வைட்டமின் விலக்கு !

9

வைட்டமின் மாத்திரைகளை எதற்கெடுத்தாலும் உண்பது என்பது மேலை நாடுகளிலிருந்து இந்தியாவுக்குள் இறக்குமதியான கலாச்சாரங்களில் ஒன்று. வைட்டமின் சி, இ  என எல்லா வைட்டமின்களும் இப்போது பல்வேறு நிறங்களில், பல்வேறு வடிவங்களில் மாத்திரைகளாகக் கிடைக்கின்றன.

மேலை நாடுகளில் வைட்டமின்களுக்கென தனிக் கடைகளே இருக்கின்றன. அங்கே நிரம்பி வழியும் கூட்டம் வைட்டமின்களை அள்ளிச் சென்று உண்கின்றனர். அவர்களுடைய நம்பிக்கையெல்லாம் இந்த மாத்திரைகளை உண்டால் உடலுக்குத் தேவையான வைட்டமின்கள் கிடைக்கும், நோய்களெல்லாம் நீங்கிவிடும் என்பது தான்.

அவர்களை அதிர்ச்சியுறச் செய்திருக்கிறது சமீபத்தில் வெளியான ஆராய்ச்சி முடிவு ஒன்று. அதாவது இந்த வைட்டமின் மாத்திரைகள் மக்கள் நினைப்பது போல நோய்களைக் குறைப்பதில்லையாம்.
புற்று நொயைக் குறைக்கும் என நம்பப்படும் வைட்டமின் மாத்திரைகளை பத்தாண்டுகள் தொடர்ந்து உண்டால் கூட எந்த பயனும் இல்லையாம்.

காய்கறிகள் முதலான உணவுப் பொருட்களில் கிடைக்கும் வைட்டமின்களை மாத்திரை வடிவில் சுருக்கி வைக்கும் போது அதன் முழுமையான பயன் கிடைப்பதில்லை எனவும், நேரடியாக வைட்டமின்கள் அடங்கிய உணவுப் பொருட்களை உண்பது மட்டுமே பயனளிக்கும் எனவும் இந்த ஆராய்ச்சி தெரிவிக்கிறது.

7627 பேரை ஈடுபதித்தி நிகழ்த்தப்பட்ட விரிவான இந்த ஆராய்ச்சி, வைட்டமின் மாத்திரைகள் வாங்குவதை உடனடியாக நிறுத்திவிட்டு அது எந்த காய்கறியில் கிடைக்கிறது என்பதைக் கண்டு அதை உண்ணுங்கள் என அறிவுறுத்துகிறது.

உதாரணமாக நெல்லிக்காயில் வைட்டமின் சி கிடைக்குமெனில் நெல்லிக்காய் சாப்பிடுங்கள், கடைக்குச் சென்று வைட்டமின் சி மாத்திரையைச் சாப்பிட்டு பணத்தையும், உடலையும், நேரத்தையும் வீணாக்காதீர்கள் என்கின்றனர்.

நமது சித்த மருத்துவ முறைகள் காலம் காலமாக சொல்லி வருபவை தான் இவையெல்லாம் எனினும், மேலை நாட்டு ஆராய்ச்சிகள் சொன்னால் மட்டுமே உண்மை என நம்பும் மக்களுக்கு இத்தகைய ஆராய்ச்சிகளேனும் மனமாற்றம் தரட்டும் !