வெயிலுக்குப் பயப்படும் ஆண்களே உஷார் !

இன்றைய உலகம் அறைகளுக்குள்ளேயே அடைபடும் வாழ்க்கையைத் தான் பெரும்பாலானோருக்குத் தந்திருக்கிறது எனலாம். அலுவலகத்தில் சுவர்களுக்குள் நாள் முழுவதும் அடைபடுவதும், விடுமுறை நாட்களில் வீடுகளில் அடைபட்டு தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் மூழ்கிப் போவதுமாய் கழிகிறது சராசரி வாழ்க்கை.

இந்த வாழ்க்கை முறைக்கும் குழந்தையின்மைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என அதிர்ச்சி வைத்தியம் அளிக்கிறது ஆஸ்திரேலிய ஆராய்ச்சி ஒன்று.
மூன்றில் ஒரு பங்கு ஆண்களுக்கு விந்தணுக்கள் வலுவற்றிருப்பதே இன்றைக்கு குழந்தையின்மைப் பிரச்சனை எங்கும் தழைத்து வளர்வதன் முக்கிய காரணம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

விந்தணுக்கள் வலிமை இழக்க முக்கியமான ஒரு காரணம் உடலில் வைட்டமின் டி குறைவது என்பது இவர்களுடைய ஆராய்ச்சியின் முடிவாகும்.

தேவையான அளவு வைட்டமின் டி உடலில் இருக்கும் போது விந்தணுக்கள் வலிமையடைகின்றன. தம்பதியர் பெற்றோராகும் வாய்ப்பு பிரகாசமடைகிறது. அதற்கு அவர்கள் செய்யவேண்டியதெல்லாம் சட்டையைக் கழற்றி ஓரமாய் வைத்து விட்டு கொஞ்சநேரம் வெயிலில் காலார நடந்து வருவது தான் !

இந்த ஆய்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரண்டு மாதங்களில் விந்தணுக்களின் வலிமையும், எண்ணிக்கையும், உருவமும் பல மடங்கு மேம்பட்டதாகச் சொல்கிறார் இந்த ஆராய்ச்சியை நடத்திய மருத்துவர் கிளார்க்.

இந்த சோதனையில் மூலம் 35 விழுக்காடு பேர் குழந்தையின்மைச் சிக்கலையும் தீர்த்திருக்கின்றனர் என்பது வியப்பூட்டுகிறது.

அலுவலக அறைகளுக்குள்ளேயே அடைபட்டுக் கிடப்பவர்கள் அவ்வப்போது எழுந்து சாலையோர டீ கடைக்குச் சென்று சுடச்சுட டீயும், வைட்டமின் டீயும் பெற்றுக் கொள்வது ஆரோக்கிய வாழ்வுக்குச் சிறந்தது என்பதே இந்த ஆராய்ச்சியின் முடிவாகும்.

புகை, மது, காபி போன்றவற்றை உட்கொள்ளாமலும் அளவான உடற்பயிற்சி மேற்கொள்வதும் என உடலை ஆரோக்கியமாய் காத்துக் கொள்ளும் ஆண்கள் கொஞ்ச நேரம் வெயிலிலும் நடந்து வந்தால் வாழ்க்கை செழிக்கும்

தயக்கம், வெட்கம், கூச்சம், பயம் – இனிமேல் இல்லை !

நண்பர்களிடையே மணிக்கணக்காய் அரட்டையடிப்பவர்களில் பலர் நான்கு பேர்கூடியிருக்கும் இடத்தில் நான்கு வார்த்தை பேசச் சொன்னால் காணாமல் போய்விடுவார்கள். காரணம் கூச்சம்.

பள்ளிக்கூடங்களில் புதிதாய் நுழையும் மழலைகள் ஆசிரியர்களிடமும்,பள்ளியிலுள்ள சக மாணவர்களிடமும் பேசக் கூட பல வேளைகளில் பெரும் கூச்சப்படுவார்கள். அதுவும் மேடைகளில் ஏறி பேசவேண்டுமெனில் அவ்வளவு தான்! வார்த்தைகள் வராமல் வியர்த்துக் கொட்டுபவர்கள் தான் அனேகம்.

வேலை விஷயங்களில் இந்தக் கூச்சம் பலரை வெறுங்கையுடன் வீட்டுக்கு அனுப்பி வைக்கவும் செய்கிறது. வேலைக்கான நேர்முகத் தேர்வுகள், கலந்துரையாடல்கள் போன்றவற்றில் இந்த கூச்சத்தின் பிள்ளைகள் தொடர் தோல்விகளையே சந்திக்கின்றனர்.

இந்த கூச்சம் மட்டுமில்லாமல் இருந்திருந்தால் வாழ்க்கையில் பல உன்னதமான இடங்களுக்குச் சென்றிருப்பேனே என புலம்பும் இத்தகைய மக்களை வியக்க வைக்க வந்திருக்கிறது புதிய ஆராய்ச்சி ஒன்று.

அதாவது கூச்சமடையாமல் தைரியத்துடன் செயல்பட வேண்டிய ஊக்கத்தைத் தரும் மருந்தை அறிவியலார் கண்டறிந்துள்ளனர். இந்த மருந்தை ஸ்பிரே போல தயாரித்து நேர்முகத் தேர்வு போன்ற இடங்களுக்குச் செல்லும் முன் முகர்ந்து கொண்டால் மனதுக்கு ஊக்கம் கிடைக்குமாம். அல்லது மாத்திரை வடிவில் இதைத் தயாரித்து உட்கொள்ளச் செய்தால் தயக்கமெல்லாம் தயங்காமல் ஓடி விடுமாம்.

இனிமேல் காதலைச் சொல்ல வருடக் கணக்காய் தயங்கித் தயங்கித் திரிய வேண்டிய தேவையில்லையென வேறு வேலையே இல்லாத இளைஞர்கள் கொஞ்சம் நிம்மதிப் பெருமூச்சு விட்டுக் கொள்ளலாம்.

ஆக்ஸைடோசின் எனப்படும் ஒரு ஹார்மோன் தான் இந்த தயக்கம், வெட்கம், கூச்சம் போன்றவற்றையெல்லாம் விரட்டும் அதிசய மருந்தாக உருவெடுக்கிறது.

ஆக்ஸைடோசின் என்பது உடலுறவின்போதும், குழந்தைப் பிறப்பின் போதும் உடலில் சுரக்கும் ஒரு ஹார்மோன். இது தான் தாய்க்கும் சேய்க்குமான உறவு இறுக்கத்துக்கும் காரணியாக இருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது.

அமெரிக்கா, யூ.கே, ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் ஒட்டு மொத்தமாக அங்கீகரித்துள்ள இந்த ஆக்ஸைடோசின் ஆராய்ச்சியின் அடுத்த கட்டமாக இதன் வணிக வழிகள் ஆலோசிக்கப் பட்டு வருகின்றன. அதாவது இந்த ஹார்மோனைக் கொண்டு ஸ்பிரே, மருந்து, பானம் போன்றவற்றைத் தயாரிக்கும் வழிகளைக் குறித்து மும்முரமான ஆய்வுகள் நடக்கின்றன.

இந்த ஹார்மோன் இயற்கையின் வரப்பிரசாதம் எனலாம். அறுவை சிகிச்சை இல்லாமல் சுகப் பிரசவம் நடந்தால் குழந்தைக்கும் தாய்க்கும் இடையேயான உறவு பலமாக இருக்கும் என்பது ஒரு ஆராய்ச்சி முடிவு. காரணம் பிறப்பின் போது சுரக்கும் இந்த ஹார்மோன் !

இந்த ஹார்மோன் இருந்தால் மன அழுத்தம் இல்லாமல் மகிழ்ச்சியான மனநிலை உருவாகுமாம்.

இப்படி இந்த ஹார்மோனைக் குறித்து அடுக்கடுக்காய் ஆச்சரியங்களை வரிசைப்படுத்திக் கொண்டே இருக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

இனிமேல் காலம் மாறலாம். நேர்முகத் தேர்வுக்குச் செல்லும் முன் ஒரு மாத்திரையைப் போட்டுக் கொள்ளும் காலம் விரைவில் வரலாம். அல்லது வீடுகளில் நிம்மதியான சூழல் நிகழ வீடுகளில் தெளிக்கும் வாசனைத் திரவியங்களாகவும் இவை வடிவமெடுக்கலாம் !

பொறுத்திருந்து பார்ப்போம், அறிவியலின் அடுத்த கட்ட வளர்ச்சியை !