நாலு இலை விடட்டும் முதல்ல…

080114_docomo_kids

அங்கிங்கெனாதபடி எங்கும் பார்க்கலாம் கைப்பேசியில் பேசியபடியே நடக்கும் சிறுவர்கள், மற்றும் பால்ய வயதினரை.

கைப்பேசியில் அதிக நேரம் பேசுவது மூளைக்கு ஆபத்து, கைப்பேசியில் பேசிக்கொண்டே காரோட்டுவது கவனத்தைச் சிதைக்கும் என வரிசையாய் வந்து கொண்டிருக்கும் ஆராய்ச்சிகளின் பட்டியலில் புதிதாய் சேர்ந்திருக்கிறது இன்னுமொரு ஆராய்ச்சி.

குழந்தைகள் கைப்பேசியில் பேசிக்கொண்டே சாலையைக் கடக்கும்போது அவர்களுடைய கவனம் 20 விழுக்காடு குறைந்து போகிறது. இதன் மூலம் அவர்கள் பெரும் விபத்துகளில் சிக்கிக் கொள்ளும் வாய்ப்பு ஏற்படுகிறது என்பதே அந்த ஆராய்ச்சி.

இந்த ஆராய்ச்சியில் பங்கு பெற்ற டேவிட் ஸ்வேபெல் எனும் ஆராய்ச்சியாளர் குறிப்பிடுகையில், ‘ பேசிக்கொண்டே குழந்தைகள் சாலை கடக்கும் போது அவர்களை அறியாமலேயே கவனத்தைச் சிதற விட்டு விடுகின்றனர். பெரியவர்களைப் போல எச்சரிக்கை உணர்வைக் காத்துக் கொள்ள முடியவில்லை” என தெரிவிக்கிறார்.

சுமார் பத்து, பதினோரு வயதுடைய எழுபத்து ஏழு சிறுவர் சிறுமியரை வைத்து நிகழ்ந்தப்பட்ட இந்த ஆராய்ச்சி கைப்பேசியினால் விளையக்கூடிய இன்னொரு ஆபத்தை விளக்குகிறது.

எப்போதும் கைகளில் கைப்பேசியைப் பிடித்துக் கொண்டு தனக்குத் தானே சிரித்தபடி குறுஞ்செய்தி அனுப்பிக் கொண்டும், வாசித்துக் கொண்டும் திரியும் பால்ய வயதினருக்கும் இந்த ஆபத்து நிரம்பவே இருக்கிறது என எச்சரிக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

சுற்றி இருப்பவர்களோடுள்ள உறவை துண்டித்துக் கொண்டு தூர இருப்பவர்களுடன் அளவளாவ இந்த கைப்பேசிகள் துணை புரிகின்றன என்பதை பயணங்களிலும், உணவகங்களிலும் நாம் காண முடியும்.

கைப்பேசியின் பயன் பேசுவதில் மட்டுமல்ல, பேசாமல் இருப்பதிலும் தான் என்பதே நிஜமாகியிருக்கிறது இப்போது !