ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பார்கள். ஐந்தில் திருந்து இல்லையேல் ஐம்பதில் வருந்து என்கிறது புதிய ஆராய்ச்சி ஒன்று.
குழந்தையாய் இருக்கும் போது ஆரோக்கியமான உணவுப் பழக்கம் ஏற்படாவிட்டால் குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் பல்வேறு விதமான புற்று நோய் வரும் வாய்ப்பு பல மடங்கு அதிகரிக்கிறது என்கிறது அந்த ஆராய்ச்சி.
குழந்தை ஆசையாய் கேட்கிறதே, அடம்பிடிக்கிறதே என்பதற்காக தேவையற்ற நொறுக்குத் தீனிகளையும், சிப்ஸ், பர்கர், பீட்சா போன்றவற்றையும் வாங்கித் தரும் பெற்றோர் குழந்தைகளுக்குள் கான்சர் நுழைவதற்கான கதவையும் கூடவே திறக்கிறார்கள் என்பதே உண்மையாகும்.
இங்கிலாந்தில் மட்டும் சுமார் 17 விழுக்காடு குழந்தைகள் அளவுக்கு மிஞ்சிய எடையுடன் இருப்பதாக சமீபத்திய புள்ளி விவரம் ஒன்று கவலையுடன் தெரிவிக்கிறது.
இப்படி அதிக எடையுடன் இருப்பது பிற்காலத்தில் சிறு நீரகம், கல்லீரல், மார்பு, புரோஸ்டேட், உணவுக்குழாய் என பல்வேறு இடங்களில் புற்று நோய் வருவதற்கான வாய்ப்பை அதிகப்படுத்துகிறது. இதைத் தவிர நீரிழிவு, இதய நோய் போன்றவை வருவதற்கான வாய்ப்பும் வெகுவாக அதிகரித்து விடுகிறது.
குழந்தைகளாய் இருக்கும் போது சரியான உணவுப் பழக்கத்துக்குள் வராவிடில் இளைஞர்களானபின் அவர்களால் ஆரோக்கிய நிலைக்கு வர முடியாமல் போய்விடும் என எச்சரிக்கிறார் குழந்தைகள் நல மருத்துவர் பிரிட்சார்ட் ஜோன்ஸ்.
உடல் எடை அதிகரிப்பதால் வரும் கான்சர் வருடம் தோறும் தனது விழுக்காட்டை அதிகப்படுத்திக் கொண்டே இருக்கிறது என்பது கவலைக்குரிய ஒன்றாகும்.
வயிற்றுப் பகுதிகளில் அதிகமாய் சேரும் கொழுப்பு மார்பகப் புற்று நோய், புரோஸ்டேட் புற்று நோய் போன்றவற்றுக்குக் காரணமாகி விடுகிறது. நினைவில் கொள்ளுங்கள், மார்பகப் புற்று நோய் ஆண்களுக்கும் வரலாம் !
லிவர், சிறுநீரகம், கல்லீரல் போன்ற இடங்களில் கான்சர் வரவும் இந்த அதிகப்படியான கொழுப்பு காரணமாவதுண்டு.
சைட்டோகின்ஸ் எனும் நமது உடலிலுள்ள பொருள் கான்சரை எதிர்த்துப் போராடுகிறது, அதன் அளவை அதிகப்படியான கொழுப்பு குறைத்து விடுகிறது. எனவே புற்றுநோய்க்கு எதிரான போராட்டம் வலுவிழந்து உடல் நோயில் விழுகிறது.
எனவே, பெற்றோர் எச்சரிக்கையுடன் இருத்தல் அவசியம். குழந்தை இன்றைக்கு சிரிப்பதல்ல, என்றைக்கும் ஆரோக்கியமாய் வாழ்வதே முக்கியம்.