நான் குண்டாயிருக்கக் காரணம் நானில்லை !

madhu-_11_

அளவுக்கு அதிகமாய் நொறுக்குத் தீனிகளை உள்ளே தள்ளுவதும், சோம்பித் திரிவதும் மட்டும் தான் உடல் குண்டாகக் காரணம் என நம்பியிருந்த நம்மை வியப்பூட்டுகிறது ஒரு புதிய ஆராய்ச்சி.

குண்டாய் இருப்பவர்களைப் பார்த்து, உன்னை ஒரு வைரஸ் தாக்கியிருக்கலாம், அதனால் தான் நீ ரொம்ப குண்டாய் இருக்கிறார் என சொல்வதில் பிழையில்லை என்கின்றனர் அமெரிக்க விஞ்ஞானிகள்.

AD 36 என அழைக்கப்படும் வைரஸுக்கும், உடல் எடை அதிகரிப்பதற்கும் தொடர்பு உண்டு என நிரூபித்திருக்கின்றனர் அறிவியலார். இந்த வைரஸ் மிக எளிதில் தொற்றக் கூடிய தன்மையுடையது. காய்ச்சல், ஜலதோஷம் போல தும்மினாலோ, இருமினாலோ, கைகுலுக்கினாலோ கூட பரவலாம் என அதிர்ச்சி மேல் அதிர்ச்சி இந்த ஆராய்ச்சியை நிகழ்த்திய நிகில் துராந்தர் எனும் பேராசிரியர்.

உடலில் இந்த வைரஸ் புகுந்தவுடன் நேராக நுரையீரலில் நுழைந்து அதில் முடிந்த அளவு தனது முத்திரையைப் பதித்து விடுகிறதாம். பின் அங்கிருந்து நேராக  உடலிலுள்ள கொழுப்புத் தசைகளுக்குத் தாவி விடுகிறதாம். அப்படி நுழையும் வைரஸ் சும்மா  இருக்காமல் அந்த கொழுப்புத் தசைகளை சட் சட்டென பலுகிப் பெருகச் செய்து உடல் எடை எசகு பிசகாய் அதிகரிக்க காரணமாகிவிடுகிறதாம்.

இப்படி தாக்குதலுக்கு உள்ளாகி தசைகள் பெருகிக் கொண்டே இருக்க, விஷயமே தெரியாமல் நாளொரு மேனியும் பொழுதொரு கிலோவுமாய் கூடிக் கொண்டே இருக்கும் உடலைப் பார்த்து நாம் கவலை கொள்கிறோம் என்கிறார் அவர்.

தும்மினாலும், இருமினாலும், கைகுலுக்கினாலும் கூட வைரஸ் பரவுமா, அப்படியானால் இனிமேல் குண்டானவர்களின் பக்கம் தலை வைத்துக் கூட படுக்க மாட்டேன் என உடனே முடிவு கட்டி விடாதீர்கள், ஏனெனில் குண்டாய் இருப்பவர்கள் எல்லோரிடமும் இந்த வைரஸ் இருப்பதில்லை.

இந்த வைரஸ் உடலில் ஆதிக்கம் செலுத்தும் வரை இந்த உடல் எடை அதிகரித்தல் நிகழும் எனவும், அந்த வைரஸ் பாதிப்பு விலகியபின் உடல் எடை அதிகரிக்காது எனவும் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

ஆனால். சில மாதங்கள் இந்த வைரஸ் பாதிப்பு உடலில் இருந்தால் உடலின் எடை கணிசமாய் அதிகரித்து விடுமே எனும் நியாயமான அங்கலாய்ப்புக்கு சரியான விடையில்லை.

எனினும், உடல் எடை அதிகரிக்க இந்த வைரஸ் மட்டுமே காரணமில்லை என்பதை கவனத்தில் கொள்தல் இன்றியமையாதது. சரியான உடற்பயிற்சி இல்லாமலும், கட்டுப்பாடற்ற உணவுப் பழக்கம் காரணமாகவும் உடை அதிகரித்துக் கொள்பவர்கள் அந்தப் பழியை இந்த வைரஸ் மேல் சுமத்தாதிருக்கட்டும்.