கொஞ்சம் கவலையாய் இருந்தான் நண்பன். பொதுவாகவே கலகலப்புக்குப் பஞ்சம் வைக்காதவன் அவன். அப்படி என்ன தான் பிரச்சினை என்று கொஞ்சம் நெருங்கிக் கேட்டேன்.
“இல்லடா… இன்னொரு குழந்தைக்கு பிளான் பண்றேன், ஆனா முதல் குழந்தை பிறந்தப்போ பண்ணின ஒரு தப்பினால அடுத்ததா ஒண்ணும் செட் ஆக மாட்டேங்குது” துண்டு துண்டாக ஏதோ அவார்ட் டாக்குமெண்டரி போல உளறிக் கொண்டிருந்தான்.
அப்படி என்னதாண்டா பிரச்சனை முதல் குழந்தை பிறந்தப்போ ? எதுவா இருந்தாலும் இப்போ சென்னையில இல்லாத மருத்துவமனைகளா ? பத்து வருஷம் குழந்தை இல்லேன்னாலே சக்ஸஸ் பண்ணி தர டாக்டர்ஸ் இருக்காங்க. உனக்கென்னடா ? ஒரு குழந்தை ராஜா மாதிரி இருக்கான் பதட்டப்படாம மருத்துவ ஆலோசனை பண்ணலாமே என்றேன்.
“நோ..நோ.. அப்படியெல்லாம் ஆஸ்பிட்டல் போற சிக்கல் ஒண்ணும் இல்லை…” அவன் படபடத்தான்.
“மனைவி முரண்டு பிடிக்கிறாங்களா ?….”
“சே..சே.. இரண்டு பேரும் தான் வேணும்ன்னு முடிவு பண்ணினோம்”
“அப்போ என்னடா வீட்ல பிரச்சனையா ? இல்லை வேலை நிரந்தரமா இருக்குமாங்கற பயமா ? என்னண்ணு சொல்லித் தொலையேண்டா வெளக்கெண்ணை” குரலின் சற்று போலியான கோபத்தைக் காட்டியபோது தான் என் முகத்தைப் பார்த்தான்.
“இல்ல..இல்ல… அதெல்லாம் உங்கிட்டே சொன்னா வெளங்காது… நீ உன்னோட உருப்படாத பிளாக்ல போட்டாலும் போட்டுடுவே…” அவன் கொஞ்சம் நக்கலாய் சொன்னான்.
“உனக்கு அறிவிருக்கா… என்னோட பிளாக் என்ன உன்னோட குடும்பப் பிரச்சினையை எழுதற பிளாகா ? தேவையில்லாதது எதையும் எழுதமாட்டேன் மச்சி.. நீ பயப்படாம சொல்லு…” என்றேன்.
“இல்ல.. என் பையனை உனக்குத் தெரியும் இல்லையா ?”
“ஆமா அவனை தான் அடிக்கடி பாக்கறேனே. படு சுட்டி வயசு நாலு, பயங்கர வாலு…” என்றேன்
“அவன் பேரு என்ன தெரியுமா ?”
“உனக்கு ஏதோ பிரச்சனை தாண்டா மச்சி.. ஷங்கர நாராயணன் தான் அவன் பேருன்னு தூக்கத்துல தட்டி எழுப்பி கேட்டா கூட சொல்லுவேனே”
“அந்த பேரு தாண்டா பிரச்சனை “ அவன் சொன்னதும் இப்போ எனக்கு ஏறக்குறைய பைத்தியம் பிடிக்காத குறை !
“அந்த பேருக்கு என்னடா ? யாராச்சும் ஏற்கனவே காப்பி ரைட் வாங்கி வெச்சிருக்காங்களா ? “ என்றேன்.
“அப்படி இல்லடா.. நான் அவனுக்கு அவினாஷ் ன்னு பேரு வைக்கணும்னு தான் சொன்னேன். தாத்தா தான் ஷங்கர நாராயணன் பேரு வைக்கணுன்னு ஆசைப்பட்டாரு. அதான் அந்த பேரை வெச்சேன். “
“சரி.. அதுக்கென்ன இப்போ ? இன்போசிஸ் தல கூட நாராயணன் தானே மச்சி. உன் பையனும் அப்படி பெரிய ஆளா வருவான்னு நினைச்சுக்கோ…”
“டேய் வெறுப்பேத்தாதே. நாராயணன்னு பேரு இருந்தா அவனுக்கு தம்பியோ, தங்கச்சியோ பொறக்காதுடா “ அவன் கடைசியில் கொட்டி விட்டான். எனக்கோ தாங்க முடியாத சிரிப்பு….
“வாட்…. என்னடா சொல்றே ? அப்போ நாராயண மூர்த்திக்கு தம்பி தங்கச்சியே இல்லையா ? அந்த மேட்டரே எனக்குத் தெரியாதே..” என்றேன்
“பாத்தியா.. நக்கலடிக்கிறே..” அவன் கொஞ்சம் சீரியசானான்.
“மச்சி… நாராயணன்னு பேரு வெச்சா அதுக்கப்புறம் உனக்கு குழந்தை பொறக்காதுங்கறதையெல்லாம் ஆபீஸ்ல சொல்லிடாதே.. உன்னை லே ஆஃப் பண்ணினாலும் பண்ணிடுவாங்கடா” என்றேன்.
“டேய்… கொஞ்சம் சீரியஸா இரேண்டா….யோசிச்சுப் பாரு… எனக்குத் தெரிந்து நிறைய நாராயண ன்களுக்கு தம்பி தங்கச்சிங்களே கிடையாது” அவன் முரண்டு பிடித்தான்.
“உனக்குத் தெரியாத பல நாராயணன்களுக்கு பல தம்பிகள் இருப்பாங்க. இல்லேன்னா அரசு கு.க க்கு ஏன் இவ்ளோ செலவு பண்றாங்க. எல்லோரும் குழந்தைக்கு நாராயணன்னு பேரு வையுங்க ன்னு ஒரு சட்டம் இயற்றினா போதுமே… இந்திய மக்கள் தொகையும் அதிகரிக்காது.” என்றேன் சிரிப்பு மாறாமல்
அந்த நேரம் பார்த்தா யாதவ நாராயணன் அங்கே வரவேண்டும், அதுவும் அவனது இரண்டு தம்பிகளுடன்.
“டேய் யாதவா.. இது உன் தம்பி தானாடா.. நல்லா தெரியுமா” என்றேன்.
“எனக்கு டைம் ஆச்சுடா கிளம்பறேன் என்று விருட்டென கிளம்பினவன் தான். இன்னிக்கு வரைக்கும் இருபது தடவை கால் பண்ணிட்டேன்… போணை எடுக்கவே மாட்டேங்கறான்.”
நாராயணா… இப்படி பண்ணிட்டியே நாராயணா !
ஃ
You must be logged in to post a comment.