அடடா… அதெல்லாம் வேஸ்ட்டா ?

123ரோட்டோரங்கள் முதல் மிகப்பெரிய ஷோரூம்கள் வரை எங்கே சென்றாலும் பார்க்கலாம் விதவிதமாய் குழந்தைகளுக்கு பாடம் சொல்லித் தரும் சிடிக்கள், டி.வி.டிக்கள்.

ஒரு டிவிடியைப் போட்டுவிட்டால் குழந்தை அதைப் பார்த்துக் கொண்டே இருப்பான், நமக்கு வீட்டு வேலை செய்யவோ, அலுவலக வேலை செய்யவோ தொந்தரவு இருக்காது என நினைக்கும் பெற்றோரும் இருக்கத் தான் செய்கிறார்கள். அதனாலேயே புதிது புதிதாய் டிவிடிக்கள் வாங்கிக் குவிக்கவும் அவர்கள் தயங்குவதில்லை.

போட்டி போட்டு வாங்கிக் குவிக்க கலியுகப் பெற்றோர் தயாராக இருப்பதால், வித விதமான வடிவங்களில், விதவிதமான வகைகளில் குழந்தைகளுக்கான டிவிடிக்கள் எல்லா இடங்களிலும் கிடைக்கின்றன. எண்கள் கற்க வேண்டுமா, எழுத்துக்கள் கற்க வேண்டுமா, பாடல்கள் கற்க வேண்டுமா ? எதற்கெடுத்தாலும் ஒரு டிவிடியைப் போட்டுவிட்டால் போதும் எனும் நிலையே இன்றைக்கு ஏராளம் வீடுகளில்.

போதாக்குறைக்கு அம்புலிமாமா, அக்பர், பரமார்த்த குரு, பஞ்சதந்திரக் கதைகள் என முன்பு பாட்டி மடியில் அமர்த்தி சொல்லித் தந்த சுவாரஸ்யமான கதைகளையெல்லாம் இன்றைய குழந்தைகளுக்கு தொலைக்காட்சியில் அசையும் கார்ட்டூன் பாத்திரங்களே கற்றுத் தருகின்றன.

இப்படி ஏராளம் அறிவு வளர்ச்சிக்கான நிகழ்சிகளைப் பார்த்து வரும் குழந்தைகள் அறிவில் சூரப் புலிகளாகவும், திறமையில் படு சுட்டியாகவும் இருப்பார்கள் என நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் எனில் அந்த நினைப்பை மூட்டை கட்டி வெளியே போட்டு விடுங்கள் என்கின்றன சமீபத்திய ஆராய்ச்சிகள் பல.

இப்போதெல்லாம் இரண்டு வயது கூட நிரம்புவதற்கு முன்பாகவே குழந்தைகளெல்லாம் தொலைக்காட்சியின் முன் உட்கார்ந்து மணிக்கணக்கில் நிகழ்ச்சிகளைப் பார்க்கத் துவங்கிவிடுகின்றனர். தொலைக்காட்சி பயன்படுத்தும் வீடுகளில் 90 விழுக்காடு குழந்தைகள் இரண்டு வயதுக்கு முன்பே தொலைக்காட்சிப் பிரியர்களாகி விடுகின்றனர் என்கிறார் ஆராய்ச்சியாளர் டிமிட்ரி கிரிஸ்டாகிஸ்.

சுமார் எண்பது விதமான ஆராய்சிகள் இது தொடர்பாக வந்திருக்கின்றன என்பதே இதை சர்வதேச சமூகம் உன்னிப்பாய் கவனிக்கிறது என்பதற்கான முதன்மைச் சாட்சி எனக் கொள்ளலாம்.

வெகுநேரம் தொலைக்காட்சி பார்த்து வளரும் குழந்தைகளுக்கு மொழி அறிவு அதிகரிக்கும் என்பது தான் பரவலான நம்பிக்கை. ஆனால் உண்மையில் நிலமை நேர் மாறாக இருக்கிறது. தினமும் இரண்டு மணி நேரம் தொலைக்காட்சி பார்க்கும் குழந்தைக்கு மொழி அறிவு குறைவாக இருக்கும் என்கிறது ஒரு ஆராய்ச்சி.

எவ்வளவு அதிகமாய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளைப் பார்க்கிறதோ அந்த அளவுக்கு குறைவான மொழி அறிவே குழந்தைகளுக்கு இருக்குமாம். அதிலும் ஏழு மாதத்துக்கும் பதினாறு மாதங்களுக்கும் இடையே தொலைக்காட்சி பார்க்கும் குழந்தை வார்த்தைகளைக் கற்றுக் கொள்வதில் வெகு தாமதம் ஏற்படுமாம். இன்னும் குறிப்பாகச் சொல்லப் போனால், ஒவ்வோர் மணி நேரம் தொலைக்காட்சி பார்த்தலும் குழந்தை ஆறு வார்த்தைகள் குறைவாகக் கற்க காரணமாகிறதாம்.

