப்பு குடுக்கறீங்க நான் எழுதறேன்.. அவ்வளவு தான்” என்றேன்.

“சரி சார். அப்போ ஒரு 15000 ரூபா பேமெண்ட் பண்ணிடுங்க… படம் ரிலீசானதும் ரிட்டர்ன் பண்ணிடுவோம்” தயாரிப்பாளர் தனது அல்வா மூட்டையைப் பிரித்தார். எனக்குத் தொலைபேசியின் இந்தப் பக்கம் சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது.

“என்ன பேமெண்ட் சார் ? “ அப்பாவியாய் கேட்டேன்.

“எல்லாம் ஒரு ரொட்டேஷன்ல தான் பண்ணிட்டிருக்கோம். உங்க பணத்தையும் நாங்க படம் முடிஞ்சதும் ரிட்டர்ன் பண்ணிடுவோம்” என்றது அந்த சால்ஜாப்புக் குரல்.

“இல்லை சார். எனக்கு அதுல எல்லாம் விருப்பம் இல்லை. இன்னிக்கு சினிமால பாட்டு எழுதற பலரும் என்னோட நண்பர்கள். சில இயக்குன நண்பர்களும் உண்டு. யாரிடமும் நான் வாய்ப்புக் கேட்டது கூட இல்லை. எனக்கு சினிமாவுக்குப் பாட்டெழுதும் கிரேஸ் எல்லாம் இல்லை…. “ விளக்கினேன்.

“நீங்க.. பணம் செலவு பண்ணி புக் எல்லாம் போடறீங்களே சார். பாட்டெழுதினா பிரபலம் ஆயிடலாம் இல்லையா ? “ என்றார் ஆசை காட்டும் விதமாக.

“யார் சொன்னது நான் பணம் செலவு செய்து புக் போடறேன்னு ? எனக்கு அமெரிக்காவுல பி & எஃப் கம்பெனி வருஷத்துக்கு 1.5 மில்லியன் டாலர் காண்ட்ராக்ட் போட்டிருக்காங்க தெரியுமா ? அதுக்கே எழுதிக் கொடுக்க நேரமில்லாம கஷ்டப்படறேன்” நான் இந்தப் பக்கம் இருட்டுக் கடை அல்வாவைத் திறந்தேன்.

அவ்வளவு தான் மறுமுனை அல்வாவில் மழை பார்ட்டி எஸ்கேப் !!!
நண்பர்களே… உஷார் !!! ஏமாந்துடாதீங்க… “நிலாவில் மழை” பெய்யாது எப்போதும்.

துயரத்தைத் தாண்டலாம் !!! புதிய ஆராய்ச்சி

எதிர்பாரா மரணங்கள் மனிதனை உலுக்கி எடுக்கின்றன. அதுவும் கண்ணுக்கு முன்னாலேயே அன்புக்குரியவர்களைப் பலிகொடுக்கும் துயரம் அளவிட முடியாதது. சுனாமி, நிலநடுக்கம் போன்ற நிகழ்வுகள் உடனிருப்பவர்களை பித்துப் பிடித்தவர்களைப் போல ஸ்தம்பிக்க வைத்து செயலிழக்க வைக்கின்றன.

உலக அளவில் இத்தகைய துயரங்கள் ஏற்படுத்தும் மூளை பாதிப்புகளால் பல்லாயிரம் பேர் சுய நினைவு இன்றியும், அதிக பட்ச மன அழுத்தத்திலும் தங்கள் வாழ்க்கையையும் இழந்து விடுகின்றனர்.

இதன் காரணம் என்ன ? இதற்கு ஏதேனும் தீர்வு இருக்க முடியுமா ? என ஒரு அறிவியல் குழு ஆய்வுகளை மேற்கொள்ள ஆரம்பித்தது. அந்த ஆய்வின் முடிவாக மிக முக்கியமான கண்டுபிடிப்பு ஒன்றை அவர்கள் நிகழ்த்தியுள்ளனர்.

அதாவது, ஒரு திடீர் மரணமோ, அதிகப்படியான சோகமோ மூளையில் கார்டிகோட்ரோபின் எனும் அமிலத்தை சட்டென சுரக்கவைத்து மூளை முழுவதும் பரப்பி விடுகிறது என்பதே அந்தக் கண்டுபிடிப்பு.

இந்த அமிலமே அதிகப்படியான மன அழுத்தத்தையும், தாங்கொண்ணா துயரத்தையும் தருவிக்கிறது என்கின்றனர் மருத்துவர்கள்.

நீண்டகால உறவுகள் துண்டாகும்போது நிகழும் அதிகப்படியான வலியைக் குறைக்கவும், துயரத்தை எதிர்கொள்வோருக்கு விரைவில் மீளும் வழியைக் காட்டவும் இந்த கண்டுபிடிப்பு உதவும் என இந்த ஆராய்ச்சியை மேற்கொண்ட அட்லாண்டாவின் எமோரி பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது

துயரங்கள் தவிர்க்க இயலாதவை, அவற்றைத் தாங்கும் மனம் எளிதில் அமைந்து விடுவதில்லை என்பது இழப்பைச் சந்தித்தவர்களால் புரிந்து கொள்ள முடியும். அத்தகைய துயரங்களின் அழுத்தத்தை மருந்து, மாத்திரைகள் வாயிலாக குறைக்க முடியுமெனில் அந்த ஆராய்ச்சி வரவேற்கப்பட வேண்டியதே !

வரும் வழியில்… தம், ஐபோன் மற்றும் மின்வெட்டு !

“புகைக்கத் தடை” என்பது பெயரளவில் தான் இருக்கிறதோ எனும் சந்தேகம் மதிய உணவுக்குப் பின் அலுவலக டீக்கடைகளின் ஓரத்தில் குவியும் புகையால் ஏற்படுகிறது.

“ஏம்பா… புகை பிடிக்கத் தடை போட்டாங்க தெரியுமா இல்லையா ?” என ஹாயாக ஊதிக் கொண்டிருந்த நண்பன் ஒருவனிடம் கேட்டேன்.

“ஆமா..அவரே பாம் வைப்பாராம். அவரே போய் புடிப்பாராம்” ன்னு முதல்வன்ல வர டயலாக் கணக்கா, “ அவங்களே தம் விப்பாங்களாம், ஆனா புடிக்கக் கூடாதாம். புடிக்காம ஷோகேஸ்லயா கொண்டு வைக்க முடியும்” என்றான் நியாயமான லாஜிக் படி.

சரி என்னதான் சொல்ல வரே ? – மீண்டும் கேட்டேன்.

எவனாவது வந்து புடிச்சா 200 ரூபா கட்டிட்டு இன்னொரு தம் பத்த வைப்பேன் என்றான் கூலாக.

பைக்கில் காத்து குறைவு என சொல்லி நடுவழியில் நிறுத்தி ஐந்து பத்து சம்பாதிப்பவர்களிடம் மொத்தமாய் பிச்சை எடுக்கும் வெள்ளைச் சீருடை ஆசாமிகள் கவனத்துக்கு !… ஐடி கம்பெனிகளின் முன்னே உங்களுக்கு நிறைய வசூலாகும் !

0

உடன் பணிபுரியும் நண்பர் ஒருவர் கடந்த மாதம் அமெரிக்காவிலிருந்து வருகையில் ஒரு புத்தம் புதிய ஆப்பிள் ஐபோன் வாங்கி வந்திருந்தார்.

அங்கே தான் மச்சி எல்லாமே ஒரிஜினல் கிடைக்கும். என்றெல்லாம் பீத்திக் கொண்டிருந்தவனை இன்று காலையில் பார்த்தேன்.

ஐபோனின் மேல் மஞ்சள் பொட்டு வைத்திருந்தான்.

“இந்த மஞ்சளும் இறக்கு மதியா ? இல்லை உள்ளூரா ?” என்றேன் சிரித்தபடி.

பூஜை பண்றேன்னு சொல்லி போனோட காமராவை காலிபண்ணிட்டா என் பொண்டாட்டி என மெலிதாய் சலித்துக் கொண்டான் அவன்.

அலுவலகம் வந்து இருக்கையில் அமர்ந்து பார்த்தால் எனது கணினியில் நான்கு மூலைகளிலும் வாஸ்து படி மஞ்சள் வைத்து சென்றிருந்தார்கள்.

0

வரும் வழியில் காலை 9 மணிக்கு ஒரு தெரு முழுவதும் விளக்குகள் எரிந்து கொண்டிருந்ததைப் பார்த்தேன் !

வியப்பு !

கரண்ட் இல்லாமல் பாவம் தமிழகமே அல்லாடுகிறது. அதிகாரிகள் இன்னும் கொஞ்சம் பொறுப்பாய் நடந்து கொள்ளலாமே. காலையில் வெளிச்சம் வந்ததும் அணைத்து விட்டால் எவ்வளவோ கரண்ட் மிச்சமாகுமே என தோன்றியது.

எங்கள் கிராமத்தில் நள்ளிரவு 1 மணி முதல் 2 மணி வரையும் கரண்ட் கட் அடிக்கிறாங்களாம். என்ன லாஜிக்கோ தெரியவில்லை.

“கஷ்டப்பட்டு தூங்க ஆரம்பிக்கிறோம் நல்ல தூக்கம் வந்த உடனே கரண்டை கட் பண்ணி எழும்ப வெச்சுடறாங்க. அப்புறம் தூங்கவே மூணு மணி ஆயிடுது” என அங்கலாய்த்தான் கிராமத்து நண்பன் ஒருவன்.

நியாயம் தான் ! என்று தணியும் இந்த தாகம் !

ரோபோ : இது புதுசு !!

முதலில் ரஜினியும் ஐஸ்வர்யாராயும் மச்சு பிச்சுவில் ஆடியதைக் காட்டினார்கள். பின்னர் ரஜினி கோவாவில் ஹாயாய் அமர்ந்திருப்பதைக் காட்டினார்கள். இப்போது என்ன புடிச்சாங்க எனும் எதிர்பார்ப்போடு வந்தீர்களெனில் கொஞ்சம் நிதானம் கொள்ளுங்கள். இது நிஜ ரோபோவின் படங்கள் !

ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் வழக்கம் போலவே இந்த முறையும் ஒரு புதிய ரோபோவைத் தயாரித்து வியக்க வைத்திருக்கின்றனர். ரிப்லீ ஆர்-1 என பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோ, இது வரை வெளியான ரோபோக்களிலேயே நவீனமானது என்கின்றனர் இதன் தயாரிப்பாளர்கள்.

கடந்த 2005ம் ஆண்டு இவர்கள் உருவாக்கிய ரிப்லீ க்யூ 1 எனும் ரோபோவின் நவீன வடிவம் இந்த புதிய ரோபோ.

ஐந்து வயதான ஒரு சிறுமியைப் போலவே தோற்றமளிக்கும் இந்த ரோபோ மனிதர்களைப் போலவே நடந்து, கண் சிமிட்டி, தலையை அசைத்து செயல்படுமாம். ஒரு ரோபோவுடன் உரையாடுகிறோம் எனும் சிந்தனையே சில வேளைகளில் வராது என்கின்றனர் இதன் தயாரிப்பாளர்கள்.

இரும்புக் கை, பிளாஸ்டிக் தலை என்றெல்லாம் இல்லாமல் மனித மேனியைப் போலவே இதன் மேல் பாகத்தைத் தயாரித்திருக்கின்றனர். தொட்டால் ஒரு குழந்தையைத் தொடும் உணர்வு ஏற்படும் என்பது இதன் சிறப்பம்சம்.

ரோபோக்களின் நவீனமயமாதல் ஒரு காலத்தில் நம்மிடையே உலவுபவர்களில் யார் உண்மை, யார் ரோபோ எனும் குழப்பத்தை ஏற்படுத்துமளவுக்கு முன்னேறலாம் என கருதப்படுகிறது.

என்னதான் இருந்தாலும் ஒரு குழந்தையைப் போல ரோபோவைப் பார்ப்பது கொஞ்சம் உறுத்தத்தான் செய்கிறது !

உயர் குருதி அழுத்தமா ? சமையலறைக்கு ஓடுங்கள்

உயர் குருதி அழுத்தம் இருக்கிறதா ? கவலை வேண்டாம் தினமும் ஒரு துண்டு பூண்டு சாப்பிடுங்கள் குருதி அழுத்தமெல்லாம் அழுத்தமெல்லாம் காணாமலேயே போய் விடும்.

இப்படிச் சொல்லியிருப்பது ஆஸ்திரேலியாவின் ஆராய்ச்சி முடிவு ஒன்று. பழங் காலத்திலிருந்தே பூண்டு சாப்பிடுவதை ஊக்கப்படுத்தி வந்தது தான் நமது பாட்டி வைத்தியம். இப்போது அது மருத்துவ அங்கீகார முலாம் பூசப்பட்டு அறிவியல் அறிக்கையாக வந்திருக்கிறது.

பாட்டிகளும், தாத்தாக்களும் சொன்ன வைத்தியத்தை மறந்து விட்டிருந்த நமது உதாசீனத்துக்குக் குட்டு வைத்திருக்கிறது இந்த ஆராய்ச்சி என்று கூட சொல்லலாம்.

இன்றைக்கு வினியோகிக்கப்படும் உயர் குருதி அழுத்தத்துக்கான மாத்திரைகளை விட அதிக பலனளிக்கக் கூடியது இந்த பூண்டு வைத்தியம் என்பது குறிப்பிடத் தக்கது.

உலகெங்கும் பல கோடி பேர் மிகச் சாதாரணமாகப் பாதிப்புக்கு உள்ளாகும் நோய் உயர் குருதி அழுத்தம். உயிருக்கே கூட உலை வைக்கும் இந்த நோயை பெரும்பாலானோர் ஒரு பொருட்டாகக் கூட எண்ணுவதில்லை என்பது தான் உறைய வைக்கும் உண்மை.

ஆஸ்திரேலியாவில் நடந்த இந்த விரிவான ஆராய்ச்சி சுமார் ஐந்து மாத காலம் தொடர்ச்சியாக நடந்திருக்கிறது. பல்வேறு உலக ஆய்வுகளின் முடிவுகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்ட இந்தச் சோதனையின் முடிவாகத் தான் பூண்டு, பல உயர் குருதி மாத்திரைகளை விட வலிமை வாய்ந்தது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆராய்ச்சியின் முதுகெலும்பான மருத்துவர் கேரின் ரெய்ட் இதைக் குறித்துக் கூறுகையில், உயர் குருதி அழுத்தத்தை மருந்துகளால் குணப்படுத்த முடியுமோ இல்லையோ, பூண்டின் மூலம் குணப்படுத்திவிடலாம் என நம்பிக்கை தெரிவிக்கிறார்.

உயர் குருதி அழுத்தமா ? இனிமேல் மருத்துவமனைகளை நோக்கி ஓடாமல் சமையலறையை நோக்கி ஓடுங்கள். சமையலறையிலேயே அதற்குரிய மருந்து இருக்கிறது !!

இப்படியும் ஒரு நோய் !


ஒரு நாள் காலையில் படுக்கையிலிருந்து எழும்பும் போது உங்கள் உடலெல்லாம் தொப்பல் தொப்பலாக குருதியில் குளித்திருந்தால் உங்கள் மனநிலை எப்படி இருக்கும் ?

அது உங்கள் உடலில் இருந்து வழிந்த குருதி எனவும், உடலில் காயம் ஏதும் ஏற்படாமலேயே உங்கள் உடலிலுள்ள குருதி சும்மா வழிந்து கொண்டிருக்கிறது என்பதையும் அறிந்தால் உங்கள் அதிர்ச்சி எந்த அளவுக்கு இருக்கும் ?

அந்தப் பேரதிர்ச்சியில் இருக்கின்றாள் பதின்மூன்றே வயதான சிறுமி டிவிங்கில் திவேதி. கண்கள், தலை, மூக்கு, காது , கை, கால்கள் என உடலின் எல்லா பாகங்களில் இருந்தும் திடீர் திடீரென குருதி வழிய, உடலில் குருதியின் அளவு குறைந்து போய் பலவீனமும், வலியுமாய் கடந்த ஒரு வருடமாக கடின வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறாள் இந்த சிறுமி.

வெளி நாடுகளுக்குச் சென்றெல்லாம் மருத்துவம் பார்க்குமளவுக்கு வசதியற்ற இந்தச் சிறுமி வசிப்பது உத்திரபிரதேசத்தில். ஏதேனும் செய்து தன் மகளைக் காப்பாற்ற வேண்டுமே என தாய் தவியாய் தவித்துக் கொண்டிருக்க, என்ன செய்வதென்றே தெரியாமல் திகைத்து நிற்கிறார் இவருடைய சகோதரி.

எல்லா கோயில்களிலும், மசூதிகளிலும், தேவாலயங்களிலும் விண்ணப்பங்கள் வைத்தாயிற்று. ஏதேனும் ஒரு கடவுள் மனமிரங்கி இந்த நோயைக் குணமாக்க மாட்டாரா எனும் ஏக்கத்தில் தவிக்கிறாள் சிறுமி. ஒரு நாள் ஐந்து தடவை முதல் இருபது தடவைகள் வரை உடலில் இருந்து குருதி வழிய துயரத்துடன் கழிகின்றன இவளுடைய பொழுதுகள்.

இப்படி ஒரு நோய் இருப்பதனால் பள்ளிக்கூடத்திலிருந்தும் வெளியேற்றப்பட்டு தனியே வீட்டில் அமர்ந்து படிக்கும் நிலை இவளுக்கு. நண்பர்கள் யாரும் இல்லை, வந்து நட்புடன் உரையாடுவார் யாருமில்லை என நோயின் வலியை நிராகரிப்பின் வலி மிஞ்சுகிறது.

டைப் 2 வான் வில்பிராண்ட் நோயாய் இருக்கலாம் என லண்டன் மருத்துவர் டிரியோ புரோவன் தெரிவிக்க, டைப் 2 பிளாட்லெட் டிஸார்டராய் இருக்கலாம் என அகில இந்திய மருத்துவக் கழகம் தெரிவிக்க, ஊரிலுள்ளவர்களோ இது கடவுளின் சாபம் என குடும்பத்தினரை நோக்கிக் கூச்சலிடுகின்றனர்.

துயரங்களின் கூட்டுத் தொகையாய் நகரும் இந்தச் சிறுமியின் வாழ்க்கையில் ஒரு புதுமை நடந்தேறவேண்டும், இந்த நோய்கள் விரைந்தோட வேண்டும் என உங்களைப் போலவே விரும்புகிறது எனது மனதும்.

வரும் வழியில்… : ஒரு ரூபாய் அரிசி எப்படி ?


வாயில் கூட வைக்க முடியாது இப்போதைய ரேஷன் அரிசியை. எதற்குத் தான் இப்படி நாற்றம் வீசும், மட்டமான, மோசமான அரிசியைத் தருகிறார்களோ ? இதெல்லாம் வெறும் ஏமாற்று வித்தை. மனுஷன் சாப்பிட முடியாது. இப்லப்பாம் எவனுமே ரேஷன் அரிசியைச் சாப்பிடறதே இல்லை. பிச்சைக்காரனுக்குக் கொடுத்தா கூட துப்பிடுவான்.

இப்படியெல்லாம் இரண்டு ரூபாய், ஒரு ரூபாய் ரேஷன் அரிசியைக் குறித்து திகட்டத் திகட்ட, கிண்டல்களும், நக்கல்களும், திட்டுகளும் இணையத்திலும் வெகுஜன இதழ்களிலும் மலிந்து கிடப்பதைப் படித்துப் படித்து ரேஷன் அரிசியைக் குறித்த ஒரு மதிப்பீட்டை உள்ளுக்குள் உண்டாக்கி வைத்திருந்தேன்.

தினமும் அலுவலகம் வரும்போது வேளச்சேரி ரேஷன் கடையைத் தாண்டியே வருவேன். ரேஷன் கடை முன்னால் தினமும் காலையில் புதுப்பட ரிலீஸ் கணக்காய் கூட்டம் அலை மோதும். முரண் உறுத்தும். இவ்ளோ மட்டமான அரிசியை வாங்க இப்படிக் கூட்டம் அலைமோதுகிறதே என நினைத்துக் கொண்டே சென்று விடுவேன்.

கடந்த வாரம் மனதில் தோன்றியது, உண்மையிலேயே இந்த ரேஷன் அரிசி மகா மட்டமானது தானா ? அரிசி தருவது அரசியலா ? இல்லை அரிசியை எதிர்ப்பது அரசியலா ?

உய்த்துனர்தலே சிறந்ததென முடிவெடுத்தேன்.

வீட்டில் விண்ணப்பம் வைத்ததால் ரேஷன் அரிசி வாங்கினார்கள். சுடச்சுட சாதம் வைத்து சாம்பார் ஊற்றி சாப்பிட்ட போது தான் புரிந்தது வெறுமனே நக்கல் அடிப்பவர்கள் ரேஷன் அரிசியை சாப்பிட்டிருக்கவே மாட்டார்கள் என்பது !!!

அளவில் பெரியதான அரிசி (சி.ஓ என்று எங்கள் ஊரில் அழைப்பது போன்ற அரிசி). சாப்பிட்டு எனக்கு ரொம்பவே பழக்கம் என்பதால் ரேஷன் மிகவும் ரசிப்புக்குரியதாகி விட்டது. கொஞ்சமும் குறை சொல்ல முடியாத, எந்த நாற்றமும் வீசாத, சுவையான அரிசி !

ஒரு வேளை சென்னையில் மட்டும் நல்ல அரிசி தந்து விட்டு கிராமங்களின் தலையில் மோசமானதைக் கட்டுகிறார்களோ எனும் சந்தேகத்தில் மாலையில் ஊருக்கு போன் போட்டேன். அம்மா போன் எடுத்தார்கள்.

“அம்மா அங்கே ரேஷன் அரிசி நல்லா இருக்கா ? “

“என்னடா.. எப்போவும் அம்மா நல்லா இருக்கீங்களான்னு கேப்பே… இப்போ ரேஷன் அரிசி நல்லா இருக்கா கேக்கறே ?”

“சும்மா தாம்மா.. சொல்லுங்க “

“ரேஷன் அரிசி ரொம்ப நல்லா இருக்கு. நாங்க அதைத் தானே சாப்பிடுகிறோம்”
கிராமத்திலிருந்து அம்மா சொன்னார்கள்.

எங்களூர் ரேஷன் கடைக்காரர் குஞ்சுகிருஷ்ணனிடம் பேசினேன். எப்படி மக்கள் ரேஷன் அரிசியை வாங்குகிறார்களா ? நல்லா இருக்கா அரிசி ?
பெரும்பாலும் நல்ல அரிசியே கிடைக்கிறது. கேரளாவில் இதே அரிசியை கொஞ்சம் மில்லில் போட்டு பாலீஷ் செய்து சந்தையில் விற்றால் இருபது ரூபாய் தாராளமாய் கிடைக்கும் ! (அனுபவம் பேசியதா தெரியவில்லை ) என்றார்.

உண்மையிலேயே நல்லா இருக்குன்னா ஏன் இதை எதிர்க்கிறாங்க ? இதற்குப் பெயர் தான் அர(சி)சியலா ?

ஒரு காலத்தில் மரவள்ளிக் கிழங்கையே உணவாய் தின்று சாதத்தை கூட்டு போல கொஞ்சமாய் தின்று வாழ்ந்த கிராமம் இன்று மரவள்ளிக் கிழங்கை கூட்டு போல் சாப்பிடுகிறது. காரணம் கிலோ அரிசி ஒரு ரூபாய்க்குக் கிடைக்கிறது, மரவள்ளிக் கிழங்கின் விலை பத்து ரூபாயாகி விட்டது !

திருவிழாவுக்கு போகிறீர்களா… ஒரு நிமிடம் !..

அதிர அதிர இசை கேட்கும் விருப்பமுடையவர்களா நீங்கள் ? காதில் ஹெட்போன் மாட்டி உச்ச பட்ச இசையைக் கேட்பவர்களா நீங்கள் ? திருவிழாக்களில் கடவுளே பயந்து ஓடுமளவுக்கு சத்தமாய் பக்திப் பாடல்களை மெய்மறந்து கேட்பவரா நீங்கள் ? உங்களுக்காகவே யூ.கே யிலிருந்து வந்திருக்கிறது இந்த புதிய ஆராய்ச்சி.

திருவிழா அலறல்கள், அதிக சத்தத்தில் கேட்கப்படும் பாடல்கள், இவை காதைச் செவிடாக்கும் அபாயம் உண்டு என எச்சரிக்கிறது இந்த ஆராய்ச்சி.

குறிப்பாக இன்றைய இளைஞர்களிடையே பரவி வரும் இரவு விடுதி ஆட்டங்களும், அதில் போதையுடன் கேட்கும் நூறு டெசிபல்களையும் கடந்த உச்சஸ்தாயி இசையும் காதுகளை முடமாக்கி விடுகிறதாம்.

சுமார் 2700 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் அதிக சத்தத்துடன் இசை கேட்பவர்களில் 80 விழுக்காட்டினருக்கு காதுகளில் கோளாறு ஏற்பட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது.

அதிக சத்தத்துடன் இசை கேட்பதைத் தவிர்க்க வேண்டும் எனவும், முடியாத பட்சத்தில் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் இசைப் பிரியர்களை இந்த ஆராய்ச்சியை நடத்திய மருத்துவர் எம்மா ஹாரிசன் தெரிவிக்கிறார்.

இன்றைய இளைஞர்களின் காதில் ஆறாவது விரல் போல எப்போதும் தொங்கிக் கொண்டிருக்கும் ஹெட்போன்களில் 80 டெசிபலுக்கும் அதிகமான சத்தம் வருகிறது எனவும், 80 விழுக்காடு இளைஞர்கள் அதிக சத்தத்தில் பாட்டு கேட்பதையே விரும்புகிறார்கள் எனவும் ஒரு ஆராய்ச்சி ஏற்கனவே முடிவு வெளியிட்டிருந்தது.

செல்பேசிகளும், எம்.பி.3 கருவிகளும் மலிந்து விட்ட இந்த காலத்தில் காதுகளைச் செவிடாக்கும் ஆபத்தையும் கூடவே சுமந்து வருகின்றன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

அதிக சத்தத்தில் பாடல் கேட்பது, தொடர்ச்சியாக நிறைய நேரம் பாடல் கேட்பது, அதிக சத்தம் ஏற்படுத்தும் பொது விழாக்கள், திருவிழாக்கள் போன்றவற்றில் கலந்து கொள்வது போன்றவற்றை தவிர்ப்பதே (குறைந்த பட்சம் சத்தத்தை விட்டு தூரமாய் நிற்பதே)
காதுகளுக்காய் நாம் செய்யும் ஆரோக்கியமான செயல் ஆகும்.