வலிக்கும்… ஆனா வலிக்காது !

 child

குழந்தைகள் விளையாடும் போது கவனித்திருக்கிறீர்களா ? கீழே விழுந்து அடிபட்டாலும் அதை வெகு இயல்பாய் எடுத்துக் கொண்டு மீண்டும் விளையாட்டைத் தொடரும். ஆனால் அடிபட்ட இடத்தில் கொஞ்சம் இரத்தம் கொட்டினால் உடனே அழ ஆரம்பித்துவிடும்.

சில வேளைகளில் தலை வலிக்குமோ என நினைத்தால் தலை வலிக்க ஆரம்பிப்பதை நம்மில் சிலரும் உணர்ந்திருக்கக் கூடும். அப்படியானால் வலிக்கும், மனதுக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருக்கிறது அல்லவா ?

இதைத் தான் விரிவான ஆராய்ச்சியாக நடத்தியது ஆஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழகம். இதன் முடிவு வியப்பளிக்கிறது.

அதாவது அதிகமாய் வலிப்பதும், குறைவாய் வலிப்பதும் எல்லாமே நமது மனது நினைப்பதைப் பொறுத்து தான் அமைகிறது என்பதே அது.

இந்த ஆராய்ச்சிக்காக கைகளில் அடிபட்டுக் காயமடந்தவர்கள் பலர் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களுடைய கைகளை ஆராய்ச்சியாளர்கள் கண்ணாடி மூலமாக அவர்களுக்குக் காட்டினர். இந்தக் கண்ணாடிகளில் சில கையை வீக்கமடைந்திருப்பது போலக் காட்டின, சில வீக்கமான கையை சாதாரண கையாய் காட்டின.

இந்த காட்சிப் பிழைகள் வலியில் மாபெரும் மாற்றத்தைக் கொண்டு வந்ததை ஆராய்ச்சியாளர்கள் ஆச்சரியத்துடன் பதிவு செய்து கொண்டனர்.

கை வீக்கம் அதிகமாய் இருப்பதைப் பார்த்தவர்களின் வலி நரம்புகள் தூண்டப்பட்டு அதிக வலி அடைந்தனர். கை வீக்கம் குறைவாய் உணர்ந்தவர்களின் வலி பெருமளவு குறைந்து விட்டது.

இந்த ஆராய்ச்சியின் மூலம் மனதுக்கும் வலிக்கும் இடையேயான நுட்பமான இணைப்பு நிரூபிக்கப்பட்டுள்ளது.

மனதில் உறுதி வேண்டும் என சும்மாவா சொன்னார்கள் ?