இன்னோர் ஆராய்ச்சி குழந்தைகளின் நினைவுத் திறனை இத்தகைய தொலைக்காட்சி மூலம் கற்பித்தல் மழுங்கடிக்கிறது என பயமுறுத்துகிறது. அதிக தொலைக்காட்சிக் கல்வி பெறும் குழந்தைகளின் ஞாபகத் தளங்கள் பலவீனப் பட்டுவிடுகின்றன என்கிறது அந்த ஆராய்ச்சி.

அத்துடன் அவர்களுக்கு சமூகத்தோடும், மற்ற நண்பர்களோடும் உள்ள உறவின் இறுக்கமும் மெல்ல மெல்லப் பலவீனமடைகிறது. பெரும்பான்மை நேரம் தனிமையில் தொலைக்காட்சியுடன் செலவிடும் போது உரையாடல், வாசிப்பு, விளையாட்டு என பல விதமான செயல்பாடுகள் முடங்கிவிடுகின்றன.

தொலைக்காட்சியில் அதிக நேரம் செலவிடுவதில் பல்வேறு உடல் சார்ந்த சிக்கல்கள் எழும் என்பது ஏற்கனவே நாம் அறிந்ததே. இப்போது அது அறிவு சார்ந்த முன்னேற்றத்தையும் தடைசெய்யும் என ஆய்வுகள் எச்சரிக்கின்றன.

எங்கே சென்றாலும் குழந்தைக்கு ஏதேனும் டிவிடிக்களை வாங்கி வரும் பெற்றோர் அதை சற்றே குறைத்து மற்ற செயல்பாடுகளிலும் குழந்தைகளை ஊக்கப்படுத்துவது அவசியம் என்பதே இந்த ஆய்வுகளின் ஒருவரிச் செய்தியாகும்.

6 comments on “அடடா… அதெல்லாம் வேஸ்ட்டா ?

 1. கதை புத்த கங்களை படிக்கும் ஆர்வம் மிகுதியாக இல்லாத இந்தியாவில் குழந்தைகளுக்கு என்று திரைப்படமே இல்லை என்பது மிகுந்த வேதனையான விஷயம். அதனால் தான் குழந்தைகளுக்கு மன அழுத்தமும் வீணான சிந்தனக்களும் வருகிறது என்பது உளவியலாளர்கள் கருத்து.

  தமிழகத்தில் எல்லா குழந்தைகளும் அழுது வடியும் சீரியல்களையும் சினிமா, போட்டிகள் என்ற பெயரில் ஆபாச நடனங்களையும் அருவருக்கதக்க நிகழ்வுகளையும்
  நடு ஹாலில் உட்கார்ந்து மணிகணக்கில் பார்ப்பது என்பது கொடுமையிலும் கொடுமை.

  ஒரு காட்சியை காண்பிப்பதற்கு பதில், படிப்பவர் கற்பனைக்கு விட்டு விட்டால் தான் குழந்தைகளின் எண்ணத்தில் அதை பற்றிய காட்சி விரியும் creativity யும் வளரும்” வாய்ப்புகள் அதிகம்.

  நான் சிறு வயதில் படித்து என்னை மெருகேற்றிய அம்புலிமாமா , பாலமித்ரா, தெனாலி ராமன் கதைகள், முத்து, ராணி மற்றும் லயன் காமிக்ஸ்” போன்ற புத்தகங்கள் இந்த தலைமுறைக்கு அன்னியமாக வே இருக்கிறது.

  டிவி பார்பதை அவவளவு சீக்கிரம் நிறுத்த இயலூமா..???

  தோன்றவில்லை. குறைக்கலாம். படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த முயற்ச்சி எடுக்கலாம்.

  ஆனால் தேவையோ இல்லையோ, நுகர்வு கலாசாரத்தில் சிக்கி உழன்று தம்பதிகள் இருவரும் வேலைக்கு செல்லுதல், பெற்றோரை புறக்கணித்த Nucleus குடும்பங்கள், அக்கம் பக்கம் தெரியாத அடுக்குமாடி குடியிருப்புகள் etc., etc., என பெற்றோர் செய்கின்ற கொடுமையையும் யாரிடம் போய் சொல்ல என்று ஒரு குழந்தை கேட்கின்ற கேள்வி உங்கள் செவிக்கு கேட்கவில்லையா..???

  என்னத்த சொல்ல..??

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s