களையை, முளையிலேயே….

3

அமெரிக்காவின் கலிபோர்னியாவிலுள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தினர் ஒரு வியக்க வைக்கும் சாதனைக் கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளனர். இதன் மூலம் கான்சர் நோய் முளை விடும்போதே கண்டறிந்து விலக்கும் ஒரு மாபெரும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

புற்று நோயின் மிகப்பெரிய சோகமே அதை துவக்கத்திலேயே கண்டறிய முடியாமல் போவது தான். அதிலும் குறிப்பாக கல்லீரல், நுரையீரல், கருப்பை போன்ற இடங்களில் வரும் புற்று நோய் காலம் கடந்தே பெரும்பாலும் தெரியவருகிறது. அப்படித் தாமதமாகத் தெரிவதால் குணப்படுத்தும் வாய்ப்பும் குறைந்து போய் விடுகிறது.

குருதியைச் சோதனை செய்வதன் மூலம் புற்று நோயை அதன் ஆரம்ப அறிகுறி தெரியும் போதே கண்டறியும் வழியைத் தான் ஸ்டான்போர்ட் பல்கலைக் கழக ஆராய்ச்சியில் கண்டறிந்துள்ளனர்.

இதன் மூலம் புற்று நோய் எனும் உயிர்க்கொல்லி நோயைக் குணப்படுத்தும் வாய்ப்பு பெருமளவு அதிகரித்திருக்கிறது. மேக்னட்டிக் நானோ டெக்னாலஜி என அறிவியல் பெயரிட்டு அழைக்கு நவீன முறை இந்த புதிய சோதனையின் முதுகெலும்பாக இருக்கிறது.

இந்த சோதனை முறை புற்று நோயின் தாக்கம் உடலில் ஆரம்பிக்கும் போதே கண்டுபிடித்துச் சொல்லி விடுகிறது. கூடவே வந்திருக்கும் புற்று நோய் எத்தகையது, எந்த தன்மையுடையதும், எந்தெந்த இடங்களைப் பாதிக்கலாம் என்பனவற்றையும் துல்லியமாய்ச் சொல்லி விடுகிறது.

ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக பேராசிரியர் ஷான் வாங் இது குறித்துக் கூறுகையில் “இந்த ஆராய்ச்சி மருத்துவத் துறையில் ஒரு மாபெரும் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும், புற்று நோயாளிகளின் அதிர்ச்சி மரணங்களுக்கு ஒரு தடைக்கல்லாக வைக்கும்” என நம்பிக்கை தெரிவித்தார்.

கண்ணுக்குத் தெரியாமல் மறைந்திருந்து உயிரைப் பறிக்கும் புற்று நோய்க்கு எதிராக எழுந்திருக்கும் இந்த ஆய்வு மருத்துவ உலகிற்கு புத்துணர்ச்சியளிக்கும் என்பதில் ஐயமில்லை